மீள்வும் எழுகையும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பொருளீட்டுவதும், சமூக அந்தஸ்து பெறுவதும் மட்டுமே வாழ்க்கை என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கப்பட்டு அதை நோக்கிஓடிக் கொண்டிருக்கும் இச்சமூகத்தில் மாற்றாக உண்மை,தியாகம், மனிதநேயம், தன்னறம் போன்ற உயர் விழுமியங்களுக்காக தன்வாழ்க்கையை அர்ப்பணிக்கும் விஷ்ணுபிரியா போன்றவர்கள் பெரும் நம்பிக்கையை விதைக்கிறார்கள்.
முதன்முதலாக குக்கூ அமைப்பைச் சேர்ந்த நண்பர்களை திருப்பரங்குன்றம் குடைவரைக்கோயிலில் உங்கள் நிகழ்வில்தான் சந்தித்தேன். பெரும் பொருள் ஈட்டக்கூடிய,சமூகம் போற்றக்கூடிய பணிகளை உதறிவிட்டு தான் நேசிக்கும் வாழ்க்கையைவாழ்வதற்காக கைத்தறி நெசவு, இயற்கை முறையில் கடலை மிட்டாய் வியாபாரம், கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு கல்விபோதித்தல் போன்ற பணிகளை மனநிறைவுடன் செய்து வரும் நபர்கள் என் கண்முன் நிற்கிறார்கள் என்பதை என்னால் நம்பவேமுடியவில்லை. பெரும் பரவசமும், நம்பிக்கையும் பெற்றேன்.
அன்று அவர்களுக்கான உங்கள் உரையில் குறிப்பிட்ட காந்திய செயல்பாட்டிற்கான முக்கிய அம்சங்களான “எதிர்மறை செயல்பாடுஇருத்தல் கூடாது, அனைத்து செயல்பாடுகளையும் மகிழ்ச்சியுடனே மேற்கொள்ள வேண்டும், செயல்பாடுகளில் விளைவு பற்றிய கவலைஇருத்தல் கூடாது”என்பது ஒரு மகிழ்வான நிறைவான வாழ்விற்கு அடிப்படை ஆகும்.
சுயநலத்தாலும் சமூக அழுத்தத்தினாலும் முற்றாக நுகர்வு உலகம் ஆக மாறிய இன்றைய நிலையில் தான் நேசிக்கும் நிறைவானவாழ்வை வாழ எதையும் தியாகம் செய்யத் துணியும் இவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
கதையிலும் கற்பனையிலும் காணும் கதாபாத்திரங்கள் கண்முன் ரத்தமும் சதையுமாக செயலாற்றி கொண்டிருப்பதை காணுகையில் வாழ்க்கையின் மீது பெரும் நம்பிக்கை ஏற்படுகிறது. அறத்தின் நாயகர்களான இவர்கள் பெரும் வணக்கத்துக்குரியவர்கள்.
வி.எஸ்.செந்தில்குமார், சென்னை
அன்புள்ள ஜெ
உங்கள் தளத்தில் மூன்றுவகையில் காந்தியம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. காந்தியசிந்தனைகள், காந்தியின் வாழ்க்கைச்சித்திரங்கள் ஒருவகை. காந்திய வழியை மேற்கொண்டு வெற்றிகொண்ட ‘இன்றைய காந்திகளை’ பற்றிய சித்திரங்கள் இன்னொரு வகை. இவை இரண்டுமே எங்கோ இருப்பவை என நினைப்பவர்களுக்கு இதோ இங்கேயே என்று காட்டும்படி நம்மைச்சூழ்ந்து காந்திய வழியை வாழ்க்கையாகக் கொண்டவர்களின் கதைகள்
விஷ்ணுப்பிரியாவின் ஆவணபட முன்னோட்டமும் அவர் தன் வாழ்க்கையைப்பற்றி எழுதிய குறிப்பும் அற்புதமானவை. மனிதர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிக்கொள்ள நம்பிக்கை தேவைப்படுகிறது. கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு அதுபோதும். அது ஆழமாக இல்லாதவர்களுக்கு அறத்திலும் நீதியிலும் நம்பிக்கை தேவை. அத்தகைய நம்பிக்கைகளை நாம் இத்தகைய மனிதர்களிடமிருந்துதான் பெற்றுக்கொள்கிறோம். நாம் அப்படியொன்றும் குரூரமான போட்டியுலகில் வாழவில்லை என்றும் பெரிய இலட்சியங்கள் இங்கே வாழ்கின்றன என்றும் நமக்கு நம்பிக்கை கிடைக்கிறது
விஷ்ணுபிரியாவுக்கு வாழ்த்துக்கள்
எஸ்.ஆர்.ஜெயராமன்
Is your home guilt-free?