இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி

இன்றைய காந்திகளைப்பற்றி…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

திரு பாலா அவர்கள் இன்றைய காந்திகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

 

சில சந்தேகங்கள்

 

1 )  காந்தி இந்த நாடு கண்ட தலை சிறந்த அரசியல் ஸ்டார்ட்-அப் . நாளிதழ்களையும், தந்தியையும் தவிர வேறு தகவல் தொடர்பில்லாத காலத்தில் ட்ரெண்டிங் ஆகி வைரல் ஆகி, எங்கும் பரவியவர். அமுல் தவிர (ஓரளவுக்கு அரவிந்த்) பாலாவின் பட்டியலிலுள்ள பிறர் ஏன் ஸ்கேல் செய்யவில்லை? இரண்டாவது டிலோனியா நடந்துள்ளதா? அருணா ராய் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது உபரித் தகவல். இருந்தும் ஏன் தமிழர்களுக்கு டிலோனியாவை அறிமுகப் படுத்த வேண்டியிருக்கிறது?  வணிகம் ஆனாலும் சரி, சமூக நலன் ஆனாலும் சரி, சேவை செய்வோரும் நுகர்வோரும் பல்கி பெறுக வேண்டுமே.

 

2 ) தனி மனித நோக்கில் அல்லது ஒரு குழுவின் நோக்கில் மட்டும், அல்லாமல் நாடு தழுவிய அளவில் காந்திய பொருளாதாரம் எவ்வாறு அமையும் என்று விளக்கும் அண்மைக்கால நூல்கள் இருக்கின்றனவா?

 

உழவிலேயோ நெசவிலேயோ, மதிப்பு ஏற்றப்பட்ட பொருளை விற்றால் தானே உற்பத்தியாளருக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். அப்படி வாங்குவதற்கு ஒரு நுகர்வோர் சமூகம் வேண்டுமே? அமுலின் பொருளாதார ரீதியான வெற்றிக்கு ஒரு காரணம் பால் ஏழைகளுக்கான உணவல்ல.   பால் உற்பத்தியாளர்களுக்கு, வெண்ணை, நெய், பாலாடைக்கட்டி, ஐஸ்க்ரீம் நுகர்வோர் தேவையாக உள்ளனர். இவர்கள் இல்லாவிட்டால் வெறும் பாலின் விலை கட்டாமல் போய் விடும்.  உருளைக்கிழங்கு விளைவிப்பவர்களுக்கு சிப்ஸ் சாப்பிடுபவர்கள் தேவை. புடவை நெய்பவர்களுக்கு  20,000 ரூ பட்டுப்புடவை உடுத்துபவர்கள்.

 

ஒரு முழுமையான காந்திய பொருளாதாரம் எவ்வாறு இருக்கும்?

 

இதன் இன்னொரு பக்கம் பொது நிதி (Public Finance). பொருளாதார வளர்ச்சி வரி வசூலுக்கு, அதன் மூலம் மக்கள் நலன் திட்டங்களுக்கும் வழி வகுக்கும். புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் / வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள் நிறைவேற வேண்டுமான வரி வசூல் என்ன? அந்த வரி வசூல் வர தேவையான பொருளாதாரம் எத்தகையது? காந்திய வழியில் இது சாத்தியமா? எளிய பதிலை எதிர்பார்ப்பது தவறு என்பதை அறிவேன். ஆனால் காந்திய வழியை, தற்கால ஜனத்தொகையோடு, நாட்டின் பாதுகாப்பு, ஏற்கனவே உள்ள கடன் சுமை, ஓய்வூதியங்கள், மானியங்கள், இவற்றோடு இணைத்து, இது செயல் முறை சாத்தியம் என்று விளக்கும் அண்மைக்கால நூல்களை சுட்டினால் நன்றி.  .

 

3 ) விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வரும் முன்னேற்றங்களில் எவற்றை ஏற்பது எவற்றை ஒதுக்குவது?

 

நம் முன்னோர், குறிப்பாகப் பெண்கள், உடல் உழைப்பிலேயே வாழ்நாளைச் செலவிட்டார்கள். கிணற்றில் நீர் இறைத்து, விறகு வெட்டி, சுள்ளியில் அடுப்பு மூட்டி, அம்மியிலும், உரலிலும் அறைத்து, ஆற்றில் துணி துவைத்து, கை நோகப் பாத்திரம் தேய்த்த காலத்திற்கு யாரும் போக விரும்பவில்லை, அந்த நிலையில் இருக்கும் அடித்தள மக்களும் இந்த தீரா உழைப்பிலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள். நோயிலிருந்து உடனடி நிவாரணம் வேண்டுகிறார்கள்.

 

மிக்சி, கிரைண்டர், மோட்டார் சைக்கிள், கார், வாஷிங் மெஷின், ஏ சி, என்று ஒரு பட்டியல், டயாலிசிஸ், பைபாஸ்  சர்ஜரி, என்று இன்னொரு பட்டியல்  போட்டால் இதில் இன்றைய காந்திய வாழ்க்கைக்குள் வருவது எது வராதது எது?

 

சில நவீன சாதனங்கள் பசுமை உலகுக்கு இன்றியமையாதவை. உ: எரி பொருள். விறகு இன்ன பிற அடுப்புகள் சுற்றுச்சூழலுக்கு கேடு..

 

4 )   காந்திய முறைக்கு அம்பேத்கர் தெரிவித்த ஆட்சேபணைகள் இன்று தீர்ந்து விட்டனவா?  நவீனமயமாக்கலால்தான் தலித்துகளின் வாழ்க்கை ஒப்பீட்டளவில் உயர்ந்திருக்கிறது என்று நினைக்கிறன்.

 

– வைகுண்டம்

இன்றைய காந்திகள்

இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்– பாலா

ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் –பாலா

சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! –பாலா

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்– பாலா

போற்றப்படாத இதிகாசம் –பாலா

ஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!

 

 

முந்தைய கட்டுரைகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைஈரோடு சிறுகதை முகாம் ’19