இனிய ஜெயம்
ஒடிஸா பயணம் என நீங்கள் சொன்னதுமே முதலில் நினைவில் எழுந்தவர் லகுலீசர்தான். புவனேஷ்வர் மத்தியில் அமைந்திருக்கிறது விட்லா ட்யுல் எனும் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில். கலிங்க நிலம் மொத்தமும் உள்ள கோவில் விமான வடிவத்தில் சேராத தனி வடிவத்தில் விமானம் கொண்ட சிறு கோவில்.
https://en.wikipedia.org/wiki/Baitala_Deula
ஊர் மத்தியில் அமைந்த சிறிய கோவில். சூழ சூழ சாலைகளை மீண்டும் மீண்டும் போட்டு இப்போது அந்தக் கோவில் பள்ளத்தில். மொத்தக் கோவிலிலும் நீர் வெளியேற வகையின்றி, மழைநீர் தேங்கி சாக்கடையாகவே மாறி நின்றது. வெளி பிரகாரத்தில் இடுப்புவரை அந்த நீரில் நடந்து, மிக அழகிய மகிஷாசுரமர்தினியையும் அவள் எதிரே லகுலீசரையும் கண்டோம்.
வாசிக்க வாசிக்க தகவல்கள் கிடைத்தவண்ணமாக இருக்கிறது.லகுலீசர் சண்டேஸ்வரர் என வணங்கப்படும் நிலை குறித்து, தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் ஒரு அத்யாயத்தில் பேசுகிறது. அதன் தொடர்ச்சியாக வாசித்ததில் சிவாலயங்களின் காவல் தெய்வமான இந்த சண்டேஸ்வரர் உருவாகி வந்த பண்பாட்டுப் பின்புலத்தில் ஒரு சின்ன தாவல் நிகழ்ந்திருக்கிறது என்று படுகிறது.
காமிகா ஆகமமம் என்ன கூறுகிறது என்பதைக் கூறும் ஒரு பழைய நூல் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.அதில் சண்டேஸ்வரர் சிவாலயம் சார்ந்து வகிக்கும் அந்தப் பதவியை முதலில் பார்வதி வகித்திருக்கிறார். அந்த தேவிக்கு அசனி என்று பெயர். அந்தப் பதவியை வகிக்கும் வினாயகருக்கு கும்பசண்டர் என்று பெயர். முருகனுக்கு ஸ்மித்ரசண்டர் என்றும் சூரியனுக்கு தேஜஸ்சண்டர் என்றும் பெயர். இவர்கள் பரிவார தெய்வங்கள் மட்டுமே. மாறாக ஒரு சிறிய தாவலில் இந்த பதவிக்கு புதிதாக வரும் ஈஸ்வரர், சண்டேஸ்வரர் ஆகிறார். இவர் தனிக் கோவிலில் மூலவராக அமையலாம்,அவருக்கு பரிவார தெய்வங்கன் என்னென்ன என்றெல்லாம் அந்த நூல் குறிப்பிடுகிறது.
சோ.நா.கந்தசாமி எழுதிய இந்தியத் தத்துவக் களஞ்சியம் நூலில், அவர் குறிப்பிடும் செய்தி, ராஜராஜனுக்கு ஈசான சிவபண்டிதர் போல,ராஜேந்திர சோழனுக்கு அமைந்தவர் சர்வ சிவ பண்டிதர். இவருடன் உடன் அமைந்தவர் பெயர் லகுலீச பண்டிதர். மீண்டும் ஓடிஸா செல்லவேண்டும். லகுலீசரையும் கர்ணனின் தேரையும் காண. பார்ப்போம்.
கடலூர் சீனு