கிருஷ்ணப்பருந்து

கிருஷ்ணப்பருந்து வாங்க

அன்புள்ள ஜெயமோகன்,

சில வாரங்களுக்கு முன்னால், கடலூர் சீனுவிடமிருந்து சா.துரையின் ‘’மத்தி’’ தொகுப்பை வாசிப்பதற்காக வாங்கியிருந்தேன். அதனை அவரிடம் திருப்பித் தர வேண்டும்; எப்போது சந்திக்கலாம் என்று கேட்டு ஃபோன் செய்தேன். நான் அழைத்த போது, நெய்வேலி புத்தகக் கண்காட்சி சென்று விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன் என்றார். என்ன புத்தகம் வாங்கினீர்கள் என்று கேட்டேன். வெகு நாட்களாக வாசிக்க ஆசைப்பட்டு தேடிக் கொண்டிருந்த ‘’கிருஷ்ணப் பருந்து’’ என்ற மலையாள நாவல் தற்செயலாகக் கண்காட்சியில் அகப்பட்டது; அதை வாங்கி வந்தேன் என்று கூறி சாவி இதழில் அது தொடராக வந்ததை தான் வாசித்ததை நினைவுகூர்ந்தார். அவர் சிலாகித்துக் கூறியதைக் கேட்ட பின் கூச்சமே இல்லாமல் நான் வாசித்து விட்டு தரட்டுமா என்றேன். அவர் உடனே சரி என்றார். எனினும் ஆறுதலாக உங்கள் ‘’மத்தி’’ தொகுப்பை திருப்பிக் கொடுத்து விட்டு ‘’கிருஷ்ணப் பருந்தை’’ பெற்றுக் கொள்கிறேன் என்றேன். ‘’மத்தி’’ திரும்புவதில் அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கக் கூடும்! அடுத்த நாள் மாலையே விழுப்புரம் பாஸஞ்சரில் திருப்பாதிரிப்புலியூர் சென்றேன். கண்ணாடிக் கண்களுடன் கடலூர் சீனு காத்து நின்றிருந்தார்.

குமரன் தம்பிக்கு அவரது தாய்மாமன் மாந்திரீகத்தை உபதேசிக்கிறார். தாயின் கண்ணீருக்குப் பதில் சொல்ல எல்லா பற்றுகளையும் துறந்து எல்லாத் தடைகளையும் உடைத்து அமிர்தக் கலசத்தை வென்றெடுக்கும் பட்சிராஜனுக்கு திருமால் அமிர்தம் அருந்தாமலேயே அமரத்துவம் அளிக்கிறார். கேளு நாயர் குடும்பத்துக்கு கிருஷ்ணப் பருந்து காவலாகிறது. தலைமுறைகளாக பாம்புக்கடிகளுக்கு அவர்கள் மந்திரிக்கிறார்கள். நியதிக்குட்பட்ட வாழ்க்கை வாழும் அக்குடும்பத்தால் ஊரார் பயன்பெறுகின்றனர். காலையிலிருந்து இரவு வரை எல்லா நாளும் பித்ருக்களை வணங்கி விளக்கேற்றி வைத்து மந்திர ஜபம் செய்து காமஒறுப்பு நோன்புடன் வாழ்கின்றார் பப்புக்குட்டி நாயர். குமரன் தம்பி உல்லாசப் பேர்வழி. கஞ்சா புகைத்துக் கொண்டு பிறன்மனை விழைந்து கொண்டு வாழும் முதிரா இளைஞன். எதிர்பாராத ஒரு நாளில், குல வழக்கம் விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக தாய்மாமன் மாந்திரீகத்தை உபதேசித்து மறைகிறார். குமரன் தம்பி மந்திரங்களை ஜபிக்கும் போது உபாசனா மூர்த்திகள் அகத்தில் தெரிய ஆரம்பிக்கிறார்கள். அவர் சட்டென தேவதைகளும் துர்தேவதைகளும் யக்‌ஷிகளும் இருக்கும் உலகுக்குள் வந்து விடுகிறார். இவரிடம் இருக்கும் கருட மந்திரத்தால் அரவம் தீண்டி இவர் தறவாட்டுக்குக் கொண்டு வரப்படும் அனைவரும் உயிர் பிழைக்கின்றனர். குமரன் தம்பி அகங்காரம் கொள்கிறார். தான் ஒரு அதிமானுடன் என எண்ணத் துவங்குகிறார். அது அவர் உடலிலும் மனத்திலும் காமமாகவும் மோகமாகவும் பீரிடுகிறது. உடலுடன் ஓயாமல் போரிடுகிறார். இறுதியில் அவரது உடல் வேட்கை அவரை வெற்றி கொள்கிறது. அவரது தெய்வங்கள் அவரைக் கைவிடுகின்றன. அவர் குடும்பத்தில் சட சட என பல துர்பாக்கியமான சம்பவங்கள் நிகழ்கின்றன. காமத்தாலும் பொருள் பற்றாலும் அல்லலுற்றாலும் மாந்திரீகத்தை கைவிட மாட்டேன் என்கிறார். மாந்திரீகன் லௌகிகத்துக்கு அப்பால் இருக்கும் மனநிலை கொண்டிருக்க வேண்டியவன்; நீ அதை இழந்து விட்டாய்; ஆதலால் மாந்திரீகத்தைக் கைவிட்டு உன்னைக் காப்பாற்றிக் கொள் என மூத்த மாந்திரீகர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். எதையும் கேட்கும் நிலையில் குமரன் தம்பி இல்லை. அதற்கான விலையைக் கொடுக்கிறார்.

திருப்பாதிரிப்புலியூரில் ரயில் புறப்பட்டதுமே வாசிக்கத் துவங்கினேன். ரயில் நிலையங்கள் வேகமாகக் கடந்து கொண்டிருந்தன. எதுவுமே பிரக்ஞையில் இல்லை. இரண்டு மணி நேரத்தில் வண்டி மயிலாடுதுறை வந்து சேர்ந்தது. 343 பக்கம் கொண்ட நாவலில் பாதியை வாசித்திருந்தேன். கிருஷ்ண துளசியும் பாலை மரமும் சர்ப்பக்காவும் மாட விளக்குகளும் கொண்ட தறவாட்டின் சித்திரம் பலவிதமான கற்பனைகளுக்குச் சாத்தியம் அளித்தது. இந்நூலில் இருக்கும் தேவதைகளையும் துர்தேவதைகளையும் ஒவ்வொருவரும் தங்கள் அகத்துக்குள்ளேயே கண்டுகொள்ள முடியும் என்று பட்டது. அடுத்த நாள் காலை எழுந்ததும் மீதி நாவலை வாசித்து முடித்தேன். சிவன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

கிருஷ்ணப்பருந்து, பி.வி. தம்பி, தமிழில்: சிவன்.

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

அன்புள்ள பிரபு

பி.வி.தம்பி மலையாளத்தின் வணிக எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆய்வு செய்து எழுதுபவர். பி.வாசுதேவன் தம்பி 1934ல் களரிக்கல் பி.கிருஷ்ணபிள்ளைக்கும் பவானிக்குட்டித் தங்கச்சிக்கும் மகனாகப்பிறந்தார். முதுகலைப் படிப்புக்குப்பின் சட்டம் பயின்றார். இந்தியா இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் நிர்வாகியாகப் பணியாற்றினார்.

புகழ்பெற்ற திரைக்கவிஞர் ஸ்ரீகுமாரன் தம்பி, பிரபல எழுத்தாளரும் வழக்கறிஞருமான பி.ஜி..தம்பி [பி.கோபாலகிருஷ்ணன் தம்பி] ஆகியோர் இவருடைய உடன்பிறந்தவர்கள்.

மலையாளத்தில் பயணக்கட்டுரைகளும் நாவல்களும் தொடர்ந்து எழுதியவர் தம்பி. அவருடைய நாவல்கள் கற்பனையின் வீச்சும் தகவல்செறிவும் கொண்டவை. கிருஷ்ணப்பருந்து அவருடைய புகழ்பெற்ற நாவல். ஆனால் இன்னும் பிரம்மாண்டமானது சூரியகாலடி என்னும் நாவல். கிருஷ்ணப்பருந்தை விட ஒரு படி மேலானது என நான் நினைக்கிறேன்

சூரியகாலடி என்பது ஒரு நம்பூதிரி மனையின் பெயர். மாந்த்ரீகத்திற்குப் பெயர்பெற்ற மனை இது. ஆனால் இந்நாவல் கிருஷ்ணப்பருந்து  போல ஒரு மாந்த்ரீக நாவல் அல்ல. நம்பூதிரி ஆதிக்கம் கேரளத்தில் உருவான காலப்பின்னணியை, அதன் பண்பாட்டுச்சூழலைச் சித்தரிப்பது

இன்னொரு மிகப்பெரிய நாவலை எழுதும் எண்ணம் தம்பிக்கு இருந்தது. ஆனால் நடுவே வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார். இதயநோயும் தாக்கியது. எழுதிவந்த நாவலை முடிக்காமலேயே 2006ல் தன் 72 ஆவது அகவையில் இறந்தார்

கிருஷ்ணப்பருந்து மோகன்லால் நடிக்க வின்ஸெண்ட் இயக்கத்தில் சினிமாவாக வந்தது. ஆனால் திரைக்கதையில் ஒருமை கூடாததனால் வெற்றி பெறவில்லை. ஒரு பாடல் இன்னும் நினைவில் உள்ளது. நிலாவின்றே பூங்காற்றில்…

ஜெ

நிலாவின்றே பூங்காவில் நிஸாபுஷ்ப கந்தம்

கினாவின்றே தேன்மாவில் ராப்பாடி பாடி

கரிமுகில் என் பூவேணி இளம் காற்று என் மதுவாணி

மதிமுகம் என் தாம்பாளம் மலர்ச் சுண்டு என் தாம்பூலம்

தளிர்வெற்றில முறுக்கானும் மணிமாறில் வீழானும்

பகரான் நீ வந்நாட்டே ஆ சூடு பகர்ந்நாட்டே

வெண்ண தோல்கும் என் மேனி முறுகே ஒந்நு புணரானும்

என்மடியில் தலசாய்க்கானும் சுமபாணன் வந்நல்லோ

ஈ ராத்ரி சிவராத்ரி மதிரோத்ஸ்வ சுபராத்ரி

மதனா நீ வந்நாட்டே மார்ச்சூடு பகர்ந்நாட்டே

[தமிழில்]

நிலவின் பூங்காவில் இரவுமலர்களின் மணம்

கனவின் தேன்மாமரத்தில் இரவுப்பறவை பாடியது

கார்முகில் என் பூங்கூந்தல்  இளங்காற்று என் தேன்குரல்

மதிமுகம் என் தாம்பாளம் மலருதடுகள் என் தாம்பூலம்

தளிர்வெற்றிலை போடுவதற்கும் மணிமார்பில் வீழ்வதற்கும்

பரிமாற நீ வருவாயா அந்த வெம்மையை பகிர்வாயா?

வெண்ணையை வெல்லும் என் மேனியை இறுக ஒருமுறை தழுவ

என் மடியில் தலைசாய்க்க மலரம்பு கொண்டவன் வந்தாயே

இவ்விரவு விடியாது. பூகொண்ட கோழிகள் கூவப்போவதில்லை.

இந்த ராத்திரி சிவராத்திரி காமத்திருவிழாவின் நல்லிரவு

மன்மதனே வருக மார்பின் வெம்மை பகிர்க

ஸ்ரீ கிருஷ்ணப்பருந்து திரைப்படம் இணைப்பு

முந்தைய கட்டுரைபோலிப்பால் – கடிதம்
அடுத்த கட்டுரைபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி