‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19

யுதிஷ்டிரன் சல்யரை நோக்கியபடி வில்லுடன் தேரில் முன்சென்றார். சல்யரின் சீற்றம் அவருக்கு உயிரச்சத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஓரிரு அம்புகள் வந்தறைந்த விசையைக் கண்டதும் அவர் நகுலனுக்காகவும் சகதேவனுக்காகவும் அஞ்சினார். “இளையோரே, விலகுக… அவர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார். அப்போதுதான் அவர் அம்புபட்டு உயிரிழந்துகிடந்தவர்களின் முகங்களின் வெறிப்பை அடையாளம் கண்டார். “இளையோரே, இது மத்ரநாட்டுப் பாறை நஞ்சு… இதை நான் அறிவேன். நரம்புகளைத் தொடுவது… விலகுக!” என்று கூவினார்.

நகுலன் “நாங்கள் போரிடுகிறோம் மூத்தவரே, நீங்கள் அம்பு எல்லைக்கு அப்பால் நில்லுங்கள்” என்றான். சகதேவன் “ஆம் மூத்தவரே, அவர் உங்களுக்கு உகந்தவர் அல்ல…” என்றான். “எனக்கு இளைய யாதவனின் ஆணை உள்ளது. ஆயிரம் கவசங்களால் காக்கப்பட்டிருப்பதற்கு நிகர் அது… நீங்கள் அகலுங்கள். இது உங்களுக்கான போர் அல்ல” என்றார் யுதிஷ்டிரன். வில்லுடன் முன்னால் எழுந்து நாணொலி எழுப்பி “மத்ரரே, இது நமது போர்! என்னுடன் பொருதுக!” என்று கூவினார். சல்யர் சீற்றத்துடன் கூவியபடி நகுலனுக்கு எதிராக எடுத்த அம்பு ஒருகணம் அசைவிலாது நிற்க “அறச்செல்வனே, உன்னுடன் நான் பொருத இயலாது. செல்க!” என்றார்.

“இக்களத்தில் இது எனது போர்! உங்கள் வில் எனக்கு எதிராக எழுக!” என்று யுதிஷ்டிரன் கூவினார். “உன் அன்னையின் பொருட்டு நான் உன்னை கொல்லக்கூடாது. இவர்கள் இருவரையும் கொல்வதற்கு மட்டுமே எனக்கு உரிமை உள்ளது. செல்க!” என்றார் சல்யர். யுதிஷ்டிரன் “களத்தில் உறவுகளென ஏதுமில்லை, கடன்களும் ஏதுமில்லை. அறமிருந்தது, அதுவும் இன்றில்லை… எழுக!” என்றபடி அம்புகளால் சல்யரை அறைந்தார். அக்களத்தில் எழுந்த பின்னர் ஒருநாளும் அவர் அத்தனை உளவிசையுடன் போரிட்டதில்லை. அவருடைய கையில் வில் அவரை புதிதாக கண்டடைந்துகொண்டது. அவரே அறியாத அவருக்குள் இருந்து ஆணைகளை பெற்றுக்கொண்டது.

அவருடைய அம்புகள் முழு ஆற்றலுடன் நாணிழுக்கப்பட்டன. கூர்நோக்கி இலக்கு அமைக்கப்பட்டன. குன்றாத் தோள்வல்லமையுடன் செலுத்தவும்பட்டன. ஆனால் யுதிஷ்டிரனுக்கு போரில் உளவிலக்கம் இருந்தது. அம்புடன் அவர் உள்ளம் எழவில்லை. ஒவ்வொரு அம்புக்கும் உரிய சொல் ஒரு கணம் பிந்தியே எழுந்தது. அந்த ஒற்றைக்கணம் ஐயத்தால் ஆனதாக இருந்தது. ஆகவே வெற்று உலோகத்துண்டுகளே அந்த வில்லில் இருந்து எழுந்தன. அவை வஞ்சினத்துடன் முனகவில்லை. காற்றை வீசிக்கிழிக்கவில்லை. இலக்கடைந்தபோது சினத்துடன் அதிரவில்லை. இலக்கு பிழைத்தபோது ஆற்றாமையுடன் துள்ளவில்லை. ஆயினும் அவை சல்யரை வியப்படையச் செய்தன. அத்தகைய போரூக்கத்தை அவர் யுதிஷ்டிரனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.

சல்யர் அந்த அம்புகளை தொடர்ந்து தடுத்தபடியே பின்னடைந்தார். திகைத்த விழிகளுடன் அவர் யுதிஷ்டிரனை நோக்கிக்கொண்டிருந்தார். யுதிஷ்டிரனின் கையிலிருந்த அந்த வில் அவரால் தொட்டு எடுத்து அளிக்கப்பட்டது. இளமையில் மத்ரநாட்டில் கானாடலுக்காக அவர்கள் வந்திருந்தனர். அவர்கள் அர்ஜுனனின் வில்திறன் குறித்தே பேசிக்கொண்டிருந்தனர். மத்ரநாட்டு இளைஞர்கள் அனைவரும் அர்ஜுனனைச் சுற்றி நெருக்கியடித்து அமர்ந்தனர். அவன் சொற்களை அவர்கள் விழிகளாலும், முழு உடலாலும் கேட்டனர். ருக்மாங்கதனும் ருக்மரதனும் அர்ஜுனனின் உடலை தொட்டபடி நிற்பதற்காக முட்டி மோதினர்.

அங்கு வருவதற்கு முந்தையநாள் அர்ஜுனன் அஸ்தினபுரிக்கு வந்து அறைகூவி அங்குள்ள விற்கலையை சிறுமைசெய்த கலிங்கநாட்டு வில்லவனாகிய கலிகனை துரோணரின் ஆணைப்படி எதிர்கொண்டு வென்றான். ஏழு அம்புகளால் அறைந்து இடைக்கச்சையை அறுத்து வீழ்த்தினான். நாணம் கொண்ட கலிகன் சீற்றத்துடன் கொலைப்போர் புரிய அவன் அம்புகள் ஒவ்வொன்றையும் அர்ஜுனன் நிகர் அம்பால் வீழ்த்தி இறுதி அம்பால் அவன் மீசையை சீவி எறிந்தான். திகைத்து நின்ற கலிகனை அணுகி அவன் கால்களைத் தொட்டு வணங்கி “வாழ்த்துக வில்லவரே, வில்லை எனக்கு முன்னரே தொடும் வாய்ப்பு பெற்றவர் நீங்கள். என்னை மாணவனாகக் கொள்க! நான் அறியாத விற்கலை ஏதும் உண்டென்றால் எனக்கு சொல்க!” என்றான்.

கலிகன் உளநெகிழ்வுற்று குனிந்து அர்ஜுனனின் தலையைத் தொட்டு “நல்லூழ் பெருகுக! வெற்றியும் புகழும் சூழ்க! நான் அறிந்து நீ அறியாத கலை ஒன்று உண்டு. அதை உனக்கு இங்கு தங்கி கற்பிப்பேன்” என்றான். துரோணரை அர்ஜுனன் தாள்பணிந்தபோது அவர் அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டு விழிநீர் உகுத்தார். திருதராஷ்டிரர் கலிகனுக்கு ஆயிரம் பொன்னும் அர்ஜுனனுக்கு அருமணி பதித்த நெஞ்சாரமும் பரிசளித்தார். அப்பரிசை கலிகனுக்கு ஆசிரியக்கொடையாக அளித்து பணிந்தான் அர்ஜுனன். கலிகன் அந்த ஆயிரம் பொன்னை துரோணருக்கு ஆசிரியக்கொடையாக அளித்து அவரிடம் மாணவனாக சேர்ந்தான்.

ஒவ்வொருவரும் உவகையில் குரல் எழ ஓசையிட்டு பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் யுதிஷ்டிரன் மட்டும் விழிசுருங்கி சோர்வுற்றிருந்தான். குடிலுக்குத் திரும்பும்போது துரோணரிடம் “ஆசிரியரே, இது திறன்காட்டும் களிப்போர். இதில் ஏன் அவன் அக்கலிங்கரின் ஆடையை அறுக்கவேண்டும்?” என்றான். துரோணர் “களிப்போரில் கொல்லலாகாது என்று மட்டுமே நெறி உள்ளது” என்றார். “ஆனால் அவரை கொல்லும் எல்லை வரை தள்ளினான். அவர் கொன்றிருந்தால் அவரை கொன்றிருப்போம்” என்றான் யுதிஷ்டிரன். “ஆம், களிப்போரில் கொலை அடிக்கடி நிகழ்வதே” என்றார் துரோணர். “ஏன் நிகழ்கிறது என்று இன்று புரிந்தது. எதன்பொருட்டு அவன் அவர் கச்சையை வெட்டினான்? அவனுக்கு களவெற்றி போதவில்லை. ஆணவ வெற்றி தேவையாக இருந்தது” என்று யுதிஷ்டிரன் சொன்னான்.

“ஆணவமில்லாமல் போரிட இயலுமா என்ன?” என்று துரோணர் சொன்னார். “போரிடுபவர்கள் முனிவர்கள் அல்ல. ஷத்ரியர்கள். ஆணவமே அவர்களின் இயல்பு. ஆணவமில்லாதவர் எவர்? கல்வியால் ஆணவம் கொள்பவர் அந்தணர். வீரத்தால் ஷத்ரியர். செல்வத்தால் வைசியர். சூத்திரர் நிலத்தால் ஆணவம் கொள்கின்றனர்.” யுதிஷ்டிரன் எரிச்சலுடன் “நான் அதை சொல்லவில்லை. அந்த ஆணவத்தை அடக்கமுடியவில்லை என்றால் அவன் வீரனா என்ன?” என்றான். துரோணர் நகைத்து “ஆணவம் சற்றே மடங்கியிருந்தாலும் அவன் களத்தில் கலிகனால் வீழ்த்தப்பட்டிருப்பான். ஒவ்வொரு அம்பையும் விண்ணில் செலுத்தியது வில் மட்டும் அல்ல, ஆணவமும்கூடத்தான்” என்றார்.

யுதிஷ்டிரன் நிறைவின்மையுடன் முனகினான். “கச்சையை ஏன் அறுத்தான் என்று கேட்டாய் அல்லவா? அவன் இங்கு வந்து அறைகூவியபோது என்ன சொன்னான்? அஸ்தினபுரியில் வில்லறிந்த ஆண்கள் எவரேனும் உள்ளனரா என்றான். அந்த ஆணவமே அவன் கையில் வில்லென அமைந்திருந்தது. கச்சையை வெட்டியபோது அர்ஜுனன் அறுத்தது அதைத்தான். ஆணவம் சிதைந்தமையால்தான் அவன் சினமுற்றான். சினத்தால் கூரிழந்தான். அவனை கொன்று வெல்லலாம். அன்றி ஆணவம் அழித்து வெல்லலாம். வேறு வழியே இல்லை” என்றார் துரோணர். யுதிஷ்டிரனின் தோளைத் தொட்டு புன்னகைத்து “எல்லாப் போரும் கல்வியே. எல்லா கல்வியிலும் சற்றேனும் போர் இருந்தாகவேண்டும்” என்று துரோணர் சொன்னார்.

யுதிஷ்டிரன் மறுமொழி சொல்லவில்லை. ஆனால் அவனுடைய நிறைவின்மை அவ்வண்ணமே இருந்தது. அரண்மனையில் இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் கலிகனின் கச்சையை வெட்டி மீசையைச் சீவிய கதையை நகுலன் சொன்னபோது இளவரசர்கள் உரக்க நகைத்து கூச்சலிட்டனர். ஒவ்வாமையுடன் முகம் சுளித்து “என்ன சிரிப்பு? வீரன் ஒருவனின் ஆடையை அறுத்திடுவதில் அத்தனை மகிழ்வதற்கு என்ன உள்ளது?” என்றான். இளவரசர்கள் அமைதியடைந்தனர். அர்ஜுனன் சினத்துடன் “மூத்தவரே, இது போர். உங்கள் சொல்விளையாட்டு அல்ல” என்றான். யுதிஷ்டிரன் உளச்சிறுமை கொண்டு “ஆம், நான் போரை அறியாதவனே. ஆனால் அறமும் நெறியும் அறிந்தவன்” என்றான். “அந்த அறமும் நெறியும் வில்லால் வேலியிடப்படுபவை” என்றான் அர்ஜுனன்.

யுதிஷ்டிரன் முகம் சிவக்க எழுந்துகொண்டு “கீழ்மையால் தாங்கிநிறுத்தப்படுவது ஒருநாளும் அறமாவதில்லை” என்றான். அர்ஜுனன் “உங்கள் நூல்களை உசாவ நான் ஒருநாளும் வந்ததில்லை. அவை அரண்மனையில் காக்கப்பட்ட அந்தணர்களால் உருவாக்கப்பட்டவை. அச்சொற்களைக் கொண்டு நீங்கள் அடையும் ஆணவத்தின் ஒரு துளியைக்கூட வில்லவர் அடைவதில்லை” என்றான். “எங்கள் சொற்களால் எவரையும் ஆடை களைந்ததில்லை” என்றான் யுதிஷ்டிரன். “சொற்களில் சலிக்கையில் நீங்கள் அவற்றை கருவாக்கி நாற்களம் பரப்புகிறீர்கள். அவற்றில் உங்கள் சொற்களே சூதாகின்றன. அவை ஆடை பறிக்கும். உயிரும் குடிக்கும். வீரர் எண்ணவும் அஞ்சும் சிறுமைகளை உங்கள் சொற்கள் இயற்றும்” என்றான் அர்ஜுனன்.

அறைக்குள் குளிர்ந்த காற்று நுழைந்ததுபோல் ஓர் அமைதி உருவாகியது. யுதிஷ்டிரன் மேலாடையைச் சுழற்றி அணிந்தபடி அறையைவிட்டு வெளியே சென்றான். ஒவ்வொருவராக எழுந்து அகன்றனர். அங்கே என்ன நிகழ்ந்தது என வியந்தபடி சல்யரும் அகன்றார். அன்று இரவு எப்போதோ விழித்துக்கொண்டபோது அந்தத் தருணம் மீண்டும் நினைவில் எழுந்தது. என்ன நிகழ்ந்தது என அவர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். விழியறியாத தீயதெய்வம் ஒன்று அவ்வறைக்குள் புகுந்து அவர்கள் நடுவே அமர்ந்துகொண்டது போலும். அத்தனிமையில் இருளில் அவர் அச்சம் கொண்டு உடல்சிலிர்த்தார்.

மறுநாள் படைக்கலப் பயிற்சிநிலைக்கு வந்தபோது அர்ஜுனன், யுதிஷ்டிரன் இருவர் முகங்களும் சற்றே இமை வீங்கி துயில் அகலாதவை போலிருந்தன. இருவருமே ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்ளவில்லை. அவர்களும் இரவில் விழித்துக்கொண்டு அந்நிகழ்வை எண்ணிக்கொண்டு இருந்திருப்பார்களா என்ன என சல்யர் வியந்தார். பீமனும் நகுலனும் சகதேவனும் அவர்களை நோக்காமல் உளம்கூர்ந்துகொண்டிருந்தனர். ருக்மரதனும் ருக்மாங்கதனும் அடிக்கடி அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு தருணத்தில் அந்த மெல்லிய படலம் கிழிபடப்போகிறது, ஒவ்வாதன நிகழப்போகிறது, நிகழாமல் இருக்காது, இல்லையென்றால் இது இவ்வண்ணம் ஒருங்கமையாது.

அது நிகழ்ந்தமை அத்தனை கூர்மையுடன் இருந்தது. வில்லால் ஓர் இலக்கை அடித்தபின் அர்ஜுனன் “நான் ஆணவத்தால் இதை அடித்தேன். இனி ஆணவமின்மையால் இதை மூத்தவர் இயற்றுவார்” என்றான். வில்லை கையில் எடுத்த யுதிஷ்டிரன் திகைத்து நின்றான். வில் கையில் இருந்து நடுங்கியது. அவன் ஏதோ மறுமொழி சொல்ல விழைந்தான். அதை தவிர்த்து இலக்கை நோக்கி அம்பை செலுத்தினான். அது பிழைத்தபோது மீண்டும் அம்பு செலுத்தினான். அம்புகள் தொடர்ந்து இலக்கு பிழைக்க அர்ஜுனன் “சற்று இடைவெளி விடுங்கள், மூத்தவரே. அவர்கள் உதிர்ந்தவற்றை பொறுக்கிக்கொள்ளட்டும்” என்றான். கண்ணீருடன் வில்லை கீழே போட்டுவிட்டான் யுதிஷ்டிரன்.

ருக்மாங்கதன் “நீங்கள் வில்லை உறுதியாக பற்றுகிறீர்கள், மூத்தவரே. ஆகவே உங்கள் கையின் அதிர்வனைத்தையும் வில் பெற்றுக்கொள்கிறது” என்றான். யுதிஷ்டிரன் சினத்துடன் அவனிடம் “செல்க!” என்றான். ருக்மரதன் அதை புரிந்துகொள்ளாமல் “விற்கலையில் முதல் பாடம் அது என்பார்கள். வில்லை மிக மெல்லவே பற்றவேண்டும்” என்றான். குரல் தாழ்த்தி “போதும்” என்றான் யுதிஷ்டிரன். அர்ஜுனன் “இளையோனே, உள்ளத்தில் நடுக்கம் இருந்தால் நாம் அருகே சென்றாலே வில்லும் அந்நடுக்கத்தை அடையும். வில் என்பது உள்ளத்தின் பருவடிவு. வில்பயில்தல் என்பது அச்சத்தையும் தயக்கத்தையும் கடந்து நம்மை நாம் கூர்ப்படுத்திக்கொள்ளல் மட்டுமே” என்றான்.

யுதிஷ்டிரன் களத்திலிருந்து அகலும்பொருட்டு திரும்ப அர்ஜுனன் “மூத்தவரே, மெய்யாகவே சொல்கிறேன். நீங்கள் சற்று ஆணவத்தை கைக்கொள்ளலாம். உங்கள் வில் நிலைகொள்ளும். அம்புகள் இலக்கடையும்” என்றான். யுதிஷ்டிரன் சீற்றத்துடன் திரும்பி “உன் அம்பு பிழைக்கும் ஓர் இடம் இருக்கும். அங்கே என் அம்பு வெல்லும்” என்றான். “எனில் ஒரே ஒருமுறை என் அம்பு வெல்லாத இலக்கை நீங்கள் வென்று காட்டுங்கள். நான் பணிகிறேன்” என்றான் அர்ஜுனன். “அவ்வண்ணம் ஓர் இலக்கு இருக்கும்… எங்கோ இருக்கும். ஆணவமின்மையால் சென்றடைய வேண்டிய இலக்கு” என்று யுதிஷ்டிரன் கூவினான். “கண்டடையுங்கள்… எனக்கு காட்டுங்கள்” என்றான் அர்ஜுனன். யுதிஷ்டிரன் திரும்பிப்பார்க்காமல் நடந்தான்.

அன்று சோலையில் தனித்திருந்த யுதிஷ்டிரனை சல்யர் தன் அரண்மனையின் உப்பரிகையில் இருந்து பார்த்தார். அத்தனை தொலைவிலேயே அவன் அழுதுகொண்டிருப்பதாக தோன்றியது. இறங்கி ஓசையின்றி அணுகினார். அருகணைந்த பின்னர் தயங்கி நின்றார். விழிநீரை துடைத்தபடி திரும்பிய யுதிஷ்டிரன் “நான் தனித்திருக்க விழைகிறேன்” என்றான். “இத்தருணத்தில் நீங்கள் தனித்திருக்கலாகாது, இளவரசே” என்றார் சல்யர். யுதிஷ்டிரன் “நான் சொல்வதற்கொன்றும் இல்லை” என்றான். “சொல்லுங்கள்” என்றபடி அருகே அமர்ந்தார் சல்யர். தலைகுனிந்து சற்று அமர்ந்திருந்த பின் யுதிஷ்டிரன் “நான் வெல்லுமிடம் ஒன்றேனும் இருக்குமா, மாதுலரே” என்றான்.

“ஆம், இருக்கும். இன்று மாலைக்குள் அதை சொல்கிறேன். நாளையே அவனை நீங்கள் வெல்லலாம்” என்று சல்யர் சொன்னார். அன்று பகல் முழுக்க மலைச்சரிவில் தன் புரவியில் உலவிக்கொண்டிருந்தார். அவர் உள்ளம் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டு அவ்வினாவை உசாவிக்கொண்டிருந்தது. பின்னர் அதை அவர் மறந்தார். விழிகள் மட்டும் தேடிக்கொண்டிருந்தன. அன்று காலை பிறந்த கன்று ஒன்றை நோக்கியபடி நின்றிருந்தபோது அதை ஏன் அத்தனை நேரம் நோக்குகிறோம் என்று புரிந்தது. புரவியை விரையச்செய்து திரும்பி வந்தார். நேராக இளவரசர்கள் தங்கியிருந்த அரண்மனையை அடைந்து யுதிஷ்டிரனை அழைத்து “நாளை நீங்கள் போட்டியை அறிவிக்கலாம், இளவரசே” என்றார்.

மறுநாள் காலையில் சல்யர் அர்ஜுனனையும் யுதிஷ்டிரனையும் பிற மைந்தரையும் கானுலாவுக்கு அழைத்துச் சென்றார். யுதிஷ்டிரன் என்ன நிகழவிருக்கிறது என்னும் உணர்வில்லாமல் அவனுடைய இயல்பின்படி சல்யரை முழுமையாக நம்பி உடன்சென்றான். காட்டில் சதுப்பு ஒன்றை கடந்து சென்றபோது அங்கே அன்று பிறந்த கன்று ஒன்று சேற்றின் நடுவே கொடி ஒன்றில் கால்சிக்கி நின்று கொண்டிருந்தது. காலை இழுத்தபடி அது அஞ்சி கூச்சலிட அதன் அன்னையர் திரள் அப்பால் கரையில் நின்று ஓலமிட்டது. காலை இழுக்கும்தோறும் அது சேற்றில் மூழ்கிக்கொண்டிருந்தது. சல்யர் “அர்ஜுனா, அந்தக் கொடியை அறுத்து கன்றை விடுவி” என ஆணையிட்டார்.

சகதேவன் “அது உகந்தது அல்ல. கன்றின்மேல் அம்பு பட்டுவிடக்கூடும். சேற்றில் இறங்கிச்சென்று அதை விடுவிப்பதே நன்று” என புரவியில் இருந்து இறங்கினான். “நம்மைக் கண்டால் கன்று மேலும் அஞ்சும். நாம் அருகணைந்தால் துள்ளும். சேற்றில் மேலும் அது மூழ்கக்கூடும்… சேற்றைக் கடந்து கன்றை அணுகுவதும் நெடும்பொழுது எடுக்கும்” என்றார் சல்யர். அர்ஜுனன் வில்லை எடுத்து அம்பு பூட்டி கூர் நோக்கினான். இருமுறை கூர் நோக்கியபின் வில்லை தணித்து தன் முகத்தை கையால் வருடிய பின் மீண்டும் கூர்நோக்கி அம்பை செலுத்தினான். அம்பு மிக விலகிச்சென்று சேற்றில் விழுந்து மறைந்தது. கன்று திடுக்கிட்டு துள்ளி விழுந்து எழ அதன் உடல் விதிர்ப்பு கொண்டது.

யுதிஷ்டிரன் “அறிவிலி, நீயே அதை கொன்றுவிடுவாய் போலுள்ளது” என்று சீறியபடி அவன் கையிலிருந்து வில்லைப் பிடுங்கி அம்பை எடுத்து தொடுத்தான். கொடி அவிழ கன்று துள்ளிப் பாய்ந்து சேற்றில் நீந்தி மறுகரையை அடைந்தது. அதன் அன்னை ஓடிவந்து அதை தலையால் தழுவிக்கொள்ள மற்ற அன்னையர் சூழ்ந்து நின்று உவகைக் கூச்சலிட்டன. சல்யர் அர்ஜுனனிடம் “போட்டி முடிந்துவிட்டது, இளைய பாண்டவனே” என்றார். அர்ஜுனன் திடுக்கிட்டு திரும்பி நோக்கி பின் தணிந்து “ஆம்” என்றான். யுதிஷ்டிரன் அதை அறியாமல் “தப்பிவிட்டது. இனி சேற்றில் எச்சரிக்கையாக இருக்கும்” என்றான். சகதேவனும் நகுலனும் புன்னகைத்தனர்.

அர்ஜுனன் பெருமூச்சுடன் “எல்லாம் உங்கள் திட்டம் அல்லவா?” என்றான். “ஆம், நேற்று மாலை ஒரு கன்றை பார்த்ததும் இவ்வெண்ணம் வந்தது. என் ஏவலரை அனுப்பி இக்காட்சியை அமைத்தேன்” என்றார் சல்யர். யுதிஷ்டிரன் திரும்பி நோக்கி “எதை?” என்றான். சகதேவன் “மூத்தவரே, இளையவர் விடுத்த அறைகூவலை கடந்துவிட்டீர்கள். அவர் தோற்ற இடத்தில் வென்றுவிட்டீர்கள்” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்த யுதிஷ்டிரன் “ஆம்!” என்று திகைப்புடன் சொன்னான். “எவ்வண்ணம் நிகழ்ந்தது இது?” வியப்புடன் நோக்கி “அத்தனை சிறிய இலக்கு. அக்கன்று துள்ளிக்கொண்டும் இருந்தது… அதை நான் எவ்வண்ணம் அறுத்தேன்!” என்றான்.

“நீங்கள் அதை காக்கவேண்டும் என்று மட்டுமே எண்ணினீர்கள். உங்கள் திறனை எண்ணவில்லை” என்றார் சல்யர். “அந்த ஆணவமின்மையால் நீங்கள் வென்றீர்கள். ஆனால் அம்பு தொடுத்த கணமே அர்ஜுனன் தன் திறனை கணக்கிடத் தொடங்கினான். ஒரு சிறு பிழை நிகழ்ந்தாலும் அக்கன்று உயிர்துறக்கக்கூடும் என அஞ்சினான். அவன் இலக்கு பிழைத்தது. நீங்கள் அக்கன்றின் புன்மயிர்த் தலையை வருடுவதுபோல் உளம்குழைந்து அம்பு தொடுத்தீர்கள். ஆகவே எதையும் எண்ணாமல் இயற்றி வென்றீர்கள்.”

யுதிஷ்டிரன் சற்றே குன்றி “அது என்னால் இயற்றப்பட்டது அல்ல… எனக்கு விற்தொழிலே தெரியாது. அக்கன்றைக் காக்க நினைத்த ஏதோ தெய்வம் இயற்றியது அதை” என்றான். “ஆகவே எவ்வகையிலும் அவ்வெற்றியை என்னுடையது எனக் கொள்ள இயலாது. நான் எந்நிலையிலும் இளையோனை வெல்லவுமில்லை. அவனை வெல்ல மானுடர் எவராலும் இயலாது” என்றான். அர்ஜுனன் “ஆம், மூத்தவரே. வென்றது அறம்” என்றான்.

அவன் முகம் கலங்கியிருப்பதைக் கண்டு தோள் வளைத்து அவனைத் தழுவி “என்ன இது? இது வெறும் தற்செயல்… தற்செயல்கள் தெய்வங்களின் ஆடல்கள். அதன்பொருட்டு உளம்குன்றலாமா நீ?” என்றான் யுதிஷ்டிரன். “உளம் குன்றவில்லை, மூத்தவரே. உரிய மெய்மை ஒன்றை கற்று உளம் விரிந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன். குனிந்து யுதிஷ்டிரனின் கால்களைத் தொட்டு “இனி ஒருநாளும் என் தன்னிலை உங்களுக்குமேல் எழாது என உறுதிகொள்கிறேன். என் வில்லும் உள்ளமும் உங்களை வணங்கும்பொருட்டே” என்றான்.

அன்று மாலை யுதிஷ்டிரனை தனியாக அழைத்த சல்யர் “இளவரசே, உங்களுக்கு ஒரு பரிசை அளிக்கவிருக்கிறேன். வருக!” என அழைத்துச் சென்றார். தன் அரண்மனையின் கருவூலம் நோக்கி செல்கையில் அவர் சொன்னார் “இந்நிலத்தைத் திருத்தி மத்ரநாட்டை அமைத்தவர் எங்கள் முதல் மூதாதையான மத்ரர். அவர் யயாதியின் கொடிவழியில் எழுந்த அனுவின் குலத்தில் பிறந்த மாமன்னர் சிபியின் குருதியில் வந்தவர். சிபியின் மைந்தரான அனு அறச்செல்வர். மூதாதையரின் பெயரைத் தாங்கும் மைந்தர் இளமையிலேயே உளமுதுமையை அடைந்துவிடுகிறார்கள். மைந்தனாக உணராமலேயே தந்தையென ஆகிறார்கள். முழுக் குலத்திற்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.”

அன்று ஷத்ரியர்கள் போர்த்திறனாலேயே அடையாளம் காணப்பட்டார்கள். ஆனால் இளமையிலேயே போர்க்கலைகளில் ஆர்வமற்றவராக இருந்தார் அனு. அவருடைய அம்புகள் ஒன்றுகூட இலக்கடையவில்லை என்கிறார்கள். நூல்நவில்வதிலும் அறமுணர்வதிலுமே நாட்டம் கொண்டிருந்தார். ஆகவே பிற ஷத்ரிய இளையோரால் பேடி என்றும் வலியிலி என்றும் ஏளனம் செய்யப்பட்டார். ஆனால் அவர்களை தன் மைந்தர்களென்றே நோக்கும் விரிவுளமும் அளியியல்பும் கொண்டிருந்தார் அனு.

ஒருமுறை இளவரசர்களுக்கான போர்ப்பயிற்சியில் மைந்தரின் கைத்திறன் நோக்க மாமன்னர் சிபி வந்தமர்ந்தார். இளையோரான சினியும் மதுவும் மனுவும் எல்லா அம்புகளையும் இலக்கடையச் செய்தனர். ஆனால் அனு நூற்றெட்டு அம்புகள் தொடுத்து அனைத்துமே இலக்கழிந்து விழுந்ததை தந்தை சிபி கண்டார். அவை இலக்கழிந்தமைகூட அவரை நிலையழியச் செய்யவில்லை. அதனால் எந்த வகையிலும் அனு உளம்குன்றவில்லை என்பதை, அவர் முகம் மலர்ந்தே இருந்தது என்பதைக் கண்டு அவர் சீற்றம்கொண்டார். கைநீட்டி கூவியபடி எழுந்து ஆணையிட்டார் “இனி இவன் இங்கிருக்கலாகாது. இவ்வண்ணம் ஒருவன் நம் குலத்தில் பிறந்தான் என்னும் செய்தியே எதிரிகளிடம் ஏளனத்திற்குரியதாக ஆகும். இவன் இன்றே என் மண்ணிலிருந்து அகலவேண்டும்.”

மன்னரின் ஆணையை மீற அமைச்சரும் உடன்படவில்லை. தான் இட்ட சொல்லை பின்னெடுக்க அரசரும் துணியவில்லை. ஆனால் அனு அவ்வாணையை முகம் மலர்ந்து தலைக்கொண்டார். “உங்கள் குருதியைச் சொல்லும் உரிமையும், உங்களுக்கு நீர்க்கடன் இயற்றும் உரிமையும் மட்டும் போதும், தந்தையே” என்று சொல்லி வணங்கி நகர்நீங்கினார். அவர்மேல் நம்பிக்கைகொண்ட நூற்றெட்டு வீரர்களும் பதினெட்டு குடியினரும் துணைசெல்ல அனு நாடுகடந்தார். அரசகுடியினர் ஆகையால் பிற மன்னர்கள் எவருடைய மண்ணிலும் அவர் மூன்று நாட்களுக்குமேல் தங்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஆகவே மேலும் மேலும் வடக்கே வந்து அன்று மானுடரே இல்லாது ஒழிந்துகிடந்த இமையமலைச்சாரலை அடைந்தார்.

அங்கே அன்று வேளாண்நிலம் இருக்கவில்லை. நீர் நில்லா பெருஞ்சரிவு. ஆண்டுக்கு மும்மாதம் வெண்பனி சூடும் நிலம் என்பதனால் விளைமரங்களும் இல்லை. விலங்கென இருந்தவை மலையணில்களும் மான்களும் மட்டுமே. அங்கே மலைக்குகைகளில் அவர்கள் தங்கினர். மரப்பட்டைகளைக்கொண்டு பின்னர் கூடாரங்கள் அமைத்துக்கொண்டனர். மண்ணில் புதைந்து ஆழத்திற்குச் சென்றுவிட்டவர்கள்போல் உணர்ந்தனர். அனு அங்கும் தன் அகநிறைவுடனேயே இருந்தார். அவர் குடிகளும் வீரரும் அவருடைய அறச்சான்றின்மேல் தெய்வத்தின்மேல் என நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஒருநாள் காட்டில் சென்றுகொண்டிருக்கையில் படைவீரர்களில் ஒருவன் காட்டில் மேய்ந்து நின்ற மான் ஒன்றை நோக்கி அம்புகூர்க்க அவனை கைகாட்டித் தடுத்தார் அனு. அவர்கள் உணவுண்டு பல நாட்களாகியிருந்தன. ஆகவே அவன் அச்செயலை புரிந்துகொள்ளாமல் திகைப்புடன் நோக்கினான். “அந்தப் பெண் மான் புல்லை உண்ணவில்லை. மெல்ல சப்பிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது இனிய நினைவொன்றில் ஆழ்ந்திருக்கிறது எனத் தெரிகிறது” என்றார் அனு. “அதன் உடலுக்குள் கரு குடியேறியிருக்கிறது. அன்னையின் உள்ளத்தில் அத்தகைய கனவை நிறைக்க கருக்குழவியால் மட்டுமே இயலும்.” வீரன் வில்தாழ்த்த அவர்கள் அங்கிருந்து அகன்றனர்.

அதை அங்கே நுண்வடிவில் தவம் செய்துகொண்டிருந்த அத்ரி முனிவர் கேட்டார். அவர்கள் கடந்துசென்ற இடத்தில் நின்றிருந்த விரிந்த வெண்மலர் அத்ரி முனிவர் என அவர்கள் அறியவில்லை. மலரிலிருந்து உடல்கொண்டு எழுந்த அத்ரி முனிவர் அவர்களை அணுகி தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நான் ஊழ்கத்தில் அமர்ந்திருந்தபோது உன் சொல்லை கேட்டேன். அந்த மான் இன்னமும் ஆணுடன் கூடவில்லை. அதன் உடலில் கரு குடியேறவுமில்லை. பருவடிவமாக கரு அன்னை உடலில் குடியேறுவதற்கு முன் எண்ணவடிவமாக மலர்கிறது. அதன் கனவு அவ்வாறு எழுந்ததே. எழவிருக்கும் கருவுக்கும் அருளிய நீ யார்?” என்றார்.

அனு தன்னை அவருக்கு அறிமுகம் செய்துகொண்டார். “நான் ஊழ்கத்தின் கீழ்அலைவளைவின் சோர்விலிருந்தபோது உன் சொல்லை கேட்டேன். நீ எனக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அருளினாய். உன் குடி பெருகுக!” என்று அத்ரி வாழ்த்தினார். “என் மகள்களில் ஒருத்தியை உனக்கு அளிக்கிறேன்” என்றபின் அருகே நின்ற புல்லின் மணிகள்செறிந்த கதிர் ஒன்றைத் தொட்டு “மத்ரை எழுக!” என்றார். அங்கே அழகிய இளநங்கை கைகூப்பி நின்றாள். “இவள் என் மகள் மத்ரை. இவளை கொள்க! இவள் வயிற்றில் நீ கொண்ட பேரறம் பொலிந்து எழுக… உன் குடி பெருகுக!” என அத்ரி முனிவர் வாழ்த்தினார். மகள்கொடையாக அனுவுக்கு ஒரு வில்லை அளித்தார். மகளுக்கு குறையா நிறைவுகொண்ட ஒரு பொற்கலத்தை.

மத்ரையை மணந்து தன் குடிலுக்கு கொண்டுசென்றார் அனு. அவர்களை மலைமாடுகளும் ஆடுகளும் தேடிவந்து பெருகி மந்தை ஆயின. அவள் கால்பட்ட இடமெல்லாம் கழனி ஆகியது. செல்வம் பெருகி அந்நிலம் ஓர் ஊராகியது. நகராகியது. அவள் குருதியில் பிறந்த மைந்தர் அவள் மைந்தர் என்னும் அடையாளத்துடன் மத்ரர் என்றே அழைக்கப்பட்டார். விற்தொழில் தேர்ந்தவர், போர்த்திறன் மிகுந்தவர், அரியணை ஆளப்பிறந்தவர் மத்ரர். அவர்தான் அனைத்து நலன்களும் கொண்ட அந்த நகரை கோட்டை கட்டி பெருக்கி சகலபுரி என பெயர்சூட்டியவர். அவருடைய கொடிவழியினர் என்பதனால் நாங்கள் மத்ரர்கள் என்றும் எங்கள் நாடு மத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் அன்னை மத்ரையின் தூய உடல் என்றே எங்கள் பூசகர்களால் வழிபடப்படுகிறது.

“அனு தன் வாழ்நாளெல்லாம் படைக்கலமேந்தி போரிட்டதில்லை என்கிறார்கள். ஆனால் அரசருக்குரிய முறையில் வில் ஒன்றை அவர் கொண்டிருந்தார். அத்ரி முனிவர் மகள்கொடையாக அவருக்கு அளித்த அந்த வில் தயை என அழைக்கப்பட்டது. பொன்னாலான அந்த வில் எங்கள் கருவூலத்தில் உள்ளது. அனுவுக்குப் பின் அவர் மைந்தர் மத்ரர் தனக்கென சுகீர்த்தி என்னும் வில்லை சமைத்துக்கொண்டார். அதன்பின் மத்ரநாட்டரசர்கள் அந்த வில்லாலேயே போரிட்டனர். என் வில்லும் அதுவே. மூதாதையருக்கான ஆண்டுக்கொடையின்போது மட்டும் தயை கருவூலத்திலிருந்து எடுக்கப்பட்டு மக்களின் காட்சிக்கு வைக்கப்படும். அதற்கு மலரிட்டு வணங்கி மீண்டும் கருவூலத்திற்கே கொண்டுசெல்வோம்” என்று சல்யர் சொன்னார்.

அவர்கள் கருவூலத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே சல்யரின் ஆணைப்படி தயை எடுத்து வைக்கப்பட்டிருந்தது. எடையற்ற சிறிய மூங்கில் வில் அது. இரு முனைகளிலும் கைப்பிடிகளிலும் பொன்பணி செய்யப்பட்டிருந்தது.  “மிகச் சிறிது” என்று யுதிஷ்டிரன் சொன்னான். “ஆம், நம்மை ஆளாமல் நம்மால் ஆளப்படுவது” என்ற சல்யர் அதை சுட்டிக்காட்டி “இது உங்கள் வில்லென ஆகுக, இளவரசே! நானறிந்தவரை இவ்வில்லை சூடும் தகைமைகொண்ட வேறெவரும் இன்றில்லை. தீப்பட்ட என் தங்கைக்கு நான் அளிக்கும் இறுதி மகள்கொடையாக இது அமைக!” என்றார்.

யுதிஷ்டிரன் அந்த வில்லை குனிந்து தொட்டான். முகம் மலர்ந்து  “அது என்னை முன்னரே அறிந்திருக்கிறது” என்றான். கையில் எடுத்து எளிதாக நாணேற்றி “என் கை அதற்கு மிகவும் பழகியிருக்கிறது” என்றான். சல்யர் “அது உங்களுக்காக நூற்றெட்டு தலைமுறைக்காலம் காத்திருந்திருக்கிறது” என்றார்.

முந்தைய கட்டுரைகதிரவனின் தேர்- 6
அடுத்த கட்டுரைஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்