கதிரவனின் தேர்- 5

இந்தியப்பயணம் 21, பூரி

 

காலையிலேயே அய்யம்பெருமாள் வந்து புரி தேர்த்திருவிழாவுக்கு அழைத்துச்சென்றார். அவருடைய காரிலேயே சென்றோம். எங்களுக்கான அனுமதிச்சீட்டுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தன. நாங்கள் செல்லும்போது பெரிதாகக் கூட்டம் கண்ணுக்குப் படவில்லை. உண்மையில் நாங்கள் சென்றது கோயிலின் பின்பக்கம். கூட்டம் இருந்தது முன்பக்கம். தேரை பின்புறமாகச் சென்று அணுகினோம்

செல்லும்வழியெங்கும் சந்தன நாமம் இட்ட பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு பகுதியின் வைணவ மரபு அது. நாமம் மூக்கிலேயே தொடங்கிவிடும். சைதன்ய மகாப்பிரபுவின் பக்தர்கள் ஆடையை கச்சையாக கட்டி பாடியபடி சென்றனர். உதிரி உதிரியாகவே நல்ல கூட்டம். எல்லாரும் ஒரே திசைநோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.எத்தனை அழுக்கான,சிறிய ஊரானாலும் திருவிழா என்றால் ஒர் அழகு வந்துவிடுகிறது. ஆனால் நான் ஊரையே அலங்காரம் செய்திருப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன். ஆகவே சற்று ஏமாற்றமாகவும் இருந்தது

காசியை நினைவுறுத்தியது புரி. இடுங்கலான தெருக்கள். அவற்றில் மிகப்பழைய கட்டிடங்கள். பெரும்பாலும் இனிப்புக்கடைகள். தேங்கி கவிந்த சாக்கடைகள். பெரிய திமில்கொண்ட பசுக்கள். நாய்கள். தெருவெங்கும் சாணி. மின்மோட்டார் வைத்த ரிக்‌ஷாக்கள் . உறுமியபடியும் கனைத்தபடியும் அதட்டியபடியும் ஆட்டோக்கள். நெரிசலில் ஒவ்வொருவரும் ஒருமாதிரி அவரவர் வழிகளைத் தேடிக்கொண்டனர்.

வழியெங்கும் சின்னச்சின்ன ஆலயங்களில் அபத்தமான சிமிண்ட் சிற்பங்களாக தெய்வங்கள். தயிர்வடை தேசிகன் தோற்றத்தில் கிருஷ்ணன். என்னெத்தே கன்னையாபோல சிவன். குண்டான லக்ஷ்மி சரஸ்வதி மாமிகள். துர்க்கை கொடூரமாக இருந்தாள்.

ஆலயத்திற்குப் பின்னால் கடுமையான போலீஸ் காவல் இருந்தது. வடம்போட்டு தடுக்கப்பட்டிருந்த இடத்திற்குள் நுழைய மக்கள் வாதாடிக்கொண்டிருந்தனர். பொதுவாக ஒரிசாவில் போலீஸ் மேல் பயம் இல்லை. போலீஸிடம் கெஞ்சுவதில்லை, சண்டை போடுகிறார்கள். ஏனென்றால் இது ஒப்புநோக்க அமைதியான மாநிலம். இங்கே போலீஸ் வன்முறையை வெளிக்காட்டியதில்லை

அனுமதிச்சீட்டைக் காட்டி உள்ளே சென்று ஒரு இல்லத்தின் மொட்டைமாடியில் அமைந்திருந்த நோக்குமாடத்தை அடைந்தோம். மொட்டைமாடியில் மூங்கில்நட்டு ,கூரை போட்டு, நாற்காலிகள் அமைத்து அதை உருவாக்கியிருந்தனர். ஆலயத்தின் முகப்பிலிருக்கும் மாபெரும் முற்றத்தில் தேர்கள் நின்றன. ஆலயத்தின் கிழக்குவாயில் இது. சிம்ஹத்வாரம் -சிம்மவாயில் – என இதை அழைக்கிறார்கள். அதைச்சூழ்ந்திருந்த அத்தனை மாடிகளிலும் அவ்வண்ணம் நோக்குமாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நாங்கள் சென்றபோது தேர்கள் ஒருங்கிக்கொண்டிருந்தன. நோக்குமாடங்களில் ஆட்கள் வரத்தொடங்கினார்கள். ஆலயத்திலிருந்து மலர்மாலைகளை ஊர்வலமாக எடுத்துவந்து தேர்களுக்கு அணிவித்தனர். அந்த முற்றமே வாத்தியங்களின் பிளிறலோசையால் நிறைந்தது. கொம்புகளில் காற்றும் மணிகளில் உலோகமும் கூச்சலிட்டன. புரி ஜெகன்னாதரை வாழ்த்தும் ஒலிகள் நாலாபக்கமிருந்தும் ஒலித்தன. அப்போதுதான் அந்தத் தெருக்களெங்கும் பல்லாயிரம் பேர் நிறைந்திருப்பதை உணர்ந்தோம்.

அந்த ஊர்வலத்திற்கு ஓர் அமைப்பு இருந்தது. சங்குகள் சேகண்டிகள் முழவுகளுடன் ஒரு கூட்டம் முதலில் வரும். தொடர்ந்து ஆடல்மகளிர் ஆடியபடி வந்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு வேடங்களில் ஆடியபடி கூத்தர்கள். தொடர்ந்து பாவட்டாக்கள் ,ஆலவட்டங்களுடன் பூசகர்கள் பல்லக்குகளில் மாலைகளையும் தெய்வங்களையும் தூக்கிக் கொண்டுவந்தனர். அவர்களைத் தொடர்ந்து துணைப்பூசகர்களின் கூட்டம். தேர்களை வட்டமிட்டுவந்து மேலேறி கொண்டுசென்று மாலைகளை அமைத்தனர்.

தேர்கள் நிலத்திலிருந்து பத்தடி உயரத்தில் தட்டுகளைக் கொண்டிருந்தன. அங்கிருந்து நிலம் வரை பனைமரத்தடிகளை சாய்வாகப் போட்டு அவற்றின்மேல் பலகைகள் பரப்பிப் படிகள் அமைத்திருந்தனர். தேர்களைப்பார்த்தபோது மூன்று மரக் கட்டிடங்கள் அவை எனத் தோன்றின. தமிழகத்துத் தேர்களைப்போல பெரிய இரு சக்கரங்கள் கொண்டவை அல்ல. நிறைய சிறிய சக்கரங்கள். பெரியதான ஜெகன்னாதரின் தேருக்கு 16 சக்கரங்கள் இருந்தன. ஏழடி உயரமான சக்கரங்கள். இரும்பு ஆரங்கள் கொண்டவை.

இங்குள்ள மூன்று தேர்களும் புரியின் மூன்று தெய்வங்களான பலபத்ரர் [பலராமர்] சுபத்ரை மற்றும் ஜகன்னாதர் [கிருஷ்ணன்] ஆகியோருக்குரியவை. தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகச் செய்யப்படுகிறன. அதற்கான மரங்கள் தனியாக தெரிவுசெய்யப்படுகின்றன. அவை வழக்கமாக பழைய சமஸ்தானமான தசபல்லாவிலிருந்து பரம்பரைத் தச்சர்களால் கொண்டுவருகின்றன. மகாநதியில் மிதக்கவிட்டு இந்த மரங்களை கொண்டுவருகிறார்கள்

இந்த தேர்களின் அலங்காரங்களுக்கும் மாறாத நெறிகள் உள்ளன. விரிந்த அடித்தட்டுக்கு மேல் தூண்களை நட்டு, அதன்மேல் ஒளிரும் வண்ணங்கள் கொண்ட துணிகளால் கூரையும் தொங்குதிரைகளும் அமைத்திருக்கிறார்கள். ஜெகன்னாதரின் தேரே பெரியது. அது நந்திகோஷம் எனப்படுகிறது. 45 அடி உயரம் 55 அடி அகலமான சதுரவடிவும் கொண்டது. 16 சக்கரங்கள்.ஒவ்வொன்றும் ஏழு அடி உயரமானவை.

ஜெகன்னாதர் கிருஷ்ணனின் புகழ்ப்பெயர். அவருடைய தேர் மஞ்சளாடை அணிந்தது. பொன்னூல் பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட அணிகள் சூடியது. பலராமரின் தேர் தாலத்வஜம் எனப்படுகிறது. அவர் பனைமரக்கொடி கொண்டவர். அந்தத்தேர் 14 சக்கரங்கள் கொண்டது. சிவப்பு மற்றும் பச்சை துணிகளால் லங்கரிக்கப்பட்டது 44 அடி உயரமானது.

சுபத்ரையின் தேர் த்வர்பாதலனம் என அழைக்கப்படுகிறது. மணமகளின் நடை என்று பொருள். 43 அடி உயரமானது. 12 சக்கரங்கள் கொண்டது. செந்நிறமும் கருநிறமும் கொண்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டது. இங்கே சுபத்ரை தேவியின் அம்சமாக, காளியின் இன்னொரு வடிவாக வழிபடப்படுகிறாள். ஆகவேதான் கரிய நிறம். ஜகன்னாதரின் தேரை தாருகனும் பலராமரின் தேரை மாதலியும் சுபத்ரையின் தேரை அர்ஜுனனும் ஓட்டுகிறார்கள் .

ஆய்வாளர்கள் இங்கே பலராமரும் இணையான தெய்வமாக வழிபடப்படுவதையும் சுபத்திரை காளியின் வடிவமாக கருதப்படுவதையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். பலராமர் மகாபாரதத்திலேயே மிகமிகச் சிறிய அவதாரம். அவருக்கு அவதார நோக்கம் கூட இல்லை. அவர் எப்படி பத்து அவதாரங்களில் ஒன்றாகக் கணக்கிடப்படுகிறார் என்பது பெரிய மர்மம். ஒரே சமயம் இரு அவதாரங்கள், இரண்டுக்கும் நடுவே சண்டை கூட நடந்திருக்கிறது! ஒருவர் பாரதப்போரையே நடத்தினார். இன்னொருவர் சும்மா அரண்மனையில் கதையைச் சுற்றிக்கொண்டிருந்தார்.

பலராமர் கலப்பையை அடையாளமாகக் கொண்ட வேறு ஒரு தொல்தெய்வத்தின் அடையாளத்தை தன்மேல் ஏற்றிக்கொண்டவர் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அவ்வழிபாடு காலப்போக்கில் வைணவத்தில் கலந்தபோது கிருஷ்ணனின் மூத்தவராக அவர் ஆகியிருக்கலாம். கலப்பையை அவர் ஏந்தியிருப்பதே விந்தையானது. யாதவர்குலத்திற்குள் கலப்பை!

ஜகன்னாதர் தேர் ஊரைச்சுற்றிவருவதில்லை. மிகப்பெரிய ரதவீதி நேராகச்சென்று குண்டிசா என்னும் தேவியின் கோயில் முகப்பை அடைகிறது. அங்கிருந்து திரும்பி வந்து மௌஸி மா எனப்படும் அர்த்தாசினி தேவியின் ஆலய முகப்பில் ஒருநாள் நின்றுவிட்டு மீண்டும் ஜகன்னாதர் ஆலயத்தை வந்தடையும் அர்தாசினி தேவி வெள்ளம் வந்தபோது ஜகன்னாதரின் ஆலயத்தைக் காக்கும்பொருட்டு கடலை பாதி உறிஞ்சிக்குடித்தவள் என்பது தொன்மம். மிகச்சிறிய ஆலயம் இது. இந்த தொன்மங்கள் எதற்கும் மைய இந்து புராணமரபில் இடமில்லை. பிற்காலத்தைய கதைசொல்லிகள் பனைமரத்தில் பசுவைக் கொண்டுசென்று கட்டியிருக்கிறார்கள்.

புரி ஜெகன்னாதர் இன்று விஷ்ணுவின் வடிவாக, கிருஷ்ணனாக வழிபடப்படுகிறார். ஆனால் பௌத்தர்கள் ,சமணர்கள் மற்றும் தாந்திரிகர்கள் இதை தங்கள் மரபைச்சேர்ந்த தெய்வம் என்று கூறுகிறார்கள்.அவை எல்லாமே உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் இந்த தெய்வ உருவம் மிகமிகத் தொன்மையானது. இதன் பரிணாம வளர்ச்சியில் எல்லா மதங்களுமே பங்களிப்பாற்றியிருக்கலாம். அதிலும் கலிங்கம் சாக்தம் விளைந்த மண். ஆகவே சாக்தமரபின் தாக்கமும் மிகுதியாக இருந்திருக்கலாம்.

 

இந்துச் சிற்பக்கலை, வழிபாட்டுமரபுகளை அறிந்தவர்களுக்கு ஜெகன்னாதர் ஆலயத்தின் சிற்பமும் பூசனைமுறைகளும் மிக அயலாகவே தெரியும்.பலிக்கொடைகளின் குறியீட்டு வடிவங்கள் இங்குள்ள பூசனை முறைகளில் உள்ளன. இந்தியா முழுக்க கடைப்பிடிக்கப்படும் பூசனை நெறிகளில் இருந்து இது பலவகையிலும் மாறுபடுகிறது என்கிறார்கள்.ஆனால் இத்தகைய பலநூறு வழிபாட்டுமுறைகளும் தெய்வ வடிவங்களும் இணைந்து உருவானதே இந்துமதம். இவற்றை உள்ளே மாற்றமின்றி அமைத்துக்கொள்ளும் தத்துவ – தொன்மக் கட்டுமானம் இந்து மரபுக்கு உண்டு.

தாந்த்ரீகமும் சிற்பக்கலையும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கலிங்கத்தில் வளர்ந்தன. தாந்த்ரீக முறைகளுக்கு சௌர மதத்துடன் அணுக்கமான தொடர்பு உண்டு என்றும், அதிலிருந்தே அம்முறைமைகள் வைணவத்திலும் சாக்தத்திலும் பரவின என்றும் இந்த ஆலயம்பற்றி எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில் வாசித்தேன்.

புரி ஜெகன்னாதரின் சிற்பம் வேப்பமரத்தில் செதுக்கப்பட்ட ஒரு பெரிய தலை மட்டுமே. மிகப்பெரிய வட்டக்கண்கள் கொண்டது. [பல பாவைகளில் தனியாக கைகளும் வாயும் இணைக்கப்படுகின்றன] கைகால்கள் இல்லாத இத்தகைய தெய்வங்களை வழிபடும் மரபு மைய இந்துமதத்தில் இல்லை. ஆனால் இந்துமதத்தின் நாட்டார் தளத்தில் இத்தகைய பல தெய்வங்கள் உள்ளன. உதாரணம், மகாராஷ்டிரத்தில் வழிபடப்படும் ஏகவீரன். தமிழ்நாட்டில் ரெட்டியார்கள் நீள்வட்ட வடிவில் முகம் மட்டுமேயான குலதெய்வங்களை வழிபடுகிறார்கள்.

எங்கள் குலதெய்வமான பகவதிகளில் நீலி  அல்லது நீலகேசி எனப்படும் அன்னையர்  ‘முடி’ வடிவில் கோயில்கொண்டிருக்கிறார்கள். கமுகப்பூக்குலைக்கு வண்ணம் பூசி உருவாக்கப்பட்டது முடி. அண்ட ஆலயமே முடிப்புரை என்றுதான் அழைக்கப்படும். எனக்கு புரி ஜகன்னாதரின் சிற்பம் முடிப்புரையின் பகவதி ‘வைப்பு’ களைத்தான் நினைவூட்டியது

இத்தகைய தெய்வ வடிவை வழிபடலாம் என்று ரிக்வேதத்தின் சில சூத்திரங்களையும் சிவலிங்க வழிபாடு போன்றவற்றையும் சுட்டிக்காட்டி வைதிகர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் இந்த வழிபாடு வேறெங்கும் இல்லை என்பது உண்மை.

ஜெகன்னாதரும் பலராமரும் சுபத்ரையும்  என இன்று வழிபடப்படும் இத்தெய்வங்கள் வேறு வடிவில்  நாட்டார்த்தெய்வங்களாக இருந்து இந்துமதத்திற்குள் குடியேறியவர்கள் என்பதே உண்மை. இத்தெய்வத்துடன் தொடர்புடைய குண்டிசாதேவி, மௌசிமா தேவி ஆகிய பிற தெய்வங்களும் இந்து மையமரபில் இடம் இல்லாதவையே. அவற்றை ‘உருக்கி’ ஒன்றாக்கவேண்டியதில்லை. அப்பன்மையே இந்துமரபின் இயல்பு என நீடிக்கலாம்.

நான் பொதுவாக இத்தகைய மதவிவாதங்களை பொருட்படுத்துவதில்லை. இவை வரலாறு சார்ந்தவையும் அல்ல, ஆன்மிகம் சார்ந்தவையும் அல்ல. ஆலய அதிகாரம் சார்ந்தவை மட்டுமே. அந்த இடத்தில் எவ்வண்ணமோ ஒரு இறையிருப்பு எவராலோ உணரப்பட்டது. அது அவர்களுக்கு தோன்றிய வடிவில் வழிபடப்பட்டது. அவர்கள் மாறிக்கொண்டிருக்க அவ்வடிவும் புதிய பெயர்கள் கொண்டது. ஆனால் அது காட்சிக்கு அவ்வடிவிலேயே நீடிக்கிறது. அது அவ்வாறுதான் தன்னை வெளிப்படுத்தியது என்பதனால் அவ்வாறே நீடிப்பதுதான் முக்கியமானது.

குண்டிசா

ஜகன்னாதரையும் இந்தத் தேரோட்ட விழாவையும் இந்துமதம் என்னும் மாபெரும் அமைப்பு உருவாகி வந்ததன் சித்திரத்தைக்கொண்டே புரிந்துகொள்ள முடியும். இது ஏதேனும் ஒற்றைச்சிந்தனையோ ஒற்றை இனமரபோ முதிர்ந்து உருவான ஒன்று அல்ல. அவ்வாறு கோரும் எந்த வாதமும் ஆதிக்க நோக்கம் கொண்டதே. வரலாற்றுநோக்கில் பல்வேறு பழங்குடி மரபுகள் ஒன்றோடொன்று கொண்டும் கொடுத்தும் முயங்கி இணைந்து இந்த வழிபாடும் விழாவும் உருவாகியது. அதில் வேதவேள்வி மரபும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. வேதாந்த தத்துவம் அனைத்து மரபுகளையும் இணைக்கும் பொதுச்சரடுகளை உருவாக்கியது

 

விளைவாக புராணங்களும் ஆசாரங்களும் உருவாகி வந்தன. அறுதியாக நாம் இப்போது காணும் இந்த ஆலயமும் வழிபாட்டுமுறையும் திருவிழாவும் அமைந்தன. இந்த உள்ளிழுத்தல் ஒரு பண்பாட்டு வன்முறை என்று இன்று கூச்சலிடுபவர்கள் நம் கல்விநிலையங்களிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த உள்ளிழுத்தல் இல்லையேல் இன்னொரு வழியாக இருந்தது அழித்தொழித்தல் மட்டுமே.

குண்டிசா 

குண்டிசாஆலயம்

இந்துமதமும் பௌத்தமும் பெரும்பாலும் பிறவற்றை உள்ளிழுத்துக்கொண்டு, தன்னை விரிவாக்கிக்கொண்டு, அம்மரபுகளை அவ்வண்ணமே உள்ளே அமையச்செய்தன. ஜப்பானில் ஐநூறாண்டுகளுக்குப் பின்னர்கூட பௌத்தத்தில் இருந்து ஷிண்டோ மதத்தை மெய்ஜி காலகட்டத்தில் பிரித்தெடுக்க முடிந்தது  மாறாக,  தீர்க்கதரிசன மதங்கள் ஒற்றை நோக்கு கொண்டவை ஆதலால் மாற்று வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் முற்றாக மறுத்து, முழுமையாக அழித்தன. உள்ளிழுத்துக்கொண்டபோதுகூட முற்றாக மாற்றியமைக்கவும் செய்தன.

மதங்களின் இந்த இணைவும் பெருக்கமும் இயல்பானது. ஏனென்றால் மானுட இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிப்போக்கின் இயல்பு இது. மதங்களின் வளர்ச்சி நிலைக்கும்போதுதான் அவற்றின் வடிவங்களும் மாறாமல் ஆகின்றன. அவை இறுகி பிறரை ஏற்காமலாகும்போதோ அல்லது வெறும் வரலாறாக நிலைகொண்டபின்னரோ அவ்வாறு ஆகிறது.

இன்றும் ஜெகன்னாதர் அதே பழங்குடித் தெய்வம் என நீடிப்பதே இந்துமதத்தின் விரிவுக்குச் சான்று. இதை ஒரு நல்லியல்பு, அல்லது பெருமை என்றெல்லாம் நான் இன்று நினைக்கவில்லை. வரலாற்றில் இவ்வண்ணமும் நிகழ்ந்தது. இதுவே நிகழ்ந்தவற்றில் சிறந்த முறை. இதுவே பண்பாட்டுப்பன்மைத்தன்மையை இந்நிலத்தில் நிலைநிறுத்தியது, ஆகவே இதுவே உலகுக்கு முன்னுதாரணம் என நம்புகிறேன்..

 

புரியின் ஜெகன்னாதர் ஆலயத்தின் முன் அமர்ந்து தேர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கிருஷ்ணனுக்கும் கலிங்கத்திற்கும் பெரிய தொடர்பில்லை. சொல்லப்போனால் அவன் கலிங்கத்தையும் அங்கத்தையும் உத்கலத்தையும் வென்ற அரசன். ஆனால் அதன் மாபெரும் தேரில் அவன் தன் துணைவியுடன் கோயில்கொண்டிருக்கிறான். இந்தியாவையே அவன் வென்றது வேறொரு வடிவில். உலகையே வென்றவன் என்று பெயர்கொண்டிருக்கிறான்.

 

 

 

முந்தைய கட்டுரைநரம்பில் துடித்தோடும்  நதி – சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18