மூலம் — ரே பிராட்பரி
தமிழாக்கம் — டி.ஏ.பாரி
கி.பி. 400ஆம் ஆண்டு பேரரசர் யுவான் சீனப் பெருஞ்சுவர் மூலம் தன் அரியணையை தக்கவைத்துக் கொண்டார். மழையால் வளம்பெற்ற நிலம் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்க, அவரது ஆட்சியிலிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அல்லது துயர் இரண்டுமின்றி அமைதியில் வாழ்ந்தனர்.
புதிய ஆண்டின் இரண்டாவது மாதம், முதல் வாரத்தின் முதல் நாள் அதிகாலையில், பேரரசர் யுவான் தேனீரை உறிஞ்சியவாறு விசிறியிலிருந்து வரும் இளஞ்சூடான தென்றல்காற்றின் முன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது விடியலின் செவ்வொளியின் ஊடே தோட்டத்தின் நீலக்கற்கள் பதிக்கப்பட்ட தளத்தின்மீது ஓடிவந்து ஓர் ஏவலன் அழைத்தான், “பேரரசே, பேரரசே, ஓர் அதிசயம்!”
”ஆம்,” பேரரசர் கூறினார், ”இன்று காலை காற்று இனிமையாக உள்ளது.” ”இல்லையில்லை, ஓர் அதிசயம்!” விரைவாக தலைவணங்கி ஏவலன் சொன்னான்.
”இந்தத் தேனீர் என் நாவில் சுவையாக உள்ளது. நிச்சயம் அது ஓர் அதிசயமே.” ”அல்லை, அதுவல்ல மேன்மைதாங்கியவரே.”
”அவ்வாறெனில்.. இரு, யோசிக்கிறேன் – சூரியன் உதித்து நமக்கு ஒரு புதிய நாளை அளித்திதிருக்கிறது. அல்லது கடல் நீலமாக உள்ளது. தற்போது இருப்பதிலேயே சிறப்புமிக்க அதிசயம் அதுதான்.”
”பேரரசே, ஒரு மனிதன் பறக்கிறான்!”
”என்ன?” பேரரசர் தன் விசிறியை நிறுத்தினார்.
”நான் அவனை காற்றில் கண்டேன், ஒரு மனிதன் தன் இறக்கைகளுடன் பறந்து கொண்டிருந்தான். வானிலிருந்து ஒரு குரல் அழைத்தது, மேலே பார்த்ததில் அவன் அங்கிருந்தான், வாயில் ஒரு மனிதனுடன் விண்ணகத்தின் டிராகன் ஒன்று, மூங்கில் மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட டிராகன், சூரியன் மற்றும் புல்லின் நிறம் கொண்டிருந்தது.
”இது அதிகாலை,” பேரரசர் கூறினார், “நீ சற்றுமுன்னர் தான் கனவிலிருந்து எழுந்துள்ளாய்.” ”இது அதிகாலைதான். ஆனால் நான் என் கண்களால் கண்டது முற்றிலும் உண்மை! வாருங்கள், நீங்களே பார்க்கலாம்.”
”என்னுடன் இங்கு அமர்ந்துகொள்,” பேரரசர் அறிவுறுத்தினார். ”கொஞ்சம் தேனீர் அருந்து. இது உண்மையெனில், ஒரு மனிதன் பறப்பதை காண்பதென்பது நிச்சயம் அரிதான விஷயமே. நீ இதுபற்றி சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக் கொள், நானும் அந்தக் காட்சியைக் காண என்னை தயார்படுத்திக் கொள்கிறேன்.” அவர்கள் தேனீர் அருந்தினர்.
”அரசே தயைகூர்ந்து…,” இறுதியில் ஏவலன் சொன்னான், “இல்லையேல் அவன் மறைந்துவிடுவான்” பேரரசர் சிந்தனையுடன் எழுந்தார். “இப்போது நீ என்ன பார்த்தாய் என்பதை எனக்குக் காட்டலாம்.”
அவர்கள் தோட்டத்தினுள் நடந்தனர், புல்வெளியின் குறுக்கே கடந்து, சிறிய பாலத்தின் மீதேறி, மரங்களினூடே சிறிய குன்றின் உச்சியை அடைந்தனர்.
”அங்கு!” ஏவலன் சுட்டினான்.
பேரரசர் வானில் நோக்கினார்.
வானில், மிக உயரத்திலிருந்து வருவதால் சரியாக கேட்காத அளவுக்கு ஒரு மெலிதான சிரிப்பொலி கேட்டது, அது ஒரு மனிதன்; அம்மனிதன் பிரகாசமான காகிதங்களாலான உடை மற்றும் நாணல்களால் செய்யபட்ட இறக்கைகளும் ஓர் அழகிய மஞ்சள்நிற வாலும் கொண்டிருந்தான், அவன் பறவை உலகின் மிகப்பெரிய பறவைபோல வானில் மேலெழுந்தான், தொன்மையான டிராகன்களின் நிலத்தில் ஒரு புதிய டிராகன் போல.
அம்மனிதன் மேலே காலையின் குளிர் தென்றலில் இருந்து கீழ்நோக்கி கூவினான். ”நான் பறக்கிறேன், நான் பறக்கிறேன்!” ஏவலன் அவனுக்குக் கையசைத்தான்.
”ஆமாம், ஆமாம்!”
பேரரசர் யுவான் அசையவில்லை. மாறாக அவர் தூரத்து பனிமூட்டத்தில் பசுமையான மலைகளில் உருக்கொண்டு வரும் சீன பெருஞ்சுவரைப் பார்த்தார், கற்களாலான பாம்புபோல வளைந்து நெளிந்திருந்த அந்த மகத்தான சுவர் கம்பீரத்துடன் மொத்த நிலப்பரப்பையும் வளைத்திருந்தது. அந்த அற்புதமான சுவர் எதிரிப் படைகளிடமிருந்து கணக்கிலடங்கா காலம் முதல் அவர்களை பாதுகாத்து பல்லாண்டுகளுக்கு அமைதியை நிலைநாட்டியுள்ளது. அவர் நகரை நோக்கினார், அது ஓர் ஆறு, ஒரு சாலை மற்றும் ஒரு மலையால் தன்னைதான் சூழப்பட்டு துயிலெழத் தொடங்கியிருந்தது.
”இதைச் சொல்,” ஏவல்னிடம் கேட்டார், ”இந்த பறக்கும் மனிதனை வேறு யாரேனும் பார்த்தார்களா?”
”நான் மட்டும் தான், அரசே” வானை நோக்கி புன்னகைத்து கையசைத்துக்கொண்டே ஏவலன் சொன்னான்.
பேரரசர் வானை மேலும் ஒருநிமிடம் கவனித்திருந்துவிட்டுக் கூறினார், ”அவனை கீழிறங்கி என்னிடம் வரச் சொல்.”
”ஹோ, கீழிறங்கு, கீழிறங்கு! பேரரசர் உன்னைப் பார்க்க விரும்புகிறார்!” கைகளை வாயில் குவித்து ஏவலன் கூவினான்.
பறக்கும் மனிதன் மிதந்து கீழே வருகையில் பேரரசர் அனைத்துத் திசைகளிலும் நோட்டமிட்டார். ஒரு விவசாயி வழக்கமான நேரத்துக்கு முன்னதாகவே தன் நிலத்தில் நின்று வானை பார்த்துக் கொண்டு இருப்பது அவர் கண்ணில் பட்டது, விவசாயி நின்ற இடத்தை குறித்துக் கொண்டார்.
”நீ என்ன செய்துள்ளாய்?” பேரரசர் அதட்டினார்.
”நான் வானில் பறந்தேன், அரசே” அம்மனிதன் பதிலளித்தான். ”நீ என்ன செய்துள்ளாய்?” பேரரசர் மீண்டும் கேட்டார்.
”தற்போதுதான் தங்களிடம் கூறினேன் பேரரசே!” பறக்கும் மனிதன் கதறினான்.
”நீ என்னிடம் எதுவும் கூறவில்லை.” பேரரசர் தன் மெல்லிய கையை நீட்டி அந்த உபகரணத்தின் அழகிய காகிதத்தையும் பறவைபோன்ற அடிப்பாகத்தையும் தொட்டுப் பார்த்தார்.
”இது அழகானது, இல்லையா அரசே?” ”ஆம், மிகவும் அழகு.”
”இது உலகில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது!” அம்மனிதன் புன்னகைத்தான். “மேலும் இதை உருவாக்கியவன் நானே.”
“உலகில் ஒன்றே ஒன்றுதான் உள்ளதா?”
”சத்தியமாகச் சொல்கிறேன்!”
”இதுபற்றி வேறு யார் அறிவார்கள்?”
”எவருமல்ல. என் மனைவிக்குக் கூடத் தெரியாது, மகனுடன் சேர்ந்து எனக்கும் கிறுக்குப் பிடித்துவிட்டதாய் அவள் நினைத்திருப்பாள். நான் ஒரு பட்டம் செய்து கொண்டிருப்பதாகவே அவள் நினைத்தாள். நான் இரவில் எழுந்து வெகுதூர மலையில் இருக்கும் செங்குத்தான பாறை முகடுக்கு நடந்தேன். காலையின் இளந்தென்றல் வீசி சூரியன் உதித்தவுடன், என் மனவுறுதியை திரட்டிக் கொண்டேன், அரசே, பின்னர் பாறை முகட்டிலிருந்துத் தாவினேன். நான் பறந்தேன்! ஆனால் என் மனைவிக்கு இதுபற்றித் தெரியாது.”
”எனில் அவளுக்கு நல்லது,” பேரரசர் கூறினார். “என்னுடன் வா.”
அவர்கள் அரண்மனைக்குத் திரும்பி நடந்தனர். தற்போது சூரியன் முழுமையாக உதித்துவிட, புல்லின் மணம் புத்துணர்வு தருவதாய் இருந்தது.
பேரரசர், ஏவலன் மற்றும் பறக்கும் மனிதன் மூவரும் விசாலமான தோட்டத்தின் நடுவே நின்றனர்.
பேரரசர் தன் கைகளைத் தட்டினார். ”வீரர்களே!” காவல் வீரர்கள் ஓடி வந்தனர். ”இம்மனிதனை பிடித்து வையுங்கள்.” காவலர்கள் பறக்கும் மனிதனை சிறைபிடைத்தனர். “அரண்மனைக் கொலையாளியை அழைத்து வாருங்கள்,” பேரரசர் கூறினார். ”என்ன இது!” பறக்கும் மனிதன் திகைப்பில் கதறினான். “நான் என்ன செய்துவிட்டேன்?” அவன் அழத் துவங்கியதில் அழகிய காகிதங்களாலான உபகரணம் சலசலத்தது.
”இதோ இந்த மனிதன் ஒரு குறிப்பிட்ட இயந்திரத்தைச் செய்துள்ளான்,” பேரரசர் தொடர்ந்தார், “இருப்பினும் அவன் என்ன செய்துள்ளான் என்பதை நம்மிடமே கேட்கிறான். அவனுக்கே அது தெரியாது. உருவாக்குவது மட்டுமே அவனுக்கு அவசியமாக இருந்திருக்கிறது, இதை ஏன் செய்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியாமல், அல்லது இப்பொருள் என்ன விளைவை உண்டாக்கும் என்பதும் தெரியாமல்.”
கொலையாளி ஒரு கூரிய வெள்ளிக் கோடாரியுடன் ஓடிவந்தான். ஆடை அணியாத பெருந்தோள்களுடன் அவன் தயாராக நிற்க, அவனது முகம் அமைதியான வெந்நிற முகத்திரையால் மூடப்பட்டிருந்தது.
”ஒரு நிமிடம்,” பேரரசர் கூறினார். அவர் அருகிலிருந்த மேசைக்குத் திரும்பினார், அதன்மீது அவரே உருவக்கிய ஒரு குட்டி இயந்திரம் இருந்தது. பேரரசர் தன் கழுத்திலிருந்து ஒரு மிகச்சிறிய சாவியை எடுத்தார். அவர் தன் சாவியை அந்த சிறிய, நுட்பமான இயந்திரத்தினுள் பொருத்தியதும் அது திறந்துகொண்டது. பின்னர் சில விசைகளை இயக்கி இயந்திரத்தை ஓடவிட்டார்.
அந்த இயந்திரம் உலோகம் மற்றும் அணிகற்களால் ஆன ஒரு தோட்டம். இயக்கப்பட்டதும் மீச்சிறு உலோக மரங்களில் உள்ள பறவைகள் பாடின, நுண்வடிவ காடுகளுள் ஓநாய்கள் நடந்தன, மீச்சிறு மக்கள் சூரிய ஒளிக்கும் நிழலுக்கும் ஓடியவாறு, குட்டி விசிறிகளால் காற்று வாங்கினர். அவர்கள் மிகச்சிறிய மரகதப் புறாக்களின் ஒலியைக் கேட்டுக் கொண்டு, சாத்தியமில்லாத அளவு சிறிய ஆனால் மெல்லிய ஓசை எழுப்பும் நீரூற்றுகளின் முன் நின்றனர்.
”இது அழகாக உள்ளது இல்லையா?” பேரரசர் கூறினார். ”இங்கு நான் என்ன செய்திருக்கிறேன் என நீ கேட்டிருந்தால் என்னால் சிறப்பாகவே பதிலளிக்க முடியும். நான் பறவைகளைப் பாட வைத்துள்ளேன், காடுகளை முணுமுணுக்க வைத்துள்ளேன், மக்களை இந்த மரக்கூட்டங்கள் நடுவே நடக்கவிட்டு, இலைகள், நிழல்கள் மற்றும் பாடல்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வைத்துள்ளேன். நான் செய்துள்ளது அதுவே.”
”ஆனால், பேரரசே!” பறக்கும் மனிதன் முழங்காலிட்டுக் கெஞ்சினான், முகத்தில் கண்ணீர் வழிந்தது. “நானும் இதுபோன்ற ஒன்றையே செய்துள்ளேன்! நான் அழகைக் கண்டுபிடித்துள்ளேன். காலைத் தென்றலில் பறந்திருக்கிறேன். மேலிருந்து உறங்கும் வீடுகள் மற்றும் தோட்டங்கள் அனைத்தையும் கண்டுள்ளேன். கடலின் மணத்தை நுகர்ந்ததோடு இல்லாமல் மலைகளுக்கு அப்பால் உயரத்திலிருந்து அதைக் காணவும் செய்திருக்கிறேன். ஒரு பறவையைப் போல் வானில் விரைந்திருக்கிறேன்; ஓ, மேலே எத்தனை அழகென்று என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது, அங்கு காற்று என்மீது வீசுகையில், இங்கு காற்று மெல்லிய பறவை இறகுபோல வீசும், அங்கோ விசிறியில் வீசுவது போன்று, அதிகாலையின் வானம் கொள்ளும் மணம்! மேலும் ஒருவன் எத்தனை விடுதலையாக உணர்வான்! அது அழகானது, அரசே, அதுவும் அழகானதே!” ”ஆம்,” பேரரசர் வருத்தத்துடன் கூறினார், “அது உண்மையென்று நான் அறிவேன். உன்னுடன் இணைந்து காற்றில் என் உள்ளமும் காற்றில் பறக்கையில் வியந்தேன்: அது என்னமாதிரி இருக்கும்? நாம் எவ்வாறு உணர்வோம்? அந்த உயரத்திலிருந்து தூரத்துக் குளங்கள் எப்படி காட்சியளிக்கும்? என் வீடுகளும் ஏவலர்களும் எப்படி இருப்பார்கள்? எறும்புகள் போன்றா? தூரத்து நகரங்களும் இதற்குள் விழித்திருக்குமா?”
“எனில் என்னை விட்டுவிடுங்கள்!”
”ஆனால் சில சமயம்…,” பேரரசர் இன்னமும் வருத்தம் அகலாமல் கூறினார், “சில நேரங்களில் ஒருவன் தன்னிடம் ஏற்கனவே உள்ள சிறிய அழகை தக்கவைத்துக் கொள்வதற்காக கொஞ்சம் சிறிய அழகை இழக்கவேண்டி உள்ளது. நான் அச்சப்படுவது உன்னையோ, உன்னுள் இருக்கும் கண்டுபிடிப்பாளனையோ அல்ல, ஆனால் வேறொரு மனிதனை.”
”என்ன மனிதன்?”
”வேறு யாராவது ஒருவன், உன்னைப் பார்த்து, ஒளிமிக்க காகிதங்களும் மூங்கிலும் கொண்டு இதுமாதிரி ஒரு பொருளைச் செய்பவன். ஆனால் அந்த வேறொரு மனிதனக்கு தீய முகமும் உள்ளமும் இருக்கும், பின்னர் அழகு மறைந்துவிடும். நான் அச்சப்படுவது இந்த மனிதனையே.”
”ஏன்? ஏன்?”
“என்றாவது ஒருநாள் இப்படி ஒரு மனிதன், வெறும் காகிதம் மற்றும் நாணல்களால் செய்யப்பட்ட இப்படி ஒரு உபகரணத்தைக் கொண்டு வானில் பறந்து வந்து சீனப் பெருஞ்சுவர் மீது பெரும் கற்களை போடமாட்டான் என்று யாரால் சொல்ல முடியும்?” பேரரசர் கேட்டார்.
யாரும் அசையவோ அல்லது ஒரு சொல்லையேனும் உதிர்க்கவோ இல்லை.
”இவன் தலையை எடுத்துவிடு,” பேரரசர் கூறினார். கொலையாளி தன் வெள்ளிக் கோடாரியை வேகமாக சுழற்றினான்.
”அந்தக் காத்தாடியையும் கண்டுபிடிப்பாளனின் உடலையும் எரித்து சாம்பலை ஒன்றாகப் புதைத்து விடுங்கள்” பேரரசர் உத்தரவிட்டார். ஏவலர்கள் ஆணையை ஏற்று தலைவணங்கினர்.
பேரரசர் தனது அனுக்கனிடம் திரும்பினார், அவன்தான் பறக்கும் மனிதனை கண்டவன். “இந்த இரகசியம் வெளிவரக் கூடாது. இது அனைத்தும் ஒரு கனவு, மிகவும் துக்ககரமான மற்றும் அழகிய கனவு. மேலும் இதைக் கண்ட இன்னொருவனான அந்தத் தூரத்து வயலில் இருந்த விவசாயி, அவன் இதை வெறும்ஒரு பிரமையாகக் கருதினால் தக்க சன்மானம் கிடைக்கும் என்று சொல்லிவிடு. என்றேனும் இச்செய்தி வெளியே கசிந்தால், ஒருமணி நேரத்தில் நீயும் அந்த விவசாயியும் மரணத்தை சந்திப்பீர்கள்.”
”நீங்கள் கருணைமிக்கவர், பேரரசே.”
”இல்லை, கருணைமிக்கவனல்ல,” முதியவர் கூறினார். தோட்டத்து சுவர்களுக்குப் பின்னே காவலர்கள் அந்த அழகிய காகிதம் மற்றும் நாணல்களாலான இயந்திரத்தை எரித்துக் கொண்டிருப்பது அவர் பார்வையில் பட்டது, இயந்திரம் இன்னமும் காலைக் காற்றின் மணத்துடன் இருந்தது. அவர் வானில் எழுந்துவந்த கரும்புகையைக் கண்டார். ”இல்லை, மிகுந்த குழப்பமும் அச்சமுமே கொண்டுள்ளேன்.” காவலர்கள் சாம்பலை புதைக்க ஒரு சிறிய குழிதோண்டுவதைக் கண்டார். ”பல லட்சம் மக்களின் வாழ்வோடு ஒப்பிடுகையில் ஒரு மனிதனின் வாழ்வு எம்மாத்திரம்? இந்தச் சிந்தனை மூலம் நான் ஆறுதல் அடைய வேண்டியதுதான்.”
அவர் தன் கழுத்தணியிலிருந்து சாவியை எடுத்து மீண்டும் அந்த அழகிய மீச்சிறு தோட்டத்தை உயிர்ப்பித்தார். பெருஞ்சுவரைச் சுற்றியுள்ள நிலத்தை பார்த்துக் கொண்டு நின்றார், அமைதியான நகரம், பசுமையான வயல்கள், ஆறுகள் மற்றும் ஓடைகள். அவர் பெருமூச்சு விட்டார். மீச்சிறு தோட்டம் தன் கண்ணுக்குத் தெரியாத நுட்பமான விசைகளைச் சுழற்றி தன்னைதானே இயக்கத்தில் ஆழ்த்திக் கொண்டது; மிகச்சிறிய மனிதர்கள் காடுகளில் நடந்தனர், காட்டின் இடைவெளிகளுள் நுழைந்த சூரிய ஒளியில் துள்ளி ஓடும் சிறிய முகங்கள் தென்பட்டன, மேலும் அங்கு குட்டி மரங்களினூடே பாட்டுப் பாடும் ஒளிமிக்க நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தாலான சிறிய துண்டுகள் பறந்தன, அச்சிறிய வானில் மேலே, மேலே, மேலே பறந்தன.
”ஓ,” பேரரசர் கண்களை மூடிக் கூறினார், “அந்தப் பறவைகளை பாருங்கள், அந்தப் பறவைகளை பாருங்கள்!”
மூலம்: The Flying Machine (1953)
https://floydmiddle.typepad.com/files/the-flying-machine-text.pdf