பீமன் துரியோதனனுடன் கதைப்போர் தொடங்கியதும் முதல்அடியிலேயே மறுபக்கம் பிறிதொருவனை உணர்ந்தான். ஒவ்வொரு முறை துரியோதனனை எதிர்கொள்வதற்கு முன்னரும் அவன் உள்ளம் ஒரு விசையை அடைவதை அவன் உணர்வதுண்டு. உயரத்திலிருந்து பெருகியிருக்கும் நீர்ப்பரப்பை நோக்கி பாய்வதுபோல தன் உருவை நோக்கி தானே சென்று அறைந்துகொள்வது அது. அக்கணம் அந்தப் பாவை சிதறுவதுபோல் தன் உடலும் சிதற நெடுநேரம் வெறும் கொந்தளிப்பு மட்டுமே எஞ்சியிருக்கும். பின் நூறு நூறாயிரம் சிதறல்களிலிருந்து துளித்துளியாக தன்னை எடுத்து தொகுத்து தான் என்றாக்கிக் கொள்வான்.
அந்த மீள்கணமே அவனை வடிவமைக்கிறது. நான் நான் நான் என தருக்கித் தருக்கி தன்னை பெருக்கிக்கொள்ள வேண்டும். நான் என்றே நின்றிருக்கவேண்டும். அத்தனை அடிகளும் விழுவது அந்தத் தன்னிலை மீதுதான். தள்ளாடுவதும் வலியறிவதும் சீற்றம் கொள்வதும் வெறிகொண்டு எழுவதும் அதுதான். அது ஒருகணம் துவண்டால் அவன் கதை கீழிறங்கியது. அவன் உடலை ஊர்தியாகக் கொண்டு அங்கே நின்றிருந்தது. கருவியாகக் கொண்டு போரிட்டது.
எதிரில் நின்றிருப்பவனுடன் போரிடுகையில் அவனுடைய ஒவ்வொரு அசைவும் தனக்கு முன்னரே தெரிந்திருப்பதை, தன்னுடைய ஒவ்வொரு அசைவும் முன்னரே அவனுக்கு தெரிந்திருப்பதை அவன் ஒவ்வொருமுறையும் உணர்ந்தான். துரியோதனனுடனான போர் என்பது மீளமீள ஓர் அணுவிடை வேறுபாட்டில் தோற்று பின்னடைவதே. இருவரும் நிகர்நிலையில் நின்று பொருதி இடையீட்டால் விலகிக்கொள்ளும்போது அவனைச் சூழ்ந்து பாண்டவப் படையினர் வெற்றிக்குரல் எழுப்புவதைக் கேட்டபடி அவன் தன்னுள் தோல்வியை அறிந்துகொண்டிருப்பான்.
ஒருமுறைகூட துரியோதனனை முழுமையாக வென்று மேலெழ அவனால் இயன்றதில்லை. ஓர் இறுதி அடியை அளித்துவிட்டு பின்னடைய வேண்டுமென்று எப்பொழுதும் அவன் விரும்பி வந்திருந்தான். ஒவ்வொரு முறை தோற்று பின்னடையும்போதும் ஒருவகையான நிறைவும் மீண்டும் எழவேண்டும் என்ற விசையும் மட்டுமே தன்னுள் எஞ்சுவதை, தோல்வி அளிக்கும் எரிச்சலும் சீற்றமும் ஆழத்தில் சற்றும் இல்லாதிருப்பதை அவன் எண்ணி நோக்கியதுண்டு. ஓர் உடற்புணர்ச்சிக்குப் பிந்தைய களைப்பும் தனிமையும் செயலின்மையும்போல அது தோன்றும்.
தனிமையில் அமர்ந்து அப்போரை தன்னுள் மீள நிகழ்த்திப் பார்க்கையில் ஒவ்வொரு முறையும் தன்னை புதிதாக கண்டுகொண்டமையால்தான் அந்த நிறைவு ஏற்படுகிறது என்று அவனுக்குத் தெரிந்தது. அவனது கதை அவ்வண்ணம் சுழல முடியுமென்பதை, சுழன்று வரும் கதையை அவ்வண்ணம் தன்னால் தடுக்க முடியுமென்பதை, அவ்வாறு தரை தொட தழைந்து வளைந்தெழ முடியும் என்பதை, பறந்தெழும் காகம்போல் கால் பரப்பி நேராக விண்ணிலெழுந்து அமைய முடியுமென்பதை, மீன்கொத்தி என பாய்ந்து அறைந்து மீளமுடியும் என்பதை அவன் அப்போர்களில் கண்டடைந்திருந்தான். ஒவ்வொரு முறை போரின் போதும் அவன் தன் எல்லைகளை கடந்தான். ஒவ்வொரு முறையும் அவன் சந்தித்த துரியோதனன் அந்த எல்லைக்கு வெளியே, ஒரு காலடிக்கு அப்பால் நின்றிருந்தான்.
எனில் தன்னிலிருந்து அவனும் கற்றுக்கொள்கிறான். தன்னிடமிருந்து அவன் கற்பதென்ன? என் மீறல்களின்மேல் கால்வைத்து மேலே செல்கிறான். என் மீறல்களை அவன் அக்கணமே தன்னுள் நிகழ்த்திக்கொள்கிறான். அங்கிருந்து சென்ற பின்னர் அவற்றைப் பற்றியே எண்ணி எண்ணி அவற்றிலேயே மீளமீள வாழ்ந்து அவற்றை தன் உடல் அறியச் செய்கிறான். உடல் அறிந்ததை உள்ளம் உடனே கடந்துவிடுகிறது. நானும் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். விழித்திருக்கும் பொழுதெல்லாம். அவன் உடலை என் அகக்கண்ணில் எப்போதும் அருகெனக் காண்கிறேன். போரில் அவன் மேலிருந்து விழிவிலக்காமலிருக்கிறேன்.
ஆனால் நான் அவனாக நடிக்கவில்லை. அவனுள் புகுந்தும் நானாகவே எஞ்சுகிறேன். கழுத்தில் கட்டப்பட்ட தடைக்கோல் என என் வஞ்சம் அவனுள் புகவொண்ணாது தடுக்கிறது என்னை. நான் அவனென்றாகி என்னை கொல்ல எழமுடியாது. என்மேல் எனக்கு வஞ்சமில்லை. எனில் அவன் நானென்றாகி தன்னை கொல்கிறான். எத்தனை ஆயிரம் முறை அவன் தன்னைத் தான் கொன்றிருப்பான் அவ்வாறு! இனி அவனை நான் கொன்றால் அதில் ஒரு நிகழ்வென்றே அது ஆகும்.
ஒவ்வொருநாளும் கதைப்பயிற்சியின்போது அவன் துரியோதனனையே எண்ணிக்கொண்டிருந்தான். கான்வாழ்வில் ஒருமுறை பாறைகளை தூக்கி வீசி எறிந்து பற்றி பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கையில் யுதிஷ்டிரன் “இளையோனே, நீ எவருடனோ போர்புரிபவன் போலிருக்கிறாய். பயில்பவன் போலில்லை” என்றார். மேலிருந்து வந்த பாறையை இரு கைகளாலும் பற்றித் தூக்கி அப்பாலிட்டுவிட்டு மெல்லிய மூச்சிரைப்புடன் திரும்பி முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி புன்னகைத்து பீமன் தலையசைத்தான். கண்கள் கூர்மை கொள்ள அருகே வந்த யுதிஷ்டிரன் “அவனிடமா?” என்றார். “ஆம்” என்று சொல்லி அவன் விழிவிலக்கிக்கொண்டான்.
“நானும் அதையே எண்ணினேன். நீ அவனை ஒருகணமும் மறக்க இயலாதென்று. நீ உரைத்த வஞ்சினம் உன்னுடன் எப்போதும் இருக்கும்” என்றார். “வஞ்சினங்களை உரைப்பது சென்றகாலத்தை அந்தணக்கொலைப்பழி போலாக்கி நமக்குப் பின்னால் வரவைப்பது. சென்றகாலம்போல் சுமை வேறில்லை. அச்சுமை நம் மீது இருக்கையில் நிகழ்காலம் என்பதில்லை. எதிர்காலமோ சென்றகாலத்தை மீள நிகழ்த்துவதென்றே தெரிகிறது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அவையில் நீங்கள் சூளுரைத்தபோது நான் திகைத்துவிட்டேன். முன்னரே உணர்ந்திருந்தால் ஒப்பியிருக்க மாட்டேன்.”
ஆனால் அவ்வஞ்சினத்திற்கும் முன்பு, வாரணவதம் எரிவதற்கும் முன்பு, எப்போதுமே துரியோதனனுடன் அவன் போரில்தான் இருந்தான். காற்றில் வீசும் ஒவ்வொரு கதையின் அடியும் அவனுக்கானதே. பின்பொருநாள் கனவில் துரியோதனனின் மஞ்சத்தறைக்குள் ஒரு பீடத்தில் தான் அமர்ந்திருப்பதுபோல் கண்டான். துயின்று கொண்டிருந்த துரியோதனனை கைகளை மடியில் அமைத்தபடி சற்றே உடல் வளைத்து அமர்ந்து அவன் உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவன் நோக்கை உணர்ந்தவன்போல் துரியோதனன் இமை அதிர்ந்து உடல் விதிர்க்க விழித்துக்கொண்டான். மஞ்சத்தில் எழுந்து அமர்ந்து அவனையே பார்த்தான். பின்னர் எழுந்து அவனருகே வந்து மற்போருக்கென இரு கைகளையும் விரித்து நின்றான்.
பீமன் தான் அமர்ந்திருந்த அப்பீடத்திலேயே கைகளைக் கோத்தபடி அமர்ந்திருந்தான். துரியோதனனின் கண்களில் நட்பு தெரிந்தது. பின்னர் அது கதவுக்குமிழில் அசைவென மாறி வஞ்சம் ஆகியது. அதற்குமேல் கணங்கள்தான். அதை அறிந்தும் அவன் காத்திருந்தான். எதிர்பாராதபடி துரியோதனனின் கை அவனை அறைய வந்தபோது தன் கையை நீட்டி அதை தடுத்து துரியோதனனை ஓங்கிக் குத்தி பின்னால் வீழ்த்தினான். பாய்ந்தெழுந்த துரியோதனன் மீண்டும் தாக்க இருவரும் அறைக்குள் போரிட்டுக்கொண்டனர். தசைகளில் அடிவிழும் ஓசையும் துரியோதனனின் மூச்சிரைப்பும் அறைக்குள் நிறைந்திருந்தது. தன் உடலில் அடிவிழும்போது வலிக்கவில்லை என்பதை பீமன் வியப்புடன் உணர்ந்தான். கனவில் வலியில்லைபோலும் என எண்ணிக்கொண்டான்.
துரியோதனனிடமிருந்து கற்றுக்கொண்டு அதை மேலும் விரிவாக்கி அவன் துரியோதனனை விட மேலே எழுந்தான். அவனிலிருந்து கற்றுக்கொண்டு துரியோதனன் மேலெழுந்தான். கணம் புரள்வதுபோல் திகழ்ந்த அந்த போரில் இருவரும் களைத்து, தளர்ந்து விலகினார்கள். கால்கள் குழைய துரியோதனன் பின்னடைந்து மஞ்சத்திலமர்ந்து கைகளைக் கோத்தபடி மூச்சில் நெஞ்சு ஏறியிறங்க அவனை பார்த்துக்கொண்டிருந்தான். வஞ்சம் மெல்ல வடிந்து மீண்டும் நட்பு துளித்தது. உதடுகளில் புன்னகையோ என்னும் அசைவு உருவாகியது.
பீமன் உடலை எளிதாக்கி நின்றிருந்தான். மெல்லமெல்ல சிலையென்றானான். உள்ளே தன்னிலை மட்டும் விழித்திருந்தது. இரும்புக்கைகள் தொடைகளை உரசி விழுந்துகிடந்தன. அறையின் கதவு மெல்ல திறக்க உள்ளே வந்த ஏவலர் தலைவணங்கினர். பீமனை நோக்கி கை காட்டிவிட்டு துரியோதனன் வெளியே சென்றான். இரு ஏவலர்கள் வந்து பீமனை கைகளைப் பற்றி மீண்டும் அந்தப் பீடத்தில் அமரச்செய்தனர். அவன் உடலை அவர்கள் கையாள்வதை அவன் திகைப்புடன் நோக்கிக் கொண்டிருந்தான். ஒரு வீரன் “நல்ல அடி இன்று” என்றான். “அவர் உடலில் அது தெரியவில்லை” என்றான் இன்னொருவன். “அவரில் ஒரு நிறைவு தெரிந்தால் அன்று நல்ல அடி என்று பொருள்” என்றான் முதல் ஏவலன்.
இரண்டாமவன் பீமனின் தோள்களை தட்டி நோக்கி “அவருடைய அதே தோள்கள்” என்றான். “தன்னை தானன்றி பிறர் அறையலாகாதென்று எண்ணுகிறார். தன் ஆணவத்தை உருவம் அளித்து இங்கே நிறுத்தியிருக்கிறார்” என்றான் முதல் ஏவலன். இரண்டாம் ஏவலன் பீமனின் கணுக்கால்களை சீராக வைத்தபடி “இவரை எனக்கு பிடித்திருக்கிறது. ஏனென்றே தெரியவில்லை. இவரை தொடும்போது அணுக்கத்தை உணர்கிறேன்” என்றான். முதலாமவன் “ஏனென்றால் உன் அரசரை இது அறைகிறது” என்றான். இரண்டாமவன் நகைத்து “அதனாலும் இருக்கலாம். ஆனால் இது அரசரும்கூட” என்றான்.
சிரிப்பு மேலெழ “எனில் தன்னை அறைந்துகொள்ளும் அரசரை நீ விழைகிறாயா என்ன?” என்றான் முதலாமவன். “எண்ணிப்பார்த்தால் இந்நகரில் அனைவரும் விழைவது அவ்வாறு ஓர் அரசரைத்தானே?” என்றான் இரண்டாமவன். அவர்கள் சொல்லற்றனர். முதலாமவன் “மெய்தான்” என்றான். அவர்கள் அவன் உடலை தூய்மைசெய்தனர். “இவ்வண்ணம் ஒன்று இங்குள்ளது என்று அறிந்தால் நம் மக்கள் இதை விரும்புவார்கள். இதனிடம் அடிவாங்குவதனால் அரசரையும் மேலும் விரும்புவார்கள்” என்றான் இரண்டாமவன்.
“இது இங்கிருப்பதை அறியாத சிலரே அரண்மனையில் இருக்கின்றனர்” என்று முதல் ஏவலன் சொன்னான். “அறிந்தவர்களுக்கு எந்த வியப்பும் இல்லை. ஒருமுறை முதுசூதர் கங்காளரிடம் பேசுகையில் அவர் அசுர மாமன்னர் ஹிரண்யன் தன் இளையோன் ஹிரண்யாக்ஷனைக் கொண்டு தன்னை அறையச்செய்வார் என்றார். கார்த்தவீரியன் தன் ஆயிரம் கைகளாலேயே தன்னை அறைந்துகொள்வான். பின்னர் நகைத்தபடி தன் நிழலுருவை இரும்பால் அமைத்து அடிக்கச்செய்வார்கள் சிலர் என்றபின் என்னை நோக்கி புன்னகைத்தார். நான் கண்விலக்கி அங்கிருந்து அகன்று விட்டேன்.”
இரண்டாமவன் “இது இளைய பாண்டவர் பீமசேனன் என்று சொல்லப்படுகிறது. இதை விரும்பினால் நீ அவரை விரும்புகிறாய் என்று பொருள்” என்றான். முதல் ஏவலன் “இதைப்போன்ற ஒன்று அங்கும் இருக்குமா என்ன?” என்றான். இரண்டாம் ஏவலன் “இருக்கும், மிகமிக மந்தணமாக” என்றான். அவன் பீமனின் விழிகளை நோக்கியபடி “இது நம் சொற்களை கேட்டுக்கொண்டிருப்பதாக ஒரு உளமயக்கு” என்றான். “கேட்பது யார்? இளைய பாண்டவரா அரசரா?” என்றான் முதலாமவன். இருவரும் நகைத்தனர்.
அக்கனவை அவன் பிறிதொரு முறை கண்டதில்லை. தன் உடல் துரியோதனனின் உடல் போலவே இருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். தன் முகமும் துரியோதனன் முகம் போலிருந்தது. களத்தில் முதல் முறையாக துரியோதனனை கதையால் சந்தித்தபோது ஒருகணமென அக்கனவு வந்து சென்றது. அக்கணம் கனவுக்குள் சென்று அவனிடம் பொருதிக்கொண்டிருந்தான். அது உபப்பிலாவ்யத்தில் அவனுடைய படுக்கையறை. துரியோதனன் இரும்பாலான உடல்கொண்டிருந்தான். விழிகள் கல்மணிகள்போல் ஒளிகொண்டிருந்தன.
துரியோதனன் கதையைச் சுழற்றி அறைந்து, அந்த அறைவிசையின் நிலைமாறுதலை மறுசுழற்றலால் ஈடு செய்து மீண்டும் சுழற்றி மேலெடுக்கும் கலையை கற்றிருந்தான். கதையின் எடையையே விசையென ஆக்கும் அக்கலை பலராமருக்கு மட்டுமே உரியது. எடைமிகுந்தோறும் நிகர்நிலை கூடியது. ஆகவே துரியோதனனின் கதை பீமனின் கதையைவிட இருமடங்கு எடைமிக்கதாக இருந்தது. பீமன் அதன் அறையை தன் கதையின் முழையில் மட்டுமே எப்போதும் வாங்கினான். அன்றி முதுகிலோ தோளிலோ ஏற்கவில்லை. விலாவையும் நெஞ்சையும் எப்போதும் காத்துக்கொண்டான். அவன் தலையை நாடி அது வந்துகொண்டே இருந்தது. சுழன்று சுழன்று பறக்கும் வண்டுபோல. ஒருமுறை தன் தலையை அது தொடுமெனில் உள்ளே நுரைத்துக்கொதிக்கும் வெண்குழம்பு சீறி வெளிச்சிதறும். அக்கணமே எடையிலாதாகி மண்ணில் படிவேன்.
பீமன் துரியோதனனின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அதில் ஆழ்ந்த அமைதி இருப்பதுபோல் தோன்றியது. தன் உள்ளம்தான் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. அனைத்தையும் இழந்துவிட்டவனுக்கு அதன்பின் எண்ணவோ எதிர்நோக்கவோ ஏதுமில்லை போலும். அக்கணத்தில் மட்டுமே அமைகையில் வரும் முழுமையையும் விடுதலையையும் அவன் அடைகிறான். நான் இப்போரை எத்தனை காலமாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன்! என் உள்ளத்தில் இது நிகழாத ஒருகணம் கூட இருந்ததில்லை. பகையை ஈட்டியவன் ஒரு எதிரியை அடைகிறான். வஞ்சினம் உரைத்தவன் ஊழையே எதிரியென அடைகிறான்.
பீமன் கதையை பற்றியிருந்த துரியோதனனின் கைகளையே இலக்காக்கி அறைந்துகொண்டிருந்தான். அந்தப் பெரும்கதையை அறைந்து சிதறடிப்பது இயலாது. அந்தக் கைகளை அறையலாம். இப்போது அவற்றில் எடைமிக்க கவசங்கள் இல்லை. உரிய முறையில் ஓர் அறைவிழுந்தால்கூட எலும்புகள் உடைந்துவிடக்கூடும். எலும்பு உடைந்த கையால் தன் கதைக்கு இத்தனை விசையை இவன் அளிக்க இயலாது. இன்றேனும் இவனை வெல்ல வேண்டும். இன்று வெல்லவில்லையெனில் என்றும் வெல்லப்போவதில்லை. இன்று என என் முன் நின்றிருக்கிறான். நாளையிலாது நின்றிருக்கிறான். தெய்வங்களிலாது நின்றிருக்கிறான். இத்தருணத்திலும் இவனை வெல்ல இயலவில்லையெனில் நான் ஏதும் பயிலவில்லை என்றே பொருள்.
இக்களத்தில் நான் என் பிதாமகனை கொன்றிருக்கிறேன். இவன் தோழர்களை கொன்றிருக்கிறேன். இவன் உடன்பிறந்தாரை, மைந்தரை கொன்றிருக்கிறேன். ஒவ்வொரு கொலையும் ஒரு படி. அதனூடாக ஏறி ஏறி இவனை அணுகி இவ்வுச்சத்தில் நின்றிருக்கிறேன். இதன்பொருட்டு நான் என்னைத் தாங்கியிருந்த அனைத்தையும் அழித்திருக்கிறேன். திரும்பிச்செல்ல முடியாதபடி வந்துவிட்டிருக்கிறேன். இதோ என் கால் கீழ் சிதைந்து அழிந்து கொண்டிருப்பது பாண்டவப் படையோ கௌரவப் படையோ அல்ல, மானுடப் படைகூட அல்ல, வெற்றுடல்திரள். நேற்றெரிந்த சிதை இன்று புழுத்துவிட்டிருக்கிறது. தசைக் கருந்தழல்கள் அசையும் பிறிதொரு சிதை இது.
எண்ணங்களை நிறுத்து. அவன் விழிகளிலிருந்து உன் விழிகளை விலக்கு. அவன் உட்புக முடியாதபடி அனைத்து வாயில்களையும் அடைத்துவிட்டிருக்கிறான். இன்று உன் இலக்கு அவன் கைகள் மட்டுமே. கதை பற்றியிருக்கும் அவன் கைகளை அறைந்து சிதறடி. வேறொன்றும் எண்ணாதே. பிற அனைத்தையும் உன் உடல்கொண்ட கண்களுக்கு விட்டுவிடு. உன் தசைகள் தங்களை காத்துகொள்ளட்டும். உன் இலக்கு அவன் கைகள் மட்டுமே. அவன் கதை ஒருமுறை தாழ்ந்தால் போதும் உனக்கான வாயில் திறந்துகொள்ளும். அதனூடாக நீ பாய்ந்து உட்புகுவாய். மீளமுடியவில்லை என்றாலும் செல்க! மீள்வது என ஏதுமில்லை. இருவரும் உடல்தழுவி விழும் ஆழம் ஒன்றுண்டு. அடியிலி அது. நீங்கள் பிறந்து பிறந்து போர்புரிந்து மடிந்தபடி சென்றுகொண்டிருக்கும் காலக்கோடு.
பீமன் யானைகள் மேல் பாய்ந்து கதைவீசித் தாக்க மத்தகங்களிலிருந்து மத்தகங்களுக்கென பாய்ந்து துரியோதனன் அவனை எதிர்கொண்டான். பீமன் அறைபட்டு துரியோதனன் நின்றிருந்த யானை மத்தகம் உடைந்து பக்கவாட்டில் சரிந்தது. துரியோதனன் அதிலிருந்து தாவி கீழே அலையிலென உடற்திரள்மேல் உலைந்துகொண்டிருந்த சரிந்த தேர் முகடொன்றில் சென்று நின்றான். பீமன் தான் நின்றிருந்த யானையிலிருந்து பாய்ந்து பிறிதொரு தேர்மகுடம் மேல் ஏறி கதையால் அறைந்தான். அறைவிசையில் இருவரும் கரிய சேற்றில் விழுந்து எழுந்தனர். மீண்டும் மீண்டும் அறைந்து பின் சிதறி விழுந்து எழுந்தபோது கரிய சேற்றுருக்கள் என இருவரும் மாறினர். அவர்களின் கதைகள் ஒன்றையொன்று அறைந்துகொண்டபோது சேறு சேறை அறைந்து அனலெழுந்த விந்தை நிகழ்ந்தது.
துரியோதனனிடம் இருக்கும் வேறுபாடென்ன என்பதை பீமன் புரிந்துகொண்டான். துரியோதனன் அவனை கொல்ல முயலவில்லை, வெல்லவும் முயலவில்லை. சீரான கதை சுழற்றல்களுடன் வெறுமனே போரிட்டுக்கொண்டிருந்தான். வெல்லவும் கொல்லவும் முயன்றபோது இருந்த விசையின் எழுச்சியும் வீழ்ச்சியும் இல்லாமல் சீரான சுழற்சிகளுடன் வந்து அறைந்த ஒவ்வொரு அடியிலும் மாற்றமில்லாத ஒற்றைப்பெருக்கென பேராற்றல் இருந்தது. தெய்வங்கள் இவ்வண்ணம்தான் போரிடும் போலும். தெய்வங்கள் வெல்வது அவை வெல்லும் தகைமைகொண்டவை என்பதனால் மட்டுமே. வெல்லும் எண்ணத்தாலோ முயற்சியாலோ அல்ல.
பீமன் ஒவ்வொரு அடிக்கும் தன் விசை குறைந்து வருவதை பார்த்தான். முதலில் அச்சமென்றும் பின்னர் சீற்றமென்றும் தன்னில் எழுந்த உணர்வுகளே தன்னை ஆற்றல் குறையச் செய்கின்றன. முன்பு துரியோதனனின் ஒவ்வொரு கதைவீச்சிலும் ஒவ்வொரு எண்ணம் வெளிப்பட்டது. ஒவ்வொரு அறையும் ஒரு சொல்லென ஒலித்தது. ஒவ்வொரு சொல்லும் பொருள் கொண்டிருந்தது. அதை அவன் புரிந்துகொண்டு மறுசொல்லெடுத்தான். அப்போது துரியோதனனின் கதை முற்றிலும் சொல்லற்றதாக, ஒரு மீட்டல்போல அறுபடாது ஒலிப்பதாக இருந்தது. காட்டின் மூளல்போல. காற்றின் ஓவொலிபோல.
யாழொலியும் குழலொலியுமே தேவர்களின் மொழி என்று இளமையில் அவன் கேட்டிருந்தான். அவற்றை சொற்களாக ஆக்காமல் எவ்வண்ணம் தொடர்புறுத்த இயலும் என்று அன்றே வியந்திருந்தான். யாழொலியும் குழலொலியும் கொண்டு பேசும் தெய்வங்களுடன் சொற்களால் மானுடர் எவ்வாறு உரையாட இயலும்? வாயில் இல்லாக் கோட்டை என அந்த அறுபடாத இசை நின்றிருக்க அதன்மேல் சென்று சென்று முட்டி உதிர்ந்துகொண்டிருந்தன அவன் சொற்கள். தற்கொலைப் பறவைகள்போல. இவனுடன் போரிட இயலாது. சொற்பொருளுக்கு மேலும் சற்று தொலைவு செல்ல இயலும். அது சொல்லின் பொருள்நினைவு எஞ்சும் தொலைவு மட்டுமே. அதற்கப்பால் சொல்லில்லா வெளி. அங்கு என் ஆற்றல்கள் மறையும். அவ்வெல்லையை அடைந்த பின்னர் இவன் கதைமுன் நான் அடிபணியவேண்டியிருக்கும்.
அவன் மீண்டும் அக்கனவை அடைந்தான். அறைக்குள் அவன் பீடத்தில் கைகளைக் கோத்தபடி அமர்ந்து மஞ்சத்தில் துயின்றுகொண்டிருந்த திருதராஷ்டிரரை பார்த்துக்கொண்டிருந்தான். அவர் இமைகள் அசைய முனகியபடி விழித்து எழுந்தமர்ந்து உடனே உள்ளுணர்வுகொண்டு திடுக்கிட்டு “யார்?” என்றார். அவன் மறுமொழி கூறவில்லை. “கூறுக, யார் அது?” என்று அவர் கேட்டார். “சொல், யார்?” என்றபடி எழுந்து இரு கைகளையும் ஓங்கி அறைந்து வெடிப்போசை எழுப்பியபடி “யாரது? அருகே வா” என்றார். பீமன் தன் உடலின் இரும்புப் பகுதிகள் உரசிக்கொள்ளும் ஒலியுடன் எழுந்து நின்றான். கவசங்கள் அணிந்திருப்பதுபோல் தோன்றியது. கவசங்களே உடலாக ஆனதுபோல. அவ்வொலி திருதராஷ்டிரரை திகைக்க வைக்க அவர் இரு கைகளையும் விரித்து கால்களை நிலைமண்டிலமாக்கி மற்போருக்கென ஒருங்கி நின்றார்.
அவன் மெல்ல அசைந்தபோது உலோக முனகல்கள் எழுந்தன. அந்த ஓசை அவருக்குப் புதிதென்பதால் விழிக்குமிழிகள் உருள, வாய் குவிந்து தாடை ஒரு புறமாக கோணியிருக்க, அவர் அவனை செவிகளால் நோக்கியபடி நின்றார். அவன் மீண்டும் அசைந்தபோது எழுந்த ஓசையால் அவருடன் உரையாடுவதுபோல் உணர்ந்தான். அச்சொல்லை அவன் விரும்பினான். ஆனால் அவ்வோசை தன்னை அவருக்கு காட்டுகிறதென்று நினைத்தான். ஆகவே அசைவில்லாமல் நின்றான். அதனூடாக முற்றிலும் அவர் பார்வையிலிருந்து மறைந்தான். திருதராஷ்டிரர் தவிப்புடன் அவனை உள்ளத்தால் தேடியபடி அசைவற்று நின்றார்.
நெடுநேரம். இரவு வெளியே பெரிய பெருக்கென ஓடிச்சென்றுகொண்டிருந்தது. அதில் மிதந்து கிடந்த விண்மீன்கள் இடம் மாறின. மிக அப்பால் ஒரு யானையின் பிளிறல். அதற்கும் அப்பால் காட்டுக்குள் ஓர் ஓநாயின் ஓசை. வெம்மை நிறைந்த காற்று சாளரங்களூடாக உள்ளே வந்து சென்றது. திருதராஷ்டிரர் “நீ எவர் என எனக்குத் தெரியும்” என முனகினார். பின்னர் “நீ அஞ்சுவது என்னை. ஆகவே நீயே என் எதிரி” என்றார். அவருடைய கைகள் மலைப்பாம்புகள்போல் நெளிய தசைகள் புடைத்து அசைந்தன. “கடக்கமுடியாத எல்லைகளை வெறுக்கிறார்கள் மானுடர். ஆகவே வேறு வழியே இல்லை…” என்றார் திருதராஷ்டிரர்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை. இன்மை என்றே ஆகி நின்றான். மீண்டும் நெடும்பொழுது. எத்தனை நேரம் என அவன் வியந்தபோது அவ்வெண்ணமே சிறு அசைவாக வெளிப்பட, அவன் உடலில் இருந்து மெல்ல, மிக மெல்ல உறுமியது உலோகம். உடலுக்குள் உறுமும் சிம்மம்போல. அக்கணமே திருதராஷ்டிரர் பாய்ந்து அவனை ஓங்கி அறைந்தார். அவன் எடையின் ஓசையுடன் மல்லாந்து தரையில் விழுந்தான். பலகைகள் அதிர்ந்தன. கையூன்றி புரண்டு எழுவதற்குள் அவன் உடலின் ஓசைகளைக் கொண்டு அவனை முற்றாக அவர் வகுத்துவிட்டிருந்தார். அவனுடைய அடுத்த அடிகளை தன் கையால் தடுத்தார். அவன் அவருடைய பிடிக்குள் சிக்காமல் ஒழிய பெரிய கைகளை நண்டுபோல விரித்தபடி அவனை அணுகினார்.
அவன் பின்னடைந்தபோது அறைச்சுவரில் முட்டிக்கொண்டான். அவர் அவன் தப்பமுடியாதபடி இரு கைகளையும் விரித்துக்கொண்டு அணுகி அவனை பற்றினார். குழந்தைபோல அவனைத் தூக்கி அப்பால் வீசினார். எழுந்து அவன் அவர் மார்பை ஓங்கி உதைத்தான். நிலைதடுமாறி பின்புறம் கால் வைத்து ஆனால் விழாது நிலையூன்றி இரு கைகளாலும் சூழஇருந்த பொருட்களை ஓங்கி அறைந்து உடைத்து எறிந்தபடி உறுமலோசை எழுப்பிக்கொண்டு அவர் மீண்டும் அவனை பற்ற வந்தார்.
அவன் அவர் பிடியிலிருந்து தப்ப அங்குமிங்கும் அலைபாய்ந்தான். அவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த அறை அங்கிருந்த தூணில் பட்டு மரத்தாலான கூரை அதிர்ந்து பலகைகளை இணைத்திருந்த சுண்ணாம்புக்காரை பெயர்ந்து உதிர்ந்தது. அவர் தன் கைகளை ஒன்றோடொன்று அடித்துக்கொண்டபோது எழுந்த ஓசையால் அவன் உளம் நடுங்க அந்நடுக்கு உடலில் பரவி உலோகத்தகடுகள் உரசிக்கொண்டன. அவன் இருமுறை அவர் தன் மேல் பாய்வதை தடுத்தான். அவர் நிலை மீள்வதற்குள் ஓங்கி அவர் தலையை அறைந்தான். நிலை தடுமாறி விழுந்து கையூன்றி எழுந்து அவர் அவனை அறைந்தார்.
அத்தகைய பேருடல் அத்தனை விசையுடன் எழமுடியுமென அவன் எதிர்பார்க்கவில்லை. அறையின் எடைவிசையில் அவன் நிலத்தில் மல்லாந்து விழுந்து புரண்டு எழுவதற்குள் பாய்ந்து அவர் மேல் விழுந்து அவனை நிலத்துடன் சேர்த்து அழுத்திக்கொண்டார். மரத்தரையில் இரும்புப்பகுதிகள் முட்டி ஒலிக்க அவர்கள் இருவரும் தரையில் புரண்டனர். அவனை கைகள் பற்றி முறுக்கி சேர்த்து அழுத்தி கைகளாலும் கால்களாலும் அசைவிலாது நிறுத்தினார். பின் தன் கன்னத்தால் அவன் முகத்தை உரசி அவனை அவன் யாரென அறிய முயன்றார். அவன் முகம் ஓர் இரும்புக்கவசத்தால் மூடப்பட்டிருந்தது. அக்கவசத்தை வருடி அவர் திகைத்து கைகளை எடுத்தார்.
முதிய தளர்ந்த குரலில் “நீயா?” என்றார். “நீ…” என்றபின் எழுந்துகொண்டார். “இது கனவு போலும். வெறும் கனவு” என்றார். பின்னர் ஓங்கி அறைந்து அவன் முகக்கவசத்தை உடைத்து அப்பால் எறிந்தார். அவன் கையூன்றி எழுவதற்குள் முழங்கால் மண் நிலத்தை அறைய மடிந்து அமர்ந்து தன் பெரிய கைகளால் அவன் முகத்தை வருடிப் பார்த்தார். “நீயேதானா! நீதானா!” என்று கூவினார். அவன் அசையாமல் அவ்வண்ணமே கிடந்தான். அவர் ஒரே அடியால் அவன் தலையை உடைத்து தெறிக்க வைத்திருக்க முடியும். அவர் எழுந்து நின்று இரு கைகளையும் விரித்தார். புரிந்துகொள்ள முடியாததுபோல. அக்கைகள் மேலெழுந்து முறையிடுவதுபோல் ஆயின.
பீமன் தன்னெதிரில் திருதராஷ்டிரர் நின்றிருப்பதுபோல் உணர்ந்தான். துரியோதனனிடம் எழுந்த விசை முற்றிலும் சொல்லற்றதாக ஆகியபோது விழியற்றதாகவும் மாறிவிட்டிருந்தது. அவனது கைகள் பெருத்தன. உடல் பேருருக்கொண்டது, கதை சுழன்று வந்தது. நிலையொழிந்து கையூன்றி எழுந்து அவன் தப்ப முயன்றுகொண்டிருந்தான். தன் கதையால் துரியோதனனின் கையை அறைந்து மீண்டபோது அதை ஒழிந்து விலகிய அவன் பெருங்கதையால் ஓங்கி பீமனின் கதையை அறைந்தான். பீமனின் கையிலிருந்த கதை தெறித்து அப்பால் சென்று விழுந்தது. கதையின் இரும்பு குமிழி நான்காக உடைந்து விழ தண்டு தனியாக தெறித்து விழுந்தது. பீமன் அவ்விசையில் நிலையழிந்து பின்புறம் விழுந்தான். துரியோதனன் கதை சுழற்றியபடி பாய்ந்து அவன் மேல் எழுந்தான்.
பீமன் நிலத்தில் விழுந்து அங்கிருந்த கரிக்குழம்பில் புரண்டு அகன்று நிலம் முழுக்க நிரம்பிக்கிடந்த உடல்களுக்கு நடுவே அசைவிலாது படுத்துக்கொண்டான். அவனுக்கு மேல் துரியோதனனின் கதை ஏந்திய உடல் தத்தளித்தது. எடைமிக்க கால்கள் உடல்களை மிதித்து சேற்றை துழாவிக்கொண்டிருந்தன. அக்கருமை துரியோதனனை விழியற்றவனாக்கியதை பீமன் உணர்ந்தான். விழியின்மை அவன் உடல் அனைத்திலும் வெளிப்பட அவன் தன் கதையை அழுத்திவிட்டு இரு கைகளையும் ஓங்கி ஒன்றுடன் ஒன்று முட்டி வெடிப்போசை எழுப்பி உறுமினான்.