அன்புள்ள ஜெயமோகன்,
நல்ல அனுபவம். ஆனால் சிறு குறை. ஆராதனையில் அத்தனை இசைவித்தகர்களும் ஒன்றுபோல பாடுவார்களே. வீணை வித்தகர்கள் பலர் வீணை வாசிக்க, பல குழல்கள் ஒன்றாக ஊத, பல கஞ்சிராக்கள், பல மிருதங்கங்கள், கடவாத்தியங்கள் என எல்லாமே ஒருங்கிணைந்து செயல்படுமே, அதை உங்கள் கட்டுரை சுட்டவில்லையே? பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒவ்வொன்றாக பாடுவார்களே. உண்மை கூறப்போனால், நான் அது மட்டும்தான் தியாகையர் இசைவிழா என நினைத்திருந்தேன். இந்த மாதிரி ரிலே கச்சேரிகள் விஷயம் எனக்கு புதிது.
அது சரி, உங்கள் நண்பர் விமரிசகர் ஷாஜி அவர்கள் இந்த விழா பற்றி ஏதேனும் அபிப்பிராயம் கூறியிருக்கிறாரா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள டோண்டு ராகவன் அவர்களுக்கு,
தங்களைப்போலவே பலரும் எழுதியிருந்தார்கள். நமது ஊடகங்கள் சென்னை நிகழ்ச்சிகளையே மையமாக்கியிருப்பதனால்தான் இத்தனை முக்கியமான நிகழ்ச்சிகூட இப்படி அறியப்படாமல் இருக்கிறதென எண்ணுகிறேன்.
திருவையாறில் உண்மையில் முக்கியமான சடங்கு என்பது தியாகராஜர் ஆராதனை என்ற அந்த கூட்டு பாடல் சடங்குதான். அன்றுதான் அவரது வீட்டில் இருந்து இசைக்கலைஞர்கள் ஊரவலமாக புறப்பட்டு பாடியபடி பந்தலுக்கு வந்து சேர்ந்து அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் என்ற ஐந்து கீர்த்தனைகளைப் பாடுவார்கள். தெளிவான இசைக்குறிப்புகள் இருப்பதனால் பலநூறுபேர் பல்வேறு கருவிகளுடன் பாடி-இசைத்தாலும் அழகான ஒத்திசைவு இருக்கும். அந்நிகழ்ச்சி ஒரு மனிநேரத்தில் முடிந்துவிடும். ஆனால் அதற்கு ஐந்துநாள் முன்னரே தொடங்கி தொடர் இசைநிகழ்ச்சிகள் நடந்துகொன்டிருக்கும்.
நான் இவ்வருடம் கடைசி நாளுக்கு தங்கவில்லை. காரணம் நண்பர்களுக்கு விடுப்பு முடிந்துவிட்டது, எனக்கும் திரும்பும் அவசரம்.
ஜெ
***
அன்புள்ள ஜெ,
திருவையாறு கட்டுரை, சில பழைய நினைவுகளில் ஊர்ந்தது.
நானும், மனைவியும் இருமுறை சென்றிருக்கிறோம். நீங்கள் கூறியது போல், இசை காதில் விழுந்து கொண்டே இருக்கும்.
திருவையாற்றில் கூட்டம் அதிகரிக்கும் பொழுது, ஊரின் பொது வசதிகள் மிகவும் அலைகழிக்க படுகிறது.
அருகே பஞ்ச நதீஸ்வரர் கோவில் உண்டு. தஞ்சை பெரிய கோவில் அளவிற்கு பெரியது என்று ஒருவர் சொன்னார். அமைதியான கூட்டம் நெரிக்காத கோவில்.
மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில், ஒரு சில ஊரில் இசை விழாக்கள். பெங்களூரில் 8th Cross மல்லேஸ்வரம் கிருஷ்ணர் கோவிலருகே, நவராத்திரியில். கல்கத்தாவில் dovar lane இசை விழா. ஹிந்துஸ்தானி இசை. ஜனவரி மாத கடைசியில். இரவு முழுவதும் கச்சேரி. மிக இனிமையான அனுபவம்.
நான் கேட்ட வரை, உலகின் மிக முக்கிய செவ்விசைகள், சற்று நேரமளித்தால், நிச்சயமாக ஆன்மா வரை இறங்கும்.
என் வார்த்தைகள் சில சமயம் elitist போன்று ஒலிக்கிறதோ என்ற சந்தேகம் உண்டு. எண்ணம் அதுவல்ல. ஒரு எளிமையான, ஆனால் personal அனுபவத்தைதான் சொல்ல முயற்சிக்கிறேன்.
அன்புடன் முரளி
அன்புள்ள முரளி
நன்றி
திருவையாறு ஓர் இனிய அனுபவமாகவே இருக்கிறது. அது செவ்வியலாக இருந்தால் என்ன நாட்டுப்புற பாட்டாக இருந்தால் என்ன? மரபின் நீட்சியில் தோய்வதெல்லாம் மகத்தான அனுபவமே
ஜெ
அன்புள்ள ஜெ,
‘மரபின் நீட்சி’ என்கிற குறிப்பிற்கு நன்றி.
செவ்விசை என்பதற்கு மாற்றாகவும், வெவ்வேறு இசை பாரம்பரியங்களை, இணைப்பதாக ஒரு வார்த்தை.
எனது மனதில் இருந்த சிந்தனை, வார்த்தையில் வேறு வடிவு கொண்டுவிட்டது.
‘மரபின் நீட்சி மகத்தானதே’ என ஆமோதிக்கிறேன்.
தட்டச்சு செய்யும் போது ‘நீட்சி’ என்பது தவறுதலாக ‘நீட்சே’ என பதிவு வந்தது. புன்னகை நெளிவிக்கும் தவறு!!
அன்புடன் முரளி.
M.Murali
Technology Consultant
***
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம்
திருவையாறுக்கு நீங்கள் சென்ற அனுபவத்தைப்பற்றி வாசித்தேன். கர்நாடக சங்கீதம் நம்மை கவர்ந்திழுக்கக் கூடியது. அதன் ஆழங்களுக்குச் செல்லும் தோறும் மேலும் ஈர்க்கப்படுவீர்கள். அமிழ்ந்துவிடுவீர்கள்
நீங்கள் சொன்னது உண்மையே கர்நாடக சங்கீதத்தின் இசை இலக்கணங்களை அறியாதவர்கள்கூட கர்நாடக சங்கீதத்தால் கவரப்பட்டு அடிமையாகிவிடுவார்கள். மெல்ல அவர்கள் அதற்கு ரசிகர்களாக ஆவார்கள்– விமரிசகர்களாக அல்ல
ராகங்களை ஆராய்வதற்கும் ஒப்பீடுசெய்வதற்கும் இந்துஸ்தானி -கர்நாடக சங்கீதம் குறித்த தகவல்களுக்கும் நீங்கள் என் வலைப்பூவுக்கு வரவேண்டும்
அன்புடன்
சுப்புரத்தினம்