பேய்களும் பாரதியும் – கடலூர் சீனு

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க

நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க

இனிய ஜெயம்

 

எவ்வாரமும் போல இவ்வாரமும் மகிழ்சிகள் நிறைந்த வாரமாக அமைந்தது.

 

முதல் மகிழ்ச்சி

 

நீண்ட நாள் கழித்து [குமரகுருபரன் விருது விழாவுக்குப் பிறகு] உங்கள் குரலைக் கேட்டது. விஷ்ணுபுர உள்வட்ட வெளி வட்ட நண்பர்கள் மத்தியில் உலவும் நம்பிக்கை நான் தினமும் ஜெயமோகன் வசம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பது. தினமும் பேச  கேட்க பல விஷயங்கள் இருப்பினும், இதோ ஜெயமோகன் வசம் பேசப் போகிறேன் எனும் அந்த உணர்வு, அது அனுபவிக்க மிக இனிதானது. அந்த இனிமையை அனுபவித்த படியே,உங்களுடன் பேச எடுத்த செல்போனை மீண்டும் அணைத்து வைப்பதே எனது தினசரி நிலை. நண்பர்கள் அறிக. :)

 

இரண்டாவது மகிழ்ச்சி

 

இல்லத்துக்கு நண்பர்களின் வரவு. இலக்கியக் கூடுகை ஒன்றின் பொருட்டு, முன்பே வந்த நண்பர்கள் இல்லத்தில் கூட, ஒரே இலக்கிய அரட்டையும் சந்தோஷமும் என ஒரு மணிநேரம் கழிந்தது. உரையாடல் ஸ்ரீபதி பத்மநாபா குடும்பம் நோக்கி நகர, மயிலாடுதுறை பிரபு ஒரு தொகையை அளித்து துவங்கி வைக்க, வளவ துரையன் நண்பர்கள் வசமிருந்தது பெற்ற தொகையை அளிக்க, புதுவை மணிமாறன் தொகைகளை சேர்த்து வரும் புதன் கிழமை மாலைக்குள் பத்மநாபா வங்கிக் கணக்கில் சேர்ப்பதாக பொறுப்பு ஏற்க, புதுவை வெண்முரசு வாசகர்கள் நண்பர்கள் சார்பில் ஒரு எளிய தொகை வங்கிக் கணக்கில் சேர்க்க வேலைகள் துவங்கியது. ஆச்சர்யமாக அம்மா நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் ஒன்று எடுத்து தர சொன்னார்கள். மணிமாறன் எடுத்து வாட்சாப்பில் அனுப்பினார். கிளம்புகையில் நண்பர்கள் ”என்னங்க நீங்க இலக்கியத்துல இருக்கீங்க, வர்றவங்க இலக்கிய நண்பர்கள் எல்லாம் தெரிஞ்சும்,உங்க வீட்ல இப்புடி உபசரிச்சி இலக்கியத்துக்கு வழியனுப்பி வெக்கிறாங்களே,குடுத்து வெச்ச ஆள் சார் நீங்க, நாங்க எல்லாம் காம்பௌண்டு சுவத்துல பதிச்ச பாட்டில் ஓடு,கவட்டைல கிளிச்சிடாம திருடன் தாண்டி குதிப்பானே,அப்டி வீட்டை விட்டு தாண்டி குதிச்சி வாரோம்” என சொல்ல சிரிப்போடு இல்லம் நீங்கினர் நண்பர்கள்.

 

மூன்றாம் மகிழ்ச்சி.

 

இரண்டு இரவுகளிலாக தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் தொகுப்பை முழுமையாக வாசித்தது. ஜன்னல் இதழில் தொடர் வருகையில், இதழ் இதழாக வாங்கி வாசித்த தொடர். மொத்தமாக வாசிக்கையில் அது அளித்த பிரதி தரும் இன்பம் மொத்தமே வேறாக இருந்தது. பூயன், முத்துப் பட்டன், கழுமாட சாமி, செண்பக யக்ஷி, மேலாங்கோட்டு இசக்கி, கள்ளியங்காட்டு நீலி, உம்மிணி, பூலங்கொண்டாள்,செல்லி வீர சின்னையன், பிருதை, ரவிகுட்டிப் பிள்ளை கண்ணம்மா, ஆந்திரமுடையார், ஆனந்தன்சாமி, பொன்னிறத்தாள் வெள்ளைக்குட்டி, மந்திர மூர்த்தி,வன்னியாடி மறவன், கன்னக்கரை தம்புராட்டிகள், பறக்கை சிதம்பர நாடார் என எத்தனை எத்தனை நாட்டுப்புற தெய்வங்களின் உணர்ச்சி மிகு கதைகள். நேரடியாக காதலும், வன்மமும்,நட்பும் துரோகமும்,ஏக்கமும் என எல்லா உணர்சிகளும் நேரடியாக வந்து வாசகனைத் தீண்டும் கதைகள். அந்த நேரடி உணர்சிகளே அதன் உச்ச நிலையில் உறைந்து எவ்வாறு வணங்கப் பெரும் சாமிகள் ஆகின்றன என்பதைச் சொல்லும் கதைகள்.

 

காதலன் மேல் வஞ்சம் கொண்ட காதலி பேயாகி எலோரையும் கொல்கிறாள்.காதலனைத் தவிர. அவன் மேல் கொண்ட காதலைக் காட்டியே அவளை அடங்கி பலி கொண்டு அமர வைக்கிறார்கள். காதலன் பெயரைச் சொல்லிச் சொல்லியே பேயாய் திரியும் பித்தியை கனிந்து கோவில் கொள்ள வைக்கிறார் ஒருவர், கொலை செய்து திரியும் பேய்ச்சி ஒருவள், பிரசவம் பார்க்கிறாள், பெண் குழந்தை. பிரசவம் பார்த்த கைகள் அருள் தரும் வண்ணம், தனது குரோதத்தை விட்டு தெய்வமாக அமைகிறாள் அவள், எத்தனை எத்தனை கதைகள். பஞ்சமும், படையெடுப்பும், குடியேற்றமும், என அலைக்கழிந்து ஒரு சமூகம் அமையும் காலக் கட்டத்தில் குமரி நிலத்தில் எழுந்து வந்த நாட்டுப்புறத் தெய்வங்களின் கதை. துல்லியமான சூழல் வர்ணனைகள், குறிப்பாக கிராமத்து சாவடி, மஞ்சாலமூடு கிராமம் நோக்கிய தனித்த பாதையின் சித்தரிப்பு, கழுமாட சாமி சித்திரவதைகள் குறித்த விவரிப்பு, குறிப்பிட்ட காலத்தில்,குறிப்பிட்ட நிலத்தில் நிகழ்ந்த சமூக,வரலாற்றின் சுழிப்பு, இங்கே இதில் உழலும் மனிதர்கள் தெய்வங்கள் என்றாகி அமர்ந்த கோலத்தின் பின்புல விவரிப்பு, வேதத் தொன்மம் திரி சிரஸ் கொண்டு இந்த தெய்வங்களின் பண்பாட்டு நிலையை விவரித்தமை என முற்றிலும் இரு இரவுகள் என்னை வேறு கனவுகளில் நிறுத்தி வைத்தது இந்த நூல்.

 

நான்காவது மகிழ்ச்சி.

 

மீண்டும் சீர்காழி சட்டைநாதர் கோவில் பார்க்க சென்றேன். ஒவ்வொரு முறையும் வாசித்து அறிந்த அதுவரை அங்கிருந்து எனது கண்ணில் படாத விஷயங்களைக் காணவே மீண்டும் பயணம். இம்முறை சென்றது அக்கோவிலில் உள்ள அஷ்ட பைரவர்களைக் காண.

 

பைரவமும் சாக்தமும் தாந்த்ரீக யோக  சடங்குகள் வழியே ஒன்றிணைந்து, பல்வேறு காரணிகள் வழியே சைவத்துடன் கலந்தது கரைந்துவிட்ட ஒன்று. ஐந்தாம் நூற்றாண்டு துவங்கி, பதினைந்தாம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த நெடிய வளர்ச்சிப்போக்கை,மாற்றங்களை உள்ளடக்கியது இந்த பண்பாட்டு ஓட்டம்.

 

இதில் காசியை மையம் கொண்டு எழுந்த பைரவ மார்க்கமும் வழிபாடுகளும்  மேலிருந்து கீழாக வந்து தமிழ் நிலத்தில் நிலை பெற்ற தடங்களை சிதம்பரம் சீர்காழி பகுதிகளில் காணலாம். சிதம்பரத்தில் முன்பிருந்த முதன்மைத் தெய்வம் தில்லைக் காளி. பண்பாட்டு மாற்றத்தின் வெளியே இப்போது அவள் [மையத்திலிருந்து விளிம்புக்கு சென்றுவிட்ட] எல்லைக் காளி.

 

சிதம்பரம் அருகே திருவெண்காட்டில் முதன்மைத் தெய்வம் மகாகாளி, அவளை எதிர் கொண்டு எழுந்தவர் அவளின் சிவ பாதி அகோரமூர்த்தி. சோழர்கள் கொண்டு வந்த ஆகம மாற்றத்தில் வெளியே சென்று நின்று விட்ட சாக்த தெய்வங்கள் தாந்த்ரீக வழிபாடுகள் போன்ற  வளர்சிதை மாற்றத்தில்  இப்போது அங்கே முதன்மை தெய்வம் ஸ்வேதஆரண்யேஸ்வரர் பிரம்ம ஞானாம்பிகை அம்மன்.

 

இத்தகு மையங்களில் ஒன்று சீர்காழி சட்டைநாதர் கோவில். காசி நிலத்தின் எண் திசையும் காவல் தெய்வங்களாக அமைந்த அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர் குரோதன பைரவர், உன்மத்த பைரவர் கபால பைரவர், பீஷன பைரவர் சம்ஹார பைரவர் என்ற இந்த அஷ்ட பைரவர்களும் இந்தக் கோவிலில் உண்டு. பைரவ வழிபாட்டின் ஒரு பகுதியில் இந்த அஷ்ட பைரவரின் சக்தியாக பிராமி,மகேஸ்வரி,கௌமாரி,வைஷ்ணவி,வராகி,இந்திராணி, சண்டி,சாமுண்டி குறிப்பிடப் படுகிறார்கள்.

 

சிவவடிவங்கள் போலவே, பைரவருக்கும் அறுபத்தி நான்கு தோற்ற வடிவங்கள் உண்டு. அத்தனையும் சமணத்தில் ஒவொரு தீர்த்தங்காரர்களுக்கும் நான்கு திசைகளுக்கும் காவலாக,தத்தமது சக்தி வடிவுடன் அமர்ந்திருக்கும் கோலத்தை, மேல் சித்தாமூர் மடத்தில் வாசித்த, ஜைனத்திருமேனிகள் நூலில் கண்டேன்.

 

இந்தக் கோவிலில் இந்த திசைக்காவல்  பைரவர்களின் காவலில் நிற்கும் தலைவன் சட்டைநாதர்.  விஷ்ணுவின் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம்,வாமன அவதாரம் இவற்றின் பின்னர்,இந்த அவதாரம் எடுத்தமை கொண்டு,செறுக்குற்றுத் திரிந்தாராம் விஷ்ணு, எனவே இந்த ஒவ்வொரு அவதாரத்தையும் ஒவ்வொரு வடிவு கொண்டு அடக்கி அதன் கர்வம் அழித்தாராம் சிவன். இந்த ஐதீகத்துக்கு எந்த புராணத்தில் இதற்க்கான கதைகள் உண்டு என்று இனிமேல்தால் தேட வேண்டும். இதில் வாமணன் என்று நின்ற விஷ்ணுவை, ஒரே அடியில் கொல்கிறார், சிவனின் பைரவ அம்சம். வாமனரின் உடலை உரித்து உடையாக அணிந்து கொள்கிறார், அவரது முதுகெலும்பை உதிர்த்து கட்வாங்கம் என வைத்துக் கொள்கிறார் இந்த பைரவர்.அந்த வடிவே இந்த சட்டை நாதர்.

 

இரவு. கடவுளும் கிளம்பிச் சென்றுவிட்ட,தனித்த கோவிலில் நெடுநேரம் சட்டைநாதர் படிமத்தை பார்த்து நின்றேன். மரச் சிற்பம். இடைவரை போர்த்திய வாமணர் உடல். விஸ்வரூப வாமணர் இந்த பைரவரின் இடை அளவுதான் என்பது கர்வ பங்க சப் டெக்ஸ்ட். எலும்பு மாலை,கட்வாங்கம் எல்லாமே வாமணர் எலும்புகள்.

 

பிறகு மகாலட்சுமி சிவன் வசம் தாலிப் பிச்சை கேட்க, தோணியப்பர் இங்குள்ள பிரம்ம புரிஈஸ்வரர் வசம் சொல்ல,அவர் மீண்டும் விஷ்ணுவை உயிர்ப்பித்ததாக இத்தல ஐதீகம்.  பிரம்ம புரீஸ்வரரின்  சக்தி, ஸ்திற சுந்தரி அம்மன். இந்த அம்மன் சன்னதி சுற்றி முப்புரத்திலும் இச்சா,க்ரியா,ஞானா சக்திகள் உண்டு. இடையே இருக்கும் மிக முக்கியான சிறிய வழிபாட்டுப் படிமை சியாமளா தேவி. சாக்தத்தின் தசமகா வித்யா தேவிகளில் ஒருவர்.  சரஸ்வதி போல,சாக்தத்தின் கலை மகள். கையில் மாணிக்க வீணை, சிரசில் பிறை சந்திரன், மயில் நீல வண்ணம் கொண்டவள்.  எத்தனையோ முறை இந்தக் கோவிலுக்குள் வந்தும், முதன் முறையாக இவளைக் கருத்தில் கொண்டு,நின்று வணங்கி,கைதொழுதேன். திருஞான சம்பம்தர் இந்த தலத்தில்தான் ஞானப்பால் அருந்தினார். அவருக்கு இங்கே தனி சன்னதி உண்டு. ஐயன் அம்மை சன்னதிக்கு இடையே அமைந்த சன்னதி.ஆகவே இங்கே சம்பந்தர் இடையே இருக்க, ஐயனும் அம்மையும்  சோமாஸ்கந்தர் கோலத்தில் காட்சி அளிப்பதாக ஐதீகம்.

 

ஐந்தாவது மகிழ்ச்சி.

 

புதுவை தாமரைக் கண்ணன், யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் நூல் கொண்டு பாரதி ஆளுமை மீது நிகழ்த்திய உரை. புதுவையில் பாரதி நினைவு இல்லத்தில் அவரால் பாரதியின் ஆச்சாரமான நிலை குறித்து மட்டுமே பேச முடிந்தது. எனவே முழுமையான உரையை இங்கே கடலூரில்,வளவ துரையன் அவர்களின்,இலக்கியச் சோலை நிகழ்வில் உரையாற்ற அழைத்திருந்தோம்.

 

நெடுநாள் முன்பு வாசித்த நூல். அப்போது வாசிக்கையில் எனக்கு அணுக்கமாக இருந்தது அந்த நூலின் கூறுமுறை. வக்கணையாக திண்ணைப் பேச்சில் இருக்கும் பெண்கள் வசம் கூடுமே அப்படி ஒரு மொழி.  இப்போது தாமரைக்கண்ணன் உரை வழியே அதை மீண்டும் வாசிக்கும் ஆவல் எழுந்தது.

 

புதுவையில் பாரதிக்கு வர வேண்டிய அஞ்சல்கள், மனியாடர்கள் எல்லாமே, அவர் மீதான அரசின் ‘பார்வை’ காரணமாக அவர் கைக்கு வந்து சேர்வதே அரிதுதான். தினமும் பாரதி அஞ்சல் நிலையத்தில் சண்டை போடுபவராக இருக்கிறார். அஞ்சல் சரியாக பத்திரிக்கைக்கு சென்று,அது அச்சாகி, அந்த பாடலுக்கு காசு, மணியார்டரில் வர வேண்டும் இந்த நெடிய நிகழ்முறை மொத்தமும் குழப்பத்தில் விழ, இந்தக் காசை எதிர்பார்த்து நிற்கும் செல்லம்மாள் திண்டாடுகிறார். இந்த வீட்டை விட்டு, இன்னும் வாடகை குறைவான வேறு வீட்டுக்கு மாறும் சூழல்.

 

இந்த சூழலில் நின்றுதான் பாரதி பாடல்கள் புனைகிறார். அவர் வீட்டின் அருகே அரிசி குத்திக் கொண்டே பாடிக்கொண்டிருந்த பெண்ணின், மெட்டில் உருவாகிறது ஒரு பாடல், பாம்பாட்டி மகுடி இசை கேட்டு,அந்த மெட்டுக்கு உருவாகிறது மற்றொரு பாடல். நண்பரின் குழந்தை இறந்த துயரத்தின் போது,அந்தத் துயரில் நின்று பாரதி எழுதியதே நல்லதோர் வீணை செய்தே பாடல்.

 

பாரதிக்கும் செல்லம்மாவுக்கும் ஒரு மாதிரி ஹேட் அன் லவ் உறவு இருந்ததாகவே யதுகிரியின் நினைவுகள் சொல்கிறது. பாரதியின் நடத்தை விசித்திரம் அவளை அலைகழித்திருப்பதாக தெரிகிறது. தனது மகள் உச்சக் காய்ச்சலில் கிடக்கும் போது பாரதி,கிட்டத்தட்ட ஒரு மனநோயாளி போல நடந்து கொள்கிறார். சக்தி என் குழந்தையைக் காப்பாற்று என்றபடி சுவற்றில் தலையை முட்டிக் கொள்கிறார்.

 

சில சமயம் வாரக்கணக்கில் நீளும் மௌன விரதம் அனுஷ்டிக்கிறார் பாரதி. நித்தமும் சண்டை செய்யும் பாரதி கூட பரவா இல்லை,இந்த பாரதியை செல்லம்மாவால் பொறுத்துக்கொள்ளவே இயலவில்லை.

 

பாரதி ஒரு சமயம் சாகாவரம் பெரும் சாதனையில் இருப்பதாக யதுகிரி வசம் சொல்ல, பால்ய வயது யதுகிரியும் அதை அப்படியே நம்புகிறார்.

 

போதைப் பழக்கத்தில் பாரதியின் விழிகள்,தீட்சண்யம் இழந்து கலங்குவதை குறிப்பிடுகிறார் யதுகிரி . பாரதியின் போதைப் பழக்கமும் நடத்தைகளும் ஏழ்மையும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலும் செல்லாமாவை துன்புறுத்த அவர் குழந்தைகளை கூட்டிக் கொண்டு கடையம் புறப்படுகிறார். புறப்படுவதற்கு தடையாக நிற்கும் பாரதியை அறைக்குள் வைத்து பூட்டி,தான் சென்ற பிறகு விடுவிக்க சொல்லி,சாவியை பக்கத்து வீட்டில் தந்து விட்டு வெளியேறுகிறார்.

 

எதோ ஒரு எல்லையில் யதுகிரி மட்டும் பாரதியின் ஆழம் அறிந்தவராக இருக்கிறார். பாரதி எதை எழுதினாலும்,அதன் முதல் நகல் பிரதி யதுகிரி வசம் இருக்கும் எனும் அளவு. யதுகிரி திருமணத்துக்கு அவளுக்கு வேண்டியதை செய்ய காசு இல்லாத பாரதி சொல்கிறார், உனக்கு ஒரு பாட்டு எழுதி தரேன். என்று.

 

பாரதி யதுகிரி வசம் சொல்கிறார் ”இந்தப் பாடல்களை நாளை தமிழகமே கொண்டாடும். அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேன்.நீ இருந்து அதைப் பார்”.  உச்சமான தருணம் ஒன்றைச் சொல்லி தாமரைக் கண்ணன் உரையாடலை முடித்தார். இரண்டு நாளாக பாரதியைக் காணவில்லை. குழந்தைகள் செல்லம்மாள் உட்பட அனைவரும் தவிக்கிறார்கள். மறுநாள் அதிகாலை கடற்கரையில் உதய சூரியனைக் கண்டு கணீர் குரலில் பாரதி பாடுவதைக் யதுகிரி ஓடிச் செண்று வீட்டில் சொல்ல, அப்பா சீனிவாசாச்சாரியார் வந்து பார்க்கிறார்.அது பாரதியேதான். என்னப்பா ஆச்சி எங்க போன நீ என்று கேட்கிறார், பாரதி எங்கோ கனவில் தொலைந்து போனேன், மீண்டு எழுந்து பார்த்தால் இதோ இங்கே உதயத்தின் முன் கிடக்கிறேன் என்கிறார்.

 

பாரதியை வீட்டுக்கு அழைத்துப் போகிறார் ஆச்சாரியார். வழி நெடுக யதுகிரிக்கு புரிந்ததுவிடக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில் பாரதியை கடிந்தபடியே வருகிறார். மௌனமாக விழிநீர் சொட்ட, தலைகுனிந்தபடி வீடு வந்து சேர்கிறார் பாரதி.

 

இந்த நூலில் பாரதி சார்ந்து யதுகிரியின் நினைவாக, என் நினைவில் பதிந்த ஒன்றுண்டு. ”பாரதி சாமிதான். தன்னைத் தானே  காப்பாற்றிக்கொள்ளத்தெரியாத சாமி”. நினைவு சரிதானா என்பதை மீண்டும்படித்தே உறுதி செய்து கொள்ள வேண்டும். சந்தியாபதிப்பகம் பத்து வருடம் முன்னால் இந்த நூலின் மறுபதிப்பை கொண்டுவந்தது. தற்சமயம் பதிப்பில் இல்லாத இந்த நூலின், ஐம்பத்தி நான்காம் ஆண்டு வெளியான முதல் பதிப்பு, ஆர்கைவில் தரவிரக்கிக்கொள்ளக் கிடைக்கிறது.

 

பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள் – இணையநூலகம்

கடலூர் சீனு

 

குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை
இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்

 

முந்தைய கட்டுரைகன்னிநிலம் -கடிதம்
அடுத்த கட்டுரைகதிரவனின் தேர்- 4