ஆச்சரியம் என்னும் கிரகம்

ஆச்சரியம் என்னும் கிரகம் வாங்க

 

அன்பின் ஜெ,

பனிமனிதன் மற்றும் வெள்ளிநிலம் புத்தகங்களுக்கு பிறகு, ஆச்சரியம் என்னும் கிரகம் – நான் இதுவரை படித்ததில் சிறந்த சிறார் இலக்கியங்களில் ஒன்று. நீங்கள் பலமுறை கூறியதுபோல ஜப்பானிய குழந்தை இலக்கியங்களும், திரைப்படங்களும் பொழுதுபோக்கு மட்டுமின்றி ஆகச்சிறந்த தரிசனங்களையும் அளிக்கக்கூடியன.

சாஹித்திய அகாதெமியின் பதிப்பாக வந்துள்ள இந்த தொகுப்பில் ஐந்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் இப்போது அதிகமாக இருக்கும் சுயநலமிக்க பேராசை, வளர்ச்சிக்கு பின்னால் ஓடுதல் மற்றும் மிகவும் மெலிந்துவரும் சகமனித உணர்வு போன்றவற்றின் பின்விளைவுகளை குழந்தைகளுக்கும் புரியுமாறு எழுதியுள்ளார் ஜப்பானிய எழுத்தாளரான ஷின்ஜி தாஜிமா (மொழிபெயர்ப்பு வெங்கட் சாமிநாதன்).

முதல்கதையில் மனிதனாக மாறிவிட்ட கோன் என்னும் நரி, எப்படி இக்கால மனிதனின் குணமான இயந்திரத்தனத்தை கொண்டு தன் நரி இனத்தின் அழிவை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை ஆராய்கிறது. பொருளாதார வசதிக்காக வெளியூரிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்துகொண்டு ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பெற்றோரை பார்க்க செல்லும் இக்கால இளைஞர்களின் தவிப்பை தத்ரூபமாக காட்டுகிறார்.

இரண்டாவது கதையில் நம் மனம் எப்படி மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டும் என்பதை இரு செடிகள் விதைகளிருந்து வெளிவருவதை குறியீட்டாக கொண்டு விளக்குகிறார்.

மூன்றாவது, புத்தகத்தில் தலைப்பான ஆச்சரியம் என்னும் கிரகம். இந்த கதையில் மனித இனம் வளர்ச்சிக்காக இயற்கையின் வரங்களை எவ்வாறெல்லாம் சுரண்டுகின்றன, அதனால் இந்த உலகமே எவ்வாறு அழிவின் பாதையில் செல்கிறது போன்ற இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான விஷயங்களை விவாதிக்கிறது.

நான்காவது கதை மனிதர்களுக்குள் இருக்கும் போட்டிமனப்பான்மையை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை கூறுகிறது.

கடைசி கதை இயற்கை வளங்களை அழிப்பதனால் விளையும் வறட்சியை படம் பிடிக்கிறது.

இந்த ஐந்து கதைகளும் குழந்தைகளுக்கு இந்த நூற்றாண்டில் நடந்துகொண்டிருக்கும் நுகர்வு கலாச்சாரமும், அதன் விளைவுகளான சுயநலமும், பேராசையும், மனிதாபிமான உணர்வுகளும் அதன் நேர்மறை எதிர்மறை பாதிப்புகளும் மிக சிறந்த அறிமுகமாக அமையும். மனிதன் என்னும் மிருகம் பிற உயிரினங்களை எவ்வாறு சுரண்டுகிறது, இரக்கம், உலகியல் குறித்த தரிசனம், முதலியவை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஒரு புதிய வாசலை திறக்கும்.

அன்புடன்,

கோ வீரராகவன்.

 

அன்புள்ள வீரராகவன்

 

புத்தகங்களைப் பற்றிய பேச்சே அரிதாக உள்ளச் சூழலில் நீங்கள் நூல்களைப் பற்றி எழுதியிருப்பது மிக மிக வரவேற்கத்தக்கது

 

ஆனால் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது நாம் அதில் என்ன உள்ளடக்கம் இருக்கிறது என்பதை மட்டுமே எழுதுகிறோம். அது எவ்வகையிலும் நல்ல மதிப்புரை அல்ல

 

புத்தகங்களைப் பற்றிய எழுத்து மூன்று வகை. மதிப்புரை, ரசனைக் கட்டுரை, ஆய்வுக்கட்டுரை. நீங்கள் எழுதியிருப்பது மதிப்புரை.

 

மதிப்புரையில் மூன்று உள்ளடக்கங்கள் இருக்கவேண்டும்.

 

அ. அந்நூலின் உள்ளடக்கம் பற்றிய குறிப்பு. நூலின் பின்னணி, நூலின் ஆசிரியர் குறித்த செய்திகள் ஆகியவை

 

ஆ. அதைப் புரிந்துகொள்வதற்கான பின்புல விளக்கம், அதனுடன் தொடர்புடைய செய்திகள்

 

இ.அதன் மீதான உங்கள் மதிப்பீடு

 

மதிப்புரையே ஆனாலும் அதை சுவாரசியமாகவே தொடங்கவேண்டும். நூலில் உள்ள ஒரு செய்தியுடன் , அல்லது உங்கள் வாசிப்பில் அதனுடன் தொடர்புடையதெனத் தோன்றிய ஒன்றுடன். முடிக்கையிலும் அதேபோல நூலில் இருந்து ஆர்வமூட்டும் ஒன்றைச் சொல்லி முடிக்கவேண்டும்

உதாரணமாக ஆச்சரியம் என்னும் கிரகம் தமிழின் புகழ்பெற்ற இலக்கியவிமர்சகரான வெங்கட் சாமிநாதனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது மிக முக்கியமான செய்தி. The Legend Of Planet Surprise: And Other Stories என்னும் நூலின் மொழியாக்கம் இது. இதை எழுதியவர் ஷிஞ்சி தாஜிமா [Tajima Shinji] ஜப்பானின் முக்கியமான குழந்தை எழுத்தாளர். இலக்கியக் கழகத்தின் தலைவர்.

1973 ல் ஹிரோஷிமாவில் பிறந்த தாஜிமா ஷிஞ்சி பயிற்றியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தியாவிலும் ஜெர்மனியிலும் ஆய்வுகள் செய்தவர். பல்வேறு கல்வி ஆய்வுநிறுவனங்களில் பணியாற்றியவர். அவருடைய குழந்தைக்கதைகள் உலக அளவில் 28  மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன

 

ஜப்பானிய குழந்தைக்கதைகள் இரண்டுவகை. தொன்மையான ஜப்பானிய பண்பாட்டின் தொடச்சியும் ஜென்மரபின் தாக்கமும் கொண்ட மென்மையான குழந்தைக்கதைகள் ஒருவகை. தாஜிமா ஷிஞ்சி எழுதுபவை அத்தகையவை. மிகமிக தீவிரமான வன்முறைச் சித்தரிப்பும் கொண்ட வெடிப்புறுகோடுகள் கொண்ட படங்களாலான குழந்தைக்கதைகள் இன்னொரு வகை. அவையே அங்கே மாங்கா வகை  நூல்களாக வெளிவருகின்றன

 

ஒருநூலில் இருந்து நாம் சற்றே பயணம் செய்யவேண்டும். அதுவே நூலை அறிந்துகொள்வதற்கான வழி. நம் கட்டுரை வழியாக வாசகரும் நூலில் இருந்து மேலும் பயணம் செய்யவேண்டும்

 

தொடர்ந்து எழுதுக

 

ஜெ

 

தாஜிமா ஷிஞ்சி – வரலாறு

முந்தைய கட்டுரைகவிஞர் அபி பேட்டி- காணொளி
அடுத்த கட்டுரைதகவலறியும் உரிமைச்சட்டம், பொதுச்செயல்பாட்டாளர்கள்