வணங்கான், ஒரு கடிதம்

கலங்க வைத்த கதை (அல்லது உண்மைச் சம்பவம்). தன்னம்பிக்கை யானை போல உறுதியாக வளர்ந்ததினாலேயே யானைக்கருப்ப நாடார் வணங்காமுடியாக உயர்ந்திருக்கிறார் அந்தத் தன்னம்பிக்கை அவரிடம் இயல்பாகவே ஊறி அவர் பெற்ற கல்வி உரம் போட்டு வளர்த்திருக்கிறது. சுயமரியாதை என்பதற்கு இலக்கணமாக இருந்திருக்கிறார். இன்றும் பல நாடார் முதலாளிகளின் அறைக்குள் நெருக்கமானவர்கள் கூட செருப்பு அணிந்து உள்ளே செல்ல முடியாது, கோவில் சந்நிதானம் போன்ற இடங்கள் அவை. இன்றும் முதலாளியின் கார் தூரத்தில் செல்லும் பொழுதே குனிந்து வணக்கம் போடும் ஆட்களை காணலாம். ஆனால் அவர்களின் பணம் அது தரும் செல்வாக்கு அந்த மரியாதையை அவர்களுக்கு ஈட்டுகிறது. இங்கு யானைக்கருப்ப நாடாரின் தன்மானமே அவருக்கு அந்த மரியாதையை பெற்றுத் தந்து யானை மீது ஏற்றுகிறது. மிகுந்த எழுச்சியை அளித்த சிறுகதை. இதில் யானை வீறு கெண்டு எழும் அவரது தன்னம்பிக்கையை, அவரது மன திடத்தை, அவருக்கு தன் மீது உள்ள மரியாதையைக் குறிக்கிறது. அவர் பெற்ற கல்வியும் அதையும் மீறி இந்த வணங்காமுடி தன்னிடம் இருக்கும் நம்பிக்கையுமே அவருக்கு யானையின் பலத்தையும் நடையையும் அளிக்கின்றன. வழக்கம் போலவே ஜெயமோகனின் பிரமிக்க வைத்த நடை. யானை மீதான வர்ணணை ஜிவ்வென்று வானத்தில் பறக்கும் உணர்வை அளித்தது.

நான் தமிழ் நாட்டில் வேலை பார்த்த ஒரு அரசு நிறுவனம் ஒரு பெரிய அரசியல் பிரமுகரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்தான் முதலாளி அவர் வைத்ததுதான் சட்டம். அவரை எல்லோரும் ஐயா என்றுதான் அழைக்க வேண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறக்கும் வரை அதுதான் அங்கு நியதி. பெரிய பெரிய படிப்பு படித்தவர் கூட அவரை ஐயா என்றுதான் அழைக்க வேண்டும். ஜாதீய ஆதிக்கமும் அதிகாரத் திமிரும் அரசியலும் சூழ்ந்த அந்த சூழலில் இருபத்தோரு வயதில் நான் வேலைக்குச் சேர்ந்த பொழுது அரசியல் தலையீடுகள் ஆரம்பித்திராத எம் ஜி ஆர் ஆட்சி இருந்தது. பிற்காலத்தில் ஆட்சி மாறிய பொழுது இந்தப் பிரமுகரின் முழுக் கட்டுப்பாட்டில் அந்த நிறுவனம் வந்திருந்தது. ஐயா என்பதற்கு மறு வார்த்தை எவன் பேசினாலும் அவன் கதை முடிந்து விடும் என்பார்கள். அவருடன் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அந்த அறையில் வயதில் மிகச் சிறியவன் நான். நான் அவரை சார் என்று அழைத்து விட்டேன். அறையின் கூரையும் அதன் மேல் வானமும் மொத்தமாக இடிந்து விழுந்தது. அந்த ஏ சி அறையில் திடீரென்று ஒரு கனத்த மவுனமும் திடீர் வெப்பமும் படர்ந்தது. எங்கேயோ கன்யாகுமரி மாவட்டத்தின் கண்காணாத மூலையில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடந்த நாயர் ஆதிக்கம் இல்லை, இலஞ்சி ஜமீந்தாரின் ஆட்சி இல்லை தற்கால ஜனநாயக இந்தியாவில் மக்களாட்சியில் ஒரு அரசியல்வாதியை நான் சார் என்று அழைத்தது அவருக்கு நேர்ந்த ஆகச் சிறந்த அவமதிப்பாகக் கருதப் பட்டு விட்டது. சில நொடிகள் அவர் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு நான் யார் எப்பொழுது வேலைக்குச் சேர்ந்தேன் என்பவனவற்றையும் முக்கியமாக நான் என்ன “ஆளுங்க” என்பதையும் கேட்டு அறிந்து கொண்டார். அறையில் இருந்த சிலர் என்னைக் கடும் குரோதத்துடன், மற்றவர் குழப்பத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பலரும் என்னிடம் வந்து என் வேலையுடன் கூடுதலாக கை கால்களை இழக்கும் ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்தவாறு இருந்தார்கள். இங்கு ”ஐயா” என்று அழைப்பது ஒருவிதமான அதிகாரக் குறியீடு. சாதாரணமாக நாம் பெரியவர்களை, தமிழ் ஆசிரியர்களை அன்புடன் அழைக்கும் “ஐயா” விகுதி அல்ல. இது வேறு விதமான “ஐயா”. அங்கு “ஐயா” என்பது ஆண்டானிடம் அடிமை தன் அடிமைத்தனத்தை ஒத்துக் கொள்ளும் ஒரு சாசனம். அடுத்த கூட்டத்தில் அவர் எனக்கு மற்றொரு சோதனையும் வைத்தார். தனது சிகரெட் பெட்டியை நான் அருகில் நடந்து கொண்டு இருக்கும் தருணத்தில் நடந்து கொண்டிருந்த பொழுதே நழுவ விட்டு விட்டார். நான் கண்டு கொள்ளாமல் அவருடன் பேசியவாறே நடந்து கொண்டிருந்தேன் அந்நிறுவனத்தின் எனது தலைமை அதிகாரி, தன் தொந்தியையும் மீறி கஷ்டப் பட்டுக் குனிந்து அவரது கால்களில் இருந்த சிகரெட் பெட்டியை எடுத்து அவர் கைகளில் பணிவுடன் அளித்து விட்டு என்னை ஒரு முறை முறைத்தார்.

ஆனால் எதிர்பார்த்த எந்த விளைவுகளும் ஏற்படவில்லை. அதன் பின் பல தடவைகள் அவர் என்னை அழைத்துப் பேசியிருக்கிறார் எந்தவித வன்மத்தையும் வெளியில் காண்பித்துக் கொள்ளாததுடன் என்னை தாராளமாகப் புகழ்ந்து தள்ளவும் செய்தார். ”சார்” விகுதியை சகஜமாக எடுத்துக் கொண்டு விட்டார். நம் சுயத்துக்கு நாம் மரியாதை அளித்தால் நமக்கு மரியாதை திரும்பக் கிடைக்கும். அதைச் சரியாக உணர்ந்தவரின் கதையே இந்த வணங்கான். அடிமைத்தனம் என்பது இன்றும் வேறு வடிவத்தில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சுயமரியாதை என்பதன் அர்த்தம் தெரியாமல் அதைப் பற்றி வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று மாயாவதியின் காலணியைத் துடைத்து விடும் போலீஸ்காரர்களும், அம்மாவின் கால்களில் விழும் அரசியல்வாதிகளும், முத்தமிழ் வித்தகருக்கு சாமரம் வீசுபவர்களும் இந்தக் கதையை ஒரு முறை படித்துச் சுயமரியாதை என்பதன் அர்த்தத்தை உணர வேண்டும். தென்னாப்பிரிக்கா ரெயிலில் வெள்ளைக்காரனிடம் வாங்கிய அடியே காந்தியைத் தன் சுயமரியாதை மட்டுமின்றி தன் இனத்தின் நாட்டின் சுயமரியாதையையும் உணர வைத்த தருணம் பின்னர் அவரைத் தன்னம்பிக்கை என்னும் யானையில் ஏற்றியது.

அன்புடன்
ராஜன்

முந்தைய கட்டுரைஅறம் சோற்றுக்கணக்கு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅவதூறுகள் ஏன்?