கதிரவனின் தேர்- 3

 

கல்லிலும் சொல்லிலும் எஞ்சுவதே வரலாறு என்று ஒரு கூற்று உண்டு. கல்லில் எஞ்சும் சொல் என கல்வெட்டுகளைச் சொல்லலாம். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கல்வெட்டுகள் தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. ஆனால் தென்னகத்தில் தொன்மையான கல்வெட்டுகள் மிகக்குறைவு. நமக்கு சங்ககாலக் கல்வெட்டுகள், அல்லது கிமு ஒன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் என அறுதியிட்டு உரைக்கத்தக்கவை மிகச்சிலவே. அவையும் மிக அண்மையில்தான் வாசிக்கப்பட்டு நிறுவப்பட்டன

வட இந்தியாவில் கல்வெட்டுகள் பொதுவாகவே குறைவு. கல்வெட்டுக்கள் இருந்த தொன்மையான ஆலயங்கள் பல பிற்காலத்தில் சுல்தானிய, முகலாய ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டன. விதிவிலக்காக எஞ்சுவது கலிங்கம். இந்தியவரலாற்றையே முடிவுசெய்யும் இரு முக்கியமான கல்வெட்டுக்கள் ஒரிசாவில் உள்ளன. அவை புவனேஸ்வர் நகரில், அருகருகே உள்ளன.

 

 

கலிங்கத்தைப்பற்றிய முதற்கட்ட வரலாற்றுப் பதிவுகள் கிடைப்பது அசோகரின் கல்வெட்டிலிருந்துதான். அதற்கு முந்தைய கலிங்கம் தொன்மத்தாலானது. கிமு 262 ல் மௌரியப்பேரரசர் அசோகர் கலிங்கம் மீது படையெடுத்துவந்தார். கலிங்க மன்னன் அனந்தனை தோற்கடித்தார். ஒருலட்சம் கலிங்க வீரர்களும் அதைவிட மிகுதியாக மகத வீரர்களும் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. போரின் அழிவுகளைக் கண்ட அசோகர் உளமாற்றம் அடைந்தார். பௌத்தக் கொள்கைகளை இறுக்கமாகத் தழுவிக்கொண்டார்.தன் அரசியல்கொள்கை அகிம்சையே என அறிவித்தார்.

 

இந்தக்கதை நமக்கு பல மாற்றங்களுடன் உணர்ச்சிகரமாகச் சொல்லப்பட்டுள்ளது. போர்க்களத்திலேயே உபகுப்தர் என்னும் பிக்கு அசோகரைச் சந்தித்ததையும் அகிம்சையை வலியுறுத்தி அவரை பௌத்தமதத்திற்கு மாற்றியதையும் நாடகங்களாக பள்ளிநாட்களில் பார்த்திருப்போம். உண்மையில் அசோகரின் தந்தை பிம்பிசாரரே பௌத்தர்தான். அசோகரும் பௌத்த நம்பிக்கையாளரே.

கலிங்கப்போருக்குப்பின் பௌத்தம் மகதத்தின் அரசமதமாக அறிவிக்கப்பட்டது  படைஎடுப்புகள், போர்வெற்றிகள் ஆகியவற்றுக்குப் பதிலாக மக்கள்நலப்பணிகளில் பெருமைகொள்பவராக அசோகர் மாறினார். இந்த மாற்றத்தை பௌத்தம் உருவாக்கியது. அதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தவர் உபகுப்தர். அசோகரின் மனமாற்றத்தை உபகுப்தர் உருவாக்கிய கதை கிமு இரண்டாம் நூற்றாண்டு நூல் எனப்படும் அசோகவதனம் எனப்படும் பௌத்த நூல் விரிவாகப் பேசுகிறது.

 

அசோகர் அனந்தனுடன் நடத்தியபோர் புவனேஸ்வரம் அருகே ஓடும் தயா என்னும் ஆற்றின் கரையில் நடந்தது. தயா பின்னர் பெயர் மாற்றப்பட்ட ஆறாக இருக்கலாம். தயாவின் நீர் குருதியாக ஓடியது என்கின்றது அசோகரின் கல்வெட்டு. தயாவின் கரையிலுள்ள தவளகிரி என்னும் குன்றின் கீழே அசோகர் தன் கலிங்கப்படையெடுப்பையும் அகிம்சையை தழுவிக்கொண்டதையும் அறிவிக்கும் புகழ்பெற்ற கல்வெட்டு உள்ளது.

[அசோகர் கல்வெட்டு]

மழை முகில் கருமைகொண்டிருந்த வேளையில் அக்கல்வெட்டைத் தேடிச்சென்றோம். அது புவனேஸ்வரின் முக்கியமான காதல்மையம் போல. ஏராளமான இளம் இணையர். நடுவே சுற்றிநடந்து கல்வெட்டைக் கண்டுபிடித்தோம். சமீபத்தைய ஃபானி புயலில் அதை மூடியிருந்த தகரக்கொட்டகை தூக்கி வீசப்பட்டிருக்கிறது.

 

பிராமி மொழியில் அமைந்த கல்வெட்டு இது. அசோகர்பிராமி எனப்படும் இந்த லிபியை முதல்முறையாக படித்த ஜேம்ஸ் பிரின்ஸெப்  [James Prinsep] இங்கும் வந்துள்ளார். அசோகர் கல்வெட்டுகள் படிக்கப்பட்டதுதான் இந்திய வரலாற்றெழுத்தில் மெய்யான தொடக்கத்தை உருவாக்கியது.

இங்குள்ள அழகான சிற்பம் ஒன்று புகழ்பெற்றது. பாறையொன்றிலிருந்து யானை உருவாகி வருவதைப்போன்றது. யானையின் பாதியுடலே செதுக்கப்பட்டிருக்கிறது. யானையை பௌத்தம் என்றுகொண்டால் இந்தியப்பண்பாட்டில் பௌத்தத்தின் நுழைவைச் சொல்லும் சிற்பம் இது. அசோகர் காலத்தைய சிற்பம். இந்தியாவின் மிகத்தொன்மையான சிற்பங்களில் ஒன்று இது.

 

தவளகிரி இன்று தௌலி என அழைக்கப்படுகிறது. அதன்மேல் ஜப்பானிய நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஒரு தூபி உள்ளது. வெண்ணிறச்சுண்ணத்தால் ஆனது. நாற்புறமும் கருவறை வாயில்களில் புத்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சுவர்களில் சாஞ்சி பாணியிலான மெல்லிய புடைப்புச் சிற்பங்களில் புத்தரின் வாழ்க்கைக்கதை பொறிக்கப்பட்டுள்ளது. தௌலி குன்றின் மேலே நின்றுகொண்டு சுற்றிலும் நோக்கியபோது மழைபெய்து பசுமைகுளிர்ந்து விரிந்து கிடந்த வயல்வெளிகளையே பார்த்தோம். வரலாறு உடனடியாக மறக்கப்படுவதுதான் வாழ்க்கைக்கு நல்லதுபோலும் என நினைத்துக்கொண்டேன்.

அசோகர் காலகட்டத்தில் ஒரிசாவின் நிலம் மூன்று நாடுகளாக இருந்தது. கலிங்கம், உத்கலம், அங்கம். கலிங்கநிலத்தின் பெரும்பகுதி சாதவாகனரின் ஆட்சிக்குக் கீழேதான் இருந்தது. சாதவாகனர் அசோகருக்குக் கப்பம் கட்டினர்.அசோகருக்குப்பின் மகதம் செல்வாக்கிழந்தபோது சாதவாகனர்கள் கலிங்கத்தை முற்றாதிக்கம் செலுத்தினர். அவர்களின் ஆதிக்கத்தை வென்று கலிங்கத்தை மீண்டும் தனியரசாக்கி ஆண்ட மகாமேகவாகன குடியின் மாமன்னர் காரவேலர்.

 

கிமு ஒன்றாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆட்சி செய்த காரவேலரின் கல்வெட்டு அசோகரின் கல்வெட்டு அளவுக்கே புகழ்பெற்றது. அது புவனேஸ்வர் அருகே உள்ள உதயகிரி, கண்டகிரி என்னும் இரு குன்றுகளில் செதுக்கப்பட்டுள்ள செயற்கைக் குகைகளில் ஒன்றில் உள்ளது. ஹாத்திகும்பா கல்வெட்டு என அது அழைக்கப்படுகிறது

ஏற்கனவே இருமுறை இங்கே வந்திருக்கிறேன். இறுதியாக 2014 ல் வந்தோம்.  இந்தக் குகைகள் சாதவாகனர்களால் குடையப்பட்டவை. பின்னர் ஏழாம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக கட்டப்பட்டிருக்கின்றன. இந்த இரு குன்றுகளும் கிமு மூன்றாம் நூற்றாண்டு முதலே உருவாகத் தொடங்கியிருக்கின்றன. இது ஒரு சமணப் பற்கலைக் கழகம். இந்தக் குகைகள் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கிப் பயில்வதற்கான விடுதிகள்.

 

இங்கே 35 குகைகள் உள்ளம. அஜந்தா எல்லோரா போலவே மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அறைகள் இவை. ஆனால் அஜந்தா குகைகள் ஒற்றைமலையில் குடையப்பட்டவை. இங்கே உதிரிப்பாறைகளில் கூட குகைகள் குடையப்பட்டுள்ளன. ஒரு பாறையில் குடையப்பட்ட குகையுடன் அந்தப்பாறை உருண்டு கிடப்பதைக் காணலாம். குகையை அப்படியே தூக்கிச் செல்லமுடியும்.

முகப்புத் திண்ணை, உள்ளறைகளில் படுக்கைகள் என அமைப்புள்ளவை இவை. இவற்றில் இரண்டு அடுக்குகள் கொண்ட ராணி கும்பா என்னும் குகையே பெரிது. அது மையக் கல்விநிலையமாக இருந்திருக்கலாம். கந்தகிரிக்கு மேலே ஒரு பெரிய கட்டிடத்தின் அடித்தளம் உள்ளது. அது சமணப் பள்ளியாக இருந்திருக்கலாம். பலகுகைகளில் தீர்த்தங்காரர் சிலைகள் உள்ளன. நுழைவாயில்கள் சிற்பவேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.

 

உதயகிரியில் உள்ள ஹாத்திகும்பா குகையிலுள்ள காரவேலரின் கல்வெட்டு குறித்துபலவகையான விவாதங்கள் உள்ளன. தமிழகத்தைப் பற்றிய மிகத்தொன்மையான கல்வெட்டு இது என்பது நீலகண்ட சாஸ்திரியின் கருத்து. அதை பெரும்பாலான தமிழ் வரலாற்றாய்வாளர்கள் வழிமொழிந்துள்ளனர். ஆனால் அதை பொதுவாக இன்றைய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

இக்கல்வெட்டு பிராமி மொழியில் அமைந்துள்ளது. பிராமிலிபி பலவகையாக வாசிக்க இடமளிப்பது. மேலும் கல்வெட்டு மிகவும் பழுதடைந்தும் உள்ளது. இதிலுள்ள சில எழுத்துக்களை குமரி, பாண்டய, தமிரோ அல்லது தாம்ரோ என வாசித்து இது தமிழகத்தைக் குறிக்கிறது என பொருள்கொண்டனர். குமரிமலை என கந்தகிரி வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

காரவேலர் தனது ஆட்சியின் சாதனைகளை இக்கல்வெட்டில் குறிப்பிடுகிறார். அதிலொன்று இருநூறாண்டுகள் கலிங்கத்தை ஆண்ட தாம்ர சங்காத்தம் என்னும் கூட்டமைப்பை ஒழித்து கலிங்கத்தை மீட்டது. இச்சொற்களைக் கொண்டு இருநூறாண்டுகள் கலிங்கத்தை தமிழ்மன்னர்களின் கூட்டமைப்பு ஆட்சி செய்தது என்று பொருள்கொள்கிறார்கள்

அதை எதிர்ப்பவர்கள் தாம்ர என்பது தமிழைக்குறிக்கவில்லை, தாமிரத்தையே குறிப்பிடுகிறது என்கிறார்கள். கலிங்கத்தின் முக்கியமான துறைமுகமாக மகாபாரத காலம் முதல் திகழ்வது தாமிரலிப்தி. இன்றும் செம்பு கிடைக்கும் நிலமான மகாராஷ்டிரம் விதர்ப்ப பகுதியிலிருந்து ஆறுவழியாகக் கொண்டுவரப்படும் தாமிரம் கப்பல்களில் ஏற்றப்படுவது அங்குதான். அவ்வணிகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆட்சியாளர்களையே காரவேலர் குறிப்பிடுகிறார் என்கிறார்கள்

 

அவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் சாதகர்ணிகளும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட அரசர்களும்தான். அவர்கள்தான் ஹாத்திகும்பா உட்பட இக்குகைகளை வெட்டியவர்கள். அன்றைய தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் அரசுகளின் அளவும் ஒரிசா வரை வந்து ஆட்சிசெய்வதற்கு உகந்தவை அல்ல. கலிங்கத்தை இருநூறாண்டுகள் ஆண்டதாக எந்த கல்வெட்டும், எந்த நூலும் தமிழகத்தில் சொல்லவில்லை. நடுவே இருக்கும் வேறெந்த அரசிலும் அத்தகைய குறிப்பு இல்லை.

அதோடு அக்காலத்தில் மௌரியப்பேரரசும் கீழே சாதகர்ணிகளின் அரசும் இந்தியநிலத்தை முற்றாட்சி செய்தன. அப்பேரரசுகளை வென்று கலிங்கம் வரை வந்து தமிழக அரசுகள் எதுவும் ஆட்சி செய்திருக்க வாய்ப்பில்லை. ஒரு கல்வெட்டின் நான்கு சொற்களை திரிபுற வாசித்து நீலகண்ட சாஸ்திரி சற்று மிகையான ஊகத்தைச் செய்துவிட்டார் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

 

முதல்முறையாக 2010ல் நான் இங்கே வந்தபோது ஹாத்திகும்பா கல்வெட்டு பற்றி கொண்டிருந்த எண்ணம் வேறு. அது தமிழைக்குறிக்கும் கல்வெட்டு என்ற எண்ணமே இருந்தது. காரணம் நீலகண்ட சாஸ்திரி. இன்று அது பிழையான ஓர் கணிப்பு என்று எண்ணுகிறேன். அதைப்பற்றி அறிஞர்கள் பிற்பாடு மிகமிக விரிவாக எழுதிவிட்டார்கள்.

[காரவேலர் கல்வெட்டு]

 

கண்டகிரியில் இன்றைய சமண ஆலயம் ஒன்று உள்ளது. பழைய ஆலயம் ஒன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது, கரிய சலவைக்கல்லால் ஆன பார்ஸ்வநாதர் ரிஷபநாதர் சிலைகளும் உள்ளன. மக்கள் மிகுதியாகச் செல்வது அந்த புதிய ஆலய வளாகத்திற்குத்தான்

இப்பகுதி எங்கும் கருங்குரங்குகள் நிறைந்துள்ளன. கருங்குரங்குகள் தாக்குபவை என நான் நினைத்தேன்.ஆனால் அவை மக்களுடன் மிக இயல்பாகப் பழகின. ஓரிடத்தில் நாலைந்துபேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர், ஊடே இரண்டு குரங்குகளும் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தன

 

இந்தவகையான தொன்மையான பல்கலைகளைக் காணும்போதெல்லாம் அவற்றில் கற்பதைப்பற்றிக் கனவுகாண்பது என் வழக்கம். கந்தகிரியை பார்த்தபடி என்னை ஒரு சமண மாணவனாக கற்பனைசெய்துகொண்டேன். ஊடே ஒரு சிந்தனை வந்தது. கேரளத்தில் பௌத்தம் ஓங்கியிருந்தது, சமணம் பெரும்பாலும் இருக்கவில்லை. ஏன் என்ற கேள்விக்கு, “மீன் உண்பதை மறுக்கும் எந்த மதத்திற்கும் கேரளத்தில் இடமிருக்காது” என்றார் நித்ய சைதன்ய யதி.

 

ஒரிஸாவும் மீன்விரும்பிகளின் நாடு. இங்கே காரவேலர் எத்தனை முயற்சி செய்திருந்தாலும் சமணத்தை நிலைநிறுத்திருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்

குகைகளின் வழியே – 16 – கனககிரி, ரத்னகிரி, லலிதகிரி பயணம்

குகைகளின் வழியே 17 – ஹாத்திகும்பா

 

 

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16