திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆன்மீகம், சோதிடம், தியானம் என்ற கட்டுரையையும் அதன் மறுமொழியாக வந்த கடிதங்களையும் கண்டேன்.
ஓர் ஜோதிஷாச்சாரியன் எனும் நிலையில் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் ஜோதிடத்தை தவறான முறையில் சரியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு மறுமொழியிட்டவர்களோ சரியாக புரிந்துகொண்டோம் என தவறு செய்திருக்கிறார்கள்.
நமது தென்மாநிலங்களில் ஆண்ட கழகங்களினால் ஜோதிடம் எனும் சிந்தாந்தத்தை அனைவரும் தெரிந்திருக்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். மருத்துவரிடம் செல்லும் பொழுது நமக்கு மருத்துவம் மீதோ, மருத்துவர் மீதோ தவறான நம்பிக்கைகள் இருப்பதில்லை. ஆனால் ஜோதிடம் என்றவுடனே நாஸ்தீகம் பேசும் ஆற்றல் நமக்கு கிடைத்து விடுகிறது.
சரியான ஜோதிடர்களை அனுகும் நிலையில் அவர்கள் இல்லை. தொலைகாட்சியில் வரும் “வியாபாரிகள்” இவர்களுக்கு ஜோதிட சாஸ்திரிகளாக தெரிகிறார்கள். அவர்களை வைத்து ஜோதிடத்தை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன் ,
உடல் நலம் கெட்டால் தொலைகாட்சியில் வரும் சித்தமருத்துவரிடமா நாம் சிகிச்சைக்காக செல்லுவோம்?
தொலைக்காட்சியில் ஜோதிடம் சம்பந்தமான விவாதம் செய்யும் நிகழ்ச்சியில் ஜோதிடம் என்றாலே என்ன என விளக்கம் சொல்ல தெரியாதவர்களை கூட்டிவந்து விவாதிப்பது வேடிக்கை.
ஜோதிடம் உள்ளுணர்வை மேம்படுத்தும் ஓர் கருவி என்பதை விட விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருவி என்பது எனது ஆய்வு. உலக நிகழ்வுகளை, தனிமனித நிகழ்வுகள் ஜோதிட ரீதியாக ஆய்வு செய்யும் பொழுது உள்ளுணர்வை தாண்டி விழிப்புணர்வுக்கு பிரவேசிக்கிறான். உள்ளுணர்வு நிலையில் கூட மாயை மற்றும் கர்ம சம்பந்தங்கள் உண்டு. ஆனால் விழிப்புணர்வு நிலையில் அது இல்லாமல் முழுமையான நிலையை அடைய முடியும்.
பிரபலமான “நவீன குருமார்கள்” கூட பல பிறவிகள் எனும் நிரூபிக்க முடியாத விஷயங்களை நம்புகிறார்கள், ஆனால் நிரூபணம் செய்ய கூடிய ஜோதிடத்தை நம்பாதீர்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். இதன் காரணம் ஜோதிடத்தை ஒருவன் பின்பற்றினால், இவர்களை பின்பற்றமாட்டார்கள் எனும் சுயலாப நோக்கமே காரணம்.
எந்த ஒரு விஷயத்தையும் இல்லை என சொல்லுவது எளிது – உடனே சொல்லிவிடலாம், அவற்றை உணர்ந்து இருக்கிறது சொல்லுவது மிகவும் கடினம் மற்றும் காலம் எடுக்கும் செயல்.
ஆன்மீகம், தியனம் ஆகியவையும் ஒருவரை விழிப்புணர்வு நிலைக்கு எடுத்து செல்லும் கருவிகளாக இருக்கிறது. உங்களை போன்று உணர்ந்து செயல்படுபவர்கள் ஜோதிடத்தை இந்த அளவேனும் அங்கீகரிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
நீண்ட கடிதம் எழுதி விட்டேன். கடைசியாக ஒருவார்த்தை…
மனிதன் யானையை பல வேலைகளுக்காக காட்டிலிருந்து கொண்டுவந்து பழக்கிவிடுகிறான்.
இதற்கேல்லாம் மேல் பிச்சை எடுக்கவும் வைக்கிறான். அதற்காக யானையின் தரம் தாழ்ந்து விடுவதில்லை. யானை யானைதான்.
ஜோதிடம் ஜோதிடம் தான்.
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்
www.vediceye.blogspot.com
***
SHANMUGHAPRIYAN
அன்புள்ள ஜெயமோகன்,
சோதிடம் என்ற தலைப்பில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் பொத்தாம்பொதுவானவை. அதாவது உங்களுக்குத்தெரியாது என்று சொல்வதைத்தான் அப்படி மழுப்பிச் சொல்லியிருக்கின்றீர்கள். கண்டிப்பாக சோதிடம் ஒரு அறிவியல்தான். நான் அதை பல்லாண்டுகளாக படித்து வருகின்றேன். சோதிடம் என்றால் எப்படி அது அறிவியல் ஆகிறது? இயற்கையிலே உள்ள விஷயங்களை ஒன்றை வைத்து இன்னொன்றை நாம் ஊகிக்கின்றோம் அல்லவா? இது எப்படி என்றால் இயற்கைக்கு ஒரு காரண காரிய பந்தம் இருக்கின்றது என்ற காரணத்தாலும் இயற்கையில் இயற்கைவிதிகள் செயல்படுகின்றன என்பதனாலும்தான். ஆனால் நம் அறிவாளிகள் மனித வாழ்க்கைக்கு மட்டும் அப்படி ஒரு காரணகாரிய பந்தமோ விதிகளோ கிடையாது என்றும் மனிதவாழ்க்கை மட்டும் தற்செயல்களின் போக்கிலே ஓடிக்கோண்டிருக்கின்றது என்றும் சொல்கின்றார்கள். மனிதவாழ்க்கைக்கும் காரணகாரிய பந்தமும் விதிகளும் உண்டு என்று நம்பினோமென்றால் நமக்கு கிடைத்துள்ள தகவல்களைக்கொண்டு கிடைக்காத தகவல்களை ஊகித்தறிய முடியும். அதையே நாம் சோதிடம் என்று சொல்கின்றோம். பல்லயிரம் வருடங்களாகச் சோதிடம் நம்முடைய நாட்டிலே இருந்துகொண்டிருக்கின்றது. . வேதத்தின் உபாங்கங்களில் ஒன்றுதான் சோதிடம் என நீங்களும் அறிந்திருப்பீர்கள். இத்தனை ஆயிரம் வருடங்களாக மனிதவாழ்க்கையை கூர்ந்து கவனித்து சில விதிகளை நம் முன்னோர் கண்டடைந்திருக்கின்றார்கள்.அந்த விதிகளின் அடிப்படையில் நம்மால் தெரிந்தவற்றைக்கொண்டு தெரியாததை ஊகிக்க முடியுமென காட்டியிருக்கின்றார்கள். அதுவே சோதிஅமாகும். தெரியாதவற்றை இகழ்வது சிறுமை. நம்மில் பலர் அதைத்தான் செய்கின்றார்கள். அவர்களுக்கு குவாண்டம் பிஸிக்ஸ் மட்டும் தெரியுமா எப்படி அதை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றால் அது சிந்தனையின் அடிமைத்தனம். நாம் நம் மனநிலையை மாற்றியாகவேண்டும்.
கதிர் சண்முகம்