ஜப்பான், ஒரு கீற்றோவியம் -16

 

மே 16, ஜப்பானில் இருந்து கிளம்பும் நாள். செந்திலின் இல்லத்தில்தான் முதல் ஐந்துநாட்களும் தங்கியிருந்தோம். விசாவுக்காக விடுதி அறை போடவேண்டியிருந்தது. அதை ரத்துசெய்தாலும் பாதி செலவாகும். ஆகவே இறுதி இரண்டு நாட்கள் விடுதியில் தங்கினோம்.

ஜப்பானிய விடுதிகள் வசதியானவை. ஆனால் சிறியவை. ஆடம்பரங்கள் இருப்பதில்லை. அதேசமயம் உபசரிப்பு மிக மிக தொழில்முறையானது. ஒரு சிறிய கோரிக்கைகூட நிறைவேற்றப்படும்.காலையுணவு ஜப்பானிய முறைப்படி இருந்தது.

காலையில் செந்திலின் இல்லத்திற்குச் சென்று விடைபெற்றுக்கொண்டோம். அவருடைய மனைவி காயத்ரி குழந்தைகள் கவின்,காவ்யா ஆகியோரிடம் அமர்ந்து புகைப்படம் எடுத்தோம். இவ்வாறு சிலநாட்கள் ஓர் இல்லத்தில் தங்கும்போது குழந்தைகள் மிக அணுக்கமாகிவிடுகின்றன. வீட்டின் வழக்கமான இயல்புக்கு மாறாக எது நடந்தாலும் குழந்தைகள் உற்சாகமாகிவிடுகின்றன. ஒரு விருந்தினர் என்றால் அவரை கூர்ந்து கவனிப்பது அவர்களுக்கு கொண்டாட்டமானது.

காவ்யா அடாவடித்தனமான தங்கை. அவ்வாறு தங்கை வாய்க்கையில் அண்ணன்கள் சாந்தமாக ஆகிவிடுகிறார்கள். கவின் கனிந்த மனநிலையுடன் தெரிந்தான். சின்னவயதில் நானும் தங்கையும் அப்படித்தான் இருந்தோம்.  காயத்ரி திருச்சியைச் சேர்ந்தவர். நாங்கள் அங்கே பெரும்பாலும் இரவுதான் சாப்பிட்டோம். ஒவ்வொரு நாளும் திருச்சிப் பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு சிறப்பு உணவை சமைத்து அளித்தார். அத்தனை தொலைவில் திருச்சியின் சுவை. பொதுவாகவே நான் பாரம்பரிய சுவைகளை மிக விரும்புபவன்

காலையில் விமானம். செந்தில் விமானநிலையம் வந்து வழியனுப்பினார். எட்டாம் தேதி சென்று இறங்கினோம். 16 ஆம்தேதி விமானம் ஏறினோம். ஏழுநாட்கள்தான் ஜப்பானில் இருந்தோம். ஆனால் செந்திலின் மிகத்திறமையான திட்டமிடல் காரணமாக ஒரு மணிநேரம்கூட வீணாகவில்லை. ஜப்பானின் ஒட்டுமொத்தத்தையே பார்த்ததுபோல அனைத்து இடங்களுக்கும் சென்றோம். ஒரு முழுமையான அனுபவம்

ஜப்பானைப் பற்றி அறிந்துகொண்டேனா என்றால் இல்லை, அறிவதற்கான ஒரு தொடக்கம் அமைந்துள்ளது என்பதே என் எண்ணம். எந்த ஒருநாட்டையும் அங்கே செல்லாமல் உணர்வது கடினம் என்பதே என் அறிதலாக உள்ளது. அங்கு சென்றதும் ஒர் உள்ளுணர்வுசார்ந்த புரிதல் உருவாகிறது. திட்டமிட்ட வாசிப்பினூடாக அதைப் பெருக்கிக்கொள்ளலாம். ஆனால்  அங்கு சென்றாலும்கூட திட்டமிட்டு பயணம் செய்து ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.

 

வரலாற்றை, பண்பாட்டை தரவுகளாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அவை நினைவில் நிற்பதில்லை. இணைந்து ஒரு சித்திரத்தையும் உருவாக்குவதில்லை. தரவுகள் நமக்கு அனுபவங்கள் ஆகவேண்டும். அதற்கு பயணங்கள் ஒரு முக்கியமான வழி. வரலாறு பண்பாடு ஆகியவற்றை நாம் வெவ்வேறு கோணங்களில் பேசிப்பேசித்தான் புரிந்துகொள்கிறோம். வகுத்துக்கொள்கிறோம். ஏனென்றால் இவை இரண்டிலும் ’சரியான’ பார்வை என்பது இல்லை. எல்லா பார்வைகளுக்கும் இடம் உண்டு.

நாம் ஒரு நாட்டை ஒரு பண்பாட்டை மிக அந்தரங்கமாகவே அறிகிறோம். அது பெரும்பாலும் ஒருசில படிமங்கள் வழியாகவே. நான் பயணங்களில் அப்படிப்பட்ட தனிப்பட்ட படிமங்களையே உருவாக்கிக்கொள்ள முயல்கிறேன். அவற்றையே என்னுள் வளர்த்துக்கொள்கிறேன். அவற்றையே பயணக்கட்டுரைகளில் பதிவும் செய்கிறேன். என்னைப்பொறுத்தவரை தரவுகளும் அனுபவங்களும் படிமங்களுக்கான பாதை மட்டுமே

[நிறைவு]

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -14

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -13

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -8

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -5

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

முந்தைய கட்டுரைதத்துவ வாசிப்பின் தொடக்கம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11