ஒரு நகரை நாம் ஒற்றைநோக்கில் பார்க்க முடியாது. அதிலும் வரலாற்று நகர்களை ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கப்பட்டவையாகவே பார்க்கவேண்டும். தொன்மையான வரலாற்று நகர்கள் பற்பல காலகட்டங்கள், பற்பல பண்பாட்டுத் தளங்கள் கொண்டவை. மதுரையைப் பார்க்க விழையும் ஒருவர் முதலில் மதுரையைச் சூழ்ந்திருக்கும் எண்பெருங்குன்றங்களைப் பார்க்கவேண்டும். மதுரையை வடிவமைத்த சமணப் பண்பாட்டிலிருந்து தொடங்கி அறுதியாக திருமலைநாயக்கர் மகால் வரை வந்து சேரவேண்டும். அதுவே மதுரையின் பரிணாமத்தை அறியும் வழி. ஆனால் இது ஒரு கீற்றுப்புரிதலை அடைவதற்கான பயணம்தான். இன்னொரு கோணத்தில் இன்றைய மதுரையிலேயே வெவ்வேறு பண்பாடு கொண்ட தெருக்களை பார்க்கலாம். அவை சமதலமாக விரிக்கப்பட்ட காலப்பரப்பு.
காமகுராவும் ஒற்றை நோக்கில் பார்க்கப்படவேண்டிய நகர் அல்ல. நாங்கள் அங்கே கண்டது துளிகளைத்தான். தொட்டுத்தொட்டு ஜப்பானைப் புரிந்துகொள்ள முயல்வது அது. தெரிந்த செய்திகளைக் கொண்டு கற்பனையில் விரித்து அறிவது அது. காமகுராவில் உள்ள சுருகாவோக்கா ஹச்சிமான்-கு (Tsurugaoka Hachiman-gu ) என்னும் ஷிண்டோ கோவிலுக்கு சென்றோம். சிவப்பு நிறமான இந்த கோவிலைப் பார்த்தபோது ஜப்பானியப் பண்பாட்டில் சிவப்புக்கு என்ன பொருள் என்னும் கேள்வி எழுந்தது. கதகளியில் சிவப்பு என்பது ரஜோ குணம் அதாவது, தாக்கும்தன்மை, வெல்லும்விசை, ஆளும்திறன். சிவந்ததாடி கதைமாந்தர்கள் பொதுவாக அசுரர்கள், அரக்கர்கள். கதகளி இந்திய நாடகமரபின் இலக்கணங்களை அப்படியே பின்பற்றும் நாடகக் கலை.
கதகளிக்கு நிகரான ஜப்பானிய அரங்ககலை என்பது நோ நாடகம். [Noh ] இது தேவதைக்கதைகளும் மந்திரதந்திரக் கதைகளும் கலந்த இசைநாடக வடிவம். உலகமெங்கும் இத்தகைய மிகைக்கற்பனை நாடகங்களுக்கு முகமூடி முக்கியமானது. [கதகளியில் முகமே முகமூடி போல் ஆக்கப்படுகிறது]. நோ நாடகத்தில் முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. முகமூடிகள் ஒற்றை உணர்ச்சியை நிலையாக, ஒரு பொருளாக ஆக்கி நிலைநிறுத்துகின்றன. முகமூடிகள் பயன்படுத்தப்படுவதனால் பெரும்பாலும் பாய்ந்து குதித்தும் கைகால் அசைவுகள் காட்டியும் உணர்ச்சிகள் தொடர்புறுத்தப்படுகின்றன. பெரும்பாலும் நடனமாகவே இது நிகழ்கிறது.
கதகளிக்கும் நோ நாடகத்திற்குமான இணைத்தன்மை வியப்புக்குரியது. அல்லது ஒருவேளை தொன்மையான இசைநாடகங்கள் இவ்வாறுதான் உருவாகி வந்திருக்கும்போலும். கதகளி கூடியாட்டம் என்னும் தொன்மையான நாடக அரங்கிலிருந்து உருவானது. நோ நாடகம் சருகாகு [Sarugaku] என்னும் நாடக வடிவிலிருந்து பிறந்தது. கதகளி சம்ஸ்கிருத நாடக இலக்கணப்படி அமைந்தது. நொ நாடகம் சீன இசைநாடகங்களின் இலக்கனத்தை பின்தொடர்வது.
கதகளியின் உருவாக்கத்தில் பல தனிநபர்களுக்குப் பங்களிப்பிருந்தாலும் கோட்டயத்துத் தம்புரான், கொட்டாரக்கர தம்புரான் எனப்படும் வீரகேரளவர்மா ஆகிய இருவரும் அதன் முதலாசிரியர்கள். நோ நாடகத்திலும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கனாமி [Kan’ami] என்னும் ஆசிரியரும் அவர் மகன் [Zeami] என்னும் ஆசிரியரும் அதைத் தொடங்கிவைத்தவர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.
கதகளி போர்க்கலைக்கு மிக அணுக்கமானது. களரிப்பயற்றுக்கும் கதகளிக்கும் ஒரே பயிற்சிதான். கதகளிபோலவே நெடுங்கால பயிற்சி தேவையாகும் கலை நோ நாடகம். ஆகவே அதற்கான பயிற்சிக்களங்களும், தொன்மையான பயிற்சி முறைகளும் உள்ளன.
கதகளி போலவே நன்கு வகுக்கப்பட்ட கைமுத்திரைகளும் அசைவு இலக்கணங்களும் கொண்டது நோ நாடகம். கதகளியில் தெக்கன் சிட்டை, வடக்கன் சிட்டை என இடம் சார்ந்த வகைபாடுகளும் அதற்குள் கப்ளிங்காடு மரபு என பல குருமரபுகளும் உண்டு. நோ நாடகத்திலும் இயெமொட்டொ [iemoto] என்னும் மரபுசார் அமைப்புக்கள் உண்டு.
கதகளி, நோ நாடகம் போன்ற கலைவடிவங்கள் போர்க்கலையுடன் நெருக்கமான தொடர்புடையவை. பெரும்பாலும் போர்ச்சாதிகளால் உருவாக்கப்பட்டு நடிக்கப்படுபவை. அவற்றின் நடன அசைவுகள் போர்க்கலையில் இருந்து எடுக்கப்படுகின்றன. அவற்றின் அறுதிச்சுவை அமைதி, அன்பு ஆகியவையாக இருந்தாலும் நிகழ்த்துதலில் பெரும்பகுதி வன்முறை, குரூரம் சார்ந்ததாகவே இருக்கும். ஒருவகையில் இவை போரின் உணர்வுகளை சமூகத்தில் நீட்டிக்க வைக்கின்றன. உலகமெங்கும் பெரிய காவியங்களின் இயல்பும் போர்க்கொண்டாட்டமாகவே இருப்பதைக் காணலாம்.
நான் டெல்லியிலும் திரிச்சூரிலும் சர்வதேச நாடகவிழாக்களில் நோ நாடகத்தைப் பார்த்திருக்கிறேன். அது அவ்வப்போது நகைச்சுவையும் கொஞ்சம் காதலும் கொண்டதும், முதன்மையாக நடன அசைவுகளாக வெளிப்படும் கூரிய வன்முறையும் கொண்டதாகவே தோன்றியது.
சிவந்த ஆலயத்தின் சிவப்பு நோ நாடகத்தை நினைவுக்குக் கொண்டுவந்தது. நோ நாடகத்திலும் சிவந்த நிறம் என்பது ரஜோ குணத்தையே குறிக்கிறது. சிவந்த கோயில் அவ்வகையில் குறியீட்டுத்தன்மை கொண்டது. காமகுரா நகரின் பண்பாட்டு மையம் இந்த ஆலயம்தான். இங்குள்ள பெரும்பாலான விழாக்கள் இங்கேதான் நடந்துகொண்டிருந்தன.நோ நாடகமும் இங்கே நடந்தது.
சுருகாவோக்கா ஆலயம் ஹாச்சிமான் [Hachiman] எனப்படும்ஷிண்டோ தெய்வத்தின் ஆலயமாக இருந்திருக்கிறது. ஹாச்சிமான் விற்கலை மற்றும் வெற்றியின் தெய்வம். ரஜோ குணம் கொண்டது. ஜப்பானின் காவலர் என கருதப்படும் ‘ஆவித்தெய்வம்’ இது. சமுராய்களால் வழிபடப்பட்டது. பின்னர் இந்த ஆலயம் தெண்டாய் பௌத்த மரபுடன் இணைந்தது. ஷிண்டோ மதம் தொன்மையான ஆவிவழிபாடு – நீத்தார் வழிபாட்டு மரபிலிருந்து உருவானது. பௌத்தம் ஆவிவழிபாட்டையும் – நீத்தார் வழிபாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொண்டது.[ நாம் எண்ணுவது சரிதான், ஹாச்சிமான் இன்று ஒரு ஜப்பானிய காமிக்ஸ் சாகசக் கதைநாயகர் அப்படித்தான் ஜப்பானியக்குழந்தைகளுக்குத் தெரியும்]
இந்த ஆலயம் 1063ல் கட்டப்பட்டது.கிபி 270-310 ல்,[ அதாவது தமிழகத்தில் சங்க காலத்தின் இறுதி] ஜப்பானை ஆண்ட 15 ஆவது சக்கரவர்த்தியான ஓஜின் [Emperor Ōjin] அவருடைய மறைவுக்குப்பின்னர் அவருடைய அன்னை [Jingu] வாலும் மனைவி ஹைம் காமி [ Hime-gami] யாலும் தெய்வமாக்கப்பட்டு ஹாச்சிமான் என்னும் காவல்தெய்வமாக நிறுவப்பட்டார் காமகுரா ஷோகன் அதிகாரத்தை நிறுவிய மினமோட்டோ நோ யோரிட்டோமோ[ Minamoto no Yoritomo]1192ல் கமாகுராவில் தன் அரசை பாகாக்கும் பொருட்டு ஹாச்சிமான் தெய்வத்தை இங்கே நிறுவினார்
சுருகாவோக்கா ஆலயம் இப்போது ஷிண்டோ மதத்தின் ஆலயமாக மட்டுமே நீடிக்கின்றது. ஆனால் அது நிறுவப்பட்டபின் 1868 வரை அது பௌத்த ஆலயமாகவும் திகழ்ந்திருக்கிறது. ஜப்பானிய ’காமி’ எனப்படும் ஆவி வழிபாட்டை போதிசத்வர்கள் உலகளாவ மானுடர்களில் வெளிப்பட்டமையின் விளைவு என பௌத்தம் விளக்கியது. 1868ல் shinbutsu bunri என அழைக்கப்பட்ட ‘பௌத்த- ஷிண்டோ பிரிவினை ஆணை’ யின்படி இந்த ஆலயம் மீண்டும் ஷிண்டோ மதத்தின் ஆலயமாக ஆக்கப்பட்டது.
இந்த பிரிவினை உத்தரவு மிகவும் ஆர்வமூட்டுவது. 1868 ல் ஜப்பானில் ’மெய்ஜி மறுசீரமைப்பு’ என்று இன்று அறியப்படும் சில சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. ஜப்பானிய மரபை மறு கட்டமைப்பு செய்யும் அரசாணை மெய்ஜி சக்கரவர்த்தியால் பிறப்பிக்கப்பட்டது. ஜப்பானிய ஆலயங்கள் அனைத்துமே அதன்படி பழுதுபார்க்கப்பட்டன. அதுவரை ஷிண்டோ மதமும் பௌத்தமதமும் ஒன்றாகக் கலந்து தொன்மங்களும் ஆசாரங்களும் ஒன்றாகி ஒற்றை அமைப்பாக இருந்தன. ஆளுக்குத்தோன்றியபடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. ஆலயங்களும் சிற்பங்களும் சிதைத்து மீண்டும் உருவாக்கப்பட்டன
[ஹாச்சிமான் காமிக்ஸ் கதைநாயகன்]
விளைவாக ஜப்பானிய மரபு அழியத் தொடங்கியது. சக்கரவர்த்தி மெய்ஜி [Emperor Meiji] ஜப்பானிய பண்பாட்டின் தனித்தன்மையைப் பேணும்பொருட்டு இந்த நடவடிக்கையை எடுத்தார். இன்றைய ஜப்பானிய வழிபாட்டிடங்கள் எதைப்பார்த்தாலும் மெய்ஜி சீரமைப்புக்கு முன் பின் என பிரித்து எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஜப்பானிய ஆலயங்களில் எதையும் மாற்றக்கூடாது, அவை அவ்வண்ணமே பேணப்படவேண்டும் என மெய்ஜி ஆணை வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் ஓர் ஒப்புமையைச் சொல்வது என்றால் ராஜராஜ சோழன் ஆகமமுறை வழிபாட்டை தமிழகமெங்கும் நிலைநிறுத்தியதைக் குறிப்பிடலாம். அதற்கு முன் அந்தந்த இடங்களில் உள்ளவர்கள் அங்குள்ள வட்டார வழக்கப்படி வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்தனர். சைவத்தின் துணைச்சமயங்களான காபாலிகர்கள், காளாமுகர்கள் போன்றவர்களின் வழிபாட்டுச் சடங்குகளும் பல்வேறு நாட்டார்ச் சடங்குகளும் ஆலயங்களில் ஊடுருவியிருந்தன. அந்த கட்டற்ற தன்மையே ராஜராஜ சோழனை ஆகமமுறையை கொண்டுவரச் செய்தது.
ஆனால் பரவலாக நம்பப்படுவதுபோல அந்நடவடிக்கை சம்ஸ்கிருத வழிபாட்டுமுறைகளை புகுத்துவதோ துணைச்சமய வழிபாட்டுமுறைகளையும் நாட்டார் வழிபாட்டு முறைகளையும் அழிப்பதோ அல்ல. ஆகமமுறைக்குள்ளேயே அவை அனைத்துக்கும் இடம் அளிக்கப்பட்டது. அவை முறைப்படுத்தப்பட்டு தோன்றியபடி மாறுதல்கள் செய்யமுடியாதபடி அரசுவரையறை உருவாக்கப்பட்டது, அவ்வளவுதான்
ஜப்பானிய வரலாற்றை ஒரு சுருக்கமான வரைபடமாக ஆக்க முடியும் என்றால் இப்படிச் சொல்லலாம். காமகுராவில் சீனவணிகம் வழியாக உருவான சிற்றரசர் குடிகள் இணைந்து இணைந்து ஒற்றை நாடென்று ஆயின. அவற்றை இணைக்கும் மதமாக பல்வேறு பழங்குடிநம்பிக்கைகள் , ஆசாரங்களின் தொகையாக ஷிண்டோ மதம் உருவாகியது. காமகுரா அந்தக்கூட்டமைப்பின் தலைநகர் ஆகியது.
அதன்பின் மேலும் வலுவான அரசு உருவாகும் பரிணாமத்தில் பௌத்தம் வந்துசேர்ந்தது. ஷிண்டோ மதத்திற்கு வலுவான தத்துவ அடிப்படையை பௌத்தம் அளித்தது. ஷிண்டோ பௌத்த இணைப்பு ஜப்பானியப் பேரரசுக்கான மத அடித்தளமாக அமைந்தது.பௌத்தம் தத்துவம் , ஷிண்டோ ஆசாரம். அதாவது பௌத்தம் மூளை என்றும் ஷிண்டோ கால்கைகள் என்றும் சொல்லலாம். நாராவும் கியோட்டோவும் பௌத்த- ஷிண்டோ இணைப்புக்காலகட்டத்தைச் சேர்ந்த்வை
டோக்கியோ தலைநகராக ஆன சில ஆண்டுகளிலேயே மேய்ஜி சீரமைப்பு நிகழ்ந்தது. அதை ஒரு வரலாற்றுக்காலகட்டத்தின் முடிவு எனலாம். ஜப்பான் அதன்பின் நவீன காலகட்டத்திற்குள் நுழைந்தது. அதன்பின் இறந்தகாலம் என்பது நினைவுத்தொகை மட்டுமே. பேணப்படவேண்டிய செல்வம். ஆகவே பௌத்தமும் ஷிண்டோவும் பிரிக்கப்பட்டன. ஆலயங்கள் அதிகார மையங்களாக அல்லாமல் கலாச்சாரச் செல்வங்களாக கருதப்பட்டன. அவை உரியமுறையில் பழுதுபார்க்கப்பட்டு பேணப்பட்டன.சக்கரவர்த்தி முதல் சக்கரவர்த்தி மெய்ஜி வரையிலான காலமே ஜப்பானின் தொல்வரலாற்றுக் காலம் என புரிந்துகொள்ளலாம்
ஹாச்சிமானின் சிவந்த ஆலயம்தான் நாங்கள் ஜப்பானில் பார்த்த இறுதியான கலாச்சார – மத மையம். அதன்பின்னர் காலத்தால் பின்னகர்ந்து ஆகப்பழைய இடத்தைச் சென்றடைந்தோம். ஹாச்சிமான் ஆலயத்தின் முகப்பில் இருந்த சிவந்த தோரணவாயில் மிக எளிமையானது. அது ஜப்பானின் நான்கடுக்கு வரலாற்றில் நான்காவது அடுக்கான காமகுரா காலகட்டத்திற்குள் செல்வதற்கான நுழைவுவாயில் என தோன்றியது.
ஆலயம் வழியாக மேலும் தொல்காலத்திற்குச் செல்லமுடியும். யாகுரா [ Yagura] என அழைக்கப்படும் சிறிய நினைவுத்தூண்கள் நிறுவப்பட்ட குகைகள் இங்குள்ளன. போரில் இறந்த சமுராய்களுக்காக அமைக்கப்பட்டவை. உள்ளே நுழைய அனுமதி இல்லை. குளவிக்கூடு போல தொலைவிலிருந்தபோது தோற்றமளித்தன. இத்தகைய குகைகளை லடாக்கில் பார்த்திருக்கிறோம். காஷ்மீரில் இத்தகைய குகைகளுக்குள் அந்த நினைவுத்தூண்களைப் போலவே சிவலிங்கங்கள் நிற்பதையும் கண்டிருக்கிறோம்.
மிகப்பழங்காலத்தில் இறந்தவர்களை பிலங்களிலும் குகைகளிலும் போட்டுவிடும் வழக்கம் இருந்தது. அவை மண்ணுக்கு அடியில் செல்லும் வழிகள், மண்ணில் திறந்த வாய்கள் என்னும் நம்பிக்கை இருந்தது. அந்நம்பிக்கை பற்பல நூற்றாண்டுக்காலம் நீடித்தது. சமுராய் யுகத்தின் உச்சத்தில் அவர்கள் மண்ணில் அரசர்களாக வாழ்ந்தனர். இறந்ததும் குகைகள் வழியாக மண்ணுக்குள் சென்று தெய்வங்கள் ஆயினர்.
ஆலயத்தைச் சுற்றிவந்து பார்த்துவிட்டு கிளம்பும்போது வரலாற்றின் அடித்தளம் வரைச் சென்று மீண்டும் நவீன ஜப்பானுக்குள் நுழையும் உணர்வை அடைந்தேன். சமுராய்களின் உலகத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஓர் இந்திய சமுராய் நினைவில் எழுந்தார். பலரும் அறிந்திராதவர். அவர் நாயர்ஸான் என ஜப்பானியர்களால் மதிப்புடன் அழைக்கப்படுபவர். இந்தியச் சுதந்திரப்போராட்ட வீரர். சாகசமே வாழ்வெனக்கொண்ட மனிதர். அதைவிட முக்கியமாக எங்களூரைச் சேர்ந்தவர்.
அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் 1905ல் கேரளத்தில் பழைய திருவிதாங்கூரில், திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை என்னும் ஊரில் பிறந்தவர். திருவிதாங்கூரின் புகழ்பெற்ற நாயர்குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய் லக்ஷ்மி அம்மா.திருவனந்தபுரம் மாடல் பள்ளியில் பயில்கையில் அன்றைய திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக நிகழ்ந்த மாணவர்போராட்டங்களில் ஈடுபட்டார். அரசுக்கு எதிரான போர் புரிந்தார் என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை தொடங்கியதும் ஜப்பானுக்கு ரகசியமாக அனுப்பப் பட்டார். அவருடைய அண்ணன் ஏற்கனவே அங்கே மீனியல் பயின்றுகொண்டிருந்தார்.
கியோட்டோ பல்கலையில் பொறியியல் பயின்றார்.ஜப்பானிய வலதுசாரி அரசியல் தலைவரான மிட்சுரு டொயோமா [Mitsuru Toyama] அவருடைய ஞானகுருவானார். கீழைநாடுகளின் விடுதலை என்னும் கருத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை நீக்குவதாக சூளுரை எடுத்துக்கொண்டார். ஜப்பானில் இந்தியர்கழகம் ஒன்றை நிறுவினார். ஜப்பானுக்கு வந்த ராஷ்பிகாரி போஸும் டொயோமாவின் மாணவரானார். நாயர்ஸான் ஜப்பானியப்பெண்ணான இகு அசாமியை [Iku Asami ] வை மணந்தார். இகு தன்னை ஜானகியம்மா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.
நாயர்ஸான் கல்லூரிகளில் ஆசியராகப் பணியாற்றினார். தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவற்றில் தீவிரமான பேச்சாளர். ராஷ் பிகாரி போஸுடன் இணைந்து இந்தியன் இண்டிபெண்டன்ஸ் லீக் அமைப்பதில் முதன்மைப் பங்கு வகித்தார். போர்க்கைதிகளை அதில் சேர்ப்பதில் அவருடைய பணி மிகப்பெரியது. ஜப்பானிய போர் ஒருங்கிணைப்பாளராக தமிழ்க்கைதிகளை பெரும்பாலும் அவர்தான் தெரிவுசெய்தார். சுபாஷ் சந்திரபோஸுக்கு நெருக்கமானவராக திகழ்ந்தார்.போரில் அவர் பலவகைகளில் பங்கெடுத்தார் – உளவாளியாகவும்.
போர்க்காலத்தில் பிரிட்டிஷ் அரசின் நெருக்குதலால் நாயர்ஸானின் குடும்பம் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தது. நீத்தார் சடங்குகளும் செய்யப்பட்டன. நாயர்ஸான் ஊருக்கு திரும்பியது இந்தியா விடுதலை அடைந்தபின்னர்தான். ஆனால் அவர் ஜப்பானியக் குடிமகனாகவே நீடித்தார். போருக்குப்பின் 1949ல் ஜப்பானில் கின்ஸா என்னும் ஊரில் இந்தியன் ரெஸ்டாரெண்ட் ஒன்றை தொடங்கினார். அது பல அரசியல்தலைவர்கள் வந்து சென்ற இடமாக ஆகியது ஒரு பண்பாட்டுமையமாக நீடித்தது.
[ஹசதேரா ஆலயம், வரைபடம்]
982ல் நாயர் ஸான் எழுதிய தன்வரலாறு An Indian freedom fighter in Japan: Memoirs of A.M. Nair (1982) வெளிவந்தது. அது மலையாளத்திலும் வெளிவந்து அதிகமாகப் படிக்கப்பட்ட நூல் அவருக்கு 1984ல் ஜப்பானின் உயரிய விருதான Order of the Sacred Treasure (Kun zuihosho) ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிடோ [ Emperor Hirohito ] அவர்களால் வழங்கப்பட்டது. 1990ல் நாயர்சான் மறைந்தார்.
நாயர்சானின் வரலாற்றை சினிமாவாக எடுக்கவேண்டும் என என் நண்பரும் திரைப்பட இயக்குநருமான ஆல்பர்ட் ஆண்டனி முயன்றார். ஆல்பர்ட் நாயர்ஸானின் ஊரைச்சேர்ந்தவர். ‘கண்ணே மடங்குக’ போன்ற படங்களை எடுத்தவர். மோகன்லால் நடிக்க அதற்கு பூஜையும் போடப்பட்டது.[இன்னொரு நடிகர் ஜாக்கிச்சான்] தேவையான பெரும்பணத்தை திரட்டமுடியாமல் பத்தாண்டுகளாக அது கனவாகவே நீடிக்கிறது. அதன் திரைக்கதையைப்பற்றி நானும் ஆல்பியும் நிறைய பேசியிருக்கிறோம்.
காமகுராவிலிருந்து திரும்பும்போது சோர்வாக உணர்ந்தேன். கொள்கைசார்ந்த போராட்டங்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. உலகை மாற்றியமைக்கும் கனவுகள் முடிந்துவிட்டன. எஞ்சியிருப்பது நுகர்வின் உலகம் மட்டுமே.நேர்நிலைக் கனவுகள் கொண்ட சாகசங்களுக்கு இன்று இடமில்லை. சாகசங்களுக்கான இடம் பழைமைமீட்பில் மட்டுமே உள்ளது போலும்.
ஆனால் சற்றேனும் சாகசம் இல்லாத வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடிவதாக இல்லை. ஏனென்றால் அது நாம் அதில் பிறந்ததனாலேயே ஒரு நிலத்துடன், ஒரு வாழ்க்கையுடன் நம்மை கட்டிப்போடுகிறது. நம் வெளிப்பாடுகள் அனைத்தையும் குறுக்கிவிடுகிறது. சாகசம் என்பது எல்லைமீறல். புதிய இடங்களில் புதிய வகையில் தன்னை நிகழ்த்திக்கொள்ளுதல். தன்னை புதிதாகக் கண்டடைதல்
சாகச அம்சத்தைத் தேடித்தான் என் பத்தொன்பது வயது முதல் அலைந்து திரிகிறேன். இன்று அது உலகமெங்கும் அலைவதாக மாறிவிட்டிருக்கிறது பெரும்பாலும் சாகசம் கனவில்தான். அக்கனவை தூண்டும் நிலவெளிகளை மட்டுமே நடைமுறையில் சென்று பார்க்கிறேன்.
அகிரா குரஸோவாவின் செவென் சமுராய் படத்தில் வரும் ஒருகாட்சியின் வசனம் பலவாறாக உருமாறி என்னுள் உள்ளது. ”வெற்றிக்குப்பின் சமுராய் அடைவது வெறுமையைத்தான். அதில் மகிழ்ந்திருக்க அவனால் இயலாது. புதிய போர்க்களங்களை நாடி அவன் சென்றாகவேண்டும். போராட்டத்தில்தான் அவனுடைய மகிழ்ச்சி உள்ளது. அவன் கிளம்பிசென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான்”
மடத்தனமாக இருக்கலாம், ஆனால் போரும் அழிவும் பிரிவும் துயரும் நிறைந்த அந்தக் காலகட்டம்தான் வாழ்க்கையை மேலும் அர்த்தப்படுத்துவது என்று தோன்றுகிறது
[மேலும்]