நட்பெதிரி

அன்பு ஜெயமோகன்,

friend, enemy ஆகிய இரண்டு சொற்களையும் சேர்த்து frenemy என்னும் சொல் வழங்கி வருகிறது. இதை a person or organization that you are friends with because it is useful or necessary to be their friend, in spite of the fact that you really dislike or disagree with them என்று வரையறுக்கிறது Oxford. இதற்கொரு தமிழ் தேவைப்படுகிறது. தமிழில் ஏற்கெனவே இத்தகைய சொல் உண்டா? சொல்லுக்குச் சொல்லாக நட்பெதிரி எனலாமா? செவ்விய தமிழாக்கம் மேற்கொள்ள உங்கள் உதவியை நாடுகிறேன்.

மணி வேலுப்பிள்ளை

***

அன்புள்ள மணிவேலுப்பிள்ளை அவர்களுக்கு,

இத்தகைய முரண்சொற்கள் நம் மரபில் இல்லை. உண்மையில் முரண்பாடுகளை ஒரு சொல்லில் கூறும் இத்தகைய கருத்துநிலைகள் நமக்குப் புதியவை. மேலைச்சிந்தனை எதிரீடுகளை உருவாக்கியது. பின் அதை முயங்கச்செய்தது. நமக்கு உயர்தத்துவத்தில் ஓரளவுக்கு இது உள்ளது.

மேலைநாடுகளிலேயே இந்தக் கருதுகோளும், இத்தகைய சொல்லிணைவுகளும் புதியவை. ஆகவே நாம் அவற்றை உரிய முறையில் மொழியாக்கம் செய்துகொள்வதே சரியானது

இத்தகைய சொல்லாக்கங்களில் ஆங்கிலத்தில் கவனிக்கப்படுபவை இரண்டு கூறுகள்.

ஒன்று, சுருக்கமாக ஒற்றைச்சொல்லாக நின்றிருக்கவேண்டும். உச்சரிப்பில் இரண்டு சொற்களாகத் தெரியக்கூடாது.

இரண்டு, இணைக்கப்படும் இரு சொற்களில் ஒன்றேனும் தெளிவாக ஒலிக்கவேண்டும்

frenemy என்ற சொல் இருசொல்லாகச் செவிக்கு ஒலிக்கவில்லை. ஒற்றைச்சொல்லாகவே உள்ளது. frenemy என்ற சொல்லில் enemy என்ற சொல் தெளிவாகவே அமைந்துள்ளது. இதை fremy என உருவாக்கியிருந்தால் பொருளேற்பு நிகழ்ந்திராது. இப்போது அச்சொல்லைக் கேட்டதுமே அது என்ன என்று ஓர்ளவு புரிகிறது

இந்த இரு விதிகளையும்கொண்டு நாமே மொழியாக்கம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். நட்பெதிரி மிகச்சிறப்பான மொழியாக்கம்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7
அடுத்த கட்டுரைபிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை