கோவையில் ப.சிங்காரம்

ப.சிங்காரம் தமிழ்விக்கி

ஜெ.,

சொல்முகம் வாசகர் குழுமத்தின் இரண்டாம் கூடுகை ஜூன் 30 அன்று முதல் கூடுகையை விட சற்று பெரியதாகவே அமைந்தது. மொத்தம் இருபது பேர். நமது தளத்தில் அறிவிப்பு வெளியான அன்று இரவு பத்து மணியளவில்அழைத்து அடுத்த நாள் காலை வருவதாக சொல்லி இருவர் புதிதாக இணைந்துக் கொண்டார்கள். நண்பர் விஜய சூரியன் பேனர் அடித்து கொண்டு வந்திருந்தது வாசக நண்பர்களின் இச்சந்திப்பை அடுத்த தளத்திற்கு மேலும்விரித்து நிறுவி விட்டது போன்று தோன்றியது. இவற்றிற்கு மேலாக எழுத்தாளர்கள் சு.வேணுகோபாலும் ‘காலம்’ சுப்ரமணியனும் வந்தது நண்பர்கள் எதிர்பாராதது. இந்நிகழ்வை பற்றி நண்பர்கள் வாயிலாக கேள்விபட்டு பங்குகொள்ள விரும்பி வந்திருந்தது உற்சாகமளித்தது. சு.வே., ப.சிங்காரத்தின் நாவல்களை முன்வைத்து இக்கூடுகைக்காகவே ஒரு கட்டுரையை தயார் செய்ததாக கூறினார்.

இருபது வாசகர்கள் ஒன்று கூடி ஒரு எழுத்தாளரை அவரின் படைப்புகளை மட்டும் விவாதிப்பது எத்தனை கோணங்களில் வாசிப்பின் சாத்தியம் அமையக்கூடும் என்பதை தெளிவாக விளக்கியது. சு.வே. தனது துவக்க உரையில்ப.சிங்காரம் தமிழ் இலக்கிய உலகில் கவனிக்கப்படாமல் போனதற்கான பின்புலத்தை விவரித்தார். சிங்காரத்தின் எழுத்து வெறும் ஆவண எழுத்தாகவும் அதில் நாவலுக்குண்டான அழகியல் எதுவும் கைகூடவில்லை என்றும்கருதப்பட்டது. ஆனால் இரண்டு நாவல்களும் படைப்பின் உச்சத்தை தொட்டதாகவே எண்ணுகிறேன். கடலுக்கு அப்பால் என்ற தலைப்பையே காலங்கள் கடந்து என்பதாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். அதனடிப்படையில் நான் வாசித்த சிறந்த காதல் கதைகளில் ஒன்று இந்நாவல். மரகதத்தின் காதலுக்கு முன்னால் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே வானாயீனா வைக்கும் காட்சியை புனைவின் உச்சம் என்று கருதாமல்இருக்க முடியுமா? எனக்கு பிடித்த பாத்திரம் செல்லையாவோ மாணிக்கமோ அல்ல, வானாயீனா தான். அதேபோல செல்லையாவின் பாத்திரம் ஒரு இராணுவ வீரனாக இருந்து தண்ணீர்மலையான் கோவிலில் பட்டையிட்டுக்கொண்டு காதலுக்காக நெக்குருகுவதாக மாறுவதும் புனைவில் அழகாக வந்து அமைந்திருக்கிறது.

அக தரிசனம் புற தரிசனம் இரண்டும் நிறைந்திருக்கும் நாவல்கள் இவை. ப.சிங்காரம் தமிழ் இலக்கிய உலகில் தனித்துநிற்பவர் என்று சு.வே. தன் முன்னரையை வைத்தார். விவாதங்களின் போதும் அவ்வபோது வாசகர்களின் கருத்துகள் முழுமையடையும் வகையில் நாவலிலிருந்து காட்சிகளை நினைவுறுத்திக் கொண்டேயிருந்தார். ‘காலம்’ சுப்பிரமணியம் சி.மோகன் அவர்களின் மூலமாகவே ப.சிங்காரத்தை அறிய வந்ததாகவும் அவர் நாவல்களின் முதல் பதிப்பை தான் வாசித்ததாகவும் சொன்னார். அன்றிலிருந்து பலமுறை அவற்றை மீள் வாசித்திருந்தும், இவ்வாசக கூடுகைக்காக முன்னிரவு மீண்டும் வாசித்து பர்த்ததாகவும் சொன்னார். சிங்காரத்தின் எழுத்து ‘ரிப்போர்டேஜ்’ எனும் வகை சார்ந்தது என்று கருதப்பட்டிருக்கிறது. ஹெமிங்வேயின் பாதிப்புகள் அதிகம்இந்நாவல்களில் உண்டு. விமர்சன நோக்கில் ‘புயலிலே ஒரு தோணி’ ஒருவகை குறிப்புகள் அடங்கிய நாவலாகவே பார்க்கப்பட்டது, அதுவே தமிழ் இலக்கிய மையப் பார்வையிலிருந்து சிங்காரத்தை ஒதுக்கி வைத்திருந்ததுஎன்றார்.

.இவ்விரு ஆளுமைகளின் முதலுரைக்குப் பின் கலந்துரையாடல் தொடங்கியது. பொதுவாக நண்பர்கள் அனைவருக்கும் இவ்விரு நாவல்களும் தங்கள் விருப்புக்குறியதானதாக இருந்தது. தங்கள் வாசிப்பனுபவத்திற்குஉகந்தவையாக இவை அமைய அனைவருக்குமான சில பொதுவான காரணங்கள் இருப்பினும் சில தனிப்பட்ட பார்வைகளை ஒவ்வொருவரும் முன் வைத்தபோது இலக்கியம் தரும் உணர்வனுபவங்கள் தனிப்பட்டமனங்களுக்கு எவ்வளவு அணுக்கமானது அதனாலேயே அது எவ்வளவு தனித்துவமானது என்று தோன்றியது. பாலாஜி பிருத்திவிராஜ் தன் எண்ணங்களை மிகக் கூர்மையாக நாவலிலிருந்து காட்சிகளை நுணுக்கமாக அணுகிஅதிலிருந்து தன் அவதானிப்புகளை விவரித்தார். கடல் கடந்து வரும் செய்திகள் பூதாகரமாக திரிக்கப்படுவதும் அதை மட்டுப்படுத்தி உண்மைக்கு நெருக்கமாக நம்மை நிறுத்தி வைப்பதும் சிங்காரம் போன்ற அபத்ததரிசனங்களை முன்வைக்கும் கலைஞர்களாலேயே முடியும் என்றார். கதாபாத்திரங்கள் முழுமையடையாமல் இருந்தது தனக்கு சிறு ஒவ்வாமையை அளித்தது என்று விமர்சித்தார். சுஷீலுக்கும் தி.செந்திலுக்கும் கடலுக்குஅப்பால் ஒரே மூச்சில் வாசித்து முடிக்க ஏதுவாக இருந்தது என்றனர். சுஷீல் நாவல்களின் தலைப்பு அதன் மைய பாத்திரத்தின் நிலையை மட்டும் குறிக்காமல் கிழக்காசிய நாடுகளின் நிலையையுமே அது குறிப்புணர்த்துகிறதுஎன்று அந்நாடுகளின் வரலாறுகளோடு ஒப்பிட்டு பேசினார். பூபதி அந்நாடுகளில் தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களை சிங்காரம் முன்னிறுத்தும் தமிழர்களின் வாழ்க்கையோடு இயைந்து போவதை விவரித்தார்

லோகமாதேவி பேராசிரியைக்கே உரித்தான கவனத்தோடு புயலிலே ஒரு தோணியை வாசித்திருக்கிறார். இந்நாவலில் வரும் மொழி தனக்கு மிக வசீகரமானதாக இருந்ததாக சொன்னார். சில பழமொழிகளும். உதாரணமாக, ‘நான் வாரேன் வாக்கப்பட என் தங்கச்சி வாரா புள்ளய தூக்க’. அடகு வைத்த பணத்தை ‘நம்பிக்கைக்கு வைத்தது’ என்று வழங்குவது. தாசி தொழில்முறைகளையும் சாதிய அமைப்பு முறைகளையும் விவரிக்கும் வரிகளைவாசித்து காட்டினார். செருப்படி தண்டனையாக தரப்பட்டிருப்பது அதையும் விரும்பி வாங்கிக்கொள்வது கட்டிச்சோறும் கருவாடும் உணவாக தரப்பட்டது முதன்முதலாக மேசையில் சாப்பிடும் கிளப்புக்கடைகள் வந்ததுபோன்ற நாவலில் வரும் பல யுத்த காலத்திலான வியப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார். பல மரங்கள் செடிகொடிகளின் பெயர்கள் முதல் முறையாக கேள்விப்படுவதை சொன்னதும் செல்வேந்திரன் ஏற்கனெவேகுறித்து வைத்திருந்த மரங்களின் பட்டியலை வாசித்து காட்டினார். கோவை வேளாண் பல்கலையில் பணிபுரியும் மாலதியும் இக்குறிப்புகள் மீதான வியப்புகளை பகிர்ந்தார்.

“அது அப்படித்தானே இருக்க முடியும்” என்று மரகதமும் செல்லையாவும் இறுதியில் இணைய முடியாமல் போனதை குறிப்பிட்ட சு.வே., வானாயீனாவின் தனித்துவமான அணுகுமுறை ஆய்ந்தறிவதற்கு ஏற்றது என்றார். எதிர்த்து நின்று போராடமுடியாத ஒரு உத்தியை கையாள்கிறார். செல்லையாவை வணங்கி விடைபெற மரகதத்தை அழைப்பது நுட்பமான உளவியற் புள்ளி. தான் நினைப்பதற்கு மாறாக இருவரும் ஒரு அங்குலமும் நகரமாட்டார்கள் என்று அறிந்து வைத்திருக்கும் வானாயீனா இந்நாவலின் உச்ச பாத்திரம் என்ற சு.வே விற்கு எதிர்வினையாக விக்ரம் செல்லையா தரப்பில் நின்று பேசினார். மரகதத்தை கண்ணகியாக கடவுளாகவே வணங்கத்தொடங்கிவிடுகிறான் அவன். வானாயீனாவின் குலஅறம் அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை. எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்கிறான். செல்லையாவும் மரகதமும் ஒருவரையொருவர் தெய்வீக இடத்தில் நிறுத்திவைத்தபிறகுதான் இருவராலும் விலகி வர முடிகிறது.

‘புயலிலே..’ வையும் ‘கடலுக்கு அப்பால்’ நாவலையும் கலந்து மாறிமாறி விவாதித்தது ஒருவகையில் அழகாகவே இருந்தது, பாண்டியனும் செல்லையாவும் மற்றவர் கதைகளில் ஊடுபாவிச் சென்றதைப் போல. காளீஸ்வரன்இரண்டு பக்க கட்டுரையை தயார் செய்து கொண்டுவந்திருந்தார். நுனை’யில் தொடங்கி ‘மலர்’ வரை பாண்டியன் பாத்திரம் வளர்ந்து முழுமை கொள்வதை விவரித்தார். பாண்டியன் உலகக் குடிமகனாக மாறுகிறானா அல்லஅவன் எப்போதும் சாகசங்களை விரும்பும் ஒரு இராணுவ வீரன் தானா என்று விவாதம் விரிந்தது. கெர்க் ஸ்டார்ட்டில் தொடங்கி கெர்க் ஸ்டார்ட்டில் முடியும் பாண்டியனின் வாழ்க்கை ஒரு பெரும் வட்டமிட்டு தொடங்கியஇடத்தில் முடிந்ததை போன்று உணர்வதாக சபரி பேசினார். வேறுபட்ட கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படும் மனித வாழ்வின் தரிசனங்களின் அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் இந்நாவலைப் பற்றியகுறிப்பொன்றை வரைந்து காட்டினார் நவீன் சங்கு.

பெரும்பாலும் அழகியலின் அடிப்படையிலேயே சிங்காரத்தின் எழுத்துக்கள் குறித்து கலந்துரையாடினோம். தன் விருப்பத்திற்குரிய எழுத்தாளராதலால் செல்வேந்திரன் அனேகமாக அனைவரின் பார்வைகளின் நீட்சியாகநாவலின் காட்சிகளையும் வசனங்களையும் எடுத்து வைத்துக் கொண்டேயிருந்தார். க்விஸ் செந்தில் இறுதியாக தொகுத்து சிங்காரம் ஏன் தமிழின் முக்கியமான எழுத்தாளர் என்றும் இந்த நாவல்களின் போதாமைகள் எனதான் கருதுவதென்ன என்றும் பேசினார்.

ப.சிங்காரம் தன் முதல் நாவலை எழுதி சுமாராக 69 ஆண்டுகள் கழித்து தன் எழுத்துக்களின் மூலம் இன்று புரிந்துக் கொள்ளப்படுகிறார். புலம் பெயர்ந்த மனிதர்களின் வாழ்வை அதன் விளைவாய் உருவாகும் கலாச்சாரகலப்புகளை மண்ணின் நிறப் பேதங்களை தன் கலையில் கொண்டுவந்த தனித்துவக் கலைஞன். தண்ணீர்மலையான் கோவிலுக்கு சைனீஸ் காவடி கொண்டு போவதை போகிற போக்கில் சொல்லி சென்றாலும் அதற்குபின்னால் வரலாறு பிணைத்து வைத்திருக்கும் பண்பாட்டு கலவைகள் தனி ஊமைக் கதைகள். கதாபாத்திரங்களின் அடைமொழியிலேயே அவரவரின் குணாதிசயங்களை சொல்வது வாசக கற்பனைக்கு பெரும் மைதானத்தைஉருவாக்கி கொடுக்கிறது. மனதில் நிலைத்திருக்குமாறு கதாபாத்திரங்களின் வளர்ச்சி கதைக்குள் இல்லையென்ற குறை சொல்லப்பட்டாலும் அவை காட்சிகளின் தொடக்கம் முதல் முடிவிற்குள்ளாகவே உணர்வெழுச்சிகளாய்எழும்பி நிறைந்த பின்னரே மறைகின்றன. இந்நாவல்களில் மைய விவாதம் என ஏதும் அமையாத போது இப்படி பாத்திரங்கள் தோன்றி மறைவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. போரில் ஈடுபடும் வாய்ப்புதமிழர்களுக்கு அனேகம் இல்லாத நிலையில் ஐ.என்.ஏ வில் சேர்வது பெரும் சாகசமாக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே பாண்டியனும் செல்லையாவும் சாகச நாயகர்களாக வலம் வருகிறார்கள். இந்த சாகசங்களும்சண்டைகளும் நாவல் ஒட்டுமொத்தமாக முன் வைக்கும் அபத்த தரிசனத்தின் மூலம் இலக்கிய வகைமைக்குள் வந்துவிடுகிறது. போர் முடிந்த பின் இராணுவ வீரனின் வாழ்க்கை எதை செய்யினும் அர்த்தமற்று இருப்பதையும்மீண்டுமொரு சண்டை மட்டுமே அவனை மீட்டெடுக்கும் என்ற அவலத்தையும் மின்னி மறையும் எண்ணற்ற கதாபாத்திரங்கள் காட்டிச் சென்றுவிடுகின்றன. அனைத்திற்கும் மேலாக சுய பகடியின் நூல் பிடித்தே வாழிவின்அபத்தங்களை தோலுரித்து காட்டும் எழுத்துகள் இவை. மனிதன் அறிய விழையும் ஆனால் அறியவியலாத உண்மைகளே இவை.

நண்பர்கள் கூடி பிரிவது எப்போதும் மகிழ்வுக்குறியது. மாதமொருமுறை வாசிப்பு சார்ந்த கலந்துரையாடல் நிகழ்த்தும் சாத்தியம் இனி தொடரும் என்றே தோன்றியது. இடமளித்து எங்களுக்கு இடை உணவும் அளித்தடைனமிக் நடராஜன் அவர்களுக்கு நன்றி. கூடுகைக்கு வரும் நண்பர்கள் பத்திகளாக தன் குறிப்புகளை எழுதி பகிரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அவை பின்வரும் வலைப்பூவில் வலையேற்றப்படுகிறது.

https://solmugam.home.blog/

ஜூலை மாத கூடுகைக்கு குர்அதுல்ஹைன் ஹைதர் எழுதிய ‘அக்னி நதி’ தேர்வுசெய்யப்பட்டது.

நரேன்

முந்தைய கட்டுரைடால்ஸ்டாய் கதைகள்- கேசவமணி
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -10