காமகுரா ஜப்பானின் வரலாற்றின் அடித்தளத்தில் மண்ணில் படிந்து கிடக்கும் நகரம். ஜப்பானிய வரலாறே அதிலிருந்துதான் தொடங்குகிறது. ஒப்புநோக்க நம்முடைய மாநகர் மதுரைக்கு நிகரானது. மதுரை இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெருநகராகவும் தலைநகராகவும் திகழ்ந்திருக்கிறது. காமகுரா கிபி இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஜப்பானின் அதிகாரமையமாக திகழ்ந்து தலைநகரமாக ஆகி ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருக்கிறது. அதாவது சங்க காலத்திலிருந்து களப்பிரர் காலம் முடிய என்று எண்ணிக்க்கொள்ளலாம். இன்று சுற்றுலா நகரமாக காமகுரா திகழ்கிறது.
காமகுரா ஜப்பானின் தலைநகரமாக ஆனமைக்கு முதன்மைக் காரணம் அது கடலோரமாக இருந்ததுதான். அது தொன்மையான துறைமுகம் பழைய கடலோடிகளின் வணிக மையம். காமகுராவின் மனிதக்குடியிருப்பு பத்தாயிரம் ஆண்டு தொன்மையானது. இங்கே பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. அன்று கடல் மேலும் ஏறியிருந்தமையால் அருகிலுள்ள குன்றுகளில்தான் வணிகமையங்கள் இருந்திருக்கின்றன. அங்கே கிமு 500 முதல் தொடர்ச்சியாக வணிகம் நிகழ்துள்ளது என்பதைக் காட்டும் பானை உடைசல்கள் கிடைத்துள்ளன. பானைகள் விற்கும் இடம் என்ற வேரிலிருந்தே காமகுரா என்னும் பெயர் வந்துள்ளது
காமகுராவின் வரலாற்றை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். ஒரே ரத்தக்களரி. ஒன்றும் நினைவில் நிற்கவில்லை. ஜப்பானுடன் வணிகம் செய்த அயல்வணிகர்கள் விரும்பும் இடமாக காமகுரா இருந்திருக்கிறது. சீனப் பீங்கான் வணிகம் வழியாக செல்வம் வந்துள்ளது. மெல்லமெல்ல காமகுரா ஒரு அதிகார மையமாக ஆகியது. அதைக் கைப்பற்ற எல்லா வணிகக்குழுக்களும் இனக்குழுக்களும் முயன்றன. தொடர்ச்சியான அதிகார மாற்றங்களுடன் காமகுரா கிபி 700 வரை ஜப்பானிய அரசியலின் தலைமைநகரமாக இருந்தது. அதன்பின் நாராவுக்கு தலைநகர் மாற்றப்பட்டது. அங்கிருந்து கியோட்டோவுக்கு. இறுதியாக டோக்கியோவுக்கு
ஆனால் டோக்கியோ தலைநகரமாக ஆனபின்னரும்கூட அடுத்த ஆயிரம் ஆண்டுகள் காமகுரா குருதி உலராத நிலமாகவே இருந்திருக்கிறது. சமுராய் பண்பாடு உருவாகி காமகுராவில் ஷோகன்கள் ஆட்சி செய்ய தொடங்கினர். அந்நகரைக் கைப்பற்ற அவர்களுக்கிடையே தொடர்ச்சியான போர்கள் நிகழ்ந்தன. ஜப்பானிய பண்டைய இலக்கியத்தின் கொடூரமான போர்க்கதைகள், நாடகங்கள் காமகுராவின் ஷோகன்களுக்கு நடுவே நிகழ்ந்தவை.
சமுராய் கலாச்சாரம் என்பது ஜப்பானின் அடையாளமாக திரைப்படங்கள் வழியாக உலகமெங்கும் நிலைநிறுத்தப்பட்டது. சமுராய் என்பது அரசகுலத்தவரின் காவலர்கள் என்னும் பொருள் உள்ள சொல். கிபி 9 ஆம் நூற்றாண்டின் ஜப்பானிய இலக்கியங்களில் இச்சொல் பயின்றுவருகிறது. சமுராய்கள் பின்னர் படைப்பயிற்சி கொண்ட ஒருவகையான கூலிப்படைகள் என ஆனார்கள். தங்கள் கௌரவத்திற்காகவும் தங்களை அமர்த்திக்கொள்பவர்களுக்காகவும் போரிடும் இவர்கள் வேறு வேலைகள் செய்வதில்லை. போர்வாய்ப்புகள் இல்லாதபோது கொள்ளையும் புரிவார்கள்.
பின்னாளில் ஜப்பானிய அரசியலை முடிவுசெய்யும் விசையாக சமுராய்கள் விளங்கினார்கள்.ஆனால் உண்மை அவ்வாறல்ல என்றும், அவர்கள் அலைந்து திரியும் நாடோடி கூலிப்படையினரே என்றும், அவர்களுக்கும் அரசபடையினருக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு என்றும், பிற்காலத்தில்தான் சமுராய் கலாச்சாரம் மிகைப்படுத்தப்பட்டு கதைகளாக மாறியது என்றும் ஒரு கூற்று உண்டு. மேலைநாட்டவரின் ஆர்வத்தினால் மிகையாக்கப்பட்டதே சமுராய் கலாச்சாரம் என்றுவாசித்திருக்கிறேன்
சமுராய்களைப்போல நம்மிடம் போர்வீரர்கள் உண்டா? உலகம் முழுக்க சமுராய்களைப் போல போருக்கெனவே உருவாக்கப்பட்ட குலங்கள் உண்டு. வேறெந்த தொழிலும் அறியாதவர்கள். போர்க்கலைகளை இளமையில் இருந்தே பயில்பவர்கள். தமிழகத்தில் மறவர்கள். பலநூற்றாண்டுக்காலம் அவர்கள் போர்வீரர்களாக மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே சாவு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. ‘இட்டெண்ணி தலைகொடுக்கும் மறவர்’ என நூல்கள் சொல்கின்றன
தமிழ்ப்பேரரசுகள் மறைந்தபோது மறவர்படைகள் சிதறி வேறு வேறு ஊர்களில் குடியேறினர். அங்கே கொள்ளையர்களாக உருமாறினர். பணம் கொடுத்து காவலுக்கும் போருக்கும் அவர்களை அழைத்துவருவதைப்பற்றி திருவிதாங்கூர் வரலாற்றாவணங்களில் ஏராளமாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது. உப்பு தொட்டு சத்தியம் செய்துவிட்டால் எதிர்ப்பக்கம் போருக்கு வருபவர் சொந்த உடன்பிறப்பே ஆனாலும் கொல்லத்தயங்கமாட்டார்கள் என பிரான்ஸிஸ் புக்கானன் பதிவுசெய்கிறார்
வட இந்தியாவிலும் ராஜபுத்திர வீரர்கள், குறிப்பாக குஜ்ஜார்கள், இதேபோல பயிற்சி பெற்ற வீரர்களாகவும் பின்னர் கைவிடப்பட்ட படையினராகவும் இருந்து இறுதியில் கொள்ளையர்களாக மாறினர். சிதைந்த அரசுகளின் வீரர்கள் கொள்ளையர்களாக ஆவதைத் தவிர அன்று வேறு வழி இருக்கவில்லை. அவர்கள் அனைவரையுமே தக்கிகள் என ஒற்றை முத்திரையில் தொகுத்து வேட்டையாடி அழித்தது பிரிட்டிஷ் இந்திய அரசு. தமிழகத்திலும் மறவர்கள் குற்றபரம்பரை முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள்.
கேரளத்தில் சமுராய்களுக்கு மிகமிக அணுக்கமான ஒரு குடி உள்ளது. அவர்கள் சேகவர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் மிகவிரிவான ஆயுதப்பயிற்சி கொண்டவர்கள். இவர்களுக்கு நாடும் அரசும் இல்லை. எவர் பணம் கொடுத்து வெற்றிலை கைமாற்றுகிறார்களோ அவர்களின் பொருட்டு போரிடுவார்கள். அரசர்களுக்காக பந்தயப்போர்களிலும் ஈடுபடுவார்கள். இவர்களின் போர்களையும் வெற்றிதோல்விகளையும் சூழ்ச்சிகளையும் பற்றிய வீரகதைப் பாடல்கள் பல உள்ளன. அவை வடக்கன் பாட்டுகள் எனப்படுகின்றன. அவற்றில் மதிலேரிக்கன்னி என்னும் நீள்பாடலை ஒரு வாய்மொழிக்காவியம் என்றே சொல்லலாம். அவை ஏராளமான சினிமாக்களாக வந்துள்ளன. ஆரோமலுண்ணி,கண்ணப்பனுண்ணி எனத் தொடங்கி ஒரு வடக்கன் வீரகதா வரை.
[கா்மகுராவின் கலைஞர்கள் எழுத்தாளர்கள். வரைபடம்]
காமகுராவுக்கு இன்று சுற்றுலாக் கவர்ச்சி மிகுதி. ஏனென்றால் சமுராய் என்றாலே அதுதான் ஞாபகம் வருகிறது. வெள்ளையர்கள் எங்கு பார்த்தாலும் நிறைந்திருந்தனர். ஆனால் சென்றிறங்கியதுமே வந்த ஏமாற்றம் அங்கே பழைமையே இல்லை என்பது. இந்தியாவின் ஒரு தொல்நகருக்குச் செல்கையில் அங்கே தொன்மை நேரடியாகவே காணக்கிடைக்கிறது. ஜப்பானிய தொல்நகர்களில் உள்ள தொன்மை என்பது அங்கே இருந்த தொன்மையின் சாயலில் புத்தம் புதிதாக நிறுவப்பட்டது. ஆகவே ஒருவகை ’மாடல்கள்’ என்றுதான் எனக்கு தோன்றிக்கொண்டிருந்தது
காமகுரா பகுதியில் பிறந்த முக்கியமான ஆளுமைகள், எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு வரைபடம் அங்கே வாங்கக் கிடைக்கிறது. குரோசோவா முதலிய பல முதன்மை ஆளுமைகள் அந்நகரையும் ஒட்டியுள்ள பகுதிகளிலும் பிறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பழைய சமுராய் கலாச்சாரத்தின்மீதும் ஜென் பௌத்தத்தின் மீதும் இத்தகைய ஒரு பெரும் ஈடுபாடு உருவாவதற்கு அந்த பிறப்புச் சூழல் காரணமாக அமைந்திருக்கலாம்.
போரின்போது விரிப்புக்குண்டுகளால் பெரும் சேதமடைந்த இந்நகர் அதன் பின்னர் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆகவே பெரும்பாலும் புதிய நகரமாகவே இது தோன்றுகிறது. சொல்லப்போனால் ஒர் ஐரோப்பிய நகரம் போலவே உள்ளது. சுற்றுலா நகரமாகையால் நகர் முழுக்க பல இடங்களில் வண்டிகள் நிறுத்துவதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன
டாய்பிட்சு [Daibutsu] என்றால் பிரம்மாண்டமான புத்தர் என்று பொருள். காமகுராவில் கோடோகு இன் ஆலயத்தில் உள்ள டாய்பிட்சு சிலை உலகிலுள்ள மாபெரும் புத்தர் சிலைகளில் ஒன்று. வெண்கலத்தாலானது இது. அமிதாப புத்தர். ஞானமெனும் அமுதை வழங்குபவர். 1252ல் உருவாக்கப்பட்டது இது. இதற்கு முன் இங்கே மரத்தாலான ஒரு மாபெரும் புத்தர் சிலை இருந்திருக்கிறது. இனாடா சிற்றரசியாலும் ஜோகோ டோடோமி என்னும் பிக்ஷுவாலும் நிதி திரட்டப்பட்டு அச்சிலை அமைக்கப்பட்டது.
[போதிசத்வர்/கன்னோன்]
1248ல் அந்த மரத்தாலான சிலை ஒரு புயலால் அழிந்தது. ஆகவே ஜோகோ டோட்டோமி எதனாலும் அழிக்கப்படாத ஒரு புத்தர்சிலையை உருவாக்க அறைகூவினார். ஓனோ கோரோமோன் என்னும் சிற்பியால் இச்சிலை வார்க்கப்பட்டது எனப்படுகிறது. டாஞ்சி ஹிசாடோமோ என்பவர் இதன் சிற்பி என்ற எண்ணமும் உள்ளது. இது முன்பு பொன்பூச்சு கொண்டதாக இருந்துள்ளது. 1334 லும் 1369லும் சுனாமியாலும் புயலாலும் இச்சிலையிருந்த ஆலயம் அழிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட அந்தக் கூடம் 1498ல் நில நடுக்கத்தால் அழிந்தது. அன்றுமுதல் சிலை வெட்டவெளியிலேயே அமர்ந்திருக்கிறது. 1923ல் ஒரு நிலநடுக்கத்தில் சிலையின் அடித்தளம் பழுதுபட்டது. அது மீண்டும் அமைக்கப்பட்டது. முன்பு சிலையின் அடித்தளத்தில் 32 வெண்கல தாமரை இதழ்கள் இருந்தன. இன்று நான்கு மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
இந்த புத்தர் சிலையை உலோகத்தாலான ஒரு கட்டிடம் என்றே சொல்லிவிடலாம்.அடித்தளத்துடன் சேர்ந்து 43 அடி உயரமானது. அதாவது கிட்டத்தட்ட எட்டு ஆள் உயரம். 93 டன் எடை கொண்டது இது. இதன் பின்பகுதியில் உள்ளே சென்று பார்ப்பதற்கான வழியிருக்கிறது. புத்தரின் உள்ளே நுழைவதென்பது ஒரு விந்தையான அனுபவம்தான். நாங்கள் புத்தரின் இதயம் இருக்கும் பகுதி வரை சென்று நின்றோம். புத்தரின் இதயம் என்று பிரக்ஞா பாரமிதா சூத்ரம் கருதப்படுகிறது. மெய்ஞானம் குடிகொள்ளும் இடம் அந்த இடம் வரைக்கும் சென்று திரும்பிவந்தோம்.
ஹொகோகுஜி [Hōkoku-ji] ஆலயம் ரின்ஸாய் ஜென் மரபின் தொன்மையான ஆலயங்களில் ஒன்று. டெங்கன் எகோ [Tengan Eko] என்னும் துறவியால் 1334ல் இது நிறுவப்பட்டது. மூங்கில் ஆலயம் என அழைக்கப்படுகிறது. மூங்கில்தோட்டங்களுக்கு புகழ்பெற்றது இது. பொன்னிறத்திலும், பச்சை நிறத்திலும் இங்கே மூங்கில்கள் செறிந்துள்ளன. செங்குத்தாக வான் நோக்கி எழுந்த மூங்கில்கள் இந்த இடத்தில் புரிந்துகொள்ள முடியாத ஒரு நிறைவை அளிக்கின்றன. இந்தப் பச்சைமூங்கில்கள் பத்து ஆள் உயரத்திற்கு எழுந்தாலும் தளிர்கள் என்றே தோன்றச்செய்கின்றன. சிறுமூங்கில்கள் குட்டி யானையின் துதிக்கை போல மண்ணுக்குள் இருந்து எழுவது அளிக்கும் நெகிழ்வு விந்தையானது
இந்தத் தோட்டத்தை ஜப்பானிய ஜென் மரபின்படி அமைத்திருக்கிறார்கள். இதற்குள் உள்ள பூஞ்சைகள் பாசிகள் எல்லாமே தோட்டத்தின் பகுதிதான். கண்களை நிறைக்கும் பசுமை. மலைச்சரிவில் உள்ளது இந்த ஆலயம். மேலேறி படிகளினூடாக தோட்டத்தின் அடுக்குகளுக்குச் சென்று சுற்றிக் கீழிறங்கலாம். இதை வண்ண ஓவியமாக வரைந்தால் பச்சை வண்ணம் மட்டுமே தேவைப்படும். அதை வெவ்வேறு அழுத்தங்களில் பயன்படுத்தவேண்டும்.
பசுமை சூழ்ந்த மலைச்சரிவு நோக்க நோக்க உளம்கவர்வது. மலைவிளிம்பில் நின்று கீழே ஆழத்தில் காமகுராவின் புகழ்பெற்ற கடற்கரையைப் பார்க்கலாம். அங்குதான் ஒரு காலத்தில் சீனப்படகுகள் பீங்கான்களுடன் வந்து கரையொதுங்கின. வானம் முகில்கணங்கள் ஒளிர விழிநிறைத்து கவிந்திருந்தது. நீலச்சுடர்கொண்ட கடல்வெளி. ஊழ்கத்திற்கு உகந்த இடம்தான், ஐயம் இல்லை. சமணக்குகைகளுக்குச் செல்லும்போதெல்லாம் இதை உணர்ந்திருக்கிறேன். அவற்றின் வாசல் விரிந்த நிலவெளியை நோக்கி திறந்திருக்கும். அங்கே அமர்ந்து தொடுவான் வரை நோக்கினாலே ஊழ்கம் கைகூடும்
செயற்கை மூங்கில் காடுகள் ஜப்பானில் இருந்து உலகமெங்கும் சென்ற இல்ல அணியமைப்பு. ஜப்பானிய மூங்கில்களில் முள் இல்லையென்பதனால் அது முற்றிலும் வேறு பொருள் கொண்டுவிடுகிறது. நமது ஊரில் உள்ள மூங்கில் முட்புதர்காடு. அணுகுவதற்கு அரியது. ஆகவே மிக விரைவில் செறிந்து தோட்டத்தை நிறைக்கும். ஏதோ ஒரு கட்டத்தில் அவற்றை நாம் வெட்டி அகற்ற வேண்டியிருக்கும். ஜப்பானிய பசுமூங்கில் நன்கு வளர்ந்து தொடையளவு பருமன் பெற்று வானளாவ இருந்தபோதும் கூட தளிர் என்றே தோன்ற செய்தது. மொட்டைமாடிகளில்கூட தொட்டிக்ளில் இந்த மூங்கில்களை வளர்க்கலாம்
இங்கே ஷாகா நியோரை [Shaka Nyorai] என்னும் புத்தரின் சிலை உள்ளது. மைய தியான அறையின் எல்லையில் அமைந்துள்ளது இச்சிலை. ஷாகா என்ற சொல் சாக்ய என்பதன் மரூஉ ஆக இருக்கலாம். சாக்யமுனி புத்தர் என்றே பெரும்பாலான இடங்களில் புத்தர் குறிப்பிடப்படுகிறார். இங்குள்ள புத்தர் பெயர்கள் எவ்வகையில் பாலியில் இருந்து உருமாறி வந்தன என்பதை தனியாகவே ஆராயவேண்டும்
இந்த ஜென் ஆலயத்தில்தான் பச்சைத் தேநீர் முதன் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என சொல்லப்படுகிறது.பசுந்தேநீர் அருந்தும் நிகழ்ச்சி ஒன்று அங்கே இருந்தது. தேநீர் இலவசம். வரிசையாக நின்று தேநீரைப்பெற்றுக்கொண்டோம். மலைப்படிகளில் ஏறி நின்று நடந்து சோர்ந்திருந்த அருண்மொழியிடம் உற்சாகம் உருவாகியது.
தேநீர் எனும்போது என் உள்ளத்தில் இருந்த சித்திரமே வேறு. அங்கு மிகத் தொன்மையான முறையில் பசுந்தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைச் செடியின் பசுதளிர்களைப் பறித்துவந்து ஒரு பீங்கான் கலுவத்திலிட்டு அரைத்து பச்சைகுழம்பாக்கி அதை நீரில் கரைத்து அப்படியே தந்துவிடுகிறார்கள். ஒரு சிறு வெல்லக்கட்டி நாவில் தொட்டுக்கொள்ள.
முன்பு வயிற்றில் புண் இருந்த போது நான் ஒரு மண்டலக் காலம் மணத்தக்காளி இலைகளின் சாறை இதைப்போல அருந்தியிருக்கிறேன். பசுந்தழையின் கசப்பும் தழைச்சுவையும் குமட்ட வைக்கும். ஒரே மூச்சில் குடித்து ஓர் உலுக்கு உலுக்கிக்கொள்வேன். கையில் வாங்கிவிட்டதால் குடிக்காமலும் இருக்க முடியவில்லை. ஆகவே சுவைத்துச் சுவைத்துக் குடித்தேன். அருண்மொழி சந்தடி சாக்கில் அவளுடைய கோப்பையில் இருந்து என் கோப்பைக்கு ஊற்றி என்னை ஊட்டினாள். மனைவியர் தங்கள் கசப்புகளை கணவர்களுக்கு அளிப்பது நியாயம்தானே?
இப்படித்தான் முதலில் தேநீரைக் குடித்திருக்கிறார்கள் என்பது விந்தையானது. மனிதனுக்கு நற்சுவைகளில் ஈடுபாடு இருக்கும் அளவுக்கு கசப்பிலும் துவர்ப்பிலும் ஈடுபாடு இருக்கிறது. விந்தையான கசப்புகளையும் துவர்ப்புகளையும் தேடித் தேடி சுவையென சேர்த்து அருந்தி மகிழ்ந்திருக்கிறார்கள். தேநீர் அவ்வாறு தான் பயன்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும். உண்மையில் மானுடர் இன்று உண்பனவற்றில் இனிப்புச்சுவை கொண்டவை மிகக்குறைவே.
ஹசேதேரா [Hase-dera] என்னும் புத்தர் கோயில் இங்குள்ள குறிப்பிடத்தக்க போதிசத்வர் ஆலயம். இது பௌத்ததின் தெண்டாய் பிரிவின் ஆலயம் [Tendai] .கிபி 729 வாக்கில் அமைக்கப்பட்டது. இன்று அனைவருக்கும் உரியதாகத் திகழ்கிறது.
இங்கே போதிசத்வர்கள் கன்னோன் என்கிறார்கள், சீனாவில் குன்யின் என்பதன் மரூஉ. போதிசத்வ வழிபாடு ஒருவகையில் அரச வழிபாடுதான். பல்வேறு குடித்தெய்வங்களும் தேவர்களும்கூட போதிசத்வர்களாக அமர்ந்திருக்கின்றார்கள். உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதிசத்வர்கள் உள்ளனர்.
போதிசத்வர் என்றால் புத்தராக ஆகும்நிலையில் உள்ளவர். அதாவது தேவர். இந்தியாவில் போதிசத்வர்கள் பொதுவாக இருவரே. போதிசத்வ பத்மபாணி, போதிசத்வ வஜ்ரபாணி. இரு அடிப்படைக் குறியீடுகளின் வடிவங்கள். போதிசத்வ பத்மபாணி கையில் தாமரை வைத்திருப்பார். யானையை ஊர்தியாகக் கொண்டிருப்பார். நீரின் தலைவர். போதிசத்வ வஜ்ரபாணி மின்னலை படைக்கலமாகக் கொண்டவர். புலி அவருடைய ஊர்தி. அனலவன்.
இவ்விரு இயல்புகளுமே பௌத்தத்திற்கு முன்னர் இந்திரனுக்குரியவை. இந்திரனை இரண்டாக்கி போதிசத்வர்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று சொல்லலாம். அல்லது இந்திரனேகூட அதற்கு முன்பிருந்த தேவர்களின் வடிவங்களை ஒன்றாக்கி உருவாக்கிய உருவகம் எனலாம். உலகம் முழுக்க போதிசத்வர்கள் அங்குள்ள உள்ளூர் தேவர்களின் இயல்புகளை கொண்டவர்களாக, உள்ளூர் தெய்வங்களின் பெயர்களுடன் திகழ்கிறார்கள். ஆனால் வஜ்ரம், தாமரை ஆகியவை பொது அடையாளங்கள்.
பௌத்தம் உலகமெங்கும் பரவியதற்கு போதிசத்வர் என்னும் கருதுகோள் ஒரு காரணம். பௌத்தம் சென்ற இடங்களில் அங்குள்ள மக்கள் ஏற்கனவே வழிபட்டுக்கொண்டிருக்கும் பலநூறு தெய்வங்களை போதிசத்வர் என்னும் அடையாளத்துடன் உள்ளிழுத்துக்கொண்டது.
தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் உள்ள சாஸ்தாக்கள், அய்யனார்கள் இந்து நாட்டார் தெய்வங்களாக இருந்து போதிசத்வ வழிபாட்டிற்குள் புகுந்து பௌத்தம் வீழ்ந்தபின் வெளிவந்தவர்கள் என்பதை வஜ்ரம், பத்மம், புலி, யானை, சடாமகுடம், மும்முடி, யோக அமர்வு போன்ற பல அடையாளங்கள் தெளிவுறக் காட்டுகின்றன.
இந்த ஆலயத்தில் உள்ள மாபெரும் போதிசத்வர்சிலை புகழ்பெற்றது. இது திபெத்திய புத்தர்சிலைகளைப்போல மரத்தாலானது. அதன்மேல் தங்கரேக்கு அமைக்கப்பட்டுள்ளது. அரசக்கோலம் கொண்ட சிலை. ஜப்பானின்மிகப்பெரிய மரச்சிலைகளில் ஒன்றும் 30 அடி உயரம் கொண்டது. பச்சைக்கற்பூர மரத்தால் செய்யப்பட்டது. 11 தலைகள் கொண்ட இச்சிலை மெய்த்தேடலின் 11 படிநிலைகளைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.
தொன்மங்களின்படி டோக்யுடோ [Tokudō[ என்னும் பிக்ஷு கிபி 721ல் இச்சிலையை உருவாக்கினார். அந்த பச்சைக்கற்பூரமரம் [சுகந்தமரம்] மிகப்பெரிதாகையால் இரண்டு சிலைகளை அவர் செய்தார். ஒன்று நாராவில் உள்ள ஹஸேதேரா ஆலயத்தில் நிறுவப்பட்டது. இன்னொன்று கடலில் வீசப்பட்டு ஊழ் வகுக்கும் இடத்தில் அது சென்று அமையட்டும் என விடப்பட்டது. அது இங்கே வந்து சேர்ந்து இந்த ஆலயத்தில் நிறுவப்பட்டது
மிகப்பெரிய சிலை. திபெத்திய பௌத்தத்தின் புத்தர்சிலைகளை நினைவூட்டியது. கையில் மின்படை வைத்திருக்கிறது. நல்லூழுக்காகவும் போர்வெற்றிக்காகவும் வேண்டிக்கொள்ளவேண்டிய தெய்வம். புத்தரின் உலகியல் வடிவம்.
இங்குள்ள இன்னொரு போதிசத்வர் உள்ளூர் வழிபாட்டிலிருந்து பௌத்ததிற்குள் நுழைந்தவர். க்சிதிகர்பர் [Kṣitigarbha] என்று பெயர். பாலி மூலம் க்ஷிதிகர்ஃபர். குழந்தைகள் நலனுக்காகவும் பயணிகளின் நலனுக்காகவும் வழிபடப்படுபவர். ஜப்பானில் அவரை ஜிஸோ [Jizō-Do] என வழிபடுகிறார்கள். குழந்தைகள் நலம் பெறவும் இறந்த குழந்தைகள் விண்ணேகவும் அந்த போதிசத்வர் சிலையைச் செய்து ஆலயத்தில் வைக்கிறார்கள்.
ஜிஸோ சிலைகள் பிக்ஷு வடிவில் உள்ளன. அடுக்கடுக்கான சிலைகள். சில சிலைகளுக்கு ஸ்வெட்டர், ஸ்கார்ப் அணிவித்திருக்கிறார்கள். சிலவற்றுக்கு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. சில சிலைகள் அருகே சிறு குழந்தைகள் நின்றுகொண்டிருந்தன. சில சிலைகள் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டிருந்தனஒவ்வொரு சிலையும் ஓர் இறந்த குழந்தைகளின் நினைவுகளென தோன்றி அமைதியிழக்கச் செய்தது.
இந்த வழக்கம் கீழை உலகமெங்கும் உள்ளது என நினைக்கிறேன். நம்மூரில் பிறந்த குழந்தைகளின் நலனுக்காகவும் குழந்தை பிறக்கக் கோரியும் குட்டித்தொட்டில்கள் கட்டுவது தமிழகத்தில் உள்ள வழக்கம். குமரிமாவட்டத்தில் முத்தாலம்மன் கோயிலில் மண்சிலைகள் வாங்கி வைப்பார்கள். இதேபோலவே நூற்றுக்கணக்கான மண்சிலைகள் அங்கே அடுக்கப் பட்டிருக்கும்.
ஜப்பானை அணுக்கமாக நாம் உணர்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. நாம் நன்கறிந்த நமது பண்பாட்டின் இன்னொரு வடிவை அங்கே காண்கிறோம். நம்பிக்கைகள் சடங்குகள் உடலசைவுகள் அனைத்திலும். வேறு ஒரு மண்ணில் வேறு ஒருவகை மானுடரில் நிகழ்ந்த நாம். உருமாறி அமர்ந்திருந்தாலும் புத்தர் நம்முடையவர். சொல்மாறிவிட்டிருந்தாலும் அத்தனை சிந்தனைகளும் நம்முடையவை.
இங்கே Benten-kutsu என்று அழைக்கப்படும் செதுக்கு குகைத்தொடர் ஒன்று உள்ளது. ஆலயம் அமைந்திருக்கும் மலைச்சரிவின் படிவுப்பாறைப் பரப்பைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இந்த ஆலயம் உருவான காலத்திலேயே செதுக்கப்பட்டது. அக்கால ஜப்பானியர்களுக்காகச் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். மிகக் குள்ளமானது. உள்ளே மின்னொளி அமைக்கப்பட்டிருப்பதனால் முட்டிக்கொள்ளாமல் செல்ல முடியும். சொரசொரப்பான சுவர்கள். ஒன்றுடன் ஒன்று வெட்டிக்கொள்ளும் சுரங்கப்பாதையின் அறைகளில் வெவ்வேறு ஷிண்டோ மதத் தெய்வங்களும் புத்தர் சிலைகளும் உள்ளன.
அக்காலத்தில் இது தனிமைத் தவத்திற்கான இடமாக இருந்திருக்கலாம். லடாக்கிலும் ஸ்பிடி சமவெளியிலும் பௌத்த மடாலயங்களை ஒட்டி மலைக்குமேல் இதைப்போன்ற குகைகளைக் கண்டிருக்கிறேன். அவை பெரும்பாலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும். இவை இப்போதும் வழிபாட்டில் உள்ளன. சுற்றுலாப்பயணிகளுக்கும் ஆர்வமூட்டுகின்றன.
ஆனால் குகைகள் எனக்கு எப்போதுமே ஒவ்வாமையையே உருவாக்குகின்றன. மண்ணுக்கு அடியில் புதைந்ததுபோல் ஓர் உணர்வு. மூச்சுத்திணறுவதுபோல. அங்கே ஊழ்கம் செய்தவர்கள் எதில் அமிழ்ந்திருந்தார்கள்? நான் ஊழ்கம் செய்வது மலைமுடிகளில்தான். சுற்றிலும் தொடுவான்கோடு வட்டமாக வளைத்திருக்கவேண்டும். வெறுமையும் செழுமையும் ஒரே போல என்னைச்சூழ்ந்து திரண்டிருக்கவேண்டும்.
[மேலும்]