ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

தலைநகரங்களில் அரசர்களின் அரண்மனைகள் இருப்பது வழக்கமாகக் காணக்கிடைப்பது .அவை சுற்றுலாத்தலங்களாக மாறிவிட்டிருக்கும். யானை கோமாளிவேடம் அணிந்து சர்க்கஸ் வளையத்திற்கு வருவதுபோன்றது அது. அரண்மனை என்றாலே அரண் கொண்ட இல்லம்தான். அது காட்சியிடமாகும்போது அங்கே அரண் இல்லை. எஞ்சுவது வெறும் மனை.

நான் பார்த்தவற்றில் மலைப்பூட்டிய அரண்மனை பிரான்ஸின் வெர்ஸேல்ஸ் அரண்மனை. அது  கலைக்கூடம், அருங்காட்சியகம், சிறை, நினைவில்லம் ஆகியவற்றின் கலவை. மிக எளிமையாக இருந்தது இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில் கண்ட சுல்தானின் அரண்மனை. நம்மூர் பண்ணையார் வீடு போல் இருந்தது. பெய்ஜிங்கின் தடைசெய்யப்பட்ட நகரின் அரண்மனைதான் மிகப்பிரம்மாண்டமானது என்பார்கள். அதை பெர்ட்னட்டோ பெர்ட்லுச்சியின் லாஸ்ட் எம்பரர் படத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வரண்மனைக்கு அதன் கடைசி சக்கரவர்த்தி எளிய மனிதராக பயணிகளுடன் வந்து பார்வையிடுவார். அவர் குழந்தையாக இருக்கையில் அரியணை இடுக்கில் மறைத்துவைத்த ஒரு பூச்சியை எடுப்பார்.

டோக்கியோவின் அரண்மனைதான் நகரின் மையம். ஆனால் சந்தடிகள் இல்லாமல் காக்கிறார்கள்.ஜப்பானியச் சக்கரவர்த்தி அந்த அரண்மனையில் தங்கியிருப்பதாக சடங்கு. அதாவது அவருடைய புகழுடலின் ஒரு பகுதி அங்கு உள்ளது. மிகப்பெரிய கற்களைத் தூக்கி வைத்து கட்டப்பட்ட உயரம்குறைவான கோட்டைச்சுவர். அதைச்சுற்றி அகழி. உள்ளே செல்லும் வாயில் மடிந்து மடிந்து செல்லும் அமைப்பு கொண்டது. உள்ளே இருக்கும் ஜப்பானிய பாணி கட்டிடமே அரண்மனை. நாங்கள் சென்றது உள்ளே சென்று பார்க்கும் பொழுது அல்ல. ஆகவே அதைச் சுற்றி நடந்து பார்த்தோம். எல்லா அரண்மனைகளுக்கும் உரிய ‘பழைய நெனைப்புடா பேராண்டி’ பாவனையில் அமைந்திருந்தது

அரண்மனையின் முக்கியமான சிறப்பம்சமாக நான் கண்டது அதைச்சூழ்ந்து நிறைந்திருந்த செடிகளும் மரங்களும். குன்றின்மேல் அமைந்திருந்த ஓர் அரண்மனைக்கட்டிடம் மரங்களால் ஏந்தப்பட்டிருப்பதாகவே தோன்றியது. பொதுவாக அரண்மனைகள் உருவாக்கும் ஒவ்வாமைகளை முழுமையாக இல்லாமலாக்கியது அந்த மரங்களின் கூட்டம். மக்கள்மேல் அல்ல இயற்கைமேல் அந்த அரண்மனை அமைந்திருக்கிறது என்று தோன்றியது.

மசாஜிரா

எடோ என டோக்கியோ முன்பு அழைக்கப்பட்டது.இது எடோ மலைக்கோட்டை என்றும்.1868ல் ஜப்பானியச் சக்கரவர்த்தி கியோட்டொவில் இருந்து இங்கு தங்குமிடத்தை மாற்றிக்கொண்டார். இப்போதிருக்கும் அரண்மனை பலமுறை பழுதுபார்க்கப்பட்டது. இறுதியாக உலகப்போரின்போதும் இது சிதைக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. அரண்மனையின் சிறிய அருங்காட்சியகத்தை பார்த்தோம். பழைய கோட்டையின் பார்வை மேடையில் ஏறி நின்று சுற்றிலும் நோக்கினோம். மாலையில் மென்மழை தூவிக்கொண்டிருந்தமையால் பொழுது மறைந்துவிட்டிருந்தது. அரண்மனைக்கும் அன்று பார்வையாளர்கள் என எவருமில்லை. தனிமையில் ஒரு பழைய அரண்மனைச் சூழலில் நின்றிருப்பது எடித் வார்ட்டன் கதைகளின் ஒரு காட்சி போலத் தோன்றியது.

பழைய ஜப்பானியக் கட்டிடக் கலையின்படி செம்புமூங்கில்கூரை கொண்ட கட்டிடம். மழைத்துளிகள் விளிம்புகளில் இருந்து சொட்டிக்கொண்டிருந்தன. கோட்டையைப் பார்க்கையில் ஜப்பானில் அக்காலத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் படைகள் இருக்கவில்லை என்பதும், முற்றுகை போன்ற போர்முறைகள் பெரிதாக இல்லை என்பதும் தெரிந்தது. ஜப்பானின் மக்கள்தொகை குறைவு என்பதனால்தான் போர்க்கலைகள் அவ்வளவுதூரம் பயிலப்பட்டன. எண்ணிக்கையை ஆற்றலாலும் பயிற்சியாலும் ஈடுகட்டினர். சிறியதாக ஆனமையால் பாம்பு நஞ்சு கொள்வதுபோல

வெளிநாட்டுப் படையெடுப்பையும் ஜப்பான் பெரிதாகச் சந்தித்தது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கடல் ஜப்பானின் கோட்டை. கடல்கடந்து வந்து தாக்கும் அளவுக்கு கப்பல்படைகொண்ட நாடுகளே ஜப்பானை வெல்ல முடியும். சீனா தவிர எந்த நாட்டுக்கும் பழங்காலத்தில் அந்த ஆற்றல் இருக்கவில்லை.

ராதா பினோத் பால்

 

1378 முதல் 1425 வரை சீனாவை ஆண்ட சக்கரவர்த்தி ஹோங்ஸி [Hongxi] சீனாவின் மாபெரும் கப்பல்படையை தீவைத்து எரித்து அழிக்க ஆணையிட்டார். சீனாவின் வாயில்கள் அன்னியருக்கு மூடப்பட்டன. அன்று உலகம் முழுக்க இருந்த மொத்த கப்பல்களை விடவும் சீனாவின் கப்பல்களின் எண்ணிக்கை மிகுதி என சொல்லப்படுவதுண்டு. ஹோங்ஸியின் அந்த முடிவு உலக வரலாற்றையே திசைதிருப்பியது. சீனா உலகப்பேரரசாக ஆக மேலும் எழுநூறாண்டுகள் பிந்தியது. ஹோங்ஸி உளச்சிதைவுநோய் கொண்டவர் என்று இன்று சொல்கிறார்கள்

 

ஹோங்ஸியின் அந்த முடிவு ஜப்பானின் மிகப்பெரிய நல்லூழாக அமைந்தது. ஜப்பான் எதிரியே இல்லாத நாடாக ஆகியது. உலகப்போர் காலகட்டத்தில் சீனா வலு குன்றி இருக்க யானையை சிறுத்தை அடித்துக் கொல்வதுபோல ஜப்பான் சீனாவை நொறுக்கியது. சிலநூறாண்டுகள் ஜப்பான் மஞ்சூரியாவை தன் வேட்டைநிலமாகவே கொண்டிருந்தது. அறுதியாக உலகப்போரில் நான்கிங் நகரத்தில் நிகழ்ந்தது போன்ற மாபெரும் மானுட அழிவுகளையும் ஜப்பான் உருவாக்கியது.

 

அரண்மனைக்கு சற்று அப்பாலுள்ள யாசுகுனி [ Yasukuni] என்னும் ஷிண்டோ ஆலயத்திற்குச் சென்றோம். 1869ல் சக்கரவர்த்தி மெய்ஜியின் காலகட்டத்தில் இது கட்டப்பட்டது. மெய்ஜி ஜப்பானை நவீனப்படுத்தியவர். ஜப்பானிய ஆலயங்களை மறுசீரமைப்பு செய்தவர் .முதல் இந்தோச்சீன போரின்போதுஇது ஜப்பானுக்காக உயிர்நீத்த போர்வீரர்களின் நினைவிடமாக ஆகியது. இன்றுவரை போர்நினைவிடமாக நீடிக்கிறது. உலகப்போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கும் இங்கே நினைவிடங்கள் உள்ளன. 2,466,532 வீரர்களின் பெயர்கள் இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களில் 1068 பேர் உலகப்போரில் பெரிய மானுட அழிவுகளை உருவாக்கியவர்கள். 14 பேர் சர்வதேச போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். இது தொடர்ச்சியாக உலகக் கண்டனத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் அல்லது அதிபர்கள் இங்கு வந்தால் ஐரோப்பிய ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பு உருவாகிறது. பிலிப்பைன்ஸ் கொரியா தாய்வான் மலேசியா போன்ற நாடுகள் அதிகாரபூர்வ கண்டனங்களைத் தெரிவிக்கின்றன

யாசுகுனி ஆலயம் செல்லும் வழியில் ஒரு ஜப்பானிய ராணுவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஒமுரா மசாஜிரா [Omura Masajiro] அவர்களின் சிலை உள்ளது. மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்ட முதல்சிலை என்கிறார்கள். வெண்கலச்சிலை. பச்சைக் களிம்பேறியது. களிம்புப்பச்சைதான் வரலாற்றின் வண்ணம். போர்வீரருக்குரிய கம்பீரமான நிலை. கிளம்புங்கள் என ஆணையிடும் தோற்றம்.

நான் கவனித்தது அவருடைய மிகப்பெரிய புருவங்களை. அத்தகைய புருவங்கள் இயல்பானவை அல்ல. அவை ஒட்டப்பட்டவை என நினைக்கிறேன். பிரிட்டிஷ் பொய்முடிகள் போல, இந்திய மீசைகள் போல ஜப்பானில் பொய்ப்புருவங்கள் ஆண்மையின், அரசகுடித்தன்மையின் அடையாளமாகக் கருதப்பட்டிருக்கலாம். பொதுவாகவே ஜப்பானியர்களின் புருவங்கள் அடர்த்தியானவை அல்ல. மீசை அனேகமாக கிடையாது. உதடுகளுக்குமேல் ஒரு மயிர்ப்பூச்சையே மீசை என்கிறார்கள். காமகுராவின் கன்னோன் போதிசத்வருக்கு ஒற்றைவரி மீசை இருந்தது.

அக்காலத்தைய பிரபுக்கள் தலையை முன்வழுக்கை போல மழித்துக்கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய நெற்றியை அளிக்கிறது. குண்டாக உருண்டை முகத்துடன் இருப்பது உயர்குடி இயல்பு என கருதப்பட்டிருக்கிறது. குடுமியை ஒருவகையில் மடித்து கொண்டையாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். பர்கரில் சீஸை மடித்து வைப்பதுபோல தோன்றுகிறது. கொண்டையில் கொண்டை ஊசி குத்தி வைக்கப்பட்டிருக்கும். ஜப்பானியர்களுக்கு குரல்வளைகள் பெரிதாக இருக்கின்றன. அடித்தொண்டை உச்சரிப்பு அதற்கு உகந்ததாக உள்ளது. மொழியும் அடிக்குரலில் பேசுவதற்கு உரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கே போரில் ஈடுபட்ட புரவிகளுக்கும் நாய்களுக்கும் நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ளன. அது மிகச்சிறந்த ஒரு செயல் என்பது என் எண்ணம். போர்ப்புரவிகள் நினைவுகூரப்படுகின்றன. நாய்கள் எப்போதுமே பொருட்படுத்தப்படுவதில்லை. நானறிந்து மகாராஷ்டிராவில் ராய்கர் கோட்டையில் சிவாஜியின் நாயின் சிலை உள்ளது. நேர் எதிரில் அமர்ந்து அன்பு மிளிரும் விழிகளால் அவரை நோக்கிக்கொண்டிருக்கிறது.

இப்போர்களைப் பற்றி நாய்களுக்கு ஏதும் தெரியாது. இந்நினைவுச்சின்னம் பற்றியும் தெரியாது. நாம் நம் தேவைக்காக அவற்றை கொன்றோம் என்பதை நமக்கே சொல்லிக்கொள்வதற்காகவாவது இவை இருக்கட்டும்.

இங்கே ஓர் இந்தியருக்கு நினைவுச்சின்னம் உள்ளது. ஆர்.பி.பால் என்னும்  ராதாபினோத் பால் [1886 –1967] வங்கத்தில் பிறந்தவர். பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிபதியாக இருந்தார். 1952 முதல் 1966 வரை ஐக்கியநாடுகள் சபையின் சர்வதேசச் சட்டக் கழகத்தின் உறுப்பினராக இருந்தார். தூரக்கிழக்கு நாடுகளுக்கான சர்வதேச ராணுவ விசாரணை சபையில் இருந்த ஆசிய நீதிபதிகளில் ஒருவர். ஜப்பானியப் போர்க்குற்றவாளிகளை விசாரித்த டோக்கியோ விசாரணைகளில் அவரும் இருந்தார். அவருடைய தீர்ப்பு பிற நீதிபதிகளின் தீர்ப்புக்கு மாறாக தனித்து ஒலித்தது.

பிற நீதிபதிகள் ஜப்பானிய ராணுவ வீரர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்தபோது ராதாபினோத் பால் அவ்வாறு கருதவில்லை. படைவீரனின் கடமை என்பது ஆணைகளுக்கு ஏற்ப போர்புரிவது மட்டுமே என்றும் அதுவே அவனுடைய ஒழுக்கம் என்றும் அவர் சொன்னார். அறச்சிக்கல்களை முடிவெடுக்கவேண்டியது அரசும் படைத்தலைமையும்தானே ஒழிய படைவீரன் அல்ல. போர் என ஒன்று தேவையா, நாடுகளுக்குப் படைகள் தேவையா என்பது வேறு கேள்வி. போரில் அழிவுகள் நிகழவேண்டுமா என்பது மானுட அறப்பிரச்ச்னினை. ஆனால் போர் தேவை என்றால் படைவீரன் ஆணைக்கு ஏற்ப செயல்படுபவனாகவே இருக்கமுடியும். அரசின் அறவீழ்ச்சிகளுக்கு ராணுவவீரர்களை பலியாடுகள் ஆக்கக்கூடாது. ஏனென்றால் போர்வீரனுக்கு ஆணைகளை மறுக்கும் உரிமை இல்லை. ஆர்.பி.பால் ஜப்பானிய உணர்வுகளைப் புரிந்துகொண்டவராகக் கருதப்படுகிறார். ஆகவே அவருக்கு அங்கே ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கத்தவருக்கு ஜப்பான் மேல் ஈர்ப்பு மிகுதி. அதற்குக் காரணம் ராஷ்பிகாரி போஸ் மற்றும் சுபாஷ் சந்திர போஸ். ராதாபினோத் பால் தனித்தகுரலாக ஒலித்தமைக்கு அதுவும் காரணமாக இருக்கக்கூடும். எதுவாக இருந்தாலும் அங்கே ஓர் இந்தியரின் நினைவிடத்தைக் காண மகிழ்ச்சியாகவே இருந்தது.

ராஷ் பிகாரி போஸ் 1886ல் ல் வங்காளத்தில் பிறந்தவர்.ஃப்ரான்ஸிலும்  ஜெர்மனியிலும் மருத்துவம் மற்றும் பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தார். கல்கத்தாவில் மார்ட்டன் பள்ளியில் பணியாற்றுகையில் தேசியப்போராட்டத்தில் ஈடுபட்டார். தொடக்கம் முதலே அவருடைய வழி தீவிரவாதமாக இருந்தது. பிரிட்டிஷ் உளவுத்துறையிடமிருந்து தப்பி 1915ல் ஜப்பானுக்கு வந்தார். அங்கே இந்தியன் இண்டிப்பெண்டன்ஸ் லீக் அமைப்பை உருவாக்கினார். பின்னர் 1942ல் ஐ.என்.ஏ [இந்திய தேசிய ராணுவம்] அவரால் நிறுவப்பட்டது. ராஷ்பிகாரி போஸ் முதுமையடைந்திருந்தமையால் அந்த ராணுவத்தின் பொறுப்பு 1943ல் ஜப்பானுக்குத் தப்பி வந்த சுபாஷ் சந்திர போஸுக்கு வழங்கப்பட்டது.

ராஷ் பிகாரி போஸ்

ஜப்பானியர்களின் அரசபக்தி புகழ்பெற்றது. உலகப்போரில் ஜப்பானியச் சக்கரவர்த்தி சரண் அடைந்தபோது தங்கள் இழப்புகளை விட அவர் அடைந்த இழிவை எண்ணியே ஜப்பானியர் கண்ணீர்விட்டார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. இன்றும் அந்த அரசபக்தி தொடர்கிறது. இன்றைய அரசரும் அவர்களின் தெய்வ வடிவம்தான். இவ்வாண்டு அரசர் முடிதுறந்து புதிய அரசர் நாருஹிதோ முடி ஏற்கிறார். ஆகவே ஆண்டுக்கணக்கையே இந்த ஆண்டில் இருந்து தொடங்குகிறார்கள்

அரசபக்தியே ஜப்பானில் தேசபக்தியாக உருமாறியிருக்கிறது. ஜப்பான் நவீன ஜனநாயகத்திற்கான அரசியல் இயக்கங்கள் ஏதும் நிகழாத நிலம். உலகப்போரின் தோல்வியால் மன்னராட்சியில் இருந்து நேரடியாக ஜனநாயகத்திற்கு வந்தது. மன்னராட்சியை குறியீட்டு அரசாகக் கொண்ட ஜனநாயகம்- பிரிட்டன் போல.

சக்கரவர்த்தி நாருஹிதோ

தோராயமான எண்ணம்தான் இது. ஜனநாயகத்திற்கான இயக்கங்கள் தேசபக்திக்கும் எதிரானவையாக, தனிமனித உரிமையை அதிகமாக வலியுறுத்துவனவாக, அதன் விளைவாக அரசின்மைவாதத்தின் எல்லை வரைச் செல்வனவாக அமைகின்றனவா? குறிப்பாக இந்தியாவில் நிகழ்ந்ததுபோன்ற ஐரோப்பியபாணி ஜனநாயக போராட்டங்கள்? காந்திய இயக்கத்தில் ஓர் அரசின்மைவாதம் உள்ளது, அது அடிப்படையில் தேசியவாதத்திற்கு எதிரானது. இதை சொன்னவர் அம்பேத்கர். சுதந்திரத்திற்குப் பின் காந்திய வழியிலான போராட்டங்கள் தொடரக்கூடாது என அவர் எழுதினார்.

 

இந்தியாவில் சாமானியர்களிடம் ஓர் அரசின்மைவாதம் உள்ளது. முடிந்தவரை நாம் சட்டங்களை எதிர்க்கிறோம். புல்வெளியில் நடக்காதே என அறிவிப்பு இருந்தால் அருகே காவலன் இருக்கிறானா என்றுதான் பார்க்கிறோம். இல்லை என்றால் உடனே புல்வெளிமேல் ஏறுகிறோம். சிறுகுழந்தைகளுக்குக் கூட இந்த உளநிலையைப் பயிற்றுவிக்கிறோம். தேசப்பற்று என்பதை இழிவாகவே எண்ணுகிறோம். தேச எதிர்ப்புப் பேச்சு அறிவுஜீவித்தனம் என கருதுகிறோம். இந்தியர்கள் தேசபக்தியில் திளைப்பது அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளின் குடிமக்களாக அவர்கள் ஆகும்போதுதான். அந்த நாடுகளின் அர்ப்பணிக்கப்பட்ட குடிமக்களாக அவர்கள் ஐம்புலன்களாலும் ஆத்மாவாலும் மாறிவிடுகிறார்கள்.

அரசு ஆற்றலிழப்பது ஒரு முற்போக்கான நகர்வே. ஆனால் அரசியல் பொருளியல் எல்லா தளத்திலும் இன்றும் நாடுகள் என்னும் அமைப்புதான் ஆற்றல்மிக்கதாகச் செயல்படுகிறது. அரசு அமைப்பு ஆற்றலிழந்தால் ஒரு நாடு இன்னொன்றால் சூறையாடப்படுகிறது. அரசு என்னும் அமைப்பு தேசம் என்னும் உணர்வின் புறவய வெளிப்பாடு. தேசப்பற்று குறையும் நாட்டில் அரசு ஆற்றலிழக்கும். அரசின் ஆற்றல்களும் செல்வமும் தேச ஒற்றுமைக்காகவே வீணடிக்கப்படும் இது ஒரு நடைமுறை உண்மையாக இருக்கையில் தேசபக்தி என்பது பெரிய அரசியல் – பொருளியல் ஆயுதம், ஒரு தேசியச்செல்வம் என்றே தோன்றுகிறது. தேசமறுப்பு மிகப்பெரிய எதிர்விசை என்றும்.

மீண்டும் சொல்கிறேன், நான் கிறுக்குத்தனமான தேசபக்தியை, தேசத்தின் பழைமையைக் கொண்டாடுவதைச் சொல்லவில்லை. தேசத்தை ஏதேனும் ஓர் அடையாளத்தைக்கொண்டு குறுக்கிக்கொள்வதைச் சொல்லவில்லை. அது தேசத்துக்குள் பிரிவினையை உருவாக்கி அழிவு நோக்கிக் கொண்டுசெல்லும். ஒரு மக்கள்கூட்டம் ஒரு நவீனத் தேசமாக பல்வேறு வரலாற்று,பொருளியல், நிலவியல் காரணங்களுக்காகச் சேர்ந்து வாழ்வதையே குறிப்பிடுகிறேன். இந்தியாவின் ஆற்றலில் செல்வத்தில் மிகப்பெரிய பங்கு தேசிய எதிர்ப்பை எதிர்கொள்ளவே செலவிடப்படுகிறது. தேசமறுப்பு என்பது நம்மை நண்டுகள் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு வெளியேற முடிய்மல் ஆவதுபோல் சிக்கவைத்திருக்கிறதா?

ஜப்பான் போன்ற சிறிய நாடுகளின் தேசபக்தி அவற்றை மிக உச்சத்திற்குக் கொண்டுசெல்கிறது. நம்மிடமிருக்கும் ஜனநாயகம் நமக்கு ஒத்திசைவின்மையை, அவநம்பிக்கையை, பொறுப்பின்மையை மட்டுமே அளித்துள்ளதா என்ன? நம் அரசியல் நமக்கு எதையுமே செய்யமுடியாத ஒரு மாபெரும் அராஜகவெளியை மட்டுமே உருவாக்கித் தந்துள்ளதா?

 

[மேலும்]

முந்தைய கட்டுரைநீர் என்ன செய்தீர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7