ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

 

ஒரு நாட்டின் தலைநகரைப் பார்ப்பதென்பது அதன் பிற இடங்களைப் பார்ப்பதைவிட அரிதான ஓர் அனுபவம். பிற நகர்களில் வணிகம், தொழில், சுற்றுலா என பல கூறுகள் இருக்கும் .தலைநகர்களில் நேரடியாகவே அதிகாரம் திகழும். அதிகாரம் என பொதுவாகச் சொல்கிறோம். நான் அதன் வெளிப்படையான அடையாளங்களை மட்டும் சொல்லவில்லை. அதிகாரச் சின்னங்களான கோட்டைகள், அரண்மனைகள், அரசகுடிகளுக்கான சமாதியிடங்கள், வெற்றித்தூபங்கள் என பல அங்கே இருக்கும். அவற்றுக்கு அப்பால் நாம் அந்த இடத்திற்கே உரிய ஓர் குறீயீடை நாமே  கண்டுகொள்ள முடியும் என்றால், நம் நுண்ணுணர்வால் அந்த நகரையும் அதன் வழியாக அந்நாட்டையும் புரிந்துகொண்டோம் என்றுபொருள்

உதாரணமாக நான் முதல்முறையாக வாஷிங்டன் சென்றபோது வெள்ளை மாளிகையையும் , மாபெரும் அருங்காட்சியகங்களையும் கண்டேன். ஆனால் என் நினைவில் குறியீடாகத் திரண்டு வந்தது, அங்கிருந்த நீத்தார் பூங்காக்களில் முடிவில்லாதது போல் தோன்றிய கல்லறைகளின் வரிசைகள்தான். அனைத்துமே உலகின் வெவ்வேறு ஊர்களில் போரில் இறந்த படைவீரர்களுக்காக நடப்பட்டவை. மண்ணாலான நீள்சிறு குவைக்குமேல் வெண்ணிறச் சிலுவைகள். அந்த நீத்தார் பூங்காக்கள் மாபெரும் வயல்கள்போல தோன்றின. அச்சிலுவைகள் நடப்பட்டிருக்கின்றன. ஈரிலை விரித்திருக்கின்றன. அறுவடை நிகழாதவை. அல்லது அறுவடை நிகழ்வது நாம் பார்க்கும்படி அல்ல.

டோக்கியோ ஜப்பானின் தலைநகர். அதைச் சுற்றிப்பார்க்க கிளம்பியபோது நான் அத்தகைய ஒரு அகத்தேடலில் இருந்தேன். பதினான்காம் தேதி கிளம்பி நேராக உவேனா தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். [UENO NATIONAL MUSEUM.] அங்கு வாசகர் சங்கர் ஜெயபால் இணைந்துகொண்டார். ஜப்பானிய அருங்காட்சியகத்தில் அரைநாள் செலவிட்டோம். அருங்காட்சியகங்கள் என்பவை பலமுறை சென்று பார்க்கப்படவேண்டியவை. பலநாட்களைச் செலவிட்டுப் பார்த்தாலும் அவற்றில் ஒரு பகுதியைக்கூட பார்க்கமுடியாது. ஆகவே அரைநாளில் ஓர் அருங்காட்சியகத்தைப் பார்க்கலாமா?

கண்டிப்பாகப் பார்க்கலாம். அதை ‘அருங்காட்சியகத்தை உணர்தல்’ என்று சொல்லலாம். அருங்காட்சியகத்தைப் பார்ப்பது என்றால் வேறு. அதற்கு குறிப்பிட்ட ஒரு கேள்வியுடன் செல்லவேண்டும். உதாரணமாக, சென்னை அருங்காட்சியகத்தில் அமராவதி சிற்பங்கள் உள்ளன. அமராவதியின் பளிங்குக்கல் சிற்பக்கலை பற்றி அறிந்துகொண்டு நேரில் சென்று நோக்கி குறிப்புகள் எடுத்துக்கொண்டு பார்ப்பதே அருங்காட்சியகத்தை பார்த்தல். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு செய்தியும் நினைவில் நிற்காது

ஆனால் அருங்காட்சியகம் நம் அறிவுடன் மட்டும் உரையாடுவது அல்ல. அது நம் ஆழுள்ளத்தையும் சென்றடைகிறது. ஓர் அருங்காட்சியகத்தில் அவ்வப்போது கவனத்தைக் கவர்வனவற்றை மட்டும் நோக்கியபடி, ஆழ்ந்த உளநிலையுடன் சுற்றி வரும்போது நாம் அந்தப் பண்பாடு பற்றிய ஒரு நுண்புரிதலை அடைகிறோம். இப்படிச் சொல்கிறேனே, ஒர் இல்லத்தின் வரவேற்பறையில் நாம் அந்த வீட்டாரைப்பற்றிய ஒரு மதிப்பீட்டை ‘எப்படியோ’ அடைகிறோம் அல்லவா ,அதைப்போல.

அருங்காட்சியகங்களை எப்போதுமே ஒரு பயணத்தின் இறுதியில்தான் பார்க்கவேண்டும். அத்ற்கு முன்னரே வரலாற்று இடங்களையும் தொல்லியல் இடங்களையும் பார்த்திருக்க வேண்டும். அப்பண்பாட்டின் ஒட்டுமொத்த உணர்வும் நமக்குள் ஒருவகையில் உருவாகி வந்தபின்னர் அருங்காட்சியகத்தை பார்க்கும் போது அங்கிருக்கும் பொருட்கள் அனைத்தும் குறியீடுகளாக மாறியிருப்பதை உணரலாம். அதுவே அருங்காட்சியகத்தை உணர்தல் என்பது

நூறு பொருட்களினூடாக உலக வரலாறு, நூறு பொருட்களினூடாக ஐரோப்பிய வரலாறு போன்ற தலைப்புகளில் இன்று நூல்கள் வெளிவருகின்றன. பொருட்கள் ஒரு காலகட்டத்தை குறிப்பவையாக மாறுவது இயல்பே.  ஏனென்றால் பொருட்கள் எல்லாமே படிமங்கள்தான். தமிழ் வரலாற்றை அவ்வாறு நூறு பொருட்களினூடாகச் சொல்லப்போனால்  இணையர்வடிவம் பொறிக்கப்பட்ட சங்ககால நாணயம் முதல் தொடங்கவேண்டும். நாணய ஆய்வாளர் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டெடுக்கப்பட்டது. அவரது சேமிப்பில் உள்ளது. அதில் ஒருபக்கம் மிதுனச் சிலை உள்ளது. இணையாக நின்றிருக்கும் ஆணும்பெண்ணும்.

அதிலிருந்து தொடங்கி தமிழகத்தின் வரலாற்றை எழுத முடியும். அல்லது மேலும் பின்னகர்ந்து சென்று திருவக்கரையின் கல்மரங்களிலும் ராபர்ட் ஃப்ரூஸ் சேர்த்த கல்லாயுதங்களிலிருந்தும் கொடுமணலின் கூழாங்கற்களிலும் ஆதிச்சநல்லூர் பானை உடைசல்களிலிருந்தும் இன்னொரு வரலாற்றை தொட்டு உருவாக்க முடியும். அவ்வாறு பொருட்களினூடாக நம்முள் உருவாக்கப்படும் வரலாறு வெறுமே தகவல்களாக இல்லாமல் விழுமியங்கள் நிறைந்ததாகவும் இருப்பதைக் காணலாம். ஏனென்றால் எல்லா படிமங்களும் விழுமியங்களையே குறிக்கின்றன.

டோக்கியோ அருங்காட்சியகம் 1872ல் நிறுவப்பட்டது. ஜப்பானின் மிகப்பெரிய கலைப்பொருள் கண்காட்சியகமும் இங்கேதான் உள்ளது .ஜப்பானின் தேசிய அரும்பொருட்கள் என அறிவிக்கப்பட்ட 87 பொருட்கள் இங்குள்ளன. உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று இது. இங்குள்ள ஆசியக் கலைபொருள் தொகை மிகமிகப்பெரிது.

ஜப்பானியப் பண்பாட்டின் கற்காலச் சான்றுகள், மிகத்தொன்மையான நாடோடிப் பண்பாட்டின் அடையாளங்கள், மண்பாண்டங்கள் உருவாகி வந்த வகை, அந்த காலகட்டத்தின் ஆடைகள், வெவ்வேறு உலோகக் கலங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டிருந்தோம். கொதிக்கவைக்கப்பட்ட சூப், நூடில்ஸ் போன்றவையே ஜப்பானின் மைய உணவாக இருந்துள்ளன. உண்கலங்கள் எல்லாமே திரவ உணவு உண்பதற்குரியவை. வாயகன்ற கோப்பைகள் மிகுதி. குவளைகள் மதுக்கிண்ணங்கள் மிகமிகக்குறைவு. நீர் கொண்டுசெல்லும் குடங்களும் அரிதாகவே உள்ளன.

சீனாவிலிருந்து வந்த பீங்கான் ஜப்பானின் மிக முக்கியமான அரும்பொருளாக இருந்திருக்கிறது. அவை பயன்படுபொருள் என்பதற்குமேலாக அரசதிகாரத்தின், ஆடம்பரத்தின் குறியீடாக இருந்துள்ளன. பீங்கானும் தேநீரும் சீனாவிலிருந்து வந்தவை. ஆகவே ஒன்றின் இரு பக்கங்கள். தேநீர் ஜப்பானின் வாழ்க்கைநோக்கையே மாற்றியிருக்கிறது. அது ஜப்பானை திடீரென மென்மையான நிதானமான சடங்குகள் மற்றும் வாழ்க்கைநிகழ்வுகள் கொண்டதாக மாற்றிவிட்டதுபோல தோன்றியது. ஜப்பான் என்னும்போதே வெண்ணிறமான பீங்கான் குடுவையிலிருந்து மிக மிக மென்மையாக பீங்கான் கோப்பைக்கு ஊற்றப்படும் தேநீர் நினைவில் எழுகிறது.

ஜப்பானிய தேநீர்விருந்துகள் புகழ்பெற்றவை. அவை இங்கு ஒருவகையான பிரார்த்தனைச் சடங்குகள் போல. அவற்றை தயாரிப்பதற்கும் அருந்துவதற்கும் ஏராளமான ஆசாரங்கள் உள்ளன. ஜென் குருக்கள் நிகழ்த்தும் தேநீர் விருந்துகளுக்கான கலங்கள் வெவ்வேறு வகையான அடையாளங்களும் குறியீடுகள் கொண்டவை. பல தேநீர் கலங்களில் ஷிண்டோ மதத்தின் தெய்வங்களைப்பார்க்க முடிந்தது. தேநீர் என்றால் வெந்நீரில் இட்ட தேநீர் இலை மட்டும்தான். சீன- ஜப்பானியத் தேநீர் என்பது ஒருவகை மூலிகை நீர், அவ்வளவுதான்.பாயசத்தின் தங்கையான இந்திய தேநீரை நினைத்துக்கொள்ளலாகாது.

மீண்டும் மீண்டும் ஜப்பானிய கிமோனாவை நோக்கி எனது பார்வை சென்று கொண்டிருந்தது. வெவ்வேறு காலகட்டங்களில் நெய்யப்பட்ட கிமோனோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அரசர்களின் ஆடைகள் பொன்னூல் வேலைப்பாடுகள் மிகுந்தவை. சமுராய்களின் ஆடைகள் உறுதியானவை, குல அடையாளங்கள் பொறிக்கப்பட்டவை. பெண்களின் ஆடைகள் வண்ணத்துப்பூச்சி இறகுகள் போல மலர்செறிந்தவை.

உலக அளவில் அது போல ஒரு விந்தையான ஆடை இருக்காதென்று தோன்றியது. ஆனால் வெளியிலிருந்து வந்த ஒருவருக்கு நம்முடைய புடவை அதே அளவுக்கு விந்தையான ஆடையாக இருக்குமென்றும் தோன்றியது. கிமோனா இன்று இயல்பாக எவராலும் அணியப்படுவதில்லை. அவ்வகையில் பார்த்தால் இன்று உலகத்தில் அணிவதில் மிகத் தொன்மையானதும் மிக விந்தையானதுமான ஆடை சேலைதான்.இன்னும் எத்தனை காலம் இந்தியாவில் பெண்கள் சேலை அணிவார்கள் என்பதை சொல்ல முடியவில்லை.

வசதிக்கேற்ப வெட்டி முடிச்சிட்டு கட்டப்பட்ட பெரும்போர்வைதான் கிமோனா என்றே எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. கிமோனா தொல்காலத்தில் மேலும் மேலும் பிரம்மாண்டமானதாக இருந்திருக்கிறது. அன்றெல்லாம் அதில் தையல்கள் இல்லை. பழமையான ஓவியங்களில் அக்காலத்து ஜப்பானிய பிரபுக்கள் மிகப்பெரிய கிமோனாக்களை அணிந்திருந்ததை காண முடிகிறது. கிமோனாக்களின் ஒரு பகுதியாக பின்புறத்தில் மடித்து கட்டப்பட்ட போர்வையும் உள்ளது.

கிமோனா என்றால் தோளில் அணியும் உடை என்று பொருள். கிபி மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சீனாவில் டாங் அரசகுடியின் ஆட்சிக்காலத்தில்தான் ஜப்பானில் சீனக்குடியேற்றம் உச்சத்தில் இருந்தது. கிமோனோ அப்போது ஜப்பானுக்கு வந்தது என்றும் அது சீன தோளாடையின் இன்னொரு வடிவமே என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு நாகரீகத்தின் உடையாக ஒன்று மெல்லமெல்ல உருவாகி வந்து பின்னர் அதுவாகவே அறியப்படுகிறது. இந்தியா சேலையால் அடையாளம்காணப்படுகிறது. வேட்டி அவ்வளவு தனித்துவம் கொண்டது அல்ல. நாம் கச்சையாகக் கட்டிய அரைவேட்டியும் சால்வையாக மேலாடையும் அணிந்திருக்கிறோம் என பழைய சிற்பங்கள் காட்டுகின்றன. மேலாடை உடலுடன் ஒட்டியதுபோல கோடாக சிற்பங்களில் செதுக்கப்பட்டிருக்கிறது

தமிழக ஆடையில் தையல்கள் இல்லை. ஆனால் நம்மிடம் தையல்கலை இருந்திருக்கிறது. நகரத்தார் வணிகர்கள் தைத்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். அதை மெய்ப்பை என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழர்களின் ஆடையில் தையலுக்கான தேவை இருக்கவில்லை. தையல் மிகமிகத் தொல்காலத்திலேயே இருந்திருக்கிறது. கற்காலத்திலேயே குளிர்நில மக்கள் ஆடைகளை தைத்து அணிந்திருக்கிறார்கள். உலோகம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல தொல்லியல் அகழ்வுகளில் எலும்பாலான தையல் ஊசிகள் கிடைத்துள்ளன

 


கிமோனோ தையல் இல்லாமல்தான் அணியப்பட்டிருக்கிறது. பின்னர் மிக எளிமையான தையல் வந்திருக்கிறது. மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டே சென்ற அந்த ஆடை பின்னர் சமூக அடையாளமாக மாறியது. அதிகாரம் படிநிலை ஆகியவற்றைக் காட்டத் தொடங்கியது. பிற்கால கிமோனாக்கள் துணிக்குவியல்கள். ஏராளமான தொங்கலள் குஞ்சலங்கள் மடிப்புகள் சுருள்கள்.

 

அதிலும் சீனச் செல்வாக்கு இருக்கலாம் என நினைக்கிறேன். சீனாவில் மிதமிஞ்சி ஆடையணிவது என்பது ஒரு மனநோய் அளவுக்குச் சென்றிருக்கிறது. சீனாவின் புகழ்பெற்ற பீங்கான்போர்வீரர்கள் சிலைத்தொகையில் எளிய படைவீரர்களேகூட  ஏராளமாக ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். இடைப்பட்டைகள் ,,கால்பட்டைகள் தோலால் ஆன காலணிகள் அவற்றில் உள்ளன. அவை கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள். அதாவது நம் சங்ககாலம் தொடங்கும்போது. குறிப்பாகச் சொல்லப்போனால் நம் கீழடி பண்பாட்டின் காலகட்டத்தில். அன்றே சீன உடை என்பது நாம் ஒரு கிராமமே அணியும் அளவுக்குத் துணியால் ஆனதாக இருந்தது.

 

சீனச் சிலைகளில் , குறிப்பாக தெய்வச்சிலைகளில், ஆடைகளின் நெளிவுகளும் சுருக்கங்களும்  விரிந்து விரிந்து நெளிந்து பரவியிருப்பதைக் காணலாம். அந்த ஆடைப்பெருக்கம் ஜப்பானியர்களின் பிற்காலக் கிமோனோக்களில் தெரிகிறது. அருங்காட்சியகம் வழியாக கிமோனோக்களின் பரிணாமத்தைப் பார்த்துக்கொண்டு செல்வது ஒரு நல்ல வரலாற்றுத் தரிசனம். கிமோனோக்கள் பிற்காலத்தில் வாள்களையும் கவசங்களையும் மறைக்கும் அளவுக்குப் பெரிதாக ஆகிவிட்டன. போர்க்களத்தில் போரிடுகையில் தடையாக ஆகாதபடி எளிதானவையாகவும் மாறின

 

இடைக்காலத்தில் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் கிமோனா ஆண்களுக்கான இரவாடையாக இருந்திருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கிமோனோ அணிந்து தூங்கியிருக்கிறார். இப்போது நாமும் கிமோனா அணிகிறோம். கராத்தே , குங்ஃபு பயில்பவர்கள் அணியும் ஆடை கிமோனாவின் இன்னொரு வடிவம்தான். நான் தங்கும் நட்சத்திர விடுதிகளில் இரவாடையாக வெண்ணிற கிமோனா வைக்கப்பட்டிருக்கும். சும்மா அதை அணிந்துகொள்வதுண்டு. இரவில் உடல் இறுக்கமான ஆடைகள் இல்லாமல் இருப்பது ஒரு விடுதலை. இதை எழுதும்போதும் கிமோனா அணிந்திருக்கிறேன்,

 

 

அயலவரின் விழிகளால் நோக்கினால் ஜப்பானியக் கலாச்சாரம் என்பது சீனக்கலாச்சாரத்தின் செறிவூட்டப்பட்ட ஒரு துளி என்றே தோன்றிக்கொண்டிருக்கிறது. சீனாவில் இல்லாத ஜப்பானில் மட்டுமே இருக்கும் எதுவும் இல்லை. சீனாவிலிருந்து வருவது ஜப்பானில் நுண்ணிய மேம்பாடு ஒன்றை அடைகிறது, அவ்வளவுதான். பட்டு,பீங்கான், தேநீர், கன்ப்யூஷியஸிஸம், தாவோயிசம், பௌத்தம் எல்லாமே.

 

ஜப்பானிய அருங்காட்சியகங்களில் வெவ்வேறுவகை கடானாக்கள் நிஞ்சாக்கள் [நிஞ்சாட்டோ] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக அருங்காட்சியகங்களில் பழைமையான படைக்கலங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இங்கே நான் கண்ட தனிச்சிறப்பு என்னவென்றால் அவற்றை கம்மியர்களின் பெயர்கள், அவர்களின் தொழிற்குழுக்களின் பெயர்களுடன் பொறிக்கப்பட்டுள்ளன. கம்மியர்கள் பெருஞ்சிற்பிகளுக்கு நிகராக மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

கடானா என்பது அணிவாள். ஷோகன்கள் அணிவது. சடங்குகளுக்கும் கொலுவீற்றிருப்பதற்கும் உரியது அதன் உறைகள் மிகமிக அழகானவை. உலோகத்தால் செய்யப்பட்டு மேலே அரக்கு அலங்காரம் பதிக்கப்பட்டவை.கடானா என்றால்  பெரியவாள் என்றுதான் பொருள்.நிஞ்சா என்றால்சாதாரணப் போர்வீரன்.தற்கொலைப்படைக்கும் இப்பெயர் உண்டு. அவன் வாள் நிஞ்சாட்டா எனப்படுகிறது. பேச்சுவழக்கில் அதுவும் நிஞ்சா என்று சொல்லப்படுகிறது.

 

நாம் ஏராளமான சினிமாக்களில் கடானக்களையும் நிஞ்சாக்களையும் பார்த்திருப்போம். ஜப்பானை நாம் அவர்களின் போர்க்கலை வழியாக மட்டுமே அறிந்திருக்கிறோம். வணிகசினிமா அவ்வாறு ஜப்பானை வரையறை செய்கிறது. இந்தியாவை ஹாலிவுட் எப்போதுமே சாமியார்களின் நாடாக வரையறைசெய்வது போல

ஜப்பானிய ஆரம்பகால புத்தர்சிலைகள் எளிமையாக மரத்தால் செய்யப்பட்டவை. திபெத்திய பௌத்தபோல விந்தையான வடிவங்கள் இல்லை. அலங்காரம் மிக்க சிற்பங்களும் இல்லை.ஜப்பானிய பௌத்தம் தாந்த்ரீகம் நோக்கிச் செல்லவில்லை. வஜ்ராயனம் இங்கே வந்திருக்கிறது. வஜ்ராயனத்தின் சுவடிகள் இங்குள்ள மடாலயங்களில் கிடைத்துள்ளன. ஆனால் வேரூன்றவில்லை.

அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். முதன்மையாகத் தோன்றுவது இங்கிருந்த தொல்மதம் ஆவி வழிபாடு மூத்தோர்வழிபாடு மட்டுமே கொண்டிருந்த்து என்பதே. திபெத்திலும் பூட்டானிலும் பௌத்தம் செல்வதற்குமுந்தைய பான் மதம்  பலவகையான பூதவடிவங்களை, எதிர்மறைத்தெய்வங்களை வழிபட்டது. அவை பௌத்தத்தால் உள்ளிழுக்கப்படுவதற்கு வஜ்ராயனம் தேவையாக இருந்தது

 

ஜப்பானிய ஆரம்பகால புத்தர்கள் கொஞ்சம் தயக்கத்துடன்தான் இருக்கிறார்கள். கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கும் ஒரு புத்தரைக் கண்டபோது என்ன செய்வது இந்த மண்ணில் என சிந்திக்கிறார் என்று தோன்றியது. பின்னர்தான் அவர்கள் பேருருக் கொண்டார்கள். ஆனாலும் இருபக்கமும் போதிசத்வர்களின் அணிப்பேருருவங்கள் இல்லாமல் கொஞ்சம் அடங்கித்தான் தெரிகிறார்கள். ஜப்பானில் எங்கும் தாராதேவியைக் காணவில்லை.

 

நித்யாவின் மாணவரான டாக்டர் தம்பான் [சுவாமி தன்மயா] ஒரு வகுப்பில் சொன்னார். பௌத்தம் அகிம்சையின் மதம், அறிவார்ந்த மதம். ஆனால் அதில் ஒரு தாக்கும்தன்மை, வெல்லும்தன்மை உண்டு. அதாவது ரஜோ குணம் உண்டு.  அது மென்மையான சமணத்தில் இருந்து முரண்பட்டு எழுந்த்து அதனாலேயே. அது சமணத்தின் கூர்முனை. ஆகவேதான் பௌத்தம் மிக இயல்பாக போர்க்கலைகளை உள்ளிழுத்துக்கொண்டது. மந்திரதந்திரங்களை உள்வாங்கிக்கொண்டது. ஊனுணவை ஏற்றுக்கொண்டது

 

ஆகவேதான் அது மலைப்பகுதிகளில் வேரூன்றியது. பௌத்ததில் இருந்து வன்முறையை நீக்கவே முடியாது என்பது தம்பானின் கருத்து. அவர் பல பௌத்த நாடுகளில் பணிபுரிந்தவர். பௌத்த மரபில் வன்முறை உள்ளடங்கிச் செயல்படும். அது தனக்கெதிரான வன்முறையாகக் கூடச் செயல்படலாம். கருத்துசார்ந்த பற்றுறுதியாக வெளிப்படலாம். ஆனால் எவ்வகையிலோ அது உள்ளே இருக்கும். ஏனென்றால் அது தன் மதத்தவர்களுக்கு மேல் துறவிகளை ஒரு சிறப்புச்சமூகமாக நிலைநிறுத்துகிறது. ‘பௌத்த கம்மிஸார்கள்’ என்று தம்பான் சொல்வதுண்டு.

 

எனக்கு அன்றும் இன்றும் ஏற்பு உடைய கருத்து அல்ல இது. ஆனால் இந்த அருங்காட்சியகத்தில் ஒருபக்கம் புத்தரும் மறுபக்கம் கடானாக்களுமாக பார்த்துச் செல்கையில் திபெத், சீனா, இலங்கை, தாய்லாந்து, பர்மா முதல் ஜப்பான் வரை பௌத்தம் அடைந்த மாற்றம் என்பது வன்முறையை, அரசதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் பரிணாமம்தானா என்று தோன்றியது.அந்தப் போக்குதான் மைய ஓட்டம். அதற்கு எதிராக பௌத்தத்திற்குள்ளேயே உருவான எதிர் ஒழுக்குதான் ஜென். பௌத்தம் தனக்கு எதிராக தானே போட்டுக்கொண்ட ஓட்டுதான் ஜென்.

 

அத்தனை கடானாக்களிலும் வடித்த கம்மியர்களின் பெயர்கள் இருப்பது அவை கலைப்படைப்புகளாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்று.இந்தியாவில் நம் மாபெரும் ஆலயங்களை அமைத்த சிற்பிகளின் பெயர்கள்கூட மிகப்பெரும்பாலும் ஆவணபடுத்தப்படவில்லை. விதிவிலக்கு, ஹொய்ச்சாளக் கோயில்கள். அங்கு அவற்றை கட்டிய சிற்பிகளின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளன. கம்மியர்களுக்கு ஜப்பானில் இருந்த மதிப்பு அக்கலை எப்படி பேணப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஜப்பானிய வாட்களில் பல ஐநூறாண்டுகளுக்கும் மேலாக பழமை கொண்டவை. ஆனால் கண்ணாடிபோல மின்னிக்கொண்டிருக்கின்றன. நோக்கினால் கண்களில் கீறல் விழுந்துவிடுவதுபோல கூர் கொண்டிருக்கின்றன

 

ஜப்பானிய கடானாக்களும் நிஞ்சாக்களும் அடைந்த பரிணாமத்தை அங்கே காணலாம். நீளமான எடைமிக்க வாள் மெல்ல மெல்ல சிறிதாகிறது, எடை குறைந்ததாகிறது. தாழைமடல்போல வாள்நடுவே ஒரு ஓடைபோன்ற வளைவு உருவானதுமே அது நீண்டு விரைத்து நிற்க எடை தேவையில்லை என ஆகியிருக்கிறது. தொடக்க கால வாட்கள் இடையிலிருந்து கீழ்நோக்கி தொங்கவிடப்பட்டன. நம்மூர் வழக்கம்போல. அவை வெளியே தெரியும். பின்னாளில் வாட்கள் இடையில் செருகப்பட்டு மேல்நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டன. கிமோனோவுக்குள் இருக்கும் வாளை வெளியே பார்க்க முடியாது. புரவியூர்வதற்கும் எளிது. கிமோனோக்களும் கடானாக்களும் பௌத்தமும் இணைந்து பரிணாமம் கொண்டன என நினைத்துக்கொண்டேன்.

வாளுறைகளை வாளைத் தவிர்த்துவிட்டு பார்க்க விழிகளைப் பழக்கினேன். அவை ஆண்களுக்கான நகைகள். குலம், செல்வம், அதிகாரம் ஆகியவற்றின் அடையாளங்கள் . செம்பு முதலிய உலோகங்களில் செய்யப்பட்டு அருமணிகள் பொறிக்கப்பட்டவை. அவற்றைப் பார்க்கப்பார்க்க அவை பண்டைய காவியங்களுக்கு நிகர் என தோன்றியது. பழங்காலக் காவியங்கள் எல்லாமே வன்முறைக்குமேல் ஏற்றப்பட்ட அணிகள் அல்லவா? மகாபாரதம் ராமாயணம் இலியட் ஒடிஸி எல்லாமே?

அருங்காட்சியகத்தில் ஆசியச் சிற்பங்களின் பகுதி புத்தர் ஆசியாவில் அடைந்த உருமாற்றத்தை மாபெரும் காட்சிவெளியாகக் காட்டுகிறது. அது அப்பகுதியின் ஆன்மிக வளர்ச்சியின் பதிவும்கூட. ஷிண்டோ, தாவோ தெய்வங்கள் இயற்கைச் சக்திகளின் வடிவங்கள். ஆகவே ஆவேசமும் கொடூரமும் அருளும் கொண்டவை. புத்தர் அவற்றை தன்னுடன் சேர்க்கையில் அவரும் அவ்வியல்புகளை அடைகிறார். புருவம் நெரித்து நோக்கும் போதிசத்வர்கள் சீறும் தேவர்கள் என பௌத்தச் சிற்பக்கலையும் விரிகிறது. பின்னர் அமுதகலம் ஏந்திய ஊழ்க புத்தர். அருளுரைத்து அமர்ந்திருக்கும் வைரோசனர். ஜென் வரை நீளும் ஒரு கனிதல். எஞ்சும் அமைதி.

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியத்தொகுப்பு மிக அரிதானது. ஜப்பானின் புகழ்பெற்ற ஓவியங்கள் இங்குள்ளன.  ஜப்பானிய ஓவியக்கலையின் வளர்ச்சிப் பாதையை இங்கே பார்க்கலாம். கரிய தீற்றலாக அமைந்த ஜப்பானிய பழங்கால ஓவியங்களை அருங்காட்சியகத்தில் பார்த்தோம். ஓவியங்களுடன் ஓவியப் பரப்புக்கு உள்ளேயே எழுத்துக்கள் அமைவது பழங்க்கால ஜப்பானிய மரபு. ஏனென்றால் அவ்வெழுத்துக்களும் ஓவியங்களே. ஜப்பானிய ஓவியக்கலை சாம்பல் வண்ண பூச்சிலிருந்து மெல்லிய நீர் வண்ணத்திற்கும் தைல வண்ணத்திற்கும் வந்து இன்றைய வடிவை எப்படி அடைந்தது என்பதை காண முடிந்தது.

ஜப்பானிய மொழியில் கீற்றோவியக்கலை சுமி [sumi-e] என அழைக்கபடுகிறது. இதன் அழகியல் என்பது அலட்சியமான தீற்றல்கள், ஆனால் மிகமிக நுட்பமாகவும் கவனமாகவும் வரையப்படுபவை. பெரும்பாலும் கரிய மையால் மங்கலான பின்புலத்தில் வரையப்படும் மூங்கில் இலை, மூங்கில் தண்டுகளின் சித்திரங்கள் இவை. இவற்றுடன் கவிதை வரிகளும் இணைக்கப்படும். வீட்டில் தொங்கவிடுவதற்கானவை. கையால் செய்யப்பட்ட காகிதங்களில் இவை பெரும்பாலும் வரையப்படுகின்றன. முற்காலங்களில் துணியிலும் மரப்பட்டைகளிலும் வரையப்பட்டன.

ஜப்பானியக் கலையின் இயல்பென்பதே தீற்றல் என்பதுதான். மிக எளிதாக தீற்றி அழகுறச்செய்வது மூங்கில் இலை. பல ஓவியங்களில் வெறுமே தூரிகையை வைத்து ஓர் இழுப்பு இழுத்து இலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். மூங்கில் ஓவியங்கள் மங்கலங்களாகவும் வளச்சின்னங்களாகவும் ஜப்பானியர்களால் கருதப்படுகின்றன. ஐரோப்பியர்களுக்கு Still life ஓவியங்கள் எப்படியோ அப்படி

இக்கலை கிபி ஆறாம் நூற்றாண்டு அளவில் சீனாவின் டாங் ஆட்சிக்காலத்தைய கலாச்சார எழுச்சியில் உருவாகி கீழைநாடுகள் எங்கும் சென்றது எனப்படுகிறது. சீனாவின் மூங்கில் ஓவிய மரபின் நீட்சியே சுமி. ஆனால் சுமியில் பின்னாளில் ஜென் பௌத்தத்தின் பார்வைகள் ஊடுருவின. ஜென் பௌத்த மரபின் தரிசனங்களான எளிமையான இருத்தல், தடையில்லாமல் திகழ்தல் ஆகியவற்றுக்கான குறியீடாக மூங்கில் இலைகள் உருமாறின.ஜப்பானிலிருந்து எதையாவது ஒன்றை அடையாளமாக வாங்கி வரவேண்டுமென்றால் மூங்கில் ஓவியத்தை தான் என்று சொல்லவேண்டும்

 

[மேலும்]

முந்தைய கட்டுரைபார்ஸிலோனாவில் நடை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6