ஜப்பான், ஒரு கீற்றோவியம் -8

Katsushika Hokusai வரைந்த ஓவியம்

 

ஜப்பானியப் பயணத்தை திட்டமிடும்போதே என் உள்ளத்தில் இருந்தது ஃப்யூஜியாமா. வெவ்வேறு திரைப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் அந்த தொன்மையான எரிமலையை நான் பார்த்திருக்கிறேன். ஒரு படத்தில் ஜாக்கிசான் மாபெரும் பலூன் ஒன்றுக்குள் புகுந்து அதிலிருந்து உருண்டே கீழே வருவார்.

மிகச்சிறுவனாக இருந்த போது பாடப்புத்தகத்தில் உலகின் மகத்தான் எரிமலைகளில் வெசூவியஸ், ஃபியூஜியாமா என்று படித்த நினைவு. கலைக்களஞ்சியத்தில் ஃப்யூஜியின் கருப்பு வெள்ளை படங்களைப் பார்த்திருக்கிறேன். மீண்டும் சில ஆண்டுகள் கழித்து நேஷனல் ஜியோகிராபிக் இதழில் இருபக்கங்களிலாக விரிந்த மாபெரும் வண்ணப்படத்தை பார்த்த நினைவு. பனி படிந்த அதன் கூம்பு முனைக்கு அடியில் கல் உருகிக்கொண்டு இருக்கிறதென்பதன் விந்தையை நெடுநாட்களாக உள்ளத்தில் ஓட்டியிருக்கிறேன்.

வெசூவியஸ் வெடித்து பாம்பி நகரம் அழிந்ததை பற்றி பாம்பியின் கடைசிநாட்கள் என்னும் நாவலை [லிட்டன் பிரபு] பள்ளிநாட்களில் வாசித்தேன். கனடா அருங்காட்சியகத்தில் ஒருமுறை பாம்பியின் எரிமலைக் குழம்பில் சிக்கிக்கொண்டு பாறை வடிவமாக எஞ்சியவர்களை ரப்பர் மாடல் ஆக வடித்து காட்சிக்கு வைத்திருந்தனர். ஒருகணத்தை அப்படியே கல்லில் வடித்தது போன்ற தோற்றங்கள். ரொட்டிக்கடைக்கார் ரொட்டியை வெட்டிக்கொண்டிருக்க அந்த ரொட்டி கூட அதே வடிவில் இருந்தது.

இந்த இடங்களுக்கெல்லாம் செல்ல முடியும் என்றும், அதற்கான வாய்ப்பு அமையும் என்ற எண்ணமும் எப்போதும் எனக்கு இருந்ததில்லை. எனது இளமைப்பருவத்தில் வெளிநாடு செல்வதென்பது கனவிலும் நிகழ இயலாத ஒன்று. ஆனால் நான் ஏறும் மூன்றாவது எரிமலை இது. மலைகள் அனைத்துமே மகத்தானவைதான் மனிதனை மிகச்சிறிதாக ஆக்குபவை. ஆனால் அனலை உள்ளடக்கிய எரிமலை என்பது அதற்கும் அப்பால். அனல்தூணென எழுந்த சிவம் அது.

அமெரிக்காவின் மௌண்ட் சாஸ்தா நான் ஏறிய முதல் எரிமலை. அதைப்பற்றி எப்படியும் ஓரிரு வாரங்களில் ஒருமுறை உணர்வு பூர்வமாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன். நண்பர் திருமலைராஜன் அவர்களுடன் இருமுறை அந்த எரிமலையில் ஏறும் வாய்ப்பு கிடைத்தது. அந்த எரிமலை வெடித்து துப்பிய கற்குழம்புஉறைந்த பாறையின் அலைகளுக்கு மேல் நடந்ததை நினைவுறுகையில் கால்களில் ஒரு கூச்சத்தை உணர்கிறேன்.  குளிர்ந்த அனல்! கல்லென்றான தழல்! அதன் அருகே அது உமிழ்ந்து பிறக்க வைத்த ஒரு குட்டி எரிமலை. யானை அருகே கன்று போல.

ஃபியூஜியாமாவுக்குச் செல்ல வேண்டுமென்று நினைத்தாலும் கூட வெண்முரசு எழுதிக்கொண்டிருந்த கொந்தளிப்பான நாட்களில் இதை நான் பயணத்திட்டத்தில் சேர்க்கும்படி சொல்லவில்லை. சொல்லப்போனால் பயணத்திட்டமே என் உள்ளத்தில் இல்லை. ஃப்யூஜி எவ்வளவு தூரம் இருக்கிறதென்பது தெரியவில்லை. ஹிரோஷிமாவில் இலிருந்து திரும்பி வந்த மறுநாள் ஃபியூஜியாமாவுக்கு செல்லலாமென்று செந்தில் சொன்னபோது ஓர் அலையென கைலாச மலைமுடியும் திருவண்ணாமலையும் மௌண்ட் சாஸ்தாவும் நினைவில் எழுந்தன. மகாபாரதம் சொல்லும் கந்தமாதன மலையும்.

ஃபியூஜியாமா இறுதியாக வெடித்து முந்நூறாண்டுகள் ஆகின்றன. ஜப்பானியர்களுடைய பண்பாட்டில் ப்யூஜிக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஜப்பானிய பண்பாட்டின் தலைக்கு மேல் எழுந்து நின்றிருக்கும் மாபெரும் இறைசாட்சி அது. அவர்கள் அதை ஃபியூஜி சான் என்று சொல்கிறார்கள் .ஃபியூஜி அவர்கள் என்று தமிழில் மொழி பெயர்க்கலாம். ஜப்பானியரின் மூன்று புனித மலைகளில் ஒன்று. [டேட் மலை ஹாக்கு மலை ஆகியவை பிற]

ஃப்யூஜி 12,389 அடி உயரம் கொண்டது. ஃப்யூஜி என்றால் அழிவில்லாதது, என்றுமுள்ளது என்று பொருள் என்கிறார்கள். தீயின் ஆசான் என்னும் பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஷிண்டோ தொன்மத்தின்படி நிலையற்று கொந்தளித்துக்கொண்டிருந்த மண்ணில் ஒரு நாணல் போல் எழுந்த Kuninotokotachi என்னும் தெய்வத்தின் துணைவியான Ninigi தான் ஃப்யூஜியின் தெய்வம். ஃப்யூஜி எரிமலையை கேள்விப்படாதவர்கள்கூட ஃப்யூஜி புகைப்படச் சுருள் நிறுவனத்தை அறிந்திருப்பார்கள்.

 

செந்திலும் அவருடைய நண்பர் சந்தோஷும் நாங்களும் காரில் கிளம்பினோம். டோக்கியோவிலிருந்து நூறு கிமீ தொலைவில் உள்ளது ப்யூஜி. மூன்று மணிநேரத்தில் ப்யூஜியை சென்றடைந்தோம் நாங்கள் வந்தது சற்று பிந்தி என்பதனால் ஜப்பானிய செர்ரிபிளாசம் கொண்டைகள் மலர் உதிர்ந்து முடித்துவிட்டிருந்தன. இலைகள் தளிர்கள் சூடி நிற்க காடு பச்சை நிறத்தில் பகல் ஒளியில் கண்கூச வைத்தது. ஆனாலும் சுற்றுலா மனநிலை மாறவில்லை. கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்பகுதியில் மலையேறும் முகாம்களும் வெவ்வேறு வகையான நட்புக்கூடல்களும் பயிற்சி முகாம்களும் நடந்துகொண்டிருந்தன.

ஃப்யூஜியின் உச்சியில் ஐந்தாம் அடுக்கில் பனிப்படலங்கள் தொடங்கும் இடம் வரைத்தான் கார் செல்லும். அங்கு மூன்றடுக்கு கட்டிடமாக ஒரு அலுவலகம். அருகே வண்டி நிறுத்துமிடங்கள். நாங்கள் சென்றபோது குறைவானவர்களே அங்கிருந்தார்கள். அங்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் பருவமல்ல. கீழே நாங்கள் பார்த்தவர்கள் மலையேற்றம் செல்பவர்கள். பலவகை பயிற்சிகள் எடுப்பவர்கள். ஆயிரமாண்டுக் காலமாக சமுராய்கள் ஃப்யூஜியின் அடியில்தான் ஆயுதப்பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்திய இலக்கியங்களில் மிக அதிகமாக வர்ணிக்கப்பட்ட மலைமுடி கைலாயம்தான். பிற மலைமுடிகள் பின்னாளில்தான் புகழ்பெற்றன. கைலை மலைமுடி நமக்கு மதம்சார்ந்த முக்கியத்துவம் கொண்டது. பாரதவர்ஷம் மீது வைக்கப்பட்ட மணிமுடி போன்றது. காளிதாசன் தன் சொற்களால் அதை இந்திய உள்ளத்தில் கனவென நிலைநிறுத்தினான்.

ஃப்யூஜி அதேபோல ஜப்பானியர்களுக்கு முக்கியமானது. ஜப்பானின் ஓவியங்களில் பல கோணங்களில் ஃப்யூஜி வரையப்பட்டுள்ளது.ஜப்பானிய ஓவியர் ஹ்குசாய் [Hokusai 1760–1849] வரைந்த 36 கோணங்களில் ஃப்யூஜி என்னும் ஓவியநிரை பெரும்புகழ்பெற்றது. அந்த ஓவியங்களின் தொகுப்பே ஒரு மதநூல் அளவுக்குப் புகழ்பெற்றுள்ளது.  அவற்றில் சுனாமி அலைகள் நடுவே ஃப்யூஜி தெரியும் ஓவியம் கிட்டத்தட்ட ஜப்பானின் அடையாளமாகவே ஆகிவிட்ட ஒன்று.

வண்டியை நிறுத்திவிட்டு வெளியே இறங்கிய போது முதல் முறையாக ஜப்பானில் நல்லகுளிரை உணர்ந்தேன். கண்களில் நீர் வரும் அளவுக்கு ஒளியுடன் பனி சரிந்து படர்ந்திருந்தது. ஃப்யூஜியின்மேல் எறியவர்கள் வளைந்த பனிச்சரிவுப்பாதை வழியாக கண்ணாடிப் பொருக்கில் கால்கள் புதைய இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஊன்றி செல்வதற்கான கூர்க்குச்சிகளும் பனியில் புதையாத அகன்ற காலடிகள் கொண்ட செருப்புகளும் அணிந்திருந்தனர்.

ஃப்யூஜி தொலைவிலிருந்து பார்க்கையில் சீவப்பட்ட பென்சில்முனைபோல கூரியது. அங்கிருந்து பார்க்கையில் பரந்தகன்ற மலைமுடி. ஆனால் அதன் சரிவுகள் அந்த அணுக்கத்தில் கூட செங்குத்தானவையாகவே தோன்றின .மேலே ஏறிச்செல்வதற்கு சில குறிப்பிட்ட வழிகள் உள்ளன. வழிகாட்டி உதவியுடன் அந்த வழியாகவே தான் மேலே செல்ல இயலும்.

பனிமலையில் சற்று ஏறி செல்லவேண்டும் என்று தோன்றியது. நான் அணிந்திருந்த செருப்புடன் செல்வது அவ்வளவு உகந்ததல்ல என்று செந்தில் சொன்னார். இருந்தாலும் ஃப்யூஜியின் பனியில் ஏறாமல் திரும்பி வந்தால் ஒரு மனக்குறை ஏற்படும் என்று தோன்றியது. ஆகவே நானும் செந்திலும் முட்கம்பிவேலியை ஏறிக்குதித்துப் பனிவழிந்து படிந்திருந்த மாபெரும் வெள்ளிவிளிம்பு வழியாக ஏறிச்சென்றோம். ஃப்யூஜியின் வெண்ணிறச் சடை வழியாக ஏறும் பேன்கள்போல.

கால்கள் நன்றாக வழுக்கும் என்பது தெரிந்ததனால் கூடுமானவரை ஆழ ஊன்றி கைகளை விரித்து கவனமாக நடந்தேன். செந்தில் இருமுறை சறுக்கி விழுந்தபோதும் கூட நான் விழவில்லை. பனியில் ஏறுவதைப்போல நுரையீரலை வாயில் உணர வைக்கும் செயல் பிறிதொன்றில்லை.

நமீபியாவில் மணல் குன்றுகளில் ஏறியிருக்கிறேன். அதுவும் கடினமானதே. நம் உந்துவிசையில் பெரும்பகுதியை மணல் உள்வாங்கி இழுத்துக்கொள்ளும். ஆனால் பனி இன்னும் மென்மையானது. கால் வைத்ததும் முழுவிசையும் அது உள்வாங்கி விரிந்து அகன்றுவிடுகிறது. அடுத்த காலை எடுத்து வைப்பதற்கு மும்மடங்கு விசை தேவைப்படுகிறது. கண்ணால் பார்த்தால் மிகக்குறைந்த தொலைவே வந்திருப்போம், அதற்குள் மூச்சிரைத்து உடலெங்கும் இதயத்துடிப்புகள் அதிரும். குளிர் சூழ்ந்திருக்கையிலும் உடல் வெம்மை கொண்டிருக்கும்.

ஒரு சிறு பனிப்படுகையை கடக்க முற்பட்டேன். காலை நன்கு அழுத்தி ஊன்றி வைத்ததாக நினைவு என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் பனிவெளி சற்றே புரண்டது. நான் நிலத்தில் விழுந்திருந்தேன் பொருக்குப் பனியானதால் அடிபடவில்லை. ஆனால் பொருக்குபனியில் கால் சுளுக்கிவிடவே வாய்ப்பு. நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

 

 

கைகளை ஊன்றி மேலெழுந்து மீண்டும் நடந்து சென்று பனிவெளி முற்றிலும் சூழ்வது வரைக்கும் ஏறி நின்றேன். சுற்றிலும் பனி விழுந்த போது வேறொரு ஃப்யூஜியை உணர முடிந்தது. கீழிருந்து நோக்கினால் ஃப்யூஜியின் கூர்முனை வானைக்குத்தி கிழிப்பது போலவே தோன்றும். மேலேறிய பிறகும் கூட அந்த கூர்மையை உணர முடிகிறது என்பது தான் அதன் சிறப்பு.

ஃப்யூஜியின் மேலேறிச்செல்ல ஒரு முழு நாளாகும். அதன் எரிமலை வாய்க்குழிக்குள் இறங்குவதற்கு மேலே முகாமிட வேண்டியிருக்கும்.செந்தில் சென்றிருக்கிறார். ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டிய இடுங்கிய வழிகள் உள்ளன என்று அவர் சொன்னார்.

கீழிறங்கி வந்து அங்கிருந்த உணவகத்தில்  யாக்கு ஷோபா என்னும் [yaku shoba] வறுத்த நூடில்ஸும் கொத்திய மாட்டிறைச்சியும் சாப்பிட்டேன். உணவகத்தை முழுக்க முழுக்க முதிய பெண்கள்தான் நடத்துகிறார்கள். அங்கிருந்த வெப்பக்காற்று ஊற்றின் அருகே நின்றபோது குளிர் எவ்வளவு இதமானது என்று புரிந்தது.

ஃப்யூஜியில் இருந்து திரும்பி வந்து கவாகுச்சி கோ (Kawakuchi –Ko) என்னும் ஏரிக்கரைக்குச் சென்றோம். மலைகள் சூழ்ந்த பெரிய ஏரி பனியுருகி வரும் நீரால் நிறைந்திருந்தது. அங்கு  படகு பயணத்துக்கான ஏற்பாடுகள் இருந்தன. நீரை நோக்கியபடி திறந்திருக்கும் உணவகங்கள். ஜப்பானின் ஓய்வுநிலையங்களில் ஒன்று அது.கச்சி கச்சி (Kachi Kachi Yama) என்னும் மலை அருகே இருக்கிறது. கீழிருந்து கயிற்றுக்கூண்டுகளில் ஏறி மலை உச்சிக்குச் சென்றால் அங்கிருந்து ஃப்யூஜியைப் பார்ப்பதற்கான பார்வைப்பகுதிகள் உள்ளன.

அந்தப் பொழுதில் அங்கு சுற்றுலாப்பயணிகள் எக்களித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் 1980களில் ரஜினிகாந்த் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார். பெல்பாட்டம் பாண்ட், வளைந்த காதுள்ள சட்டை, ப வடிவ மீசை. அரிதாக மலேசியர்களை அவ்வாறு பார்ப்பதுண்டு. அவர் மலேசியர் என்று எண்ணினேன்.

குடும்பத்துடன் வந்திருந்தார். தன் குடும்பத்தை எங்களிடம் புகைப்படம் எடுக்கும்படி சொன்னார். ஃப்யூஜியாமா எனும் மாபெரும் அட்டையைப் பிடித்தபடி அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அறிமுகம் செய்து கொண்டபோது அவர் சென்னையில் இருப்பதாக சொன்னார். அவருடைய மகன் டோக்கியோவில் பணிபுரிகிறார். விருந்தினராக அங்கு வந்திருக்கிறார். சுற்றுலாவை மிக உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்தார்.

உண்மையில் அவரைப்போன்ற சற்று விந்தையானவர்கள் உற்சாகமானவர்களும் கூட. அந்த மாறுபட்ட தன்மை அவர் தன் இளமையை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சி. எண்பதுகளில் ரஜினிகாந்த் போல தன்னை மாற்றிக்கொண்டவர் ரஜினிகாந்த் மாறிய பிறகும் அவ்வாறே நீடிக்கிறார்.

அவருக்கு அறுபதை ஒட்டிய வயதிருக்கும் ஆனால் பேச்சும் கூச்சலும் குடும்பத்துடன் கொஞ்சலும் முப்பது வயதுக்குரியவருக்குரியவை. முற்றிலும் பிறரைப்போலவே இருப்பவர்கள், பொதுவாக தனித்தன்மையேதும் இல்லாதவர்கள், சலிப்பூட்டுவார்கள். அந்த மலைஉச்சியில் அவ்வாறு ஒரு தமிழரை பார்த்தது உற்சாகமாக இருந்தது.

பார்வை மாடங்களிலிருந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோணங்களில் ஃப்யூஜியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் அமைதி. பொன்னிற முகில்களால் சூழப்பட்ட அதன் தண்மை. அந்தி இருள அது துயர் கொள்வ்து போலிருந்தது. நோக்கிக் கொண்டிருக்கையிலேயே முகில்களின் வண்ணங்கள் மாற ஃப்யூஜியின் பனிபாளங்கள் செம்மை கொண்டன. உள்ளிருந்து எழும் வெப்பத்தால் பனியே அனலானது போல.

நாம் பார்த்த அனைத்து எரிமலைகளும் ஆழ்ந்த  அமைதியில் இருப்பதாக எனக்குத்தோன்றியது. ஓசை கொண்ட எரிமலை ஒன்றை இந்தோனேஷியாவில் பார்த்தேன். மொராப்பி எரிமலை நாங்கள் செல்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் வெடித்திருந்தது. [இரு தீவுகள் ஒன்பது நாட்கள் 11] அதன் மேலேறிச் சென்றுகொண்டிருக்கையில் கேட்டுக்கொண்டிருந்த இடிமுழக்கம் எரிமலையின் வெடிப்புதான் என்பதை எரிமலை வாய்க்குள் நுழைந்த பின்னரே உணர்ந்தேன்.

அந்த எரிமலையின் வாய் மாபெரும் ஏரி அளவுக்கு பெரியது. உள்ளே சென்றால் வெவ்வேறு இடங்களில் குழம்புகள் கொதித்துக்கொண்டிருந்த வெண்துளைகள் வெடித்து கிளம்பி முகில் காளான்களாக மேலே சென்றன. ஓரிடத்தில் உள்ளிருந்து எழும் லாவாவில் நீரை செலுத்தி நீராவியை உருவாக்கி குழாய்களில் செலுத்தி மின்சாரம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் சென்று வந்த சில மாதங்களிலேயே அவ்வெரிமலை முற்றிலும் வெடித்து வழிந்து அதன் சரிவுகளை நிரப்பி விட்டதென்று கேள்விப்பட்டேன்.

நான் அன்று நோக்கியபோது அதன் சரிவுகளில் பல்லாயிரக்கணக்கான லாரிகள் கொண்டு கொட்டியது போலிருந்த ஜல்லிக்கற்கள் எரிமலை வெடிப்பில் உடைந்து வழிந்தவை என்று அப்போது எண்ணக் கடினமாக இருந்தது .எரிமலையின் ஜல்லிப்பெருக்கு கல்வடிவு கொண்டுவிட்ட தண்ணீர் போலவே தோன்றும். அவற்றின் வழிவும் வளைவும் நீருக்குரியவை

எரிமலைகளின் அமைதி ஒருவகையான அமைதியின்மையை நமக்குள் உருவாக்குகிறது. நோக்க நோக்க அந்த உள அசைவு ஓய்ந்து அமைதியை சென்றடையும். எரிமலைகள் தியானத்திற்குரியவை என்று ஏன் கருதப்பட்டன? ஏன் தெய்வங்களாக வழிபடப்பட்டன? அதை அப்போது உணரலாம்.

கயிற்று வண்டியில் கீழிறங்கி வந்து ஓர் உணவகத்துக்காக தேடினோம். ஓர் இந்திய உணவகம் இருந்தது.  ஆனால் பத்து பேர் கூட உள்ளே அமர்ந்து உணவு உண்ண முடியாது. பஞ்சாபியர்கள் என்று தோன்றியது. ஆனால் ஜப்பானில் பல இடங்களில் இந்திய உணவகங்கள் நடத்துவது பாகிஸ்தானியர்கள் என்று செந்தில் சொன்னார். பிரியாணியோ கோழிக்கறியோ எதுவானாலும் குளிர்பெட்டிக்குள்ளிருந்து எடுத்து சூடு படுத்தித்தான் தருவார்கள்

ஒரு ஜப்பானிய உணவகத்திற்குள் நுழைந்து ஜப்பானிய உணவையே அருந்தினோம் வீடு திரும்பும்போது இரவாகிவிட்டிருந்தது. திரும்பி வரும் வழியில் வெவ்வேறுகோணங்களில் ஃப்யூஜியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மெல்ல அது கரைந்து வானில் மறைந்தது. இமையமலைகளைப் பார்க்கையில் அவை கரைந்தழிந்த பின் மங்கலான ஒளியுடன் வானம் எஞ்சியிருக்கும். அந்த பனிப்புகைக்கு அப்பால் மாபெரும் மலையடுக்குகள் உள்ளன என்னும் எண்ணம் வினோதமான கிளர்ச்சியை அளிப்பது. மலைகள் மிகத்திறமையாக ஒளிந்துகொள்ளத் தெரிந்தவை.

 

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11

முந்தைய கட்டுரைடிராகனின் வருகை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-3