அன்புள்ள ஜெயமோகன்,
நலம்தானே?
தங்களுக்கு கடிதம் எழுதி ஒரு மாதம் ஆகிறது. பல மன தடைகளினாலும் சோம்பலாலும் எழுதமுடியவில்லை. ஆயினும் என் சிந்தனை முழுக்க முழுக்க உங்களை மையம் கொண்டே சுழல்கிறது. எந்த ஒரு சிறந்த வரியையோ, இடத்தையோ படிக்கும் பொழுது உங்களிடம் கடிதத்தில் குறிப்பிட வேண்டுமென்றே உடனே தோன்றுகிறது.
ஆனால் சொற்களாக மாற்றும் பொழுது அந்த உணர்வுகள் சிறுமைப்படுகிறது. இதனை எப்படி கடப்பது? ஏனென்றால், தற்போது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ வாசித்து வருகிறேன் “ஒரு வரலாற்றுப் புத்தகம் அறத்தின் ஆன்மா கொண்டு எழுந்து மனசாட்சி முன் பேயாட்டம் போடுவது போல் உள்ளது.”ஒரு முழுமையான நாவல் அனுபவத்தை தொகுத்து எழுதவேண்டுமென்று நினைக்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
கிஷோர்குமார்.
***
அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். காயம் ஆறி, நல்ல உடல் நலத்திற்கு திரும்பி இருப்பீர்கள் என நம்புகிறேன்.
கணினிப் பெட்டி வழியாக துறைமுக கண்டைனர் பெட்டிகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மென்பொருளை நிறுவி மேம்படுத்த கண்டம் தாண்டி வந்துள்ளேன். முழுதான என் விருப்பத்தில் வரவில்லை. பசிபிக் பெருங்கடலின் தொலைவானத்தில் இருந்து எழுந்து உறைந்த பேரலை போன்ற மேகங்களும், ஓக், ரெட் உட் மரங்கள், கடற்பறவைகள், ஏரிகள் என அற்புதமான இயற்கை சூழ்ந்த வான்கூவர், சான்பிரான்ஸக்கோ நகரங்கள். வெளியில் சுற்றவோ, பிடித்ததை படிக்கவோ, நடந்து செல்லும் தொலைவில் இருக்கும் இயற்கையில் மனதைத் தொலைக்கவோ நேரம் ஏற்படுத்த முடியாத வேலை. பகல் முழுவதும் ஒரு சிறிய அறைக்குள் கணினி முன் ஒடுங்கி அடங்கி கிடக்கிறேன்.
எவரோ ஒருவரின் அற்ப தேவைக்காக, எவரோ ஒருவரின் வளர்ச்சி கனவிற்காக, எவரோ ஒருவரின் தன்முனைப்பிற்காக மணிக்கணக்கில் உழைக்கிறேன் என அவ்வப்போது தோன்றுகிறது. ஆனால் இந்தத் தொழில் மூலம் உண்மையிலேயே பெற்ற பொருளாதார விடுதலைக்காகவும், அழுத்தமில்லாத வழக்கமான வேலை நாட்களில் இது எனக்கு அளிக்கும் மிகுதியான பகுதி நேரத்திற்காகவும் அடுத்த சில வருடங்களாவது இந்தப் பணியை விட்டுவிட எனக்கு வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை.
நான் நினைத்த வேகத்தில் மொழியாக்கம் நிகழவில்லை.என்றாலும், பின் தொடரும் நிழலின் குரல்தான் மனம் முழுக்க ஒலிக்கிறது. மொழியாக்கத்திற்கு தொடர்பாக உதவும் என நூறு புதிய ஆங்கில வார்த்தைகளும், எங்கு பொருத்தலாம் என எடுத்து வைத்திருக்கும் இணைப்பு சொற்றொடர்களும் , அடர்ந்த அந்த நாவலின் நீள் கவிதை அத்தியாயமும், பகடி நாடகப் பகுதியையும் அதனை நோக்கி முழு மனவேட்கையுடன் மீண்டும் மீண்டும் இழுக்கிறது.
பொதுவாக மொழியாக்கப் பணியின் பொது என்னுடைய சொந்த அனுபவங்களையும், அழுத்தங்களையும் நான் இடையே அனுமதித்த தில்லை. ஆனால் பி.தொ.நி.கு அருணாசலம், கே.கே.மாதவன் நாயர் இடையே லாவா தெறிக்கும் பகுதிகள் என் சிறு வயதில் என்னுள் ஓடிய எண்ணங்களை சொற்களாக்கி ஒலிப்பெருக்கி என்னுள் ஒலிக்க செய்கிறது. நாவலின் பல தருணங்களை உள்வாங்கி கடக்கும் போது செயலின்றி எண்ணம் உறைந்து நிற்கிறேன்.
மதுரை கோட்ஸ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்த பைபாஸ் ரோடு . சொக்கலிங்க நகர் பகுதிதான் எங்களுடையது., ‘மேதினம் உழைப்பவர் சீதனம்’ என சிவப்பு மல்லி படப் பாடல் வரிகளும், தர்ணா, போராட்டம், மறியல் என மாதந்தோறும் ஏதாவது ஒன்று நடக்கும் பகுதி. . முடிதிருத்தும் கடைக்காரரும் செஞ்சதுக்கத்தில் கொடியேந்தி ஊர்வலம் போகும் கூட்டத்தின் பெரிய புகைப்படம் ஒன்றை சுவர் முழுக்க மாட்டியிருப்பார். நேர்மையாக களப்பணியாற்றிய மார்க்ஸிஸ்ட் தோழர்களும் நிறையவே இருந்திருந்தார்கள்
ஸ்டாலின் , மாவோ புகைப்படங்களை வரவேற்பறையில் மாட்டிய தோழர் ஒருவரும், என் தந்தையும் சேர்ந்து ‘நாளைக்கு புரட்சி வந்தா நீ துப்பாக்கி தூக்கனும்’ என கூறிய போது, உண்மையாகவே 10 வயதில் மெய்சிலிர்த்தது எனக்கு. தீக்கதிர் , செம்மலர் செய்திகள் தான் உண்மை. கம்யூனிஸம்தான் உலகைக் காக்கும் என சிறுவயதில் நம்பிய எனக்கு.பின்னாட்களில் நான் காண நேரந்த நிகழ்வுகளான,
>>உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வட்ட கவுன்சிலருக்காக நின்ற எதிர்கட்சி திமுக ‘பெரியப்பா’ முனியாண்டிக்கும் , மதுரை மேயராக நின்ற கம்யூனிஸ்ட் நன்மாறனுக்கும் பகிர்ந்து வாக்களித்த நான் அதுநாள் வரை பின்பற்றிய அக்காக்களும், , தீவிர மார்க்ஸிஸ்ட் கட்சி தொண்டரின் மகள்களின் சாமர்த்தியமும்
>> கள்ள ஜாதிக்கார பையங்க நாளஞ்சு பேரு கட்சியிலே இருந்தாதான், சண்டைன்னு வந்தா முன்னுக்க நின்னு குத்துப்படுவான், இல்லை குத்து வாங்குவான் என பிள்ளைமார் தோழரும், நாடார் தோழரும் எதிர்கால கட்சித் வளர்ச்சிக்காக திட்டம்போடும் போது கேட்க நேர்ந்ததும்
>> கவிஞர் பட்டத்திற்காக , தோழர் எனப் போலியாக கட்சியில் தொடர்பு வைத்திருந்த என் தந்தை, தானும் குடும்பமு்ம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற போது, பட்டும் படாமல் எப்படி தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதை கண்முன்னால் கண்டதும்
>> கடைசி ஆணியாக, ஹைதராபாத்தில் நான் முதல் முதலாக சந்திக்க நேர்ந்த ஒரு வங்காள நண்பன், திமுகவை விட வாக்குசாவடியை கைப்பற்றுவதில் அறிவியல் நோக்கோடு செயல்படும் ,ரௌடி கட்சி என அறிவி்த்த கணமும்
அந்த சிறுவயது கனவில் இருந்து கசப்பேறி வெளியேற வைத்த கணங்கள். என்னிடம் உழைப்பையும், சேவையையும் கோரி, பதிலுக்கு ஏதும் அளிக்காமல் கைவிட்ட மார்க்கிஸத்திடம் ஒரு முழு விலக்கம் நேர்ந்தது. மொத்த லாபத்தில் தனக்கான பங்கினை கணிசமாக எடுத்துக் கொண்டு, உழைத்த எனக்கும் லாபத்தில் ஒரு பங்கு கொடுத்த முதலீட்டியத்திற்காக உழைப்பதில தவறில்லை என உழைத்து கடந்த வருடங்கள் பல. தொழில்நுட்பத்தை செயல்படுத்தி எங்கோ ஏதோ பிரச்சனையை தீர்க்கும் முதலீட்டிய இந்த தொழில் மூலமாக என் வாழ்வில் நான் பலவற்றைப் பெற்றிருக்கிறேன்.
முதலீட்டிய தொழிலில் இணைந்து வருடங்கள் கடந்து இப்போது இன்று நின்றிருக்கும் என்னை, சொக்கலி்ஙக நகரில் சிறுவயதில் பொன்னுலக கனவுநிரம்பி பரிசுத்தமாக இருந்த ஒரு சிறுவனிடமிருந்து எவ்வளவு தொலைவிலிருக்கிறேன் என ஒரு இலக்கிய வாசகனாக குழப்பத்துடன் எனை நானே எண்ணிப் பார்க்கிறேன்.
உங்கள் வாசகன்,
சிவமணியன்
***