தாடை!
இல்லாத மணிமுடி
மாயாவிலாசம்!
நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்தபடியே உள்ளன. என் உடல்நிலை, உளநிலை குறித்த உசாவல்கள். சுருக்கமாக, நன்றாகவே இருக்கிறேன்
கைகளிலும் கழுத்திலும் இருந்த வீக்கங்களும் கீறல்களும் மறைந்துவிட்டன. உடல்வலியும் நீங்கிவிட்டது. எஞ்சியிருப்பது தாடைவலி. அது அத்தனை எளிதாகச் சீரமையாது. முதல்சிலநாட்கள் மெல்ல முடியாதபடி கடுமையான குத்தல் வலி இருந்தது. ஆகவே டாக்டர் முகம்மது மீரானைச் சென்று பார்த்தேன். தாடையை மண்டையோட்டுடன் இணைக்கும் குருத்தெலும்பில் அடிபட்டிருப்பதாகவும் நாட்பட சரியாகும் என்றும் சொன்னார். எதையும் மெல்லவேண்டாம், நீருணவு மட்டுமே அருந்தவேண்டும் என்றார்.
பின்னர் வாயை திறந்துமூடுகையில் ஒரு கடக் ஒலி கேட்கத் தொடங்கியது. வலியும் அவ்வாறே நீடித்தது. மீரான் அவர்கள் பரிந்துரைக்க பல்- தாடை மருத்துவர் பிரதீப் அவர்களைச் சென்று பார்த்தேன். எக்ஸ்ரே எடுத்தபோது பிரச்சினை ஏதுமில்லை. குருத்தெலும்பில் புண் நீடிக்கிறது, தாடை சற்றே விலகி எலும்புகள் உரசிக்கொள்கின்றன என்று சொல்லி ஐந்தாறுநாள் தாடைக்கு முழு ஓய்வும், வீக்கம் வடிவதற்கான மருந்தும் அளித்தார்
ஆனால் ஐந்துநாட்கள் ஆகியும் தாடையின் கடக் ஓசையும் வலியும் நீடிக்கிறது. மெல்ல முடியவில்லை. ஆகவே நேற்று நரம்பியல் நிபுணர் டாக்டர் கெவின் அவர்களைப் பார்த்தேன். நரம்புகளில் சிக்கல் இல்லை. அடியால் தாடையின் லிகமெண்ட் பழுதடைந்துள்ளது. ஐந்தாறு நாட்களில் சீரடையும். இல்லையேல் ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்றார்
ஆக ,பதினைந்து நாட்களாக திரவ உணவு மட்டுமே. நிகர நன்மை என்றால் தொப்பை குறைந்துள்ளது. நானே திட்டமிட்டிருந்த ‘டயட்’ இவ்வண்ணம் நிகழ்ந்தது என்று கொள்ளவேண்டியதுதான். இரவில் தசைகளை இளகச்செய்யும் மருந்து உண்பதனால் தாடை துயிலில் தொங்கியிருக்க ,வாய் வழியாக மூச்சுவிட்டு, காலையில் தொண்டை அடைத்து குரல் கொஞ்சம் கம்மியிருக்கிறது. பேசும் நண்பர்கள் அதை சோர்வு என எடுத்துக்கொள்கிறார்கள்.
மருத்துவர்கள் வலிநீக்கிகளை அளிக்கிறார்கள். ஆனால் அதை நான் உண்பதில்லை. எனக்கு போதைப்பழக்கம் இல்லை, அலோபதி மாத்திரைகளை பெரிதாக உண்பதுமில்லை. ஆகவே எந்த மாத்திரை சாப்பிட்டாலும் தூக்கம் வரும். வலிநீக்கிகள் இரண்டு நாட்கள் அரைத்துயிலிலேயே வைத்திருந்தன. ஆகவே நிறுத்திவிட்டேன். வலியும் ஒரு நல்ல அனுபவம்தான்
பொதுவாக எழுத்தாளர்கள் எந்நிலையிலும் வலியையோ துயரையோ தன்னை ஆட்கொள்ள விடக்கூடாது என்று நான் நம்புகிறேன். வலியை துயரை வெளிக்காட்டாமலிருந்தாலே போதும். பிறரிடமிருந்து அது நம்மிடம் திரும்பி வராமலிருந்தால் நம்மிலிருந்தும் மறைந்துவிடும். இருக்கும், ஆனால் நாம் கடந்து செல்ல முடியும். நான் நோயில் படுத்திருக்கும் காட்சியை, சோர்ந்து உதவிகோரும் நிலையை இவ்வுலகம் ஒருபோதும் காணப்போவதில்லை.
எழுத்தாளனிடம் எந்நிலையிலும் தன்னிரக்கமும் தாழ்வுணர்ச்சியும் தோன்றலாகாது. இவ்வுலகமே எதிர்த்தாலும், தன் சமகாலத்தால் முற்றாகவே கைவிடப்பட்டாலும் அவன் வாழ்வது வரலாற்றின் மடியில். அந்த தன்னுணர்வை இழந்தால் அவன் தன் எழுத்தை இழப்பான். சூழ்ந்திருக்கும் சிறிய மனிதர்களிடம் எதையேனும் ஒன்றை எதிர்பார்த்தால்கூட அவன் அவர்கள் அளவுக்கே சிறியவன் ஆவான். உதவிகளை மட்டுமல்ல, நீதியை அறத்தை அடையாளத்தைக்கூட அவன் எதிர்பார்க்கலாகாது.
எழுத்தாளனுக்கு எல்லாமே அனுபவச்செல்வங்கள்தான். எல்லாமே எழுத்தினூடாக கடந்துசெல்லத்தக்கவைதான். வலியும் துயரும் மட்டுமல்ல அன்றாடம் சந்திக்கநேரும் சிறுமைகளும்கூட. இத்தனை பெரிய வாய்ப்பு இங்குள்ள பிற எவருக்கும் இல்லை. அதை உதறிவிட்டு பிறரைப்போல் சிறியவற்றில் உழல்பவன் தன் கலையை, பல்லாயிரம் பல்லாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அமையும் கொடையை, மறுதலிக்கிறான்.
சில பயணங்கள் திட்டமிட்டிருக்கிறேன். முன்பே திட்டமிட்டவை. ஆகவே அவற்றைத் தவிர்க்கவேண்டாம் என நினைக்கிறேன். திரவ உணவு எங்கும் கிடைக்கிறது. நடுவே ஒரு சினிமாப்பயணம் மேற்கொண்டேன். விமானநிலையம், விடுதி எங்கும் ஹாட்சாக்லேட் மட்டுமே அருந்தினேன். பசி தெரியவில்லை என்பதுடன் களைப்பும் இல்லை. உணவை தவிர்த்து எப்போதும் அதையே தெரிவுசெய்யலாம் என படுகிறது. மற்றபடி ரசத்தில் அல்லது மோரில் கரைத்த சோறு. பயணம் முடிகையில் பத்துகிலோ குறைந்திருப்பேன். பணம்கொடுத்து ‘டயட்’ பழகும் நடிகர்கள் என்றால் இதற்கு இரண்டு மூன்று லட்சம் செலவாகும். எவ்வளவு பணம் மிச்சம்!
பயணத்திற்குக் கிளம்பும் முன்னர் வெண்முரசு குறைந்தது 15 ஆவது கையில் இருக்கவேண்டும். ஜப்பானியப் பயணக்கட்டுரை வேறு இன்னும் நாலைந்து இருக்கும். ஆகவே வெறிகொண்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கான ஊக்கம் இருக்கிறது. உளச்சோர்வு என ஏதுமில்லை.
மருத்துவர்களைப் பார்க்கச் செல்வதற்கு லக்ஷ்மி மணிவண்ணன், அனீஸ்கிருஷ்ணன், போகன் சங்கர் ஆகியோர் உடன்வந்தனர். மருத்துவர் தேர்வும் அவர்களின் பரிந்துரையின்படித்தான். பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் உடனிருக்கிறார்கள். ஆகவே தனிமையென ஏதும் இல்லை.
மொத்தத்தில் மிகவும் ஊக்கத்துடன் எழுதிக்கொண்டிருக்கும் நாட்கள். இனிய பயணங்கள் வரவிருக்கின்றன. ஆகவே நண்பர்கள் கவலைப்படவேண்டியதில்லை.
தாங்களே என்னை அடித்ததாக எண்ணி எண்ணி பல எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள், அரசியல்செயல்பாட்டாளர்கள், புரட்சியாளர்கள் சமூகவலைத்தளத்தில் மகிழ்ச்சி கொண்டாடியதை அறிந்தேன். அவர்களும் இன்னும் ஒரு பத்துநாட்களுக்கு மேலும் மகிழலாம்.மகிழ்ச்சி அனைவருக்கும் தேவைதானே?