காந்திகளின் கதை

இன்றைய காந்திகள்

அன்புள்ள ஜெ

நவகாந்தியர்கள் பற்றிய நூல் அனைவருக்கும் ஒரு பெரிய படிப்பினையாக அமையும் நூல். நாம் அனைவருக்குமே இன்றைய காலகட்டத்தில் காந்தியத்திற்கு ஏதேனும் பொருள் இருக்கமுடியுமா என்று சந்தேகம் இருக்கும். அந்தச் சந்தேகம் நம்முடைய சொந்த அறியாமை, அச்சம் ஆகியவற்றிலிருந்து எழுவது. நம்மால் முடியாது, ஆகவே காந்தியாலும் முடிந்திருக்காது என்று எண்ணுகிறோம்.

நவகாந்தியர்களின் சாதனைகள் நம்மைச்சுற்றித்தான் நிகழ்ந்துள்ளன. அவை நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கின்றன. நாம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இன்றைக்குத் தகவலறியும் சட்டம் மாறிவிட்டிருக்கிறது. அதை நாளும் பயன்படுத்தும் கம்யூனிஸ்டுகள்தான் காந்தி அயோக்கியர் என்றும் சொல்வார்கள். காந்தி வாழ்பவர் என்பதற்கான ஆதாரம் இந்த கட்டுரைகள்.

அற்புதமான முறையில் அவர்களின் சாதனைகளை தொகுத்து அளித்திருக்கிறார் பாலா. நிதானமாக வாசிக்கவேண்டியது . அது நூல் வடிவம் பெறவேண்டும்

ஆர்.எஸ்.பாலகிருஷ்ணன்

***

அன்புள்ள பாலகிருஷ்ணன்

தன்னறம் சார்பில் விரைவில் நூல்வடிவம் பெறும். அந்நூலை உரிய கைகளுக்குக் கொண்டுசேர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் அவர்கள்தான்

ஜெ

***

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுக்கு நாங்கள் எழுதும் ஒவ்வொரு கடிதமும், ஏதாவதொரு செயலை நாங்கள் துவங்கும் முன்னரோ அல்லது ஏதாவதொரு செயல் முழுமைகொள்ளும்போதோ நிகழ்கிறது. ஒரு நம்பிக்கையை வேண்டிப் பெறுதலுக்காகவே ஒவ்வொரு உரையாடலும் நிகழ்வதாக எங்களுக்குள் நாங்கள் நினைத்துக் கொள்கிறோம். அப்படித் துவங்கி நிறைவுற்றதுதான் உரையாடும் காந்தி மற்றும் தன்மீட்சி புத்தகங்கள்.

அந்நம்பிக்கையின் நீட்சியாக, காந்தியத்தின் கருத்துகளை நவகாலத்தில் உள்வாங்கிக் பயணிக்கும் மனிதர்களைப்பற்றிய கட்டுரைகளை உங்கள் நண்பர் பாலா எழுதித்தொகுத்திருப்பதை உங்கள் வழியாக அறியப்பெற்றோம். ‘நவகாந்தியர்கள்’ என்னும் தலைப்போடு அக்கட்டுரைகளை ஒரு முழுமையான புத்தமாகக் கொண்டுவர தன்னறம் நூல்வெளி விழைகிறது. இதற்காக உங்கள் மேலான உதவியை நாடிநிற்கிறோம். உங்களிடமிருந்து வரப்போகிற அந்த கட்டுரைகளுக்காகவும் காத்துநிற்கிறோம்.

மேலும் இதே காலகட்டத்தில், உங்களுடைய முந்தைய நூல்களுள் ஒன்றான ‘ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு’ புத்தகமும் ஒரு படைப்பாக எங்களுக்கு வெகு நெருக்கமானது. குக்கூவின் பாடத்திட்ட வடிவமைப்பில் மனம்கொண்டிருக்கும் எங்களுக்கு, ஒரு குழந்தையின் சிந்தனைச் சாத்தியங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. ஆகவே, இப்புத்தகத்தையும் புகைப்படங்களோடு மீண்டும் பதிப்பிக்கும் செயலாசையும் உள்ளது.

எண்ணத்தில் தாக்கத்தை உண்டாக்கி செயலில் மாற்றத்தை எழுப்புகிற உங்களுடைய ஒவ்வொரு சுட்டிக்காட்டல்களையும் அச்சுவழி புத்தகப்படுத்துவதில் இணையற்ற ஒரு செயல்நிறைவு உள்ளது எங்களுக்கு.

நன்றியும் பிரார்த்தனையும்,

தன்னறம் நூல்வெளி

***

லா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்– பாலா

ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் –பாலா

சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! –பாலா

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்– பாலா

போற்றப்படாத இதிகாசம் –பாலா

ஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!

=======================================================

இன்றைய காந்திகள் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைகோவை,சிங்காரம்,சு.வேணுகோபால் -கடிதம்
அடுத்த கட்டுரைபார்ஸிலோனாவில் நடை