இன்றைய காந்திகள்
அன்புள்ள ஜெயமோகன்,
சுபாஷ் வங்காளியென கொண்டாடிய வங்காளியை பார்த்துள்ளேன், காந்தி ஒரு குஜராத்தியென கொண்டாடிய குஜராத்தியையே இதுவரை பார்த்ததில்லை. இது உங்கள் தளத்திலுள்ள காந்தி பதிவுகள் , இன்றைய காந்தி, உரையாடும் காந்தி நூல்களை படித்தபின் காந்திபற்றிய தொடர்ச்சியான சிந்தனையில் ஒருநாள் இரவு உணர்ந்தது.இங்கு காந்தி எவருக்கும் சொந்தமில்லை எல்லாருக்கும் சொந்தம். காந்தியை தனியாய் தாங்கி பிடிக்க யாருமில்ல காங்கிரஸ் உட்பட. சிவகாமி சபதம் நாகநந்தி புத்தம் சரணம் கச்சாமி , சங்கம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி சொல்லும்போதெல்லாம் எதற்கு சங்கம் சரணம் சொல்லவேண்டுமென்று யோசிப்பேன். சரியாய் நியாபகமில்லை உங்களுடைய வெள்ளிநிலம்/பனிமனிதன் நூலில் ஒரு வரி வரும், சங்கம் ஏன் அவசியமென்று. புத்தத்தையும் , புத்தம் கூறும் தம்மத்தையும் அதற்குரிய வழியில் கண்டடைய சங்கம் அவசியம். காந்திக்கான சங்கம் எங்கே?
காந்தியை பற்றி மூன்று பரிசோதனைகளை செய்து பார்த்தேன்.
அ). என்னோடு வேலைசெய்த தெலுகு நண்பன். கொஞ்சம் சாதுவான ஆள் யாரைப்பற்றியும் வெளிப்படையாய் குறைசொல்லமாட்டான். அவனிடம் காந்தியை பற்றி கேட்டதில் காந்தியை பாராட்டவில்லை ஆனால் மரியாதை இல்லை . நம் தேசத்தின் தந்தை, மகாத்மா போன்ற மதிப்பீடுகள் அவனிடம் இல்லை.
ஆ). என்னுடைய நெருங்கிய நண்பன். ஒருநாள் வண்டியில் போகும்போது தன்னிச்சையாய் கேட்டேன் காந்தி ஒரு ______________. அவன் கோடிட்ட இடத்தை கெட்டவார்த்தையால் நிறைத்தான். அவனுக்கு வானதி ஸ்ரீனிவாசன் மேல் மரியாதையை உண்டு.காந்தி இடத்தில வானதி பெயரை சொல்லிருந்தால் அவர் பெருமையை சொல்லிருப்பான். காந்தி பற்றிய மதிப்புகள் அவனிடம் குறைந்து விட்டது.
இ). என்னுடைய அம்மா. செய்தித்தாளை படித்துக்கொண்டிருக்கும் போது இந்த செய்தியில் காந்தி கொஞ்சம் பணத்தை ஏமாற்றிவிட்டாரென்று எழுதியிருக்கிறது சொன்னேன். அதற்கு அம்மா அந்த அம்மணப் பொச்சு எதுக்குடா ஏமாத்தணும்னு சொன்னார்கள். காந்தி இந்திய மனதை நன்றாய் புரிந்துகொண்டவர், தன்னையே குறியீடாய் மக்கள் முன் நிறுத்தியவர் என்ற கூற்று எவ்ளோ உண்மை. காந்தி குறியீட்டின் வலிமை புரியும்போது மனதுக்கு இதமாயிருந்தது.
அன்புடன்
மோகன் நடராஜ்
அன்புள்ள ஜெ
உங்கள் தளத்தில் வெளிவந்த நவகாந்தியர்களைப் பற்றிய கட்டுரைகள் மிகமிக முக்கியமானவை. இத்தனை ஆளுமை கொண்ட மானுடர்களை இங்கே உள்ள ஊடகங்கள் நம்மிடம் சொல்லவே இல்லை என்பதுதான் விசித்திரமானது. நாம் எங்காவது இவர்களின் பெயர்களைக் கேள்விப்பட்டிருந்தாலும்கூட இப்படி ஒரே தொகுப்பாக இவர்களைப் பார்க்கையில்தான் இவர்களின் இடம் என்ன என்று தெரிகிறது. சாதனையாளர்கள் என்றால் இவர்கள்தான். தனக்கென ஏதுமில்லா பிறர்க்குரியாளர்கள். காந்தி இவர்களின் வழியாகவே வாழ்கிறார். திரு பாலா அவர்களின் பணி போற்றுதற்குரியது
எஸ்.பாலகிருஷ்ணன்
***
ஜெ,
இன்றைய காந்திகள் நூலாக வரவிருக்கிறதா? எவர் வெளியிடுகிறார்கள்?
அர்விந்த்
***
அன்புள்ள அர்விந்த்
குக்கூ அமைப்பின் பிரசுரநிறுவனமான தன்னறம் அதை நூல்வடிவில் வெளியிடவிருக்கிறது
ஜெ
***
இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா
காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்– பாலா
ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் –பாலா
சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா
ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா
அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! –பாலா
பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா
லக்ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்– பாலா
ஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!
=======================================================