அம்பலத்து ஆடுவான்
இந்த ஆடல்வல்லான்
இவன் அலகில் சோதியன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
உலகெலாம் உணர்ந்தும்
ஓதற்கு அரியவன்.
அரைநூற்றாண்டுக்கு முன்பு, திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட விழா மலரான . ஆடல்வலான் எனும் தலைப்பிட்ட, ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் எழுதிய, நடராஜமூர்த்தம் மீதான நூலை முதல் வாசிப்பின் வழியாக அறிமுகம் செய்து கொண்டேன். ஆம் அறிமுகம் செய்து கொண்டேன் என்பதே சரியான சொல்.இனிதான் அதையும் அதைச்சார்ந்தும் பயிலவேண்டும்.
பொதுவாக என்னிடம் பேசும் புதிய வாசகர்களில் சிலர், அல்லது தீவிர வாசகராக அறியப்பட்ட ‘படிப்பாளி’ சிலர் குறிப்பிட்ட சில நூல்களை சுட்டி, வாசிக்கவே முடியலங்க என்று சொல்வார்கள். படிப்பாளி எனில் பதில் சொல்லாமல் விட்டு விடுவேன். படிப்பாளி என்பது வேறு நிலை. அவர்களுக்கு படிக்கத் தோன்றி விட்டால் அந்தக் கால டெலிபோன் டைரக்டரியைக் கூட முழுமையாக வாசித்து அது குறித்த கருத்தை சொல்லி விடுவார்கள். அவர்களால் குறிப்பிட்ட நூலைப் படிக்க இயலவில்லை என்றால் அதனால் அவருக்கோ அந்த நூலுக்கோ ஒன்றும் பாதகம் இல்லை.
ஆனால் தீவிர வாசிப்பின் மீது ஈடுபாடு கொண்ட ‘ வாசகர்’ இந்த சொல்லை சொல்கிறார் எனில் அங்கே அவருக்கு அவர் முயன்று கடக்க வேண்டிய சிறிய இடர் ஒன்று இருக்கிறது என்று பொருள். ஒரு நூல் அந்தப் பெயரை ஏன் எடுக்கிறது.? பிழை அந்த நூலை வாசிக்க அணுகும் நமது மனநிலையில்தான் உள்ளதே அன்றி, அந்த நூலில் இல்லை.
இந்த இடரை கடக்க நான் கண்டடைந்த வழி, ஒரு புரியாத நூலை, முதல் வாசிப்பாக எந்த விதத்திலும் மனமோ அறிவோ உணர்வோ தோயாமல், இறுதித்தேர்வுக்கு ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தை முழுவதும் படிப்பதைப் போல வாசிப்பது. வாசித்து முடித்த கணமே அந்த நூல் எதோ ஒரு அலகில் எனது வாசிப்பு அறிமுக வட்டத்துக்குள் வந்து விடும். அப்படி முதல் வாசிப்பு வழியே குறிப்பிட்ட நூலை முழுமையாக அறிமுகம் செய்து கொண்ட பின்னரே, மேலதிக வாசிப்பு சார்ந்தது அந்த நூலை மதிப்பிடுவேன். ஆக இந்த அறிமுகம் இன்றி படிக்கவே முடியலங்க என்று சொல்லும் போது அது நமது திராணி இன்மையைதான் முதலில் காட்டுகிறது. அந்தத் திராணி இன்மை அந்த நூல் பேசும் தளம் சார்ந்த நமது ஈடுபாடின்மையுடன் இணைந்தது. ஆக நமது ஈடுபாடு எதிலோ அதில் நமது புரிதலுக்கு மேலே உள்ள விஷயங்களைக் கொண்ட நூல் அணுக கடினமான ஒன்றாக இருப்பதே அதன் இயல்பு. அதைக் கடக்க அந்த நூலை முற்ற முழுதாக அட்டை முதல் அட்டை வரை மூச்சுக்கட்டி வாசித்து விடுவதே முதல் வழி.இதில் வேறு குறுக்கு வழியே கிடையாது. அப்படி முதல் வாசிப்பு நிகழ்ந்து அந்த நூல் அறிமுகம் கண்ட கணமே, அதைப் பயிலும் முறைக்கான சாவி வழிமுறைகள் துலக்கம் பெற்று விடும். உதாரணமாக விஷ்ணுபுரம் நாவலை கேள்விகளே இன்றி முதன்முறை முழுமையாக வாசித்து அந்த நூல் எனக்கு அறிமுகம் எனும் நிலையை உருவாக்கிக் கொண்டேன். மூன்று முறை அந்த நூலைப் பயின்று அதிலிருந்து எனக்கே எனக்கான ஒரு சாவி நூலை நானே உருவாக்கிக் கொண்டேன். அதன் பிறகே அந்த நாவலை எதிர் கொள்ளும் வாசகனாக அந்த நூலை வாசித்தேன்.
இந்த வகைமையில் முதல் வாசிப்பை நிகழ்த்தி, இனி பயில வேண்டிய நூலாக என் முன் அமைந்த நூல் ஆடல்வல்லான். பொதுவாக இன்றைய தமிழ் இலக்கியத்தின் தீவிர வாசகனால் கநாசு துவங்கி சுந்தரராமசாமி அசோகமித்திரன் என இன்றைய தலைமுறை வரை எந்த படைப்பாளி உருவாக்கிய உலகம் மீதும் ஒரு அரைமணிநேரம் பேச முடியும். கூடுதலாக வீசிய பின்நவீனத்துவ அலை வழியே, லத்தீன் அமேரிக்காவில் லாந்திக்கொண்டிருக்கும் சூழல், பெருவில் பெயர்த்து கிடக்கும் வாழ்வு, என்பதைக் குறித்தெல்லாம் கூட ஒரு அரைமணிநேரம் பேச முடியும். அதே சமயம் அவனது சொந்த மொழியான தமிழில், சொந்த நிலமான தமிழ் நிலத்தில், அதன் பண்பாட்டின் பதாகையான ஒரு ஐந்து விஷயங்களை [பேசக் கூட வேண்டாம்] பட்டியல் இடச் சொன்னால், [நான் உட்பட] அவன் திகைத்து நின்றுவிடுவான்.
பாரதம் முழுதும் பரவிச் செழித்த பரதநாட்டியத்தின் விதை சதிரும் கூத்தும் தமிழ் நிலத்தின் சொத்து. கர்நாடக சங்கீதத்தின் வேர் தமிழ் இசை. உலகெங்கும் செழித்த பௌத்தத்துக்கு ஒரே ஒரு காப்பியம் அது தமிழில் மட்டுமே உண்டு, கண்ணகி போல பத்தினித் தெய்வ வழிபாடு தமிழுக்கு சொந்தமான பெருமிதம். இந்த வரிசையில் நடராஜதத்துவம் தமிழ்நிலம் உலகுக்கு அளித்த கொடை.இது குறித்தெல்லாம் அனுபவமாக அறிவாக எதுவுமே தெரியாமல்தான் பிற ‘தமிழண்டா’ போலவே நானும் பலகாலம் இருளில் இருந்திருக்கிறேன். இத்தகு இருள் அகற்றும் ஒளித் துளிகளில் ஒன்று இந்த ஆடல்வல்லான் நூல். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணவர், மகா வித்வான் உ.வே.சாமிநாதஐயர். இவரது மாணவர் மகாவித்வான் ச.தண்டபாணி தேசிகர். இவரது வாழ்நாள் கல்விப் பணிகளுக்காக பத்மவிருது பெற்றவர் என்கிறது இவரது வாழ்க்கைக் குறிப்பு. இவர் எழுதியதே நடராஜமூர்த்தத்தை அதன் அடிப்படைகளை முழுமையாக அறிமுகம் செய்யும் ஆடல்வல்லான் எனும் நூல்.
ஒரு கலை வெளிப்பாடாக நடராஜமூர்த்தம் நடனம்,இசை,தொன்மம்,புராணம்,வழிபாடு,தத்துவம் எனும் கூட்டின் முழுமையின் வடிவாகத் திகழ்கிறது. ஆடல்வல்லானை அணுகி அறிய,அவன் அமைந்திருக்கும் இந்தக் கூட்டின்,முழுமையின் ஒவ்வொரு அலகையும் பகுத்து அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். முதலில் கலை என்றால் என்ன. அதன் தேவை என்ன என வரையறையை அளித்து விட்டே மேலே தொடர்கிறார். கலையில் அடிப்படைப் பிரிவு என்னென்ன,அதில் நுண்கலை கவின்கலை எனில் என்ன, அந்த கவின் கலையில் சிற்பக் கலை எங்கு அமைகிறது, அந்த சிற்பக் கலையில், ஆடல்வல்லானை ஒரு கலை வெளிப்பாடாக அணுகி அறிய, ஒருவர் அடிப்படையாக தெரிந்தது வைத்திருக்க வேண்டிய, பரிச்சயம் கொள்ளவேண்டிய இழைகளை,அதன் அடிப்படைகளை இந்த நூலைக் கொண்டு அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். ஆடல்வல்லான் குறித்த அடிப்படைகள் யாவும் அடங்கிய அரிச்சுவடி என இந்த நூலைச் சொல்லலாம்.
ஆடல்வல்லானை அணுகி அறிய முதல் அலகான பரதத்தை அதன் புராணக் கதையை விளக்கியபின், இந்த பரதத்தில் தாண்டவத்துக்கும் [ஆண்களால் மட்டுமே ஆட இயன்ற சில நிலைகள் கொண்ட ஆடல்],லாஸ்யத்துக்கும் [பெண்களின் தனித்துவமான உடல்வாகு வழியே வெளிப்பாடு கொள்ளும் நிலைகள் கொண்டது] உள்ள வேறுபாடுகளைச் சொல்லி, தாண்டவமூர்த்தி வடிவத்தில் கேசாதிபாதம் ஒவ்வொன்றும் பரதத்தின் எந்தெந்த அலகுகளில் இருந்து வந்து உன்னதம் கண்ட ஒன்று என்பதில் மையம் கொள்கிறது நூலின் துவக்க அத்யாயங்கள்.
தலை அசைவின் பதினெட்டு நிலைகள், புருவம்,விழிகள்,உதடுகள், இவை கொள்ளும் பாவத்தின் எண்ணிக்கை அதன் பேதங்கள், முகம் கட்டும் மெய்ப்பாடுகள், விரல்கள் காட்டும் அபினயங்களின் எண்ணிக்கை வகை பேதங்கள், ஹஸ்த முத்திரைகள், இரு கைகளும் இணைந்தது பிடிக்கும் அபிநயங்கள், தோள் முதல் விரல் நுனி வரை மொத்த கரமும் கொண்டு உருவாக்கும் பாவங்கள், நெஞ்சு,விலா, இடை,தொடை,கால் விரல்கள், பதங்கள் என ஒரு ஆடல்வல்லான் மூர்த்தம் கைகொள்ளும் நிலைகளை முழுமையாக விவரிக்கிறது நூல்.
அடுத்த அத்யாயங்களில் முயலகன் முதல், பனித்த சடை வரை, மான் மழு உடுக்கை ஊழித்தீ நாகாபரணம் வரை, ஆடல்வல்லானின் சிற்பஅமைதி எவ்வாறு அமைகிறது என சிற்ப இலக்கணங்கள் வழியே விவரிக்கிறார் ஆசிரியர். அடுத்த அத்யாயங்களில் தில்லையில் நடராஜ மூர்த்தம் அமைந்த தொன்மக் கதை, அன்னியர் படையெடுப்பில்,தில்லை தீட்சிதர் வழியே ஆடல்வலான் மூர்த்தம் கேரளா ஆலப்புழா வில் சிலகாலம் மறைந்திருந்தது,இடர் நீங்கியதும் அம்பலப்புழாவில் ஆடல்வல்லான் முதன் முதலாக எழுந்தருளிய வரலாறு இவற்றை விவரிக்கும் ஆசிரியர், ஒரு சிறிய அத்யாயத்தில் மாகேஸ்வர சிவவடிவங்களில் ஒன்றாகிய சபாபதி ஆடல்வல்லானுக்கும்,சிற்சபாநாதனாகிய ஆடல்வல்லானுக்கும் இடையே உள்ள மெல்லிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாட்டை விளக்குகிறார்.
தமிழ் நிலத்தில் சிவனின் ஏழு வகை தாண்டவங்களும், சிதம்பரம் குற்றாலம் மதுரை போன்ற வேறு வேறு தலங்களில், வேறு வேறு சபைகளில் நிகழ்ந்த,வேறு வேறு தாண்டவ [படைத்தல் காத்தல் முப்புரம் எரித்தல் போல] நிலைகள். ஆனால் அங்குள்ள மூர்த்தங்கள் கொண்டு அந்தத் தாண்டவ வேறுபாடுகளை அறிய இயலாது. காரணம் இந்த ஏழு தலங்களிலும் இருப்பது ஒரே ஆனந்த நடராஜ மூர்த்திதான் எனும் தனித்துவமான தகவல் ஒன்று நூலுக்குள் என்னை வசீகரித்தது.அதிலும் மதுரையில் நிற்கும் ஆடல்வல்லான் மட்டும் நிற்கும் காலை மாற்றி [இடதுகால் ஊன்றி] நிற்கும் வகையில் அமைந்தத மூர்த்தம் என்கிறார் ஆசிரியர்.
இந்த நடராஜ மூர்த்தியை வணங்கிய மன்னர் வரிசை, அவர்கள் குறிப்பிட்ட கோவில்களுக்கு அளித்த நிபந்தங்கள் இவற்றைப் பேசுகிறது ஒரு அத்யாயம். பக்தர் கைக்கொள்ள வேண்டிய திருவாதிரை விரதம், உபாசகர் கைக்கொள்ள வேண்டிய உபாசனா முறைகள், எந்திர வழிபாடு, அர்ச்சனை முறைகள்,மந்திரங்கள் இவற்றை அறிமுகம் செய்கிறது ஒரு அத்யாயம். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நூலின் சிறப்பு இதிலுள்ள புகைப்படங்களும் ஓவியங்களும், சிவனின் ஏழு வகை தாண்டவம் துவங்கி நூற்றி எட்டு தாண்டவ நிலைகள் வரை,அதன் பெயர்களுடன், அதன் புராண பின்புலத்துடன் புகைப்படங்களுடன் ஓவியங்களுடன் அறிமுகம் செய்கிறது நூல். இருநூறுக்கும் மேலான படங்கள். கஜசம்ஹார தாண்டவ மூர்த்தி எனில் அதன் சிற்பங்கள் எங்கெங்கு பாரதம் முதல் தமிழ் நிலம் வரை இருக்கிறதோ அதன் முக்கிய புகைப்படங்கள், அது போலவே, அந்தகாசுர தாண்டவ மூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, அவற்றின் புகைப்படங்கள் அவை இருக்கும் கோவில்கள், இவற்றின் மீதான அறிமுகத்தை அளிக்கிறது நூல். எல்லாமே நடராஜர் எனும் நிலையில் இருந்து எழுந்து, [பாதாமியில் காணும் நடராஜர் காளிகாதாண்டவ மூர்த்தி என்பதைப்போல] ஒவ்வொரு நடராஜர் படிமையின் தனித்துவம் என்ன என்பதை அதன் பெயர் வழியே அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். இந்த நூல் எனக்களித்த ஆச்சர்யங்களில் ஒன்று இந்த நூலில் நான் கண்ட செப்புப் படிமை ஒன்று. இடது கையை முயலகன் மீது ஊன்றி தலைகீழாக நிற்கிறார் ஒரு நடராஜர்.
இந்த நூலின் கடினமாக பகுதிகள் இரண்டு.காரணம் இந்த நூலின் ஆசிரியர் வந்த ஆசிரிய மரபு, அந்த மரபு அவருக்கு அளித்த தனித்துவமான சைவ பரிபாஷைகள். அவரது கல்வி மரபுக்குள் முயன்று நுழைந்தாலே சில விஷயங்கள் பிடி கிடைக்கும். உதாரணமாக இந்த நூலில் நடராஜ தத்துவத்தை விளக்கும் அத்யாயம். மனவாசகம் கடந்தார் எனும் ஆசிரியர் அவரது சீடன் ஆடல்வல்லான் குறித்து கேட்கும் வினாக்களுக்கு பதில் என்பதான வடிவில் அமைந்த அத்யாயம் அது. அந்த ஆசிரிய மரபு, குறிப்பிட்ட சைவ மரபை எவ்வாறு கற்றுத் தரும் என்பதை, அந்த மரபின் சைவக் கல்வியின் கலைச் சொற்கள் மீது அறிமுகம் இருந்தால் மட்டுமே பிடி கிடைக்கும். சற்று முயல வேண்டிய இடம். இரண்டாவது மிக சில இடங்களில் அதன் மொழி .உதாரணமாக
//ஸ்ரீமத் பராக்யத்தில் சூரியன் முன் பயிர்கள் வளர்வதுபோலச் சிவ சந்நிதியில் அவரது சக்தியால், கலக்குண்ட விந்து நாதங்களால், தத்துவ தாத்விகமாகிய உலகங்கள் உண்டாகின்றன என்று கூறப்படுவதால், இவருடைய சூக்கும நடனம் சிவதத்தத்துவங்களின் விளக்கத்திற்காகவே என்பது போதரும். இக்கருத்தையே மிக விளக்கமாகச் சிதம்பர மான்மியம் பரசிவம் சண்டதாண்டவ மூர்த்தியாய் உலகத்தை அவ்வவற்றின் காரணத்தொடுக்கி, காரணங்களை மாயையில் ஒடுக்கி, மாயையைச் சக்தியில் ஒடுக்கிச் சங்கரிக்கின்றார். அவரே மீளவும் உண்டாக்க உளங்கொண்டபோது ஆனந்த தாண்டவ மூர்த்தியாய் நாதாதி பஞ்ச தத்துவங்களைப் படைக்கின்றார்.//
இப்படி இருக்கிறது. இந்த இடர்கள் எல்லாமே நூலின் ஆசிரியர் பயின்று வந்த சைவக் கல்வி மரபின் அரிச்சுவடி எதுவும் நமக்குத் தெரியாது என்பதில் அமைகிறது. முயன்று பயில வேண்டிய, முயன்றால் கடந்தது விடக்கூடிய இடர்கள்தான் இவை. நூலை வாசித்து முடித்த இரவு இந்த நூலின் சிவனின் நூற்றி எட்டு கரண நிலைகளை, தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் உள்ளே, முதல் தளத்தில், விமான உள் சுற்று சுவற்றில் ஒவ்வொன்றாக தடவிப் பார்த்த நாள் நினைவில் எழுந்தது. இந்த நூற்றி எட்டும் அங்கே முழுமையாக இல்லை எண்பது வரைதான் உள்ளது, வேலை தொடரும் முன்பே ஏனோ நிறுத்தப்பட்டதான சுவடுகளை அங்கே காண முடிந்தது.
நினைவுகள் கரைமீறி ரிஷிகேஷில் கங்கைக் கரையில் அமர்ந்திருந்த மாலை நினைவில் எழுந்தது. அந்திச் சூரியன். நின்றால் அருவி என தோற்றம் தரும் ஓட்டமும் ஓசையும் கொண்ட பொன்னொளிர் கங்கைப் பரப்பு. மேலே உள்ளவள் ஆகாய கங்கை.இந்த கங்கையைப் போல் பல்லாயிரம் மடங்கு ஆற்றல் கொண்டவள். பகீரதன் தவம் முறிக்க அவள் மண்ணிறங்குகிறாள். அவளது வேகம் இந்த புவியைப் போழ்து விடும். புவியைக் காக்க சிவன் அவளை தனது ஜடாமகுடம் கொண்டு தாங்குகிறார். கங்காதரர். கங்கா விஜர்சன மூர்த்தியாகி தனது ஜடா மகுடத்தின் ஒரே ஒரு கூந்தல் இழையை விலக்கி,அந்த இடைவெளி வழியே ஒழுகும் ஆகாய கங்கையை மட்டும் பூமிக்கு அனுப்புகிறார்.
இன்று காணும் இந்த கங்கை. சிவனின் ஒரே ஒரு கூந்தல் இழையின் இடைவெளி வழியே வழிந்தவள் எனில், அந்த ஆகாய கங்கையை அணை கட்டியிருக்கும் சிவனின் ஜடாபாரத்தை அதன் உருவ விரிவை எங்கனம் ஊகிப்பது? எனில் அந்த சிவனின் உருவம் ? இது சிவனின் பல ஆடல்களில் ஒன்று. இந்த ஒன்றுக்கே இந்த உருவம். இப்படிப் பல்வேறு ஆடல்கள், அதற்க்கு வெவ்வேறு உருவம். எண்ணிறந்த ஆடல்களின் பெருவெளி இந்த பிரபஞ்சம். எண்ணிறந்த ஆடல்களின் அந்த ஆடல் உருவங்களின், முழுமை ஆனந்த நடராஜர் எனும் ஆடல் வல்லான். காஸ்மிக் டான்ஸ். பிரபஞ்ச நடனம். அந்த நடனத்தை ஆடும் ஆடல் வல்லான். உலகெலாம் உணர்ந்த்த அந்த ஓதற்கரியவன் இந்த அம்பலத்தில் ஆடுவதை எங்கனம் அறிவது என்பதற்கு உள்ள வழிகளில் கலை கைகொள்ளும் வழியை, அறிமுகம் செய்யும் சிறப்பான நூல், ச. தண்டபாணி தேசிகர் எழுதிய இந்த ஆடல்வல்லான் எனும் நூல்.
நூல் விரும்புவோர். நூலை தரவிறக்கிக்கொள்ள சுட்டி