நாராவின் ஆலயங்கள் வழியாகச் செல்கையில் அவற்றின் வரலாற்றை முழுக்கத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் உந்துதல் ஏற்பட்டது. மிகுந்த முயற்சிக்குப்பின்னரே அதைக் கட்டுப்படுத்த முடிந்தது. இப்பயணத்தில் நான் ‘முறையாக’ எதையும் தெரிந்துகொள்ள முயலக்கூடாது என்றும் என்னென்ன இயல்பாக கண்ணுக்குப்படுகின்றனவோ எனக்குள் என்னென்ன எழுகின்றனவோ அவையே போதும் என்றும் எண்ணியிருந்தேன். ஆயினும் வரலாற்றை அறியும் ஆர்வம் எழுந்தபடியேதான் இருந்தது. ஜப்பானிய வரலாற்றை முழுமையாக அறியும் ஒரு நூலை வாசிக்கவேண்டும்
ஜப்பான் பலவகையிலும் பிரிட்டனுக்கு நிகரானது. சிறிய தீவுகளின்கூட்டம். இன்று அவை பாலங்களாலும் சாலைகளாலும் ஒன்றென இணைக்கப்பட்டுவிட்டன. பிரிட்டனின் மக்கள்தொகை ஐரோப்பிய மையநிலத்தில் இருந்து வெவ்வேறு காலங்களில் அங்கே சென்று குடியேறியவர்களால் ஆனது. சிறிதளவு தொல்குடிகளும் உண்டு ஜப்பானின் மக்கள்தொகை சீனாவின் மையநிலத்தில் இருந்து வந்தவர்களால் ஆனது. அவர்களின் பண்பாடு நாடோடிப் பண்பாடுகளின் தொகை. அங்கே வந்தவர்கள் போர்க்குணம் மிக்க கடலோடிகளும் செம்படவர்களுமாக இருக்கலாம்.
ஜப்பானிலும் பிரிட்டன்போல முற்றிலும் வெவ்வேறான இனக்குழுப் பண்பாடுகள் நிலவின. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், பிரிட்டன் என பிரித்தானிய மண் பிரிந்துகிடந்ததுபோலத்தான் ஜப்பானும் இருந்திருக்கிறது.கிபி நான்காம் நூற்றாண்டு முதல்தான் பிரிந்து ஒருவரோடொருவர் போரிட்டுக்கொண்டிருந்த ஜப்பானிய தீவுச்சமூகங்கள் ஒற்றை அரசாக இணைக்கப்பட்டன. கியோட்டோ அப்பேரரசின் தலைநகராக ஆகியது. நாம் காணும் ஜப்பானியப் பண்பாடு அதன்பின் மெல்ல உருவாகி வந்தது
இவ்விணைப்புக்கு இரண்டு கருவிகள் தேவைப்பட்டன. ஒன்று ஈவிரக்கமற்றதும் போர்த்திறன் மிக்கதுமான ஆட்சியாளர் கூட்டம். போர்வல்லவர்களாகிய சமுராய்களும் அவர்களை ஆளும் ஆட்சியாளர்களாகிய ஷோகன்களும் உருவாகி வந்தனர். இன்னொன்று, தத்துவம். பௌத்தம் உள்ளே நுழைந்து தன் தத்துவ வல்லமையால் ஷிண்டோ மதத்தை இணைத்துக்கொண்டு உறுதியான பெருமத அடித்தளத்தை ஜப்பானுக்கு அளித்தது.
பிரிட்டனைப்போலவே போர்வெறிகொண்ட நாடாகவே ஜப்பான் என்றும் இருந்திருக்கிறது. அதன் சமூக அமைப்பு சிறியது, ஆகவே இறுக்கமான நெறிகளாலும் ஆசாரங்களாலும் உறுதியாகக் கட்டப்பட்டது. இன்றும்கூட ஜப்பானியப் பண்பாடு நெகிழ்வில்லாத ஆசாரங்களால் ஆனது. அங்கே பணியாற்றும் நண்பர்கள் ஜப்பானிய அலுவலகங்களில் உள்ள பெரியவர் சிறியவர், அதிகாரி ஊழியர் உறவுகளில் இருக்கும் திட்டவட்டமான முறைமைகளைப் பற்றி வியந்து வியந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
சீனா, இந்தியா போன்ற பெரியநாடுகள் உள்நெகிழ்வு கொண்டவை. வேறுபாடுகளும் முரண்களும் நிறைந்தவை. அவை வலுவான ஒற்றைச்சமூகமாக திரண்டு கூர்கொள்ள இயல்வதில்லை. ஜப்பான் குருதிகொந்தளிக்கும் நாடு. அதன் வரலாறே கடானாக்களால் நிஞ்சாக்களால் உருவாக்கப்பட்டது என்றால் மிகையல்ல. ஜப்பானுக்குச் சென்ற பௌத்தமேகூட வன்முறை நிறைந்த மதமாக உருவாகியது. அதன் கலையே கராத்தே, குங்ஃபூ போன்றவை.
விந்தை என்னவென்றால் இத்தகைய தீவிரத்தன்மையே கலைகளையும் இலக்கியத்தையும் வளர்க்கிறது என்பதுதான். ஏனென்றால் போர்ச்சமூகம் அழுத்தமான நெறிகளால் ஆனது. நெறிகளுக்கு தத்துவ தளத்திலும் உணர்ச்சித்தளத்திலும் விரிவான பகைப்புலம் அமைப்பதையே இலக்கியமும் கலைகளும் இயற்றுகின்றன. இன்னும் ஒன்று தோன்றுகிறது, வலுவான போர்ச்சமூகங்கள்தான் இசைநாடகம், நாட்டிய நாடகம் போன்ற கலைகளை உருவாக்குகின்றன. ஏனென்றால் அக்கலைவடிவங்கள் உச்சகட்ட நாடகீய உணர்ச்சிகளை உருவாக்கும் ஆற்றல்கொண்டவை. கிட்டத்தட்ட கலைக்குள் போரை நிகழ்த்திக்காட்டுபவை. ஜப்பானிய நோ நாடகம் உலகப்புகழ்பெற்றது.
நாராவில் கொஃபுகுஜி [Kōfuku-ji] என்னும் ஆலயத்தை பார்க்கையில் திரைப்படங்கள், நாவல்கள் வழியாகப் பார்க்கநேர்ந்த ஜப்பானைச்சுற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஒருமுறை ஒரு கொலைவழக்கில் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவாளியின் ஆடையை பார்த்த நினைவு எழுந்தது. குருதிபடிந்தது, ஆனால் நன்றாக நீவி மடிக்கப்பட்டு பிளாஸ்டிக் உறையில் வைக்கப்பட்டிருந்தது. நாரா போன்ற நகரங்கள் இன்று கலைமையங்கள். ஏனென்றால் எஞ்சியிருப்பது கலை மட்டுமே. ஆனால் உயர்கலைக்கு அடியில் குருதி இருக்கும்.
கொஃபுகுஜி ஆலயம் கிபி 669ல் ககாமி [Kagami-no-Ōkimi] என்னும் அரசியால் கணவரின் உடல்நிலை தேறும்பொருட்டு கட்டப்பட்டது. முன்பு இந்த ஆலயம் யாமஷிரா என்னும் இடத்தில் இருந்தது கிபி 672ல் நாராவுக்கு கொண்டுவரப்பட்டது மீண்டும் சில ஆண்டுகள் கழித்து கழற்றப்பட்டு இந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. பலமுறை உள்நாட்டுப்போர்களில் இந்த ஆலயம் அழிக்கப்பட்டது, மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. 2018ல்தான் இது கடைசியாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
மரத்தாலான ஆலயம் என்பதனாலும், கூம்புக்கூரை முகடுகளினாலும், மழையும் நீராவியும் கலந்த சூழலினாலும் எனக்கு கேரளத்தில் இருந்துகொண்டிருக்கும் உணர்வு எப்போதும் இருந்தது. மிகப்பெரிய மரத்தடிகளை பெரும்பாலும் அவற்றின் முதல்வடிவை மாற்றாமலேயே நிறுத்தி இவற்றை எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் அடித்தளத்தில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டுள்ளன. அப்பாறைகள்மீதுதான் தூண்கள் நின்றிருக்கின்றன. அகன்ற முகப்பு. அவற்றில் தொங்கும் அணித்தட்டிகள். உள்ளே விழிநிறைக்க அமர்ந்திருக்கும் புத்தர்.
இந்த ஆலயங்கள் இன்று வழிபாட்டிடங்களா என்ற ஐயம் எழுந்தது. ஏனென்றால் வழிபடுகிறவர்கள் மிகக்குறைவாகவே வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் சுற்றுலாப்பயணிகள். ஏராளமான சீனப்பயணிகளைப் பார்த்தேன். அவர்கள் இந்தியர்களைப்போலவே கைகூப்பி வணங்கி தூபக்குச்சிகளை ஏற்றி தலைகுனிந்து பின் விலகிச்செல்கிறார்கள் கல்லாலான மாபெரும் தூபக்க்கலங்கள் இருபுறமும் செய்து நிறுத்தப்பட்டிருந்தன.
மூடப்பட்டபின் ஆலயங்களுக்குள் செல்வதற்கு ஒப்புதல் இல்லை. ஆலயங்களுக்கு வெளியே இடைநாழியில் தான் நாம் நின்றிருக்க முடியும். உள்ளே சற்று உயரத்தில் சிலைகள் அமைந்திருக்கின்றன ஆலயம் மூடப்பட்டிருந்தாலும் கூட சிலைகளை குனிந்து நம்மால் பார்க்க முடியும் .புத்தரின் மின்னும் பேருருவங்கள் எனக்கு பூடானை ,லடாக்கை ,ஸ்பிட்டி சமவெளியை நினைவுறுத்தின. இங்கு அதிகம் தென்படுவது அமிதாப புத்தர் அல்லது வைரோசன புத்தர். ஜப்பானில் பயணம் செய்த எங்கும் நின்றிருக்கும் புத்தரையோ படுத்திருக்கும் புத்தரையோ பார்க்க நேரிடவில்லை.
போதிசத்வர்கள் சில இடங்களில் உள்ளனர். ஆனால் திபெத்திய பௌத்தத்திலும் அதன் வழிவந்த பௌத்த மரபுகளிலும் போதிசத்வர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இங்கே இல்லை. தாராதேவி கண்ணுக்குப்படவில்லை. இக்காரணத்தால் ஜப்பானிய பௌத்தச் சிற்பக்கலை குறுகிய எல்லை கொண்டதாகவே உள்ளது. திபெத்திய, சீன பௌத்தச் சிற்பக்கலையில் குரூரமான தெய்வங்களும் பெண்தெய்வங்களுமே கலைவெளிப்பாட்டின் உச்சங்களை நிகழ்த்துகின்றன. அவ்வடிவங்கள் இல்லாதநிலையால் ஜப்பானிய பௌத்த சிற்பங்களே ஓரிரு வடிவங்களுக்குள் அடங்கிவிடுகின்றன.
உண்மையில் புராணம் இல்லையேல் கலையும் இலக்கியமும் இல்லை. தத்துவம், ஆசாரம் என்னும் இரண்டும் இரண்டு இரும்புப் பலகைகள். அவற்றைச் சேர்த்து மதம் என்னும் கட்டமைப்பை உருவாக்கும்போது நடுவே செலுத்தப்படும் ரப்பர் பகுதிதான் புராணம். வெவ்வேறு மதங்கள் இணையும்போது புராணமே அந்த முரண்பாடுகளைச் சமன்செய்கிறது. புராணங்களிலுள்ள கட்டற்ற கற்பனைகளிலேயே ஒரு சமூகத்தின் கூட்டுக்கனவுகளும் கூட்டு அச்சங்களும் உறைகின்றன. இன்றுகூட அமெரிக்காவும் ஐரோப்பாவும் கிரேக்க – கெல்டிக் புராணங்களை சார்ந்தே கனவுகாண்கின்றன.அவற்றை மறுஉருவாக்கம் செய்கின்றன.லார்ட் ஆஃப் ரிங்ஸ் முதல் கேம்ஆஃப்த்ரோன்ஸ் வரை உதாரணம்.
ஜப்பானில்குறைவது அது தான்.புராணங்கள்.ஆகவே கட்டற்ற கற்பனை. ஆகவே கலை. இக்காரணத்தால்தான் ஜப்பான் விரைவாக ஐரோப்பிய பாணி நவீனக்கலையை ஏற்றுக்கொண்டது போலும். இன்று ஐரோப்பாவின் வரைகலைகளை ஒட்டி தனக்கான புதிய புராணங்களை, புதிய வீரநாயகர்களை மாங்கா கலையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது போலும்
பௌத்த ஆலயத்தை சுற்றி அமைந்திருந்த தோட்டங்கள் மென்மையான பகலொளியில் பசுஞ்சுடர் கொண்டிருந்தன. ஒரு கணத்திற்கு அப்பால் தான் ஒன்றை கவனித்தேன் தரையில் ஒரு சருகு கூட இல்லை எந்த ஒரு தோட்டத்தையும் காலையிலும் மாலையிலும் பெருக்கினாலும் கூட சருகுகள் இருக்கும். என்ன செய்கிறர்கள் என்று பார்த்தேன்
அனைத்து ஆலயங்களிலும் காவலர்கள் உள்ளனர். எந்தக் காவலரும் கையில் குச்சியுடன் வெறுமே அமர்ந்திருப்பதில்லை. பெரும்பாலும் நடுவயது கடந்தவர்கள் சீருடை அணிந்திருக்கிறார்கள். பயணிகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். எவரேனும் தவறுதலாக செருப்புடன் ஏறினால் மென்மையாக அதை தடுக்கிறார்கள் ஆனால் அங்கிருக்கும் பொழுது முழுக்க நீண்ட குச்சியால சருகுகளை அவை விழுந்த உடனே குத்தி எடுத்து குப்பை கூடையில் போடுகிறார்கள். கூழாங்கற்களை ஒழுங்கமைக்கிறார்கள். தோட்டப்பராமரிப்பை இடைவெளியில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
வியப்பூட்டும் ஒன்று இது என்று எண்ணிக்கொண்டேன் ஒரு தோட்டத்தை ஒவ்வொரு கணமும் பராமரிக்க முடியுமா என்ன கைக்குழந்தையை பராமரிப்பதை போல உலகில் எங்கேனும் எவரேனும் இதை செய்வார்களா ஜப்பானிய தோட்டக்கலை என்பது ஒரு தியானம் ஒவ்வொரு கணமும் இடையறாது இவர்கள் பராமரித்துக்கொண்டிருக்கும் இந்த தோட்டம் ஒரு உள்ளம் உதிர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சருகும் அக்கணமே அகற்றப்பட்டுவிடுகின்றன.
கட்டின்றி வளர்ந்து பெருகும் காடே மானுட உழைப்பால் தன்னை தோட்டமென திருத்திக்கொண்டு அமைகிறது இங்கே அது ஒரு கலைப்பொருள் போல உள்ளங்கையிலிருக்கும் ஒரு படிகச்சிற்பம் போல அத்தனை முழுமையுடன் அத்தனை கட்டுப்பாட்டுடன் வந்து அமைந்திருக்கிறது.
நாராவிலிருந்து மீண்டும் ரயிலில் கியோடோ வந்து சாலையோரமாக இருந்த Hotel Ku Kyoto என்னும் விடுதியில் தங்கினோம். ஜப்பானிய பாணி விடுதி. அறையில் ஓர் அமெரிக்கத்தன்மை இருந்தாலும் ஜப்பானியப்பொருட்களும் கலந்து விந்தையான அனுபவத்தை அளித்தது. அங்குள்ள சிறப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக அமைந்துள்ள நிர்வாணக் குளியலுக்கான குளங்கள். செந்தில் வற்புறுத்தினாலும் நான் மறுத்துவிட்டேன். நான் நினைக்கும் நிர்வாணம் அது அல்ல
இரவில் ஓரளவு குளிர் இருந்தது . கியோட்டோவின் சாலையில் இரவுப்பயணிகள் அலைவதைப் பார்த்துக்கொண்டு நடந்தோம். நான் ஜப்பானிய உணவு வேண்டும் என்றேன். ஜப்பானிய உணவு விடுதிக்குசென்று யாக்குனிக்கு (Yakuniku) எனப்படும்சுட்டகறியும், ராமென் (Ramen) எனும் சூப்நூடுல்ஸும் உண்டோம்.
ஜப்பானிய உணவு பொதுவாக எனக்குப் பிடித்திருந்தது. சீன உணவுகளே கூட எனக்கு உவப்பானவை. அவற்றில் வெண்ணை, மிதமிஞ்சிய ஊன் இருப்பதில்லை. எண்ணையில் பொரிப்பதும் குறைவு. ஆனால் சீன உணவுகளில் பலவகை மணமூட்டிகள் உண்டு. ஜப்பானிய உணவுகளில் அவை குறைவு. அதோடு மீன். மீனை அப்படியே ஆவியில் வேகவைத்து கொடுக்கிறார்கள் – உப்புகூட போடாமல். மீனின் சிறகு உட்பட நாம் கழித்துக்கட்டும் பல பொருட்களை நீரில் வேகவைத்து சூப் ஆக அளிக்கிறார்கள். நாம் அவற்றை கழித்துக்கட்டுவதே அவை நாற்றம் மிகுந்தவை என்பதனால்தான். ஆனால் மீனின் நாற்றமே அதை சுவையுள்ளதாக ஆக்குகிறது.
[மேலும்]