ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

எந்த ஒரு பண்பாட்டையும் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்ட ஏட்டுச்சுவடிபோல உருவகிக்கலாம். அல்லது மேலும் சிறந்த உதாரணம் மேல்மேலாக வரையப்பட்ட ஓவியம். தஞ்சைப் பெரியகோயிலில் நாயக்கர்கால ஓவியங்களுக்கு அடியில் சோழர்கால ஓவியங்கள் உள்ளதுபோல. இதை நகரங்களைக் கொண்டு மேலும் துல்லியமாக உணரமுடியும். உதாரணமாக இன்றைய சென்னைக்கு முன்னோடி நகரம் என்றால் அது கும்பகோணம்தான். இன்றைய தஞ்சைக்கு அடியில் இருக்கும் நகரம் உறையூர். இன்றைய டெல்லிக்கு கல்கத்தாதான் முன்னோடிநகரம்.இந்நகரங்களில் எது பொதுவாக இருந்தது, எது வளர்ந்து மாறுபட்டது என்பதைப் பார்ப்பது ஒரு வரலாற்றுப்புரிதலை அளிக்கும்.

இன்றைய டோக்கியோவுக்கு அப்படி மூன்று முன்னோடி நகரங்கள் உள்ளன. ஒன்று கியோட்டோ இன்னொன்று நாரா அதற்கு முந்தையது காமகுரா.செந்தில் முதலில் கியோட்டோவுக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். புல்லட் ரயிலில் கியோட்டோ வரைச் செல்வதாக திட்டம். ஷின் கான் சென் எனப்படும் புல்லட் ரயிலுக்கு இந்தியாவிலிருந்தே டிக்கெட் எடுத்துக்கொள்வது செலவு குறைவானது, ஏனென்றால் சுற்றுலாப்பயணிகளுக்கு அது குறைவான கட்டணம் பெறுகிறது. பொதுவாக புல்லட் ரயில் செலவேறியது.

நான் புல்லட் ரயிலை முன்பு வெளிவந்த புல்லட் டிரெயின் என்னும் சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். இயற்கையையும் அறிவியலையும் அழிவுச்சக்தியாக, விபரீதமாகப் பார்க்கும் படங்களின் வரிசையில் ஒன்று. மானுடவல்லமையை உயர்த்திக்காட்டுவது அதன் கட்டமைப்பு. சாகசத்தன்மை அப்போதுதான் பெருகித்தெரிகிறது. ஆனால் அதற்கும் அடியிலிருப்பது சாமானியர்களுக்கு அறிவின்மேல் உள்ள அவநம்பிக்கை. எந்த ஓர் அறிவியல்விந்தையை கண்டாலும் அது நிலைகுலைந்தால் என்ன ஆகும் என்னும் அச்சமே எளியமானுடரில் எழுகிறது. இந்த வணிகச்சினிமாக்கள் அந்த அச்சத்தின்மேல் கட்டமைக்கப்படுகின்றன. எளிதில் பார்வையாளன் அதில் தொற்றிக்கொள்கிறான்

புல்லட் ரயில் மிகமிக கச்சிதமாகத் திட்டமிடப்பட்டுள்ளது என அதன் நேர அட்டவணை காட்டுகிறது. அல்லது அப்படிக் காட்டும்படி அதன் அட்டவணை அமைந்துள்ளது. ஒருநிமிடம் இரண்டு நிமிடம் என அதில் நேரத்தைப் பார்க்கையில் நான் வாழும் காலம் நீண்டு விரிந்து நிமிடங்கள் மணிகளாக ஆனதுபோல் ஓர் உணர்வு. புல்லட் ரயில் ஜப்பானில் விமானப்பயணத்திற்கு மாற்று. சுமார் நான்கு மணிநேர நேரத்தில் அது மொத்த தேசத்தையும் இணைக்கிறது. விமானநிலையம் சென்று சோதனைகள் முடித்து இறங்கி மீண்டும் காரில் ஊருக்குச் செல்வதும் இதன் நேரமும் இணையானது. இது பெரும்பாலும் நகரின் நடுவே மண்ணுக்குள் ஆழத்தில் இறக்கிவிட்டுவிடுகிறது.

வசதியான இருக்கைகள். கிளம்பும்போது சிறு உந்தல் தவிர விசையை உணரவே முடியாது. இருபக்கமும் விமானச்சாளரம் போல ஏதுமற்ற வெறுமைதான். ஆனால் வசதியாக அமர்ந்து பேசமுடியும். அலுவலகக்கூட்டங்களையே நடத்திவிடமுடியும். அதற்கேற்றாற்போல இருக்கைகளை மாற்றியமைக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் குட்டித்தூக்கம்தான் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

கியோட்டோவில் இறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் வெள்ளைக்காரப் பயணிகள். பல மின்படிகள் வழியாக மேலேறி வெளியே வந்தபோது அந்த ரயில்நிலையம் ஒரு பெரிய சிதல்புற்றின் வாய் எனத் தோன்றியது. பிலுபிலுவென மனிதர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஜப்பானியர்களில் நடப்பவர்களைப் பார்ப்பது மிக அரிது. குற்றோட்டம்தான். அவர்களின் உடலும் ஒத்துழைக்கிறது. பின்னாலிருந்து பார்த்தால் நம் இந்தியக் கண்கள் பெரும்பாலானவர்களை பையன்கள் என்றே நினைக்கச்செய்கின்றன.

கியோட்டோவுக்குள் நுழைந்தோம். கியோட்டோ சென்று பார்க்கவேண்டிய ஊர் என்பதைவிட தங்கியிருக்கவேண்டிய ஊர் என்பதே பொருத்தமானது. அங்கே முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஜென் ஆலயங்களும் புத்தர் ஆலயங்களும் ஷிண்டோ ஆலயங்களும் வெவ்வேறு அரண்மனைகளும் உள்ளன. இரு நூற்றாண்டாகவே ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் கியோட்டோவை நாடி வந்துகொண்டிருக்கிறார்கள.

பொதுவாக கியோட்டோ இன்று ஜப்பானிய ஜென் மத்த்தின் மையமாக மேலைநாட்டவரால் கருதப்படுகிறது. காசியில் திரும்பும் இடம் எல்லாம் யோகா குருக்கள் இருப்பதுபோல இங்கே ஜென் ஆசிரியர்கள். இந்தவகையான நுண்ணிய தளங்களில் முறையான ஆசிரியரைக் கண்டடைவது கடினம். உலகிலேயே உணர்தற்கு நுட்பமானது ஆன்மிகம், அடுத்தபடியாகக் கவிதை, பின்னர் ஓவியம். மூன்றிலும்தான் போலிகள் மிகுதி.

கியோட்டோ கிபி ஆறாம் நூற்றாண்டு முதலே உருவாகத் தொடங்கிய நகரம். இங்கே ஆண்ட தொன்மையான அரசகுலம் ஷிமோகமோ என்று தொல்லியல் சான்றுகள் உள்ளன.  கியோட்டோவுக்கு முன் நாரா தலைநகரமாக இருந்த்து. நாராவிலிருந்த பௌத்த மடாலயங்களின் நேரடி தலையீடுகளில் இருந்து ஆட்சியைக் காப்பாற்றும்பொருட்டு கிபி 794ல் கியோட்டோ தலைநகராக ஆக்கப்பட்டது. ஹீயன் கியோ என்பது பழைய பெயர், அமைதி நிலவும் நகர் என்று பொருள். கிபி 1869ல் டோக்கியோ ஜப்பானின் தலைநகரமாக ஆகும்வரை கியோட்டோவே தலைநகரமாக நீடித்தது.

முற்காலத்தில் கியோட்டோ மக்களிடமிருந்து முற்றாக அந்நியப்படுத்தப்பட்டு அரசர்கள் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மட்டுமே தங்கும் இடமாக இருந்தது சொல்லபோனால் இதுஒரு ராணுவ மையம். ராணுவ அதிகாரிகளை ஷோகன் என்கிறார்கள் இதை ஷோகனேட் என்று குறிப்பிடுகிறார்கள். ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவுக்கு மாற்றப்பட்ட பிறகு கியோட்டோ கலாச்சார நகரமாக உருமாற ஆரம்பித்தது.

நாரா தலைநகராக இருந்த காலகட்டத்தில் ஜப்பானியப் பேரரசு அதன் முழு வீச்சை அடையவில்லை வெவ்வேறு தீவுப்பகுதிகள் தனித்தனிப் போர்த்தலைவர்களால் ஆளப்பட்டன. கியோட்டோவின் காலகட்டம்தான் ஜப்பானிய வரலாற்றின் பொற்காலம்.  பௌத்தம் செழித்தது, அது இங்கிருந்த பல்வேறு வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைத்து ஒரு பெருமதமாக உருவாக்கியது.பெருமத உருவாக்கமும் பேரரசு உருவாக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பெருமதங்கள் பேரரசுகளை தாங்கி நிற்கின்றன. பேரரசுகள் பெருமதங்களை ஆதரித்து வளர்க்கின்றன.

பெருமதமும் பேரரசும் ஒன்றாக திகழ்ந்ததை காட்சிவடிவாக விளக்கும் பல தொல்நகர்கள் உலகமெங்கும் உள்ளன. கியோட்டோ அதில் ஒன்று. இந்நகர்களுக்கே உரிய தனித்தன்மை என்பது வைரப்பட்டை போல வெவ்வேறுமுகம்காட்டித் திரும்பிக்கொண்டே இருப்பது.  ஒரு கோணத்தில் அன்றைய மையஅதிகாரத்தின் செருக்கையும் குரூரத்தையும் காட்டுகிறது. கூடவே செல்வவளத்தையும் உயர்குடி மிதப்பையும். ஆனால் அதிகாரம் செல்வமாக மாறி மதத்தை ஆளத் தொடங்கும்போதே செவ்வியல்கலை பிறக்கிறது. ஆகவே இவை கலையிலக்கிய மையங்களும்கூட

மதம் என்பது மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கைமுறைகள், தொல்உருவகங்கள் ஆகியவற்றின் பெருந்தொகை, அவற்றிலிருந்து மையத்தரிசனத்தையும் தத்துவக்கட்டமைப்பையும் அறத்தையும் நெறிகளையும் உருவாக்கமுயல்கிறது. அவற்றை மக்களிடையே படிமங்களாக, கதைகளாக நிலைநாட்ட முயல்கிறது.

மதத்தின் இத்தகைய தொடர்ச்செயல்பாடு. விளைவாகவே ஆன்மிகஉருவகங்களும், தத்துவமும்,  அறவியலும், இலக்கியமும், கலைகளும் உருவாகின்றன. அவற்றை பேண, நிலைநிறுத்த பேரரசு தேவை. சோழப்பேரரசு ஓர் அதிகாரக் கட்டமைப்பு. ஆனால் அது இல்லாமலிருந்தால் தமிழ்ப்பண்பாடே இல்லை. கியோட்டோ அத்தகைய ஓர் அதிகார – ஆன்மிக- பண்பாட்டு – கலை மையம். கியோட்டோ இன்று ஒரு சுற்றுலா மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் முதலில் சென்றது ஒரு ஜென் ஆலயத்திற்கு. டெய்ட்டோக்குஜி [Daitokuji ] ஆலயம் ரின்ஸாய் ஜென் பௌத்த மரபினரின் ஆலயத்தொகை. பல சிறு ஆலயங்கள் அமைந்த வளாகம்.1319ல் இது நிறுவப்பட்ட்து. 1467ல் நிகழ்ந்த போரில் எரிந்து அழிந்தபின் மீண்டும் கட்டப்பட்டது.  சென் நோ ரிக்யூ என்னும் ஜென் குரு இங்கே அவருடைய ஆன்மிகத் தேநீர் விருந்தை நிகழ்த்தியிருக்கிறார். ஓடா நொபுங்கா மற்றும் டொயோடோமி ஹிடயோஷி போர்த்தளபதிகள் இதைப் பேணியிருக்கிறார்கள்.

அதை ஒர் ஆசிரமம் என்றோ தியான மையம் என்றோதான் சொல்ல முடியும் பெரிய மதில்களால் வளைக்கபப்ட்ட நன்கு பராமரிக்கப்பட்ட சோலை நடுவே மரத்தாலும் இரும்பாலும் பித்தளை, செம்பு முதலிய பிற உலோகங்களாலும் ஆன ஒற்றைமாடிக் கட்டிடம். செம்பால் ஆன சரிந்த கூரை. தொல்காலத்தில் இங்கே முற்றிய மூங்கிலால் கூரைகள் அமைத்திருக்கிறார்கள் – நம்மூர் வளையோட்டுக் கூரை வடிவில். பின்னர் அதே வடிவில் பித்தளையாலும் செம்பாலும் கூரை அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அகன்ற இடைநாழிகள். குளிர்ந்து அமைதியில் இறுகிய தியான அறைகள். இது வெவ்வேறு தியான அறைகளின் தொகுப்புதான். அறைகளுக்குள் மிகக்குறைவான அலங்காரம், மிகக்குறைவான பொருட்கள். ஜப்பானிய ஆலயங்கள் எவையும் பிரம்மாண்டமானவை அல்ல. ஆனால் இடம் மிகச்சிறப்பாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே விரிவு என நம் விழியும் உள்ளமும் அவற்றை உணர்ந்தபடியேதான் இருக்கின்றன

ஜப்பானிய அறையலங்காரக் கலை மிகத்தொன்மையானது. ஜப்பானிய அறையலங்காரம் இன்று நம் கண்ணுக்கு வேறுபாடாகத் தெரிவதில்லை. ஏனென்றால் ஐரோப்பா வழியாக நம் இல்லங்களுக்கே அது வந்துவிட்டது. உதாரணமாக  tokonoma எனப்படும் அறைமூலை. இங்கே அழகுப்பொருட்கள் வைக்கப்படும். Fusuma எனப்படும் ஓவியத்தட்டிகள் நீண்ட கலைமரபு கொண்டவை . கூழாங்கற்களால் ஆன அலங்காரங்கள். உலர்ந்த சுள்ளிகளின் கட்டுகள். கலங்கள், அலங்காரத்திற்குரிய எளிமையான மூங்கில்கூடைகள்.

ஜப்பானிய அறையலங்காரத்தின் அடிப்படை ஒன்றே, பார்வையை உறுத்தாத பொருட்கள். அடர்வண்ணங்களோ ஒளிரும் உலோகங்களோ செறிவான செதுக்குகளோ இல்லை. பொருட்கள் அறைக்குள் இருப்பதை நாம் அறியமுடியாது, அவை ஒட்டுமொத்தத்தின் பகுதியாக ஆகி நம் விழியறியாமல் ஆழுள்ளத்துடன் உரையாடிக்கொண்டும் இருக்கும்

ஜப்பானின் மிகப்பழைமையான துப்பாக்கியான Tanegashima Musket இங்குள்ளது.  1583 ல் செய்யப்பட்டது அது. ஜென் ஆலயத்தில் துப்பாக்கி. அது ஒரு போதும் வெடித்திருக்காது என நினைத்துக்கொண்டேன். முழு வெடித்திறனுடன், குண்டு நிறைக்கப்பட்டு ஒருபோதும் வெடிக்காமல் அமைந்திருக்கும் துப்பாக்கி.

அங்கு வழிபாட்டுக்கான கோயில்கள் இல்லை. ஜென் முறையான பூசைமுறைகளைக் கொண்டது அல்ல. தியான அறைகளில்  புத்தரின் சிறியசிலை போதிசத்துவர் சிலைகளுடன் தியானத்திற்கான உருவமாக வைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் ஜென்பௌத்த பிக்ஷு ஒருவரைப்பார்த்தோம் அவரை வணங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கண்கள் இடுங்க சிரித்து புகைப்படத்திற்கு எங்களுடன் நின்றார்.

இப்பிக்ஷுக்களின் உடைகள் பிரம்மாண்டமான கிமோனாக்கள். தடித்த கம்பளியால் ஆனவை. மிகுந்த எடை கொண்டவை. அவர் ஒரு மாபெரும் பட்டாம்பூச்சி போலத் தோன்றினார். ஜென் பௌத்த கவிதைகளில் ஏன் பட்டாம்பூச்சிகள் அவ்வளவு வருகின்றன என நமக்கு ஓர் வியப்பு உண்டு. இங்கே பலர் ஜென் பட்டாம்பூச்சிகளைப் பற்றி எழுதிவிட்டார்கள். ஆனால் இங்கே தோட்டம் முழுக்க பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருக்கின்றன. இவர்களின் கிமோனோக்கள் பட்டாம்பூச்சி இறகுகளேதான்.

இங்கு குளிர் காலத்தில் உறைபனி வருகிறது. ஜப்பானின் இந்த கட்டிடங்கள் எவையுமே உண்மையில் மேலை நாடுகளைப்போல் குளிர்தாங்கும் வகையில் அமைக்கப்படவில்லை. திறந்த பெரிய சாளரங்களும் கதவுகளும் கொண்டவை .உயரமான ஓட்டுக் கூரைகள் கொண்டவை. தடிமனான சுவர்களோ இரட்டைச்சுவர்களோ இல்லை. குளிர்காலத்தில் இந்த அறைகள் நன்கு குளிருமென்று தோன்றியது .எந்த அறையிலும் கணப்பென்பதே இல்லை.

குளிர்காலத்தை இவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது விந்தையாகவே இருக்கிறது. இந்த கிமோனாக்களே ஒவ்வொருவரையும் சுற்றி ஒரு கூடாரத்தை அமைத்துவிடும் என்று தோன்றியது. அதற்குள் உடலின் வெப்பமே நிறைந்திருக்கும். நத்தைக் கூட்டுக்குள் நத்தை இருப்பது போல  இவர்கள் இந்த கூடாரத்துக்குள் ஒண்டிக்கொண்டு வாழ்கிறார்கள் போலும்  இன்னொரு உடல். அதிலிருந்து இன்னொரு கிமோனோவுக்குள் செல்வது மறுபிறப்பு.

அங்கிருந்த பெண்மணி எங்களை வரவேற்று அந்த இடத்தை பற்றி அறிமுகம் செய்தார். அது ஜென் பௌத்தத்தின் தியான முறை என்பது மிகச்சுருக்கமாக சொல்லப்போனால் உள்ளும் புறமும் சும்மா இருத்தலே. ஆகவேஅமைதியான ஒரு வெறுமையை அங்கு உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வெறுமையை அனைத்திலும் பிரதிபலிக்க வைப்பதில்தான் ஜென் முறையின் வெற்றி உள்ளது. அறைகளைப் பிரிக்கும் தட்டிகளிலுள்ள ஓவியங்கள் முக்கியமானவை .ஜப்பானிய ஓவியங்களின் தனித்தன்மையை உருவாகி வந்த காலத்தில் வரையப்பட்டவை அவை.

இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் செவ்வியல் ஓவியங்களில் இருப்பதைப்போல ஓவியக்களம் முழுக்கவே உருவங்களால் நிறைந்திருப்பதில்லை. நிறைய வெற்றிடங்கள் விடப்பட்டுள்ளன. ஆங்காங்கேதான் உருவங்கள். தற்செயலாக தூரிகைபட்டு தீற்றப்பட்டவை போல. மெல்லிய இறகுகள் வந்து விழுந்து படிந்தவைபோல. அந்த வகை வரைகலைக்கு ‘பறத்தல்’ என்னும் கருவுடன் நெருக்கம் உள்ளது. ஜப்பானிய ஓவியங்களில் தெய்வங்கள், பறவைகள், முகில்கள் பறந்துகொண்டிருக்கின்றன. மூங்கில் இலைகளும் காற்றிலாடி பறப்பவை போல தோன்றுகின்றன. அமர்ந்திருக்கும் புத்தரில் கூட ஆடை பறந்துகொண்டிருக்கிறது. அனைத்து உருவங்களும் மங்கிய வண்ணங்களில் உள்ளன.

Masahisa Fukase/ crows

நோக்கியபடிச் சென்றபோது எனக்கு அனைத்து ஓவியங்களும் பறந்துகொண்டிருக்கும் கொடியில் தெரிவன போல தோன்றின ஓவியங்கள் வரையப்பட்டபின் அவற்றின் மீது அவற்றை கரைக்கும் எண்ணை ,அல்லது நீர் தெளிக்கப்பட்டு மெல்ல ஒற்றி எடுக்கப்பட்டு வண்ணங்கள் மிக மென்மையாக மாற்றப்பட்டுள்ளது .ஆகவே வண்ணங்கள் அனைத்தும் ஒளி ஊடுருவுவன போல தோன்றின.

தொடக்க கால ஜப்பானிய ஓவியங்கள் கரிய வண்ணங்களால் ஆனவை. அடர்கருமை அல்ல, கழுவப்பட்ட சாம்பல் கருமை. ஒளிரும் மழைமுகில்களைஅப்போல.  உருவங்கள் உருகி ஒன்றானவை போலிருக்கும். பின்னர்தான் வண்ணம் வந்தது. ஆயினும்கூட கரிய ஓவியங்களையே அவர்கள் முதன்மையாகக் கருதினர். பிற்காலத்தில் கருப்புவெள்ளை புகைப்படக்கலை வந்தபோது அதில் ஜப்பானிய மேதைகள் உருவாகி வந்தனர்.

Masahisa Fukase

ஏ.வி.மணிகண்டன் ஒருமுறை மசாகிசா ஃபுகாஸேயின் கருப்புவெள்ளைப் புகைப்படங்களை எனக்குக் காட்டி ஜப்பானிய கருப்புவெள்ளைப் புகைப்படக்கலையை விளக்கினார் அன்று கண்ட காகங்கள், கடல் அலைகளின் காட்சிகள் பின்னர் கனவிலும் எழுந்துள்ளன. ஜப்பானிய கருப்புவெள்ளைப் திரைப்படங்களும் உலக அளவில் புகழ்பெற்றவை. ஜப்பானிய திரைப்பட ஒளிப்பதிவுக் கலை திரைப்படங்களில் வண்ணம் வந்ததுமே அழிந்துவிட்டது என ஒருமுறை மிஷ்கின் அவருக்கே உரிய கொந்தளிப்புடன் சொன்னார்

இன்று ஜப்பானின் கருப்பு வெள்ளைப் புகைப்படக்கலையின் வெளிப்பாடாக உள்ளது அங்குள்ள மாங்கா போன்ற வரைகலை நூல்கள். உடலின் விசை, உணர்வெழுச்சிகள் , கனவுகள் போன்றவற்றைக்கூட அவர்கள் கோட்டோவியங்களில் அடைந்துவிடுகின்றனர். இந்த ஜென் மடாலயத்தின் தட்டிகளில் உள்ள கறுப்பு வெள்ளை படங்கள்  அக்கலையின் தொல்காலத்தைச் சேர்ந்தவை.

நடக்கும்போதும் அமரும்போதும் ஓசை எழாமலிருப்பதற்காக தரைகள் மெத்தையிடப்பட்டு அவற்றின் மேல் ஜப்பானியக் கோரைப்புல்லாலான பாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. முற்றிய கோரைப்பாய்கள் பித்தளையால் வேயப்பட்டவை போல் தோன்றின. உயிருள்ள பித்தளை. கதவுகளின் தாழ்கள் பொன் எனவே மின்னின. அங்கு எவரும் ஓசை எழுப்பி பேசாததனால் எவரோ ஒருவர் ஒரு சொல் உரைத்தால் கூட மந்திரம் போல் அது முழங்கியது.

முற்றங்களும் குறிப்பிட்ட முறையில் பேணப்படுகின்றன. முற்றங்களை கல்லாலான தோட்டங்கள் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள் .மணல், சரளைக்கற்கள், பெரிய கூழாங்கற்கள்,  உருளைக்கற்கள் குத்துப்பாறைகள் ஆகியவற்றைக்கொண்டு விதவிதமான வடிவங்களை அங்கு அமைந்த்திருக்கிறார்கள். நாங்க்ள் சென்றபோது அமைக்கப்பட்டிருந்தது கடல். இரும்பு கரண்டியால் உருவாக்கப்பட்ட அலைகள். நடுவே தீவுகள்போல கூழாங்கற்பாறைகள் அமைந்திருந்தன. எங்களுக்கு அந்த இடத்தை அறிமுகம் செய்த பெண்மணி அவ்வடிவங்கள் ஒவ்வொரு வாரமும் மாற்றப்படும் என்றார். அதற்குரிய நாள் கணக்குகளும் தொன்மங்களும் உள்ளன

முற்றத்தில் ஒருபுறத்தில் இருந்த செடியை சுட்டிக்காட்டி அது சால மரம் என்றார். மறுபுறம் போதி .ஆனால் குங்கிலியமோ அரசோ அல்ல. நான் ”இது இந்தியாவில் வேறு மரமல்லவா?” என்று செந்திலிடம் சொன்னேன். அந்தப்பெண்மணி “ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். இந்தியாவில் உள்ள சால மரமும் அரச மரமும் இங்கு வளர்வதில்லை .ஆகவே இங்கு வளரக்கூடிய இந்த இரு மரங்களையும் சால அரச மரங்களுக்கான பிரதிநிதியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் ” என்றார். ஒரு கணத்தில்  உள்ளத்தில் ஒரு புன்னகை வந்தது ஜென் என்பதே அந்த மரங்களைப்போலத்தான் .பௌத்தம் தான் ,ஆனால் பௌத்தம் அல்ல. பௌத்தத்திற்கு பதிலாக வைக்கப்பட்ட இன்னொரு பௌத்தம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஅரியணைகள்,வாசிப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதாது உகு சோலை