இன்றைய காந்திகள்
அன்புள்ள ஜெ
இந்தத் தளத்தில் வெளிவந்த நவகாந்தியர்கள் பற்றிய கட்டுரைகள் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவை காந்தியம் என்றால் என்ன என்று காட்டுகின்றன. இதுவரைக்கும் நானே காந்தியம் என்பது ஒரு தரப்பு கம்யூனிசமும் திராவிடவாதமும் வேறு தரப்புக்கள் என்றே நினைத்துவந்திருந்தேன். ஆனால் காந்தியம் செயல்படுபவர்களின் தரப்பு. மற்றவை வெறுமே கருத்துசொல்பவர்களின் தரப்புக்கள் என்று இன்றைக்குத் தெரிந்துகொண்டேன்.
மற்றவர்கள் எதிரிகளை வசைபாடுகிறார்கள். தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். காந்தியம் சொல்வதற்கு சான்றாகச் செய்து காட்டுகிறது. எதையும் வசைபாடுவதில்லை. எதிர்ப்பதுகூட இல்லை. இந்தப்போராட்டம் ஆக்கபூர்வமானது. அத்தனை காந்தியவாதிகளுக்கும் தலைவணங்குகிறேன்
டி.சந்தானகிருஷ்ணன்
***
அன்புள்ள ஜெ
முன்பு ஒரு கட்டுரையில் காந்தி ஏன் மகாத்மா என்றால் அவர் பலநூறு மகாத்மாக்களை உருவாக்கியவர் என்பதனால் என்று சொல்லியிருந்தீர்கள். இன்றையகாந்தியர்களைப் பார்க்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் செய்திருக்கும் சாதனைகளை கணக்கிடுகையில் காந்தியை நினைத்து வணங்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு மனிதர் எப்படி இத்தனை பெரிய பலருக்கு ஆதர்சமாக இருந்தா? அவரை இவர்கள் நேரில்பார்த்ததுகூட இல்லை. ஆனால் அவர்கள் அனைவருக்கும் காந்தி குருநாதராக வழிகாட்டியாக இருந்திருக்கிறார்
காந்தியைவிட தர்க்கபூர்வமாகச் சிந்தனைசெய்தவர்கள் பலர் உண்டு. காந்தியைவிட பெரிய சிந்தனையாளர்கள் பலர் உண்டு. ஆனால் அவர்களிடமிருந்து காந்தியை வேறுபடுத்திக் காட்டுவது காந்தி செய்துகாட்டினார் என்பதுதான். காந்தியின் செயல்களே அவரை காட்டுகின்றன. என் வாழ்க்கையே என் செய்தி என அவர் சொன்னதுதான் மிகப்பெரிய தத்துவம்.
அவ்வாறு காந்தியின் வாழ்க்கையையே அவருடைய செய்தியாக எடுத்துக்கொள்ளும்போது ஒன்று தெரிகிறது, அவருடைய வெற்றிகள் மட்டும் அல்ல அவருடைய தோல்விகளும்கூட அவருடைய செய்திதான். ஆகவேதான் செயல்வீரர்கள் அவரை பின்பற்றுகிறார்கள். மற்ற சிந்தனையாளர்கள் தங்கள் சிந்தனைகள் அப்பழுக்கற்றவை என்றும் தப்பே செய்யாதவை என்றும் சொல்கிறார்கள். மாற்றுத்தரப்பை நிராகரிக்கிறார்கள். இதுவே அவற்றை நடைமுறையில் பயனற்றவை ஆக ஆக்கிவிடுகின்றன. நடைமுறையில் என்னென்ன தப்புகள் நிகழும் என்ற செய்தியையும் உள்ளடக்கிய செய்தியே பயனுள்ளது. காந்தியின் வாழ்க்கை என்னும் தத்துவம் அப்படிப்பட்டது
பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இக்கட்டுரைகள் விரைவில் நூலாகவேண்டும்
எம்.ஆர்.பார்த்திபன்
***