அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
விசிக அலுவலகம் சென்னையில் நேற்று நடந்த பொன்பரப்பி உள்ளிட்ட சாதிய மதவாத பாசிச நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன உரை நிகழ்வில் உங்களைப் பார்த்தேன். இதற்கும் முன்பு உங்களை ஓரிரு மேடைகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேச தோன்றியதில்லை். காரணம் நீங்கள் அறிந்ததுதான். உங்களுக்கு இடப்பட்டிருக்கும் முத்திரை.
ஆனால், சமீப காலமாக தொல்.திருமாவளவன் என்கிற அரசியல் ஆளுமை குறித்து மிக நேர்மையான கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லிவரும் உங்களிடம் உரையாட வேண்டும் என்கிற எண்ணம் என் மனதின் ஆழத்திலிருந்து ஏற்பட்டது.
நீங்கள் நிகழ்விலிருந்து வெளியேறும் தருணத்தில் வாசலில் வைத்து உங்களுடன் பேசினேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘சல்வா ஜூடும் ‘ என்கிற நூலை உங்களிடம் தந்தேன். நினைவிருக்கிறதா? சன்னா அவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தார்
வாய்ப்பிருந்தால் நேரமிருந்தால் அந்நூல் குறித்த உங்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ( அந்த புத்தகம் இருக்கிறதுதானே!) இலக்கியம் குறித்த உங்களின் கறாரான பார்வையின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையாலேயே இதை எழுதுகிறேன்.
நன்றி !
சா.திருவாசகம்.
அன்புள்ள திருவாசகம்
உங்கள் கதைகளை வாசித்தேன். எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். எழுதுவதற்கான முனைப்பும் அதற்கான வாழ்க்கைப்புலமும் உணர்வுச்சீண்டல்களும் உங்களிடம் உள்ளன. இனி வேண்டியது கதைத்தொழில்நுட்பம், எதை எழுதவேண்டும் என்னும் தெரிவு இவை மட்டுமே. இவற்றை மிக எளிதில் கற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் நீங்கள் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அமையவும் இயலும் உங்களிடம் எந்தப் பாசாங்கும் இல்லை. அது மிகப்பெரிய தகுதி.
என் அவதானிப்புக்களை தெரிவிக்கிறேன். இதை பொதுவில் விவாதிக்கவேண்டும் என எனக்குத் தோன்றுவதற்கான காரணம் உங்கள் தொகுதி மீது கவனம் அமையட்டும் என்பது ஒன்று. இவை அறுதியான தீர்ப்புகள் அல்ல, விவாதக்குறிப்புகளே என்பது இன்னொன்று
அ. எழுதும்காலத்தில் கதைகளை தன்னிலையில் ‘நான்’ என எழுதலாகாது. அது வெவ்வேறுவகையில் கற்பனை விரிவதை இல்லாமலாக்கிவிடக்கூடும். வெறும் தன் அனுபவங்களை குறிப்புகளாக மட்டுமே எழுதுவதே எழுத்து என ஆகிவிடலாம். எழுத்து என்பது இன்னொரு அனுபவத்திற்குள் கூடுபாய்தல். இன்னொரு மானுடனுக்குள் சென்று வாழ்தல். இன்னொருவராக ஆசிரியர் தன்னை மாற்றிக்கொள்ளல்
அது அமைந்த பின்னர் நான் என எழுதலாம். அந்த நான் என்பது நீங்கள் அல்ல. நீங்கள் கற்பனைசெய்துகொள்ளும் நான். அதாவது இன்னொருவருக்குள் அமைந்து நீங்கள் நான் என எழுதுவீர்கள். அதுவே புனைவு
ஆ.அன்றாட அரசியல்கருக்களை எழுதவேண்டாம். ஏனென்றால் அவை ஏற்கனவே பேசப்பட்டவை. சலித்தவை. எழுதுவது பிறர் சொல்லாத ஒன்றை, பிறர் நோக்காத ஒன்றைச் சொல்வதாக அமையட்டும். வழக்கமான ஒன்றைச் சொல்ல இலக்கியம் தேவையில்லை. அது எத்தனை முக்கியமானதாக இருந்தாலும்
உதாரணமாக இத்தொகுதியில் பெரும்பாலான கதைகள் நம் கல்வியமைப்புகளுக்குள் உள்ள ஊழல்கள், சாதிய அடிப்படை ஆகியவற்றைப் பற்றியவை. நேரடியான விமர்சனம் மற்றும் நையாண்டியாக இவை உள்ளன. ஆனால் ஓர் எழுத்தாளராக நீங்கள் இவற்றை மேலும் விரித்துக்கொள்ளலாம். கல்விநிலையம் என்பது நம் சமூகத்தின் ஒரு பிரதிநிதித்துவ அமைப்பு. ஒரு குறியீடு, அல்லவா? இந்தியாவில் ஜனநாயக மாற்றம் வந்தபோது பிரச்சினைக்குள்ளான இடங்கள் சாலை, கல்விநிலையம் இரண்டும்தான். பின்னர்தான் கோயில். ஏனென்றால் அனைவரும் சமமாக அமையவேண்டியவை இந்த் இடங்கள். ஆகவே உரிமைப்பிரச்சினைகள் எழுந்தன. இன்று அவை எந்நிலையில் உள்ளன?
இந்த வரலாற்றுண்டவுடன் மேலும் நுட்பமாக, பொதுவான வாசகன் பார்க்காத ஒரு கோணத்தில் கதைகள் அமையவேண்டும் அல்லவா?.
இ. இலக்கியம் என்பது அகவயமான உண்மைகளுக்கு உரியது. புறத்தே நிகழ்வன அல்ல, உங்களுக்குள் ஆழத்தில் அவை என்ன உருவாக்குகின்றன என்பதே இலக்கியத்திற்குத்தேவை. ஆகவே உங்களுக்குள் நோக்குக. நீங்கள் ஆழமாக என்ன உணர்கிறீர்களோ அதை மட்டும் எழுதுங்கள். நேரடிஅனுபவங்களில் இருந்து அந்தரங்கமாக எதைக் கண்டடைகிறீர்கள்?
ஈ. வாசகன் நம்மைவிட புத்திசாலி என எண்ணுங்கள். ஆகவே வாசகனுக்கு எதையும் போதிக்கவேண்டாம். வாழ்க்கையை மட்டுமே காட்டுங்கள். எதையும் விளக்கவேண்டாம். உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கைச்சித்திரம் உங்களுக்குள் உறையும் வாழ்க்கைநோக்கை நோக்கிச் செல்லும். வாசகனையும் அவ்வாறு கொண்டுசெல்லும். அதுபோதும்,
உ. அவ்வப்போது எழுதாதீர்கள். எழுத்து கைவரும்வரை நாள்தோறும் எழுதுங்கள் நீங்கள் வந்து அமரவேண்டிய ஒரு படைப்பாளிகளின் வரிசை இங்கே உள்ளது.
வாழ்த்துக்களுடன்