கண்ணதாசனும், அதைவிட வைரமுத்துவும் சிறந்த திரைஇசைப்பாடலாசிரியர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் பாரதி எங்கே வந்தார்? பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும் ஒன்றா? பாரதி திரைஇசைக்கென்று ஏதாவது அப்படி எழுதியிருக்கிறாரா? நீங்கள் ஒப்பிட்டுச் சொன்னது ஏன்? என்றாலும் இப்பொழுதும் திரைப்பாடல்களில் பாரதியின் பாடல்கள் எந்த இசையமைப்பாளருக்கும் பொருத்தமாகத்தானே அமர்கின்றன?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் பாரதியை திரைப்பாடலாசிரியனாக வைரமுத்துவிடம் ஒப்பிடவில்லை, இசைப்பாடலாசிரியனாகத்தான் ஒப்பிடுகிறேன். அப்படித்தான் ஜெயதேவரிடமும் ஒப்பிட்டுள்ளேன்.
திரைப்பாடல்களை ஓர் இலக்கிய வகைக்குள் அடக்கவேண்டுமானால் இசைப்பாடல் [Lyric] என்ற வடிவத்துக்குள்தான் அடக்கமுடியும். என்ன வேறுபாடு என்றால்…
1]திரைப்பாடல் காட்சிகளுடன் இணைந்தது
2]திரைக்கதை கோரும் சூழலுக்கேற்ப அமைவது
3]ஒரு தெளிவான அடையாளம்கொண்ட கதாபாத்திரத்தால் பாடப்படுவது.
ஆகவே திரைப்பாடலை இசைப்பாடல் என்று கூறலாகாது என்றும், இசைப்பாடல் எடுத்தாள்கை இலக்கியம் என்றால் திரைப்பாடல் இருமுறை கைமாறி எடுத்தாளப்பட்ட இலக்கியம் என்றும் திரை ஆய்வாளர் எஸ்.தியடோர் பாஸ்கரன் தொலைபேசியில் சொன்னார். அது உண்மையே. ஆனால் நம் திரைப்பாடல்கள் பெரும்பாலும் பொதுவான தருணங்களுக்காகவே எழுதப்படுகின்றன. அத்தருணங்களும் மரபான இசைப்பாடலின் தருணங்களை ஒத்திருக்கின்றன. திரைப்படத்தின் பகுதியாக வந்தாலும் காலப்போக்கில் அவை தனித்து நிற்கின்றன. ஆகவே திரைப்பாடல்கள் சில தனித்தன்மைகள் கொண்ட இசைப்பாடல்களே.
நம் இசைப்பாடல் மரபு தொன்மையானது. கானல்வரி ஆய்ச்சியர் குரவை ஆகியவை சிலப்பதிகாரத்தில் நாம் காணும் மகத்தான இசைப்பாடல்கள். தேவாரப் பாடல்கள் இசை கொண்டவையாயினும் இசைப்பாடல்கள் அல்ல. திருப்புகழ்தான் நாம் காணும் சிறந்த பண்டைய இசைப்பாடல் திரட்டு. ஆனால் அதன் மொழி சம்ஸ்கிருதக் கலவையாக உள்ளது. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச்சிந்து, கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் கீர்த்தனை, அருணாச்சலக் கவிராயரின் ராமநாடகம் மற்றும் மாரிமுத்தாபிள்ளையின் பாடல்கள்தான் தமிழ் இசைப்பாடல்களின் புதிய காலகட்டத்தின் தொடக்கப் புள்ளிகள். பாரதி இம்மரபின் நவீனகால நீட்சி. ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் [அலைபாயுதே கண்ணா], பாரதிதாசன் [தமிழுக்கும் அமுதென்று பேர்] சுத்தானந்தபாரதி [குழலோசைகேட்குதம்மா], பெரியசாமி தூரன் [முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்], தண்டபாணி தேசிகர் [தாமரை பூத்த தடாகமடி], கல்கி [காற்றினிலே வரும்கீதம்] ஆகியோர் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
இம்மரபுக்கு ஒரு தேக்கம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் தமிழிசை இயக்கத்தில் ஏற்பட்ட தேக்கமே. இன்று இசைப்பாடல்கள் எழுதுவோர் குறைவு, எழுதினாலும் பாடவோ கேட்கவோ ஆட்கள் இல்லை. நமது இசை திரையிசையாக உள்ளது. ஆகவே இன்று நமது இசைப்பாடல்கள் திரைப்பாடல்களாகவே இருக்க முடியும். அதில் முக்கியமாக சாதனை செய்தவர்கள் கண்ணதாசனும் வைரமுத்துவும்தான். இதுவே நான் சொன்ன வரிசையாகும்.
இதில் வைரமுத்துவின் சாதனை முக்கியமானதே. கண்ணதாசன் வரையிலானவர்கள் எடுத்தாண்டது இசைத்தன்மை கொண்ட மரபுக்கவிதையின் கூறுகளையும் சொல்லிச்சொல்லி காதுக்குப் பழகிய அணிகளையுமாகும். வைரமுத்து புதுக்கவிதையை எடுத்தாண்டார். அது இசைத்தன்மை அற்றது. புதியவகை உருவக, படிமத் தன்மை கொண்டது. அத்துடன் வைரமுத்துவின் காலகட்டத்தில் இசையின் இலக்கணம் மாறிவிட்டது. நம் மண்ணின் சாயல் கொண்ட மரபிசைக்குப் பதிலாக அன்னிய இசை மேலோங்கியது. நம் வரலாற்றிலேயே மிக எதிர்மறைச்சூழலில் எழுதிய இசைப்பாடலாசிரியர் வைரமுத்துதான். இந்த எதிர்மறைக்கூறுகளை வெற்றிகரமாகத் தன்வயப்படுத்தி தமிழ்த்தன்மையும் இசைத்தன்மையும் கொண்ட நல்ல பல பாடல்களை அவர் உருவாக்கியது முக்கியமான சாதனையே.