மாயாவிலாசம்!
அன்புள்ள ஜெ,
மாயாவிலாசம் படித்தேன். வேண்டாத வார்த்தை தானம் இல்லாமல் மென்பேசியில் தமிழ் தட்டச்சு செய்ய கீ பேடையே தமிழுக்கு மாற்றிக் கொள்ளும் எழுத்தாணி என்ற செயலி உள்ளது. (ezhuthani) .
செயலியைத் தரவிறக்கம் செய்த பின் தெவைப்படும்போது அதை தூண்டிவிட்டு
get started > setting up ezhthani > switch to ezhuthani> Finished.
இதன் பின் எங்கு கீ பேட் எழுந்தாலும் தமிழில் தட்டச்சு செய்யலாம். “அ” வை அழுத்தினால் தமிழ். “ENG” யை அழுத்தினால் ஆங்கிலம். மெதுவாக இருப்பினும் உபயோகமானது.ஏற்கனவே இது உங்களுக்குத் தெரிந்திருக்கவும் கூடும். தேவையானால் முயற்சி செய்து பார்க்க்கவும்.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணன்
***
அன்புள்ள ஜெ வணக்கம்…
கைப்பேசியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு பல மென்பொருட்களும், செயலிகளும் ,இணையதளங்களும் இருந்தாலும், கூகிளின் G board Tamil voice typing செயலிக்கு ஈடு இணை ஏதும் இல்லை.
இந்தக் கடிதம் உட்பட நான் உங்களுக்கு அனுப்பியுள்ள கடிதங்கள் சமூக ஊடக பதிவுகள் அனைத்தும் நான் வாய்ஸ் டைப்பிங் முறையில்தான் செய்கிறேன். என் அனுபவத்தில் தட்டச்சினைவிட குரல்வழி பதிவின்(speech to text=குரலச்சு)சிறப்பம்சங்களாக நான் நினைப்பது.
அ. ஈடு இணையற்ற வேகம், கொஞ்சம் பழகி விட்டால் நாம் பேசும் வேகத்திலேயே குரலச்சு செய்ய முடியும். தட்டச்சு செய்வதில் ஐந்தில் ஒரு பங்கு நேரமே போதுமானது.
ஆ. எவ்வளவு விலையுயர்ந்த கைப்பேசியாக இருந்தாலும் அதன் திரையின் அளவு காரணமாக ஓரிரு விரல்களை பயன்படுத்தி மட்டுமே தட்டச்சிட முடியும், குரலச்சில்அவ்வாறு தடுமாற வேண்டியதில்லை.
இ. speech to text செயலிகள் நிறைய இருந்தாலும் கூகுளின் பிரம்மாண்டமும் ,தொழில்நுட்பநேர்த்தியும், நாள்தோறும் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் தன்மையும் பயன்படுத்துவோருக்கு நிகரற்ற அனுபவம் தரவல்லது.
ஈ. குரலச்சு, விரல் மூலம் தட்டச்சு இரண்டுமே கூகுளின் கீ போர்டில் செய்து கொள்ளலாம்.
உ. விசைப்பலகையில் ஒரே ஒரு தொடுகையின் மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ஊ. பயணங்களிலும் எந்தவிதமான நெரிசலிலும் ஒரு ஹெட்போனை மாட்டிக் கொண்டால் இயல்பாக கைபேசியில் உரையாடுவது போலவே டைப் செய்து விடலாம்.
மு. கதிர்முருகன்
கோவை
***
அன்பு ஜெமோ,
நடந்ததை அறிவேன், நடப்பதை தொடர்ந்து கவனித்து வருகிறேன். பூரண நலம் பெற்று மீண்டு வர என்னுடைய வாழ்த்துகள், பிரார்த்தனைகள். என்னுடைய ஆதரவும் அன்பும் எப்போதும் உங்களுக்கு உண்டு.
முறைப்படி தமிழ் தட்டச்சு கற்றுக்கொண்டவனல்ல என்று நீங்கள் குறிப்பிட்டதில் எனக்கு பெரிய ஆச்சர்யம். ஒரே இரவில் பல நூறு பக்கங்கள் எப்படி உங்களால் தட்டச்சு முடிந்தது? நான் முறைப்படி தமிழ் தட்டச்சு கற்று, தேர்ச்சி பெற்று இன்றும் Old TypeWriter Layout பயன்படுத்தி வருகிறேன். முரசு தொடங்கி என்எச்எம் வரை இதை சப்போர்ட் செய்வதால் கையாள்வதற்கு வசதியாகவும், விரைவாக தட்டச்சு செய்யவும் உதவியாக இருக்கிறது. மொபைலில் phonetic முறையில் தட்டச்சு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் அதையும் செய்ய வேண்டியிருக்கிறது.
Old TypeWriter முறை காலப்போக்கில் குறைந்துவிட்டது, இன்னும் எத்தனைகாலம் அதை தொடரமுடியும் என்பது கேள்விக்குறி என்றாலும் இன்றைய நிலையில் விரைவாக தட்டச்சு செய்வதற்கும் நிறைய பக்கங்கள் எழுதுவதற்கும் அதுவே பெரும் காரணமாக இருந்திருக்கிறது. ஒருவேளை நீங்கள் முறைப்படி தமிழ் தட்டச்சு கற்றுக்கொண்டிருந்தால் இன்னும் பல்லாயிரம் படைப்புகளை உருவாக்கியிருப்பீர்கள்
***