திருவையாறுக்கு நான் முதன்முதலகச்சென்றது ஆற்றூர் ரவிவர்மாவின் வழிகாட்டலில். 1992ல். அப்போதுதான் எனக்குத் திருமணமாகியிருந்தது. அருண்மொழியின் தாய்வீடு பட்டுக்கோட்டையில். அங்கிருந்து கிளம்பினால் ஒன்றரைமணிநேரத்தில் திருவையாறு வந்துவிடமுடியும். பொங்கல் சமயத்தில் நாங்கள் பட்டுக்கோட்டையில் இருப்பதும் வழக்கம். ஆற்றூர் பதினைந்துவருடங்களாக வருடம்தோறும் திருவையாறுக்குச் சென்று கொண்டிருந்தார். ஆகவே திருவையாறு வருவதாக அவர் சொன்னதனால் அவருக்காகவே நானும் அங்கே செல்வதாக முடிவெடுத்தேன்.
அப்போது எனக்கு இசை நாட்டம் இல்லை. இது ஒரு மென்மையான சொற்றொடர். உண்மையில் இசை வெறுப்பு மட்டுமே இருந்தது. ஒரு காரணமும் இல்லாமல் ஒருவர் நா நா நா என்று கொடூரமான குரலில் கத்த, மரபுப்பயிற்சி காரணமாக சிலர் அதை ரசிக்கிறார்கள் என்ற எண்ணம். ஆனால் எனக்கொரு நல்லகுணம் அன்றும் இருந்தது, எனக்கு தெரியாத ஒன்றைப்பற்றி கருத்துச் சொல்ல மாட்டேன். ஆகவே கர்நாடக சங்கீதம் என்ற சொல்லையே நான் அன்றெல்லாம் சொல்வதில்லை.
அருண்மொழிக்கு இசை ஆர்வம் உண்டு. இளையராஜா மீது பெரும் மதிப்பு. அவரது திரைப்பாடல்கள் கர்நாடக சங்கீதத்தின் நுட்பமான உதாரணங்கள் என்பாள். வீட்டில் எப்போதும் ரேடியோ ஓடிக்கொண்டிருக்கும். கேட்டுக் கேட்டு என் காதுகளுக்கு கர்நாடக சங்கீதம் ஓரளவுக்கு பழகியது. அதாவது அந்த ஆலாபனைமுறை மீது ஓர் கசப்பின்மை உருவாகியது. அந்தச் சத்தத்தை தொந்தரவாக எண்ணாமல் ஆனேன். அப்போதுதான் திருவையாறு. அது அருண்மொழி சொல்லிக்கொண்டே இருந்ததுதான். ஆற்றூரும் அழைத்ததனால் கிளம்பிச் சென்றோம்.
திருவையாறு என்னை பலவகைகளில் ஆச்சரியப்படுத்தியது. அது ஒரு சிறிய கூட்டத்தின் சம்பிரதாயமான சிறு சடங்கு என நான் நினைத்திருந்ததுக்கு மாறாக அது ஒரு பெரிய திருவிழாவாக இருந்தது. திருவிழாவுக்கான எல்லா கொண்டாட்ட மனநிலைகளும் கொண்டது. கடைகள். காபி விற்பனைசாலைகள். சிடி விற்பனை மையங்கள்…பெருக்கெடுத்தோடும் காவேரியின் கரையில் தியாகராஜ சுவாமிகளின் சிறிய கோயில். அவ்விடம் சுடுகாடாக இருந்திருக்கலாம். அங்கே எரியூடப்பட்ட துறவிகள் மற்றும் ஆபத்சன்யாஸம் வாங்கிக்கொண்டவர்களின் சிறிய சமாதிகள் பல இருந்தன. தியாகராஜர் சமாதி ஒரு கோயிலாக பிற்பாடு எடுத்துக்கட்டப்பட்டது. அங்கே இந்தக்காலகட்டத்தில் முறையான பூஜைகளும் பிற சடங்குகளும் நிகழ்கின்றன.
அந்த ஆலயத்துக்கு முன் ஐந்தாயிரம் பேர் இருக்கத்தக்கதாக ஒரு பெரிய கொடகை. அதை நூறுவருடத்துக்கும் மேலாக கருப்பையா மூப்பனாரின் குடும்பம் தான் அமைத்து வருவதாகச் சொன்னார்கள். கொட்டகைக்குள் மணல் விரித்த தரையில் அமர்ந்து கொள்ளலாம். நேர் முன்னால் இரண்டு மேடைகள். இரண்டும் ஒரே போல அலங்காரம் செய்யப்பட்டவை. தியாகராஜ சுவாமிகளின் படம் வரையப்பட்ட இரு திரைச்சீலைகள் இரண்டிலும் தொங்கின. அவற்றில் ‘எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு’ என்ற வரி.
நிகழ்ச்சிகள் காலையில் ஒன்பதரை மணிக்கு தொடங்கின. ஒரு மேடையில் ஒருவர் பாடிக்கொண்டிருக்கும்போது அடுத்தமேடையில் அடுத்த பாடகர் வந்து அமர்ந்து வாத்தியங்களை எடுத்துவைத்து சுருதி சேர்த்து காத்திருக்கிறார். இவர் பாடி முடித்ததுமே அவர் பாட ஆரம்பிக்கம் வேண்டும். பாடகர்கள் மற்றும் இசைக்குழுவினரின் பெயர்கள் அறிவிக்கப்படும். ஒருவருக்கு இருபது நிமிடம் மட்டுமே.
இடைவிடாமல் இப்படியே இசைநிகழ்ச்சிகள் தொடர்ந்து சென்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முடிவடைந்தன. நாதஸ்வரக் கச்சேரிகள். வீணை, புல்லாங்குழல், வயலின் போன்ற கருவியிசை நிகழ்ச்சிகள். பல்வேறு வகையான பாடகர்கள். ஒலிப்பெருக்கிகள் மூலம் அப்பகுதியெங்கும் இடைவிடாது இசை ஒலித்துக்கொண்டிருந்தது. எங்கே போனாலும் இசைதான்.
சென்னையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கூட வந்துள்ள இசைரசிகர்கள் அங்கே எப்போதும் இருந்தார்கள். திருவையாறைச் சுற்றியிருக்கும் மக்களும் பல்லாயிரக்கணக்கில் வந்து குழுமினார்கள். முற்பகலில் பொதுவாக இசை பயில்பவர்கள் அதிகமாகப் பாடினார்கள். மதியத்துக்குப் பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள். மாலையில் இசை நட்சத்திரங்கள். மாலையில் பெருங்கூட்டத்தால் அப்பகுதியே நெரிபட்டது. அத்தனை பேரும் இசையறிந்தவர்களாக, இசையை நுட்பமாக ரசிப்பவர்களாக இருந்தார்களென்றும் தோன்றியது.
அந்த மனநிலை என்னை பெரிதும் ஈர்த்தது. இசை கேட்டுக்கொண்டே இருப்பதென்பது அசாதாரணமான ஒரு கனவுநிலையை உருவாக்கியது. நிறைந்தோடும் காவேரியின் கரையில் சிறு சுவரில் ஆற்றூர் ரவிவர்மா அமர்ந்திருக்க அருகே அமர்ந்து இசைகேட்டேன். அதுதான் நான் கர்நாடக சங்கீதத்தின் உலகுக்குள் சென்ற தருணம். அதன் பின்னர் தர்மபுரி திரும்பியபோது ஒரு டேப் ரிகார்டர் வாங்கினோம்.. இசைநாடாக்கள் சேகரித்தோம். தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தேன்.
ஒரு கட்டத்தில் ஓயாது கேட்டுக்கொண்டிருந்தேன். என் நேரத்தை அது அதிகமாக எடுத்துக்கொள்கிறது, விஷ்ணுபுரம் எழுதுவதே நீண்டு போகிறது என்று எண்ணியமையால் குறைத்துக்கொண்டேன். இன்றும் ஒவ்வொருநாளும் இசைகேட்கிறேன். ஆனால் இசை சார்ந்த ராக நுட்பங்களுக்குள் நுழையக்கூடாதென வைத்துக்கொண்டிருக்கிறேன். அதை ஒரு ஆவேசமாக மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறேன். ஆகவே இசைவிவாதங்களை முழுக்கவே தவிர்த்துவிடுவேன். அது என் சிந்தனைசார்ந்த வாழ்க்கையில் ஓர் இனிய இளைப்பாறல் மட்டுமே. பாட்டு கேட்பதைவிட பாட்டை மனதில் முழுமையாகவே நினைவுகூர்வது மிக இனிய அனுபவமாக இருக்கிறது இன்று.
திருவையாறு இசைவிழா பற்றி ஈரோடு நண்பர்கள் ஆர்வமாக கேட்டார்கள். நண்பர் கிருஷ்ணன் இப்போதுதான் பாட்டு கேட்க ஆசைப்படார். அவரும் என்னைப்போன்ற அதே மனநிலையில்தான் இருந்தார். இசையெல்லாம் தேவையில்லாத ஒரு சுய ஏமாற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது எம்.யுவன் போன்றவர்களிடம் இசைபற்றி பேசிய பிறகு, சரி கேட்டுத்தான் பார்ப்போமே என்று என்னிடம் சொன்னார். நான் அருண்மொழியிடம் கிருஷ்ணனுக்காக தொடக்கநிலைப் பாடல்களை தெரிவுசெய்து தரச்சொன்னேன்.
அருண்மொழி பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் சில சிடிக்களை தெரிவுசெய்து தந்தாள். கேட்க ஆரம்பிப்பவர்களுக்கு நல்ல குரல் கொண்ட பாடகர்களையே சிபாரிசு செய்ய வேண்டும்; அதிக ஆலாபனைகள் இல்லாமல் பாடப்பட்ட , ஏற்கனவே ஓரளவு அறிமுகமான , தமிழ்க் கீர்த்தனைகள் கொண்ட சிடியாக இருக்க வேண்டும்; மெல்லிசையின் சாயல் இருந்தால் இன்னும் நல்லது என்பது அருண்மொழியின் எண்ணம்.
சென்றமுறை ஊட்டி சென்றபோது காரில் அவற்றைக் கேட்டுக்கொண்டே சென்றோம். நினைத்தது போலவே கிருஷ்ணன் ‘பரவால்ல சார்…ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கு’ என்றார். அதன்பின் அந்த சிடிக்களை இரண்டுவாரத்துக்கும் மேலாக அனேகமாக தினமும் பலமுறை கேட்டு ஒவ்வொநாளும் ‘அற்புதம்’ என்று குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தார். அடுத்த கட்டமாக திருவையாறு போகலாம் என்று சொன்னார். கூடவே விஜயராகவனும் வருவதாகச் சொன்னார்.
திருவையாறுக்கு இசை ரசிகர்கள்தான் செல்லவேண்டும் என்ற எண்ணம் சிலரிடையே உண்டு. நேர்மாறாக, இசையே தெரியாமல், என்னவென்று தெரிந்துகொள்வதற்காகவே, அங்கே செல்லலாம். நாளெல்லாம் இசை காதில் விழுந்துகொண்டே இருப்பதனால் நம்மை அறியாமலேயே நாம் அந்த பாடல்முறைக்குப் பக்குவப்பட்டுவிடுவோம். தியாகராஜ சுவாமிகள்ளின் கீர்த்தனைகளில் புகழ்பெற்றவை அனைத்தும் பலமுறை நம் காதில் விழுந்து பழகிவிடுவதனால் பிற்பாடு பாட்டு கேட்பது எளிதாக ஆகிவிடுகிறது. ஒரு இசைநிகழ்ச்சியில் பாடலை அடையாளம் கண்டுகொள்வது ஒரு தொடக்கம். திருவையாறு நம்மை எளிதாக உள்ளே கொண்டுசெல்லும். காவேரியின் ஒரு சுழி போல.
ஆகவே சென்ற 11 ஆம் தேதி காலையில் நான் நாகர்கோயிலில் இருந்து கிளம்பி பேருந்தில் தஞ்சாவூர் சென்றேன். போய்ச்சேரும்போது அந்தியாகிவிட்டது. கிருஷ்ணனும் விஜயராகவனும் ஈரோட்டில் இருந்து வந்து அங்கே ஓட்டல் ராம்தாஸில் தங்கியிருந்தார்கள். நாங்கள் ஒரே அறையில் தங்கினோம். திருவையாறில் பதினொன்றாம் தேதியே இசைவிழா தொடங்கிவிட்டிருந்தது. இரவில் நன்றாக தூங்கிவிட்டு காலையில் திருவையாறு செல்லலாம் என்று எண்ணம்.
காலை பத்துமணிக்குத் திருவையாறுக்குச் சென்றபோது அங்கே குறைவான கூட்டம்தான் இருந்தது. நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. மணலில் அமர்ந்து கேட்டோம். திருவையாறில் இசைகேட்க வருபவர்கள் பலவகை. ஆற்றில் குளித்து அங்கே கிடைக்கும் இலவச உணவுகளை உண்டு பந்தலிலேயே தங்கி இரவுபகலாக இசைகேட்கும் பண்டாரங்களை நிறைய பார்க்கலாம். அவர்கள் கச்சிதமாக தாளம் போடுவதையும் கூடவே மெல்லிதாக பாடுவதையும் கவனிக்க முடியும். எப்போதுமே சபையில் இருப்பவர்கள் அனேகமாக அவர்கள்தான். மேடையில் பாடும் இளைஞர்களின் உறவினர்களை, குறிப்பாக பெற்றோரை, தெளிவாகவே அடையாளம் காணமுடியும். இசைக்கலைஞர்களை இருபதடி தூரத்திலேயே காணலாம்.
என்னைப்பொறுத்தவரை நன்றாக பாடுகிறார்களா இல்லையா என்பது ஒரு கேள்வியே அல்ல. இடைவிடாமல் கேட்பதுதான் முக்கியம். மேலும் இந்த காலை நிகழ்ச்சிகள் ஒரு செய்தியை அளிக்கிறது. தமிழகத்தில் மரபார்ந்த பல விஷயங்கள் புரவலர் இல்லாமல் அழிகின்றன. ஆனால் கர்நாடக சங்கீதம் மிக இளம் தலைமுறையில் கூட மிக வலுவாகவே பரவியிருக்கிறது. தேர்ந்த பயிற்சியும் ஆழமான ஆர்வமும் கொண்ட குழந்தைகள் வந்து பாடிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இதற்கு மரபிசையை கிட்டத்தட்ட தங்கள் குலக்கலையாகக் கொண்டு பிராமணர்கள் அதை புரப்பது ஒரு முக்கியமான காரணம் . ஒப்பிடும்போது பிற தமிழ்ச்சாதியினரின் மரபார்ந்த கலை- இலக்கிய ஆர்வங்கள் இன்று லௌகீக ஆர்வம் காரணமாக அவர்களால் முழுக்கவே கைவிடப்பட்டிருக்கின்றன என்ற எண்ணமும் ஏற்பட்டது.
மதியத்துக்குப் பின்னர் எதிர்பாராத ஆச்சரியங்கள் வந்துகொண்டே இருப்பது திருவையாறின் சிறப்பு. யார் நன்றாகப் பாடுவார்கள் என்று சொல்லிவிடவே முடியாது. சாதாரணமாக வந்து அமர்ந்த ஒரு இளம்பெண் மனம் கவரும் விதத்தில் அபாரமான மேடைத்தேர்ச்சியுடன் இருபது நிமிடங்கள் இசைபொழிந்துவிட்டுப்போகக்கூடும். இசைபாணிகள் மாறி மாறி வரும். மிகச் சம்பிரதாயமான பாடல்முறை கொண்டவர்கள். இன்றைய பிரபல பாடகர்களின் பாணியில் இனிமையான முறையில் பாடக்கூடியவர்கள். சற்றே இந்துஸ்தானி சாயல் கொண்டவர்கள்…
திருவையாறு கோயிலுக்கு இரவு ஒன்பதரை மணிக்குச் சென்றிருந்தோம். நல்ல பெரிய நிலவு ஆரஞ்சு நிறமாக பனிக்குள் நின்றிருந்தது. கோயில் வளாகம் இருண்டு தனித்துக் கிடக்க தூரத்தில் இசை கேட்டுக்கொண்டிருந்தது. சுவர்களில் நாதஸ்வரம் அலையடித்தது. உள்ளே அப்போதுதான் ஐயாறப்பனையும் அம்மையையும் பள்ளியறைக்குக் கொண்டு சென்றிருந்தார்கள். பள்ளியறையில் ஊஞ்சலில் அவர்களை அமர்த்தி மெல்ல ஆட்ட வெளியே நின்ற ஓதுவார் பள்ளியுறக்கப்பாடலைப் பாடினார். இருபது பேர் வணங்க நின்றிருந்தார்கள். திரைபோட்டதும் வெளியே வந்தோம். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அரங்குக்கே சென்றோம்.
நள்ளிரவு வரை இசைகேட்டோம். நள்ளிரவில் மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் வந்து சேர்ந்தார். கோழிக்கோட்டில் இருந்து காலை கிளம்பிய அவர் பதினான்கு மணிநேரம் தொடர்ச்சியாகப் பயணம் செய்து தஞ்சை வந்து அறையில் பையை வைத்துவிட்டு கிளம்பி வந்திருந்தார்.
மறுநாள் காலை தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தோம். கல்பற்றா நாராயணன் முதன்முதலாக அங்கே வருகிறார். காலை– மாலை மஞ்சள் ஒளியில் பார்ப்பதற்க்குரிய கோயில்களில் ஒன்று தஞ்சை கோயில். செந்நிறமான மணல்பாறையினால் ஆன அது மஞ்சள் ஒளியில் பொன்னிறமாக தகதகக்கும். கஜூராஹோ கோயில்களைப்போல.சிற்ப அமைப்பிலும் தஞ்சை கோயில் கஜுராஹோ கோயில்களை நினைவூட்டுகிறது.
மதியம் மீண்டும் திருவையாறு. சலிக்காமல் இசை. மதியம் சாப்பிட்டுவிட்டு மெல்லிதாக சாய்ந்து தூங்கியதும் பந்தலில்தான். திருவையாறு இசைவிழாவில் எப்போதுமே ஒருவகை தற்செயல்தன்மை உண்டு . அதுவே அங்குள்ள சுவாரசியம். எதிர்பார்க்கப்படும் இசை நட்சத்திரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக பாடும். சிலசமயம் முழுமையாக ஏமாற்றிவிடும். யாரென்றே தெரியாத ஒருவர் மிகச்சிறப்பாக பாடுவார். முற்றிலும் புதிய இளம் நட்சத்திரங்கள் ஒளியுடன் கிளம்பிவரும். மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ், புல்லாங்குழல் சஷாங், பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் அப்படி வந்தவர்கள். பொருட்படுத்தப்படாத ஒருவர் சட்டென்று நன்றாகப் பாடி கைதட்டல் பெறுவார்.
திருவையாறு கூட்டம் கைதட்டுவதிலும் ஒரு முறைமை உண்டு. நட்சத்திரங்கள் வரும்போதே கைத்தட்டல் உண்டு. ஆனால் அவர்கள் சரியாகப் பாடாவிட்டால் அப்படியே அமைதியாக இருந்துவிடுவார்கள். ஒப்புக்குக்கூட கைத்தட்டல் இருக்காது. சமயங்களில் அது குரூரமாகக் கூட இருக்கும். நல்ல பாடல் என்றால் அதன் நுட்பங்களுக்கெல்லால் கைதட்டல் விழுந்தபடியே இருக்கும். உதாரணமாக பலத்த கைத்தட்டலுடன் வந்தவர் மதுரை டி.என்.சேஷகோபாலன். ஆனால் அவர் நன்றாகவே பாடவில்லை. குரலும் ஒத்துழைக்கவில்லை. அரங்கு அவரை அமைதியாக அனுப்பி வைத்தது.
ஆனால் சாரநாதன் என்பவர் பாடவந்தபோது பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை. அவர் பாடிமுடித்ததும் அரங்கே அதிர்ந்தது. ஜேஸ¤தாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் மெல்லிய கிண்டலுடன் தான் வரவேற்கப்பட்டார். ஆனால் அவர் நல்ல தயாரிப்புடன் வந்து மிகச்சிறப்பாகப் பாடி அவையை கொந்தளிக்கச்செய்தார். தொடர்ச்சியாக கைதட்டியபடியே இருந்தார்கள். ஜேஸ¤தாஸின் பழைய குரலின் இனிமையையும் கனத்தையும் அவர் குரலில் காணமுடிந்தது
பலத்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியவர்கள் கதிரி கோபால்நாத்[ சாக்ஸபோன்] ரவிக்கிரண்[சித்ரவீணை] ஏ.கன்யாகுமரி [வயலின்] காசிம் [நாதஸ்வரம்] ஆகியோர். எங்கும் முக்கியமான கச்சேரிகளைக் கேட்கலாம்தான். ஆனால் தொடர்ச்சியாக இசைவிற்பன்னர்கள் மாறிமாறி வந்து பலமணிநேரம் இசையனுபவத்தை அளிப்பது திருவையாறு தவிர எங்கும் இருக்காது.
ஒவ்வொரு வருடமும் ஒருசில தியாகையர் பாடல்கள் அதிகமாகப் பாடப்படுகின்றன. இந்தத் தற்செயல் ஏன் என்பது ஆச்சரியமான ஒன்று. நான் முதல்முறை சென்றபோது ‘நாதலோலுடை பிரம்மானந்த மந்த்ரமே’ என்ற பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். இம்முறை ‘பக்கால நிலாபாடி’ என்ற பாடல்.
தஞ்சையில் கன்யாகுமரி பேருந்தை இரவு பன்னிரண்டு மணிக்குப் பிடித்தேன். இரவில் பேருந்தில் தூங்கும்போதெல்லாமே இசை கேட்டுக்கொண்டிருந்தது.
இணைப்பு
http://svprsk.blogspot.com/2008/11/blog-post_04.html
http://svprsk.blogspot.com/2008/11/blog-post_14.html