மத்துறு தயிர் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அறம், சோற்றுக் கணக்கு இவை தந்த பிரமிப்பு மாறுவதற்குள் மத்துறு தயிர்.. !

உங்கள் மத்து இதயத்துக்குள் ஏற்படுத்திய கொந்தளிப்புகள் அநேகம்..! ஏற்கெனவே நான் பதினெட்டு வருடங்கள் கழிந்து முதல் முறையாக குடும்பத்தைப் பிரிந்து தனிமையின் பாலையை உணர்ந்து கொண்டிருக்கிறேன். என் செல்ல மகளின் புகைப்படத்தைப் பார்க்கிற ஒவ்வொரு நிம்டமும் என் மனம் அடையும் உணர்வை அன்றே கம்பன் சரியாகச் சொல்லியிருக்கிறானே. கம்பன் ஒரு மகாகவி என்று உணர வைத்ததற்கு நன்றி ஜெயமோகன்!. எழுத்து உங்களுக்கு ஒரு தவம் எனதை நீங்கள் நிருபித்துகொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வொரு பிரிவும் சின்னச் சாவுகள் தான்… எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..! ஆனால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது போன்ற துயரங்கள் தற்காலிகமானவை ! ராஜத்தின் துயரம் முன்னால் இதைப்பற்றி சொல்வதே அநாகரிகமானது. சில மனிதர்களை மகத்தான துயரங்கள் தாக்குகிற போது கையாகலாமல் அருகிலிருந்து பார்க்க நேரிடுவது ஒரு சோகம்.. எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.. உங்கள் கதை இன்றும் எனக்கு உறக்கம் இல்லாமல் செய்துவிடும்..!

With Regards,

A.Ramakrishnan

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நன்றி

பிரிவு என்பது ஒரு பயிற்சியும் கூட

உனக்கு வணக்கம் பிரிவே
நீ கண்களைக் கட்டி எங்களை
ஒருவரை ஒருவர் பார்க்கச்செய்தாய்

என்பது வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனனின் மலையாள கவிதை

பிரிவில் நாம் பலவற்றை துல்லியமாக காண்கிறோம்

ஜெ

‘அவனுக்கு இல்லாத எடம்னு ஒண்ணு எனக்க கிட்ட இல்ல’ என்று சொன்ன குமாரபிள்ளையும் அதை உணர்ந்து உள்வாங்கிப் பேராசிரியரை சுவீகரித்துக்கொண்ட ஆச்சியும், அதே மகாவாக்கியத்தை சொல்லாமல் சொன்ன பேராசிரியரும், அதைத்துல்லியமாக உணர்ந்திருந்த, அவர் சென்ற காலடிகளை நடுங்கும் கரங்களால் தொட்டு இருளில் மறைந்துபோகும் ராஜமும், தான் நம்பி வைத்திருந்தது உடைந்துபோன ராஜபிளவை அந்திமத்தில் அனுபவிக்கும் பேராசிரியரும் …. மத்துறு தயிர் குலைத்துப்போடுகிறது ஜெ.

“இப்ப, கோடி ரூவா சொத்திருக்கவனுக்கு ஒரு இது இருக்கும். ஆனா ஞானவானுக்கு ஒரு கெம்பீரம் உண்டு பாருங்க, அதை இவன் ஜென்மம் முழுக்க பாத்தாலும் அடைஞ்சுகிட முடியாது”

நெகிழ்ந்து வாசித்ததுண்டு, அறம், சோற்றுக்கணக்கு போல. எழுச்சியோடு வாசித்ததுண்டு வெளியேறும் வழி போல. ஆனால் இந்த வரி என்னை கலங்கச்செய்துவிட்டது ஜெ.

மெல்லிய புன்னகையோடு கையுயர்த்தி பின்னாலிருந்து எடுத்து எய்துகொண்டே இருக்கிறீர். தைக்கட்டும். அது அம்பறாத்தூணியாக இருக்கட்டும். சரஸ்வதி கடாட்சம் உள்ள உங்கள் கரங்களுக்கும் என் வந்தனம்.

அன்புடன்

பொன்.முத்துக்குமார்

அறம் கதைகள்- சமகால காப்பிய நாயகர்கள்

முந்தைய கட்டுரைஅறம், சோற்றுக்கணக்கு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவணங்கான் [சிறுகதை] – 1