ஃபாசிஸத்தின் காலம்

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்

பஷீரும் ராமாயணமும்

இரு எல்லைகள்

அன்புள்ள ஜெ

போரும் அமைதியும்  குறித்து நீதிமன்றம் சொன்ன கருத்துக்களைப்பற்றிய உங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தீர்கள். ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் ஒரு கருத்துச் சொன்னார். அதன்பொருட்டு அவர் நீதிமன்றத்தில் கண்டிக்கப்பட்டார். காவல்நிலையத்தில்  கையெழுத்திடவேண்டும் என்னும் நிபந்தனையின்படி பிணை பெற்றார். ஒரு கருத்து சொன்னதற்கே அவரை குற்றவாளியாக காணும் நீதிமன்றத்தின் செயல்பாட்டை எப்படி காண்கிறீர்கள்?

சந்திரசேகர்

***

அன்புள்ள சந்திரசேகர்

இதைப்பற்றி கொஞ்சம் தாமதமாக பேசலாம் என ஒத்தி வைத்திருந்தேன். முன்பு எழுதிய கட்டுரையை இப்போது பதிலாக மாற்றுகிறேன்

மலையாள மனோரமாவின் இலக்கிய இதழான பாஷாபோஷிணியில் நான் ஆண்டுதோறும் ஒரு நீள்கதையை எழுதுவது வழக்கம். நூறுநாற்காலிகள், யானை டாக்டர், ஊமைச்செந்நாய் ஆகியவை அதில் வெளிவந்து புகழ்பெற்றவை. இவ்வாண்டு மாடன் மோட்சம் கதையை அனுப்பியிருந்தேன். ஆசிரியர்குழுவுக்கு கதை மிகப்பிடித்திருந்தது. கூப்பிட்டுக் கொண்டாடினார்கள். ஆனால் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள். பலவகையான மன்னிப்புகோரல்களுடன் திரும்பத் தந்தார்கள்.

காரணம் கேரளப் பண்பாட்டுச்சூழல் முழுக்கமுழுக்க கருத்துரிமைக்கு எதிரானதாக ஆகிவிட்டிருக்கிறது. மாடன்மோட்சம் இந்துத்துவ அரசியலைக் சற்றே கேலிசெய்கிறது. அது இன்றையசூழலில் மலையாள மனோரமாவுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். ஏனென்றல் அது கிறித்தவ ஊடகம் என தொடர்ச்சியாக முத்திரைகுத்தப்பட்டுவரும் சூழல் நிலவுகிறது. ஆகவே அவர்கள் அதை விரும்பவில்லை. கேரளம் முழுக்க இந்தக் கெடுபிடி இன்று உச்சம் அடைந்துள்ளன. இதழ் தாக்கப்படும். தேவையில்லாத சட்டநடவடிக்கைகளுக்குள் இழுக்கப்படும்.

மலையாளத்தின் அத்தனை இதழ்களும் இந்தக் கசப்புமருந்தைக் குடித்தவையே. பொதுவாக இந்து ஆதரவு இதழான மாத்ருபூமியேகூட இதழ் ’மீச’ என்னும் நாவலை வெளியிட்டமைக்காகவும் அதற்குமுன் பேரா.எம்.எம்.பஷீரின் ராமாயண உரையை வெளியிட்டமைக்காகவும் கடுமையாகத் தாக்கப்பட்டது.  மலையாள மனோரமாவுக்கு இடதுசாரி ஆதரவும் கிடையாது. அது வலதுசாரி முதலாளித்துவ சாயல்கொண்ட இதழ். இடதுசாரிகளுக்கு எதிரானது.

எண்பதுகள் வரை கேரளத்தில் திரைப்படங்களிலேயே எல்லாவகையான விமர்சனங்களுக்கும் இடமிருந்தது. கேலி கிண்டல் சாதாரணம். அறிவியக்கம் மிகக்கறாராகவே செயல்பட்டது. எல்லா கருத்துக்களும் மறுத்தும் பேசப்பட்டன. தொண்ணூறுகளில் உருவான வஹாபிய இயக்கமே கருத்துக்களை மதவெறியுடன் அணுகுவதை, கும்பல்களாகச் சென்று எதிர்ப்பு தெரிவிப்பதை தொடங்கிவைத்தது. மிகக்குறிப்பாக அப்துல்நாசர் மதனி கேரளத்தில் அதை ஒர் இயக்கமாக தொடங்கிவைத்தவர்.

பாடத்திட்டத்திலுள்ள ஒரு பாடத்திலிருந்து கேள்வியை கேட்டமைக்காக பேராசிரியரின் கையை வெட்டி வீசினார்கள். அதை சில முற்போக்கினர் சிறுபான்மையினர் உரிமை என நியாயப்படுத்தவும் செய்தனர். அதன்பின் கிறித்தவர்கள் கிளம்பினர். இறுதியாக இன்று இந்து அமைப்புக்கள். ‘இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் விமர்சிப்பாயா? இந்துக்கள் என்றால் மட்டும் இளிச்சவாய்களா?” என்பதே இன்றுள்ள இந்துத்துவ அமைப்புகளின் கேள்வி. அதாவது நாங்களும் அந்த எல்லைவரைச் செல்வோம், அவர்களாக ஆவோம் என்னும் அறைகூவல்.

ஆக எவரும் எவரைப்பற்றியும் எந்த விமர்சனமும் சொல்லமுடியாத நிலை. எந்த ஆய்வையும் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காதபடி எழுதவேண்டிய கட்டாயம். விளைவாக அறிவியக்கமே உறைந்து நின்றிருக்கிறது. மிகமிகக் கவனமாகவே இதழ்கள் கருத்துக்களை வெளியிடுகின்றன. இருந்தும் நாள்தோறும் பூசல்கள். இப்போது கற்பழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிஷப் பிராங்கோவுக்கு கேரளப் போலீஸ் அடிமையாக இருக்கிறது என குற்றம்சாட்டிய ஒரு கார்ட்டூனுக்கு எதிராக கிறித்தவ அமைப்புக்கள் தலைமைதாங்கிய உச்சகட்ட போராட்டம், தாக்குதல் நடந்து முடிந்தது. கார்ட்டூன் திரும்பப்பெறப்பட்டது..

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மலையாள மனோரமாவின் இலக்கிய இதழான பாஷாபோஷினி ஒர் ஓவியத்தை வெளியிட்டது. கிறிஸ்துவின் இறுதி உணவு ஓவியத்தை தழுவி ஓவியர் பாஸ்கரன் வரைந்த ஓவியம் அது. ஒரு கதைக்கான காட்சிச் சித்தரிப்பு. அதில் கிறிஸ்துவின் இடத்தில் மக்தலனா மரியம் இருக்கிறார்.அது ஏசுவை இழிவு செய்கிறது என எதிர்ப்பு கிளம்ப பாஷாபோஷிணியின் இதழ்கள் எரிக்கப்பட்டன. நாளிதழின் ஆசிரியர்குழு மன்னிப்பு கோரியது. அதன்பின் மனோரமா மிகமிகக் கவனமாக ஆகிவிட்டது.

இந்தியா எங்கும் இச்சூழல் பெருகிவருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் தங்களைப் பற்றிய ஒரு விமர்சனத்திற்கு எதிராக தெருமுனைப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், கருத்து தெரிவித்தவர்களை மிரட்டுபவர்கள், வன்முறைத் தாக்குதல் தொடுப்பவர்கள், சட்டநடவடிக்கை எடுப்பவர்கள் இன்னொருவர் அதைச்செய்யும்போது கருத்துச்சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, ஃபாஸிசம் எழுகிறது என கூச்சலிடுவதுதான். இங்கே இன்று எந்த சாதியையும் நாம் விமர்சிக்க முடியாது. எந்த மதத்தையும் எதுவும் சொல்லமுடியாது. எஞ்சியிருப்பவர் காந்தி மட்டும்தான். நாம் ஆடும் கிரிக்கெட்டின் ஸ்டம்ப் அவர்தான்.

கருத்து, அது எத்தகையதாயினும், கருத்துத் தளத்திலேயே எதிர்கொள்ளப்படவேண்டும். அதற்கு எதிராக கும்பல்கூச்சலிடுவதும், சட்டநடவடிக்கைக்குச் செல்வதும் உண்மையில் கருத்துச்செயல்பாட்டையே இல்லாமலாக்கிவிடும். கருத்துரிமை அழிக்கப்பட்டால் இலக்கியச் செயல்பாடுகள் அழியும். கலைகள் அழியும். காலப்போக்கில் பண்பாட்டு நடவடிக்கைகளே அழிந்து நுகர்வியம் மட்டுமே எஞ்சியிருக்கும். கருத்துரிமை கட்டுப்படுத்தப்படும் நாடுகளை சாதாரணமாக நோக்கினாலே இதை உணராலாம்.

ஒரு கருத்தை எதிர்க்கலாம். அதன் நோக்கங்களை தோலுரிக்கலாம். அதன் உள்ளடுக்குகளைச் சுட்டிக்காட்டலாம். ஏன், வசைபாடுவதுகூட ஒருவகையில் சகித்துக்கொள்ளத்தக்கதே. வசை எந்த எல்லைக்குச் சென்றாலும் அதை தவிர்த்துச் செல்ல முடியும் நம்மால். ஏனென்றால் கீழ்த்தரமாக வசைபாடுபவர் தன் தரப்பை தானே தோற்கடித்துக்கொள்கிறார். ஒன்றை நெஞ்சைத் தொட்டுச் சொல்லிக்கொள்வேன். என் முப்பதாண்டுக்கால அறிவுச்செயல்பாட்டில் என்னை வசைபாடிய எவரையுமே திருப்பி வசைபாடியதில்லை. ஒருவரிடம்கூட தனிப்பட்ட நட்பை முறித்துக்கொண்டதில்லை. ஒருவரைக்கூட நேரில் பார்க்கையில் முகம் மலர்ந்து எதிர்கொள்ளாமல் இருந்ததும் இல்லை.

அவ்வகையில் மு.கருணாநிதி வரை நமக்கு மகத்தான முன்னுதாரணங்கள் உள்ளன. நான் மு.கருணாநிதி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அவர் அதைவிடக் கடுமையாக என்னை விமர்சனம் செய்து எழுதினார். ஆனால் என்மேல் மதிப்புள்ளவராகவே இருந்திருக்கிறார். என் நூல்களை கேட்டு வாங்கியிருக்கிறார். அவருக்கும் எனக்கும் பொதுவானவர்கள் அவர் என்னை சந்திக்க விழைவதாகவும் சொல்லி அழைத்திருக்கிறார்கள். ராஜராஜ சோழன் குறித்த ஒரு படத்திற்கு அவர் எழுதும் வசனத்திற்கு திரைக்கதை உதவிசெய்யமுடியுமா என ஒரு தயாரிப்பாளர் அவரிடம் கலந்தாலோசித்தபின் கேட்டிருக்கிறார். நான்தான் தவிர்த்துவிட்டேன், காரணம் அவருடைய அதிகார இடத்தைக்  கண்டு உருவான மிரட்சிதான்.தவிர்த்திருக்கலாகாது என இப்போது தோன்றுகிறது. இன்று அந்தக்காலம் சரசரவென மறைந்துகொண்டிருக்கிறது.

கருத்துரிமையை ஒடுக்குவதனூடாகவே ஃபாஸிசம் செயல்படுகிறது. இன்று ஃபாஸிசத்தை வாழ வைப்பவர்கள் தங்கள் அரசியல் எதிரிகளை எல்லாம் பாஸிஸ்ட் என வசைபாடும் அரைவேக்காடு காழ்ப்புக்கும்பல்தான். நூறு ரூபாய் கடன்கேட்டு கொடுக்கவில்லை என்றால்கூட அவனை ஃபாஸிஸ்டு என்று திட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். மெய்யான ஃபாஸிச நடவடிக்கைகளை அது தங்கள் அரசியலுக்கு உகந்தது எனில் அப்பட்டமாக ஆதரிக்கவும் செய்வார்கள் இவர்கள்

இன்று பா.ரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டிருக்கிறார். நமக்குத்தெரியும் இங்கே நீதிமன்ற நடவடிக்கை என்பதே தன்னளவில் ஒரு தண்டனை. வேலைகளை விட்டுவிட்டு நீதிமன்றத்துக்கு அலையவேண்டும். பணம் செலவிட்டு வாதிடவேண்டும். நீதிபதி ரஞ்சித்துக்கு அறிவுரை சொல்கிறார். ராஜராஜனை விமர்சிக்கக்கூடாது என்கிறார்.

ரஞ்சித் சொன்ன கருத்து பொதுவாக எனக்கு ஏற்புடையது அல்ல. அதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஆனால் அக்கருத்தைச் சொன்னது எப்படி குற்றமாகும்? அதைச் சொன்னதற்காக அவரைக் கைதுசெய்யவேண்டும் என்ற ஃபாசிசக் கூச்சலை எப்படி நியாயப்படுத்த முடியும்? அது ஒரு தரப்பு. ராஜராஜசோழன் தமிழ் அடையாளம்தான். ஆனால் தமிழ் அடையாளங்களை எவருமே மறுக்கக்கூடாதா என்ன? வேறு அடையாளங்களை முன்வைக்கக்கூடாதா என்ன?  நிலைநிறுத்தப்பட்ட கருத்துக்களை மறுத்துப்பேசக்கூடாது என்றால் அதன்பின் என்ன கருத்துச்செயல்பாடு எஞ்சியிருக்கிறது?

ரஞ்சித் சொன்ன கருத்துத் தரப்பு இங்கே நெடுங்காலமாக உள்ள ஒன்று. அயோத்திதாசர் அதை வேறுவகையில் சொல்லியிருக்கிறார். பறையர்கள் இங்கே உயர்நிலையில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருபகுதியினரான வள்ளுவர்கள் இங்கே பூசகர்சாதியாகத் திகழ்ந்திருக்கிறார்கள். பல்லவர்களின் பூசகர்கள் வள்ளுவர்களே.  பல்லவர்காலத்தின் இறுதியில்தான் பறையர்கள் நிலமிழந்து அடித்தளமக்களாக ஆனார்கள், சோழர் காலத்தில் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள்.

பறையர்கள் உயர்நிலையில் பூசகர்களாக இருந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள், சடங்குச்சான்றுகள் பல உள்ளன. இந்த அரசியல்விவாதங்கள் உருவாவதற்கு முன்னரே எழுதப்பட்ட . அபிதானசிந்தாமணியிலேயே  விரிவான செய்திகள் காணப்படுகின்றன. அப்படியென்றால் பல்லவர் காலத்தின் இறுதியில் அவர்கள் வீழ்ச்சியடைந்து சோழர்காலத்தில் அடித்தள மக்களாக ஆனமைக்கு  அரசியல் காரணம் என்ன என்பது ஒரு வரலாற்றுக்கேள்வி. [இதே கேள்வி பாணர்கள் குறித்தும் உள்ளது] இந்த கேள்விக்கு வெவ்வேறுவகையில் வரலாற்றாசிரியர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். அயோத்திதாசர் முதல் ரஞ்சித் வரை அளிக்கும் விளக்கம் அவற்றில் ஒன்று

பறையர்களின் வீழ்ச்சிக்கு சோழர்கள் அளித்த பிராமண ஆதரவுதான் காரணம் என்பது ஒரு ஊகத்தரப்பு. அயோத்திதாசர் பறையர்களை வீழ்த்தியவர்கள் ‘வேஷப்பிராமணர்’ என்கிறார். அவர்களைச் சோழர்கள் ஆதரித்தனர். ஆகவே பறையர்களின் நில உரிமை முதலியவை சோழர்களின் ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்டன என்கிறார். ஆனால் அது ஒருபக்க ஊகம் மட்டுமே. வரலாற்றில் ஊகம் வேறு வரலாற்று உண்மை வேறு. பல கொள்கைகளை நிரூபிக்கவே முடியாது

பறையர்களின் நில உரிமை பறிபோனது வேறொரு வகையில் .பறையர்களுக்கு ஊருக்குப்பொதுவான நிலத்தில் இருந்த கூட்டுரிமை பிரிட்டிஷார் கொண்டுவந்த ரயத்துவாரி முறையால்தான் முற்றாக அழிந்தது. பறையர்கள் உட்பட அனைத்துச் சாதியினருக்கும் கிராமநிலத்தில் அவர்களுக்குரிய மரபுரிமைகள் இருந்தன. ரயத்துவாரி முறை அறிமுகம் செய்யப்பட்டபோது கிராமக்கணக்குப்பிள்ளைகள், உயர்வகுப்பினர் நிலங்களை தங்களுக்கே தனியுரிமையாகப் பட்டாபோட்டுக்கொண்டார்கள். பறையர்கள் உட்பட அடித்தள மக்கள் தங்கள் உரிமை பறிபோவதை அறியாமலேயே நிலமிலாக்கூலிகளாக மாறினார்கள். இதை ஆய்வாளர்கள் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

இவ்வாறு பல ஊகத்தரப்புகள் வரலாற்றாய்வில், பண்பாட்டாய்வில், சமூகவியல் ஆய்வில் உண்டு. அவைதான் மெல்லமெல்ல ஆதாரங்களைச் சேர்த்துக்கொண்டு வரலாற்று உண்மைகளாக உருக்கொள்கின்றன. ஓர் ஊகத்தரப்பை முன்வைக்கவும் வாதாடவும் எவருக்கும் உரிமை உண்டு. அந்த வாய்ப்பு இருக்கும்வரைத்தான் இங்கே ஆய்வுகளும் விவாதங்களும் நிகழும். போதிய ஆதாரம் இல்லாத நிலையில் அது ஊகத்தரப்பாகவே நிலைகொள்ளும். அது ஒன்றும் பிழையோ  திரிபோ சதியோ அல்ல.அது ஒரு பார்வை, ஒரு கருத்து, அவ்வளவுதான். அதை கருத்தால்தான் எதிர்கொள்ளவேண்டும்.

ஒருசாரார் ஒரு கருத்தை உண்மை என நம்புகிறார்கள், உணர்ச்சிகரமாக ஈடுபடுகிறார்கள் என்பதனால் பிறர் அதை மறுக்கக்கூடாது என்பதுபோல அபத்தம் வேறில்லை. அவர்கள் உளம்புண்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நவீன ஜனநாயகமும் கருத்துச்செயல்பாடும் புரியவில்லை என்றேபொருள். அதை அவர்களுக்குக் கற்பிப்பதே செய்யவேண்டியது. மாறாக புண்படுத்தக்கூடாது என கருத்துச்செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதை நம் நீதிமன்றங்களே செய்ய தொடங்கிவிட்டிருக்கின்றன. பாஸிஸச் செயல்பாடுகளின் கருவிகளாக நீதிமன்றங்கள் தங்களை அறியாமல் மாறிக்கொண்டிருக்கின்றன.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் சமூக – மதமோதல்கள் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும் சூழலில் சட்டம் – ஒழுங்கு அமைப்புகளின் மிதமிஞ்சிய பதற்றம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. இங்கே கருத்துச்சுதந்திரம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லமுடியாது. ஆனால் சமூக ஒற்றுமைகுலையும் என்ற அடிப்படையில் நீதிமன்றம் செல்லமுடியும். உண்மையில் இக்காரணத்தைச் சொல்லி ஒருவர் எந்தக்கருத்துக்கு எதிராகவும் நீதிமன்றம் செல்லமுடியும். அந்த வழக்கு நீதிமன்றத்தில் அறுதியாகத் தள்ளுபடியே செய்யப்படும். நீதிபதிகளால் கடுமையாக வழக்குதொடுத்தவர் கண்டிக்கவும் படுவார். ஆனால் வழக்கை எதிர்கொள்வதே கருத்துச்சொல்பவருக்கு பெரிய தண்டனை என்பதே இந்தியச்சூழல். பலமாதங்கள், ஆண்டுகள் அவர் அதற்காகச் செலவிடவேண்டியிருக்கும். பணம் செலவிடவேண்டியிருக்கும். வழக்கு தொடுப்பதன் வழியாகவே இங்கே கருத்துக்களை ஒடுக்கிவிடமுடியும்.

சென்ற சில ஆண்டுகளாக மதம்,சாதி , மொழி உட்பட எதைப்பற்றி எதைச் சொன்னாலும் அதைச்சார்ந்த அடிப்படைவாதிகள் மனம்புண்படுவதும் நீதிமன்றம் செல்வதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் வழக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. நிலநாட்களுக்கு முன் காந்தி –கோட்சே பற்றி கருத்துரைத்தமைக்காக கமல்ஹாசன் நீதிமன்றம் ஏற்றப்பட்டதும் இவ்வாறே. மிகவிரைவாக கருத்துச்செயல்பாடே நிகழமுடியாத சூழல் அமைந்து வருகிறது. நீண்டகால அளவில் நம் சமூகம் அடிப்படைவாதிகளின் இறுகிய பிடிக்குள் சென்று அமைந்துவிடும். எல்லாவகையான அடிப்படைவாதங்களும் ஆபத்தானவையே. நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை சட்ட ஒழுங்குப்பிரச்சினையாகக் கருதவேண்டிய காலம் முடிந்துவிட்டது. இவை கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.

இவ்வகையான வழக்குகளுடன் நீதிமன்றம் வருபவர்களை, அரசியல்சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் எதிரானவர்களாகக் கண்டு தண்டனையும் அபராதமும் விதிக்கும் தெளிவு நம் நீதிபதிகளுக்கு வரும்போதுதான் இங்கே ஃபாஸிசம் மீது முதல் கட்டுப்பாடு உருவாகும்.

நம் தரப்பைச் சொல்லும் உரிமைக்காக மட்டும் அல்ல நாம் எதிர்க்கும் கருத்துக்கள் எழுவதற்கான உரிமைக்காகவும் குரல்கொடுக்கையிலேயே நாம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறோம். அதன் வழியாகவே நாம் நம் கருத்துச் சுதந்திரத்தையும் பேணிக்கொள்கிறோம். ரஞ்சித் மீதான நீதிமன்றத் தாக்குதல் கருத்துரிமைக்கு எதிரான அடிதான். கருத்துக்கள் கருத்துக்களத்திலேயே விவாதிக்கப்படவேண்டும், நீதிமன்றங்களில் அல்ல.

ஜெ

தோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்

கருத்துச் சுதந்திரம்-மனுஷ்யபுத்திரன்

கருத்துச்சுதந்திரம்- சட்டங்கள்

கருத்துச்சுதந்திரம் எவருக்கு?

***

முந்தைய கட்டுரைநீதிமன்றம், நெறிகள் – கடிதம்
அடுத்த கட்டுரைஅழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டி