கிரீஷ் கர்நாட் – ஒரு விவாதம்

அஞ்சலி: கிரீஷ் கர்நாட்

அன்புள்ள ஜெயமோகன்..

 

இன்று க்ரீஷ் கர்நாட்டுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையை படிக்க நேர்ந்தது.. நீங்கள் அவரின் நாகமண்டலா, ஹயவதனா ஆகிய இரண்டு மட்டுமே முழுமையான கலைப்படைப்புகள் என்கிறீர்கள்..

 

ஒரு ஆளுமையை உங்கள் அளவுகோலில் மதிப்பிடுவது உங்கள் உரிமைதான்.. ஆனால் இந்த அஞ்சலிக்கட்டுரை விஷமத்தனத்தின் முட்களுடன் இருப்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது..

 

அவர் தகுதிக்கு மீறிய அங்கீகாரங்களைப்பெற்றார் என்றும் அதற்கு காங்கிரஸ் மேலிடத்துடன் அவருக்கிருந்த தொடர்புகளே காரணம் என்றும் விஷம் விதைக்கிறீர்கள்.. சங்பரிவாரங்களின் வகுப்புவாதத்திற்கு எதிராக வாழ்நாள்முழுவதும் குரல் எழுப்பி வந்த ஒருவரைப்பற்றி நீங்கள் இப்படி ஒரு கோணத்தை யாருக்கு எடுத்துக்கொடுக்கிறீர்கள்.? அவரின் “துக்ளக்” நாடகம் நேருவை விமர்சித்தது என்பதையும், இந்திராகாந்தியின் நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தவர் அவர் என்பதையும் வசதியாக மறந்துவிட்டு “காங்கிரஸ் மேலிடத்தின்” செல்லப்பிள்ளையாக அவரை சித்தரிப்பில் இருக்கும் வடிகட்டும்தன்மை சந்தேகமில்லாமல் உள்நோக்கம் கொண்டது.

 

தினத்தந்தியிடம் கடன்வாங்கி பிரயோகித்திருக்கும் அந்த “காங்கிரஸ் மேலிடம்” என்பது அதில் வந்த கன்னித்தீவுக்கு இணையான கற்பனைமிளிரும் உருவகம். ஆனால் ரொம்ப பழையது.. ஆனால் யாரும் கண்டிராதது. அவ்வளவுதான் மற்றபடி அவர் வகுப்புவாதத்தையும் பிற்போக்கு மதிப்பீடுகளையும் தனது வாழ்நாளின் இறுதிவரை எதிர்த்தவர் என்கிற இழையில் மட்டுமே காங்கிரஸோடு தத்துவார்த்த நெருக்கம் கொண்டிருப்பவர்.. மற்றபடி அவர் பெற்ற அங்கீகாரத்திற்கு முழுத்தகுதி கொண்டவர் என்றே ஒரு இலக்கிய வாசகனாகவும், காங்கிரஸ்காரனகவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

 

நீங்கள் கன்னட இலக்கிய முன்னோடிகளான சிவராம்காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி, எஸ்.எல்.பைரப்பா ஆகியோருடன் ஒப்பிட்டு க்ரீஷின் தகுதிக்குறைவை சுட்டுகிறீர்கள்.. இது விஷமத்தனமானது.. காரணம் க்ரிஷ் கர்நாட் இயங்கியது மேற்சொன்னவர்கள் பிரதானமாக இயங்கிய நாவல் சிறுகதை போன்ற வடிவங்களில் அல்ல.. அவர் இயங்கியது ஒட்டு மொத்த இந்திய நவீன இலக்கியச்சூழலில் அரிதான நவீன நாடகம் என்கிற வடிவத்திற்குள். எனவே இந்த ஒப்பீடு நேர்மையற்றது.. இதைச்சொல்வது மேற்சொன்ன படைப்பாளிகள் மதிக்கத்தக்கவர்களல்ல என்கிற பொருளில் அல்ல.. பைரப்பாவிற்கு ஞானபீடம் விருது அளிக்கப்படாதது வருந்தத்தக்கதுதான்.. எப்படி தமிழில் சுந்தராமசாமிக்கு வழங்கப்படாததைப்போல ஒப்ப முடியாத ஒன்றுதான்.. ஆனால் அதை வழங்கும் தனியார் அறக்கட்டளையை “காங்கிரஸ் மேலிடம்” நடத்தவில்லை. அதேபோல் இதற்கு க்ரீஷ் கர்நாட் எந்தவகையிலும் காரணம் அல்ல. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் 1975லேயே அவருக்கு சாகித்யஅகாடமி வழங்கப்பட்டாயிற்று..அவரின் இந்துத்துவ அரசியல் சார்பு அவரின் இலக்கியத்தகுதியை குறைத்து மதிப்பிடப்போதுமானது என நான் ஒருபோதும் கருதவில்லை.. கருதவும் மாட்டேன்.

 

பொதுவாக இந்திய இலக்கியச்சூழலில் நவீன நாடக அரங்குகள் உயிர்ப்புடன் இருக்கும் மொழிச்சூழல்கள் என்றால் அது கன்னடமும், மராத்தியும்தான்.. ஆரோக்யமான கன்னட நாடகச்சூழலின் இருப்பிற்கு க்ரீஷின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே அவரின் இலக்கிய பங்களிப்பை இந்த கோணத்தில் சக கன்னட நாகாசிரியரான சந்திரசேகர கம்பாருடனோ, மராத்திய நாடகாசிரியரான விஜய் டெண்டுல்கருடனோ ஒப்பிட்டு மதிப்பிடுவதல்லவா பொருத்தம்..?ந.முத்துசாமியை ஜெயகாந்தனுடனும், அசோகமித்திரனுடமா ஒப்பிடுவீர்கள்..?

 

அவரை சுமாரான நடிகர் என்கிறீர்கள்.. இருக்கட்டும்.. அவர் பெரும்பாலும் வணிகநோக்கிலான வெகுசன படங்களில் நடித்தார்.. அது தனது வருவாய்க்கான வழியாக.. நீங்கள் எழுதும் திரைக்கதைகள் கூட அப்படித்தானே..? அவற்றை நீங்கள் எழுதும் நோக்கம் என்னவோ அதே நோக்கம்தான் அவர் நடித்ததற்கும்.. ஆனால் என் மதிப்பீட்டில் அவர் வெற்றிகரமான குணச்சித்திர நடிகர்தான்..

 

எல்லாவற்றிற்கும் மேலாக தான் நம்பிய மதிப்பீடுகளுக்காக, வலியுறுத்திய விழுமியங்களுக்காக, கடைப்பிடித்த அரசியல் கொள்கைகளுக்காக ஔிவுமறைவின்றி நேர்மையாக நின்றமைக்கான வாழ்வே எல்லாவகையிலும் மேலானது. கர்நாடக காவல்துறை புலனாய்வு பிரிவு, கவுரிலங்கேஷின் கொலைகாரர்கள் அவருக்கு முன்பாக கொலைசெய்யப்பட வேண்டியவராக க்ரிஷ் கர்நாட்டையே வைத்திருந்ததாக குறிப்பிட்டது. வகுப்பு வாதத்திற்கு எதிராகவும், படைப்புரிமைக்கு ஆதரவாகவும், எத்தனை உக்கிரமான கருத்தியல் போராளியாக இருந்தார் என்பதற்கான சான்று அது..சமகால இந்தியாவில் விரல்விட்டு எண்ணத்தக்க பொது அறிவுஜீவிகளில் (public intellectual ) ஒருவராகவும் அவர் இருந்தார்.. இதையெல்லாம் குறிப்பிடாமல் கூட நீங்கள் எழுதலாம்.. ஆனால் ஒரு குற்றப்பத்திரிக்கைக்கு அஞ்சலி கட்டுரை என்று பெயரிட்டிருக்க வேண்டாம்..

 

அன்புடன்,
இரா.முருகானந்தம்.

[முருகானந்தம் முகநூலில் எழுதிய பதிவு என் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது]

,

 

அன்புள்ள முருகானந்தம்,

 

உங்கள் தரப்பை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

 

நான் பலமுறை எழுதியதுபோல ஒரு சாமானியர் மறைவதும் எழுத்தாளன் மறைவதும் ஒன்றல்ல. சாமானியனின் பணி முடிவடைகிறது. அவன் அதன்பின் நினைவுகூரப்படுவான், அவ்வளவுதான். இலக்கியவாதியின் பணி தொடங்குகிறது. ஆகவே இலக்கியவாதிக்கான அஞ்சலிக்குறிப்பு என்பது அவரை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வதும் மதிப்பிடுவதும் முழுமையான வாசிப்பை தொடங்கிவைப்பதும்தான். அதில் ‘அய்யோ பாவம் நல்ல மனுஷன், போய்ட்டான்’ என்பது போன்றவற்றுக்கு இடமில்லை. [ஆகவே நான் போனபின்னர் நீங்களும் இப்படி எழுதலாம்]

 

கிரீஷ் தொடர்ச்சியாக அரசியல்நடவடிக்கைகள் வழியாக செய்திகளில் இருந்தார். அனந்தமூர்த்தி பற்றிய அவருடைய சர்ச்சைக்குரிய கட்டுரை உட்பட பல எவ்வகையிலும் உளச்சமநிலையைக் காட்டுவன அல்ல. அரசியல் நடவடிக்கைகள் வழியாக ஒருசாராருக்கு உவப்பானவராக இருந்த ஓர் எழுத்தாளர் மறையும்போது அவரைப்பற்றி அவர்கள் எழுப்பும் வெற்றுக்கூச்சல், மிகைமதிப்பீடு நம் சூழலை நிறைக்கவே வாய்ப்பு.அச்சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடு தேவையாகிறது. என் அணுகுமுறை அழகியல்சார்ந்தது. அதை அவ்வாறு முன்வைப்பதுதான் என் இலக்கியப் பணி

 

சங்கீதநாடக அக்காதமி கிரீஷ் கர்நாடுக்கு நாடகத்திற்கான விருதை வழங்கவில்லை. இலக்கியத்திற்காகவே ஞானபீட விருது வழங்கப்பட்டது. அந்நிலையில் அவருடைய படைப்புக்களின் இலக்கியமதிப்பு என்ன என்பதே என் வினா. சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், கட்டுரை என்பவை இலக்கிய நோக்கில் வெவ்வேறு இலக்கியவடிவங்கள், அவற்றை ஒப்பிடமுடியாது என எந்த இலக்கியவிமர்சகனும் சொல்லமாட்டான். கோகாக் அவருடைய பண்பாட்டு ஆய்வுகளினாலேயே இலக்கியத்தில் இடம்பெறுகிறார்.

 

நாடகப்பிரதியை நாடகக் கட்டமைப்பு , கவித்துவம், தரிசனம் ஆகிய மூன்று அளவுகோல்களின்படி அளவிடுவது இலக்கியத்தில் வழக்கம். கிரீஷ் கர்நாடின் நாடகங்களை அவ்வாறுதான் அந்தக் குறிப்பில் மதிப்பிட்டிருக்கிறேன். அவ்வகையில் அவருடைய ஹயவதனா, நாகமண்டலா இரண்டும் முக்கியமானவை. ’தலதண்டே’ தரிசனம் அற்றது, வழக்கமான அரசியல் உள்ளடக்கம் மட்டுமே கொண்டது. பசவண்ணரின் வாழ்வு என்னும் கோணத்தில் அது செல்லவிருந்த தொலைவுகள் அனைத்தையும் தவறவிட்டது. ஆனால் நாடகக் கட்டமைப்பு கொண்டது. துக்ளக் அவ்வாறல்ல. அதன் கட்டமைப்பும் பலவீனமானது. வெறும் அரசியல் பேச்சு அது. இதை ஓர் விமர்சகனாக என்னால் தெளிவாகச் சொல்லமுடியும்.

 

கிரீஷ் கர்நாட் எழுதிய நாடகங்களின் தளத்தில் அவரைவிட தீவிரமான, கவித்துவமும் மெய்த்தரிசனமும் கொண்ட படைப்புகளை எழுதிய பலர் இந்திய இலக்கியத்தில் உண்டு. அவருடைய இடம் பலபடிகள் கீழேதான். அவர்கள் எவருக்கும் நாடகங்களுக்காக ஞானபீடம் அளிக்கப்படவில்லை. ஆகவே அவரை நல்ல படைப்பாளி ஆனால் மிகையாக கௌரவிக்கப்பட்டவர் என்று சொல்கிறேன்

 

கிரீஷ் கர்நாட், யூ.ஆர்.அனந்தமூர்த்தி ,பி.வி.காரந்த் மூவரையும் எனக்குத்தெரியும். அனந்தமூர்த்தியை அணுக்கமாகவே தெரியும். அவர்மேல் பெரும்பற்றும் இருந்தது. அவர்களின் எல்லா தொடர்புகளையும் அறிவேன். உங்களுக்கு வம்புக்காக பேசவேண்டுமென்றால் காங்கிரஸுக்கு மேலிடமே இல்லை என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் நடைமுறை அறிந்தவர்கள் எப்போதும் இருப்பார்கள். காங்கிரஸ் நெடுங்காலம் பதவியில் இருந்த ஒரு கட்சி. ஆகவே எல்லா துறைகளிலும் அதற்கான மேலிடங்கள் உருவாகி வந்திருந்தன. அவர்கள் அதிகார மையங்கள். அவற்றுடனான தொடர்பே பதவிகளை, அங்கீகாரங்களைத் தீர்மானித்தது.

 

காங்கிரஸ் எப்போதுமே பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரிச் சாய்வுள்ள கட்சி. ஆகவே இடதுசாரிக் கட்சிகளில் உறுப்பினர் அல்லாத இடதுசாரிப்பார்வை கொண்டவர்கள் அதனுடன் ஒத்துச்சென்றார்கள். அதற்கு சோவியத் ஆதரவாளரும் சோவியத் நாட்டால் ஆதரிக்கப்பட்டவருமான பி.என்.ஹக்ஸர் முதன்மைக் காரணம். இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ் காலம் வரை அந்த நிலை நீடித்தது. முன்னாள் சோஷலிஸ்டுகள் எளிதாக காங்கிரஸ் வளையத்திற்குள் சென்றனர். இந்திராவுக்கும் நரசிம்மராவுக்கும் அவர்கள் மேல் உண்மையான ஈடுபாடும் இருந்தது.

 

பி.என்.ஹக்ஸர் காலம் முதல் டெல்லியில் பண்பாட்டுத்தளம் சார்ந்து  ஒரு காங்கிரஸ் மேலிடம் உண்டு. பபுல் ஜெயகர், கபிலா வாத்ஸ்யாயன் என அது வளர்ந்தது. டாக்டர் கரன்சிங், ஸ்ரீகாந்த் வர்மா, கே.நட்வர்சிங் என பலரால் அது நிலைநிறுத்தப்பட்டது. இவர்களுடனான உறவுகளே இங்கே பண்பாட்டுநிறுவனங்களின் பதவிகளை முடிவுசெய்தன. கடைசிமூவருடனும் அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட் போன்றவர்களுக்கு இருந்த தொடர்பைப்பற்றி நான் நன்றாகவே அறிவேன். அதற்குரிய அனைத்தையும் அவர்கள் செய்தனர்.

 

ஆனால் இவை ஒன்றும் கட்சிப்பதவிகள் அல்ல. காங்கிரஸ் சர்வாதிகார அமைப்பும் அல்ல. இந்திரா காந்தி பண்பாடு என்றால் என்னவென்று அறியாதவரும் அல்ல. இலக்கியவாதிகளுடன் உண்மையான தொடர்பு அவருக்கு இருந்தது. அவர்களின் இடம் என்ன என்று அறிந்தவர்கள் இந்திராவும் நரசிம்ம ராவும்.ஆகவே இவர்கள் உரிய மதிப்புடன், விமர்சிக்கும் உரிமையுடன்தான் இருந்தனர். அனந்த மூர்த்தி மத்திய அரசு நிகழ்ச்சியில் நேருவை  கடுமையாக விமர்சனம் செய்துபேசியதை நான் கேட்டிருக்கிறேன். உண்மையில் அதுதான் நேரு- இந்திரா யுகம். அது மறைந்துவிட்டது.

 

ஆனால் அதற்கு வேறுசில விலைகள் உண்டு. அவை நுட்பமானவை. எழுத்தாளர் பலரும் அளிக்கத் துணியாதவை. எங்கோ ஓர் இடத்தில் மென்று விழுங்கவேண்டியிருக்கும். எங்கோ ஓரிடத்தில் சமரசம் செய்யவேண்டியிருக்கும். மெல்லமெல்ல அரசு என்னும் மாபெரும் அமைப்பின் நிதானத்திற்கும் மிதப்பிற்கும் சொகுசுக்கும் பழகவேண்டியிருக்கும். அது நம்மை அகத்திருந்தே அழிக்கும். அனந்த மூர்த்தியும் அப்படி அழிந்தவரே.அங்கு செல்வதற்கு முன் எழுதியவற்றால்தான் அவர் படைப்பாளியாக நிலைகொள்கிறார். நான் அஞ்சுவதும் விலக்குவதும் அதையே. இப்போதும் சரி, முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் சரி என்னால் மிக எளிதாக அரசு வட்டத்திற்குள் சென்றுவிட முடியும். கைபிடித்து தூக்க அன்றும் இன்றும் பேணுநர் உண்டு. ஆனால் நான் அதை விலக்கிக் கொள்கிறேன். ஆகவே அதை சூடிக்கொண்டவர்களை சற்று விலக்கியபடியே ஆராய்கிறேன்.

 

கிரீஷின் அரசுத்தொடர்பும் அவர் வகித்த பதவிகளும் ஏன் இங்கே சொல்லப்படவேண்டும்? இரண்டு காரணங்களால். ஒன்று, அவருடைய கலைத்திறனை அவை குலைத்தன. இரண்டு, அவர் இறுதிக்காலத்தில் செய்த சில அரசியல்நடவடிக்கைகளால் போராளி பிம்பத்தைச் சம்பாதித்தார். ஆனால் அவர் எவ்வகையிலும் போராளி அல்ல, அரசுடன் மிக அணுக்கமாக இருந்தவர், ஆதிக்க அமைப்புகளுடன் சமரசம்செய்துகொண்டவர், அதை அவருடைய ஆளுமையுடன் சேர்த்துக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இல்லையேல் அவர் போராளி என இங்குள்ள இடதுசாரி அரைவேக்காடுகள் சொல்லிச்சொல்லி நிறுவிவிடுவார்கள். அது அவருடைய புனைவுலகை அணுகுவதற்கே பெரிய தடை.

 

அனந்தமூர்த்தி சோஷலிஸ்டு அமைப்புகளில் இருந்து எழுந்து வந்தவர். கர்நாடும் அப்படியே. ஆனால் அவர்கள் காங்கிரஸ் அதிகார அமைப்புகளுடன் சமரசம் செய்துகொண்டனர். அது ஓர் உண்மை. அதை எவ்வகையிலும் மழுப்பவேண்டியதில்லை. முப்பதாண்டுக்காலம் ஓர் அரசியல் கட்சியுடனும் அதன் அரசுகளுடனும் அணுக்கமாக இருந்து எல்லா பதவிகளையும் அடைந்து மிகையான அங்கீகாரங்களையும் பெற்ற ஒருவர் அவருடைய கட்சிக்கு எதிரான கட்சி ஆட்சிக்கு வந்தபோது வெளியே இருந்து எதிர்த்தமையால் போராளி ஆகிவிடுவதில்லை. அவ்வாறு சொல்வது வாழ்நாளெல்லாம் அரசுக்கும் அமைப்புக்களுக்கும் வெளியே இருந்து போராடிய எழுத்தாளர்களைச் சிறுமை செய்வது. இதையே என் மதிப்பிற்குரிய சச்சிதானந்தனைப் பற்றியும் சொல்வேன். அவரை போராளி என எவரேனும் எழுதினால் அவர் ஸ்ரீகாந்த் வர்மாவின் வழியாக காங்கிரஸ் தொடர்பு பெற்றவர்,இருபதாண்டுக்காலம் அவர் மத்திய அரசின் பண்பாட்டு அமைப்புகளை நடத்தியவர் என்பதையே குறிப்பிடுவேன்.ஆனால் கூடவே அவர் அவ்வமைப்புகளில் இருந்தகாலம் அவற்றின் பொற்காலம் என்றும் சொல்வேன்.

 

ஞானபீடம் பற்றி. எஸ்.எல்.பைரப்பாவுக்கு ஞானபீடம் அளிக்கப்படவில்லை என்பதற்கு கிரீஷ் கர்நாட் காரணம் என நான் சொல்லவில்லை. ஆனால் ஒன்றுண்டு. ஞானபீடம் ஜெயின் அறக்கட்டளையால் அளிக்கப்படுவது. அதற்குரிய பரிந்துரைகளைச் செய்பவர்கள், அதை முடிவுசெய்பவர்கள் இடதுசாரிகளும் காங்கிரஸ்காரர்களுமான அறிவுஜீவிகளும்தான். இடதுசாரிகள் கல்வித்துறையில் அவர்களின் செல்வாக்கு வழியாக அதை முடிவுசெய்தனர். காங்கிரஸ்காரர்கள் கலாச்சார அமைப்புகளில் இருந்த செல்வாக்கு வழியாக அதை வழிநடத்தினர். இன்றும் அவ்வாறே. நெடுங்காலம் டாக்டர்.கரன்சிங் ஞானபீட விருதில் செல்வாக்கு செலுத்தினார். டாக்டர் கரன்சிங்கின் ரசனையும் கலையிலக்கிய அர்ப்பணிப்பும் நான் குறைத்து மதிப்பிடமாட்டேன். ஆனால் பைரப்பா ஞானபீடம் என்னும் எல்லை வரைச் செல்லாமைக்கு இடதுசாரிகளும் காங்கிரஸ்காரர்களும் அவர்மேல் கொண்ட ஒவ்வாமையே காரணம் என்பதையும் மறக்கவேண்டியதில்லை.

 

கடைசியாக, கிரீஷ் கர்நாடின் வணிகசினிமா ஈடுபாடு பற்றி. வணிகசினிமாவில் ஈடுபடுவது வேறு மூழ்குவது வேறு. நான் அதில் என் வருமானத்திற்காக, அது அளிக்கும் சுதந்திரத்திற்காக ஈடுபடுகிறேன். அதை வெளிப்படையாக எப்போதும் சொல்லிவந்திருக்கிறேன். இந்தச் சிறுவருமானத்தில் நான் உருவாக்கியிருப்பது ஓர் இலக்கிய இயக்கத்தை என அறிவுத்தெளிவுடையோர் அறிவர். அது வரலாற்றில் இருக்கும். ஆனால் என் படைப்புத்திறன் குன்றுமளவு சினிமாவில் மூழ்குவதில்லை. உதாரணமாக நான் இன்று எண்ணினாலும் ஒரு படத்தை இயக்கமுடியும். தயாரிப்பாளர்கள் கட்டாயப்படுதியபோது என் நண்பர்கள் இருவரையே இயக்குநராக சிபாரிசு செய்திருக்கிறேன். என்னால் இயக்கமுடியாது என்றல்ல, சிறப்பாகவே முடியும். பணமும் ஈட்டமுடியும். ஆனால் அது என்னை உள்ளே இழுத்துவிடும். என் நேரத்தை முழுமையாக உறிஞ்சும். நான் நானே முடிவுசெய்த அளவுக்கு குறைந்தபட்ச நேரத்தை மட்டுமே சினிமாவுக்கு அளிக்கிறேன். கிரீஷ் என்னென்ன சினிமாக்களில் என்னென்ன வேடங்களில் நடித்தார், என்னென்ன படங்களை எடுத்தார், பெரும்பகுதி காலத்தை எதற்குச் செலவிட்டார் என்று மட்டும் பாருங்கள். அவருடைய வருமானத்தைக்கொண்டு அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள்.

 

அன்புள்ள முருகானந்தம், உங்கள் பதிவை எனக்கு அனுப்பிய நண்பர் அதற்குக்கீழே இருக்கும் வசைகளையும் சேர்த்தே அனுப்பியிருந்தார். அதிலுள்ள காழ்ப்பை, சிறுமைசெய்தலை கவனியுங்கள். அதுதான் நீங்கள் சொல்லும் முட்கள். நஞ்சுகொண்டவை. அது உங்களுக்கு இயல்பானதாகத் தெரிகிறது. அதுதான் உங்கள் அரசியல். அந்தக் கும்பலுக்கும் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை. வெறும் அரசியல்வம்பர்கள். ஆனால் அவர்களால் கிரீஷ் கொண்டாடப்படுகிறார், அவருடைய கடைசிக்கால கட்சிச்சார்பு அரசியல்நடவடிக்கைகளுக்காக மட்டும். போராளி என முத்திரையிடப்படுகிறார். அந்தக் கூச்சல்களால் அவர் உண்மையில் மறைக்கப்படுகிறார். அதனால்தான் சரியாக அவரை மதிப்பிட்டு முன்வைக்க வேண்டியிருக்கிறது. அவருடைய வெற்றியையும் வீழ்ச்சியையும் சொல்லவேண்டியிருக்கிறது. அவருடைய ஆளுமையின் எல்லா பக்கங்களையும் பேசவேண்டியிருக்கிறது.

 

அந்தக்கூச்சல் உங்களைச் சுற்றி ஒலிப்பதனால்தான் சிற்றிதழ்ச்சூழலில் என்றுமுள்ள கறாரான விமர்சனம் உங்களுக்கு முள்ளாக குத்துகிறது

 

ஜெ

முந்தைய கட்டுரைகாலமில்லா கணங்களில்… லிங்கராஜ்
அடுத்த கட்டுரைஅரியணைச் சூதுகளும் வாசிப்பும்