அய்யா!
ஜெ,
ஆல்பாவை ஒரு விமானபயணத்தில் பார்த்தேன். பரிணாமத்தில் ஆர்வம் கொண்ட ஆராய்ச்சியாளனாக , பெரும் கிளர்ச்சியை அளித்த படம்.
மனித மிச்சத்தை உண்ண ஊருக்குள் வந்த வனநாய்களில் சாதுவானதே அண்டிப் பிழைத்திருக்க முடியும். மூர்க்கமானது கொல்லப்பட்டிருக்கும் அல்லது தப்பியோடியிருக்கும்.
மூர்க்கமற்ற திறமையான ஒன்று மேலும் மேலும் தேர்வு செய்யப்பட்டு domestic செய்யப்பட்டிருக்கும். இன்று கைக்கடக்க நாய்கள் தேவைக்கேற்ப selective breeding செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய நாய்களின் பரிணாம மூதாதை ஓநாயா (Wolf) அல்லது செந்நாய் (Dohle) போன்ற காட்டுநாய்களா (Jackal) என்ற கேள்வி அறிவியலில் பல வருடங்களாக இருந்தது.
மூலக்கூறு மரபியலின் வளர்ச்சிக்குபின் அனைத்து வகையான நாய்களின் மரபணுக்களும் வாசிக்கப்பட்டு வரிக்கு வரி ஒப்பு நோக்கப்பட்டு மனிதனுக்கும் சிம்பன்சி க்கும்போல்
நாய்க்கும் ஓநாய்க்கும் 99%. மரபணுப் பொருத்தம் என கண்டறியப்பட்டு இன்றைய நாய்களின் பரிணாம மூதாதை ஓநாய்களே என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ரிச்சர்ட் டாகின்ஸ் ஓரிடத்தில் நம் வீட்டிலிருப்பவை,
‘நாய்தோல் போர்த்தி அமர்ந்திருக்கும் ஓநாய்களே’ என்கிறார்.
ஆல்ஃபா படத்தின் ஹீரோ ஒரு சாயலில் நீண்ட முடிகொண்டிருந்த ஈழத்தமிழ் இலக்கிய லிட்டில் ஸ்டார் அனோஜன் போல் தெரிந்தார். கவனித்தீர்களா :)
அன்புடன்,
செந்தில் குமார் தேவன்
அன்புள்ள ஜெ
ஆல்ஃபா பற்றிய கட்டுரை வாசித்தேன். அது சினிமா பற்றிய கட்டுரை அல்ல, மொழிகளைப் பற்றிய கட்டுரை. சினிமாவிலிருந்து அதுவரை ஒரு பயணம் செய்திருக்கிறீர்கள். இங்கே சினிமா பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றின் சிக்கல் என்னவென்றால் அவர்களுக்கு வாசிப்பு கிடையாது. பண்பாடு பற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே சினிமாவின் கதையும் காட்சிகளும் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றை அப்படியே எழுதிவிடுகிறார்கள். ஒரு சினிமாவிலிருந்து மேலே செல்லவே அவர்களுக்குத் தெரியவில்லை.
புத்தகவாசிப்பு அருகி சினிமா மட்டுமே ஊடகமாக ஆகும்போது இந்தப்பிரச்சினை ஏற்படுகிறது. சினிமாவிலிருந்து எதையாவது கற்பதற்குக்கூட வாசிப்பு தேவை. வெறும்சினிமா ஒன்றுமே கற்பிக்காது. இது இங்கே அமெரிக்கக் கல்வித்துறையில் தெளிவாக ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. ஒரு சினிமா பற்றி எதையேனும் சொல்லவேண்டுமென்றால் எதையேனும் யோசிக்கவேண்டுமென்றால் மொழி தேவை. மொழியை வாசிப்புதான் அளிக்கமுடியும். சினிமாபற்றி நீங்கள் எழுதவேண்டும். அது இங்கே சினிமா பற்றி எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சினிமாவிலிருந்து எதையெல்லாம் பெறமுடியும் என்பதைக் காட்டுவதாக அமையும்
ராமச்சந்திரன்