அன்புள்ள ஜெ
மும்மொழிக்கல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்தி கற்பிப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா? இன்றைக்கு நிகழும் விவாதங்களில் எவரும் மாணவர்களைப் பற்றி, கல்வித்தரம் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரவர் அரசியல்நிலைபாட்டைச்சார்ந்து மோதிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் அஜெண்டாவுடன் இருக்கிறார்கள். ஒரு விவாதக்குழுமத்தில்கூட நடுநிலையான பார்வை, கல்விசார்ந்த பார்வை என்பதே இல்லை. எதிர்காலம் பற்றிய பார்வை இல்லை. எல்லாருமே கல்வியாளர்களைப்போல பேசுகிறார்கள்
ஒரு மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலைசெய்துகொண்டார். உண்மையில் அந்த மாணவியின் முகம் இரண்டுநாட்கள் தூக்கமிழக்கச் செய்தது. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்த மாணவியின் வாழ்க்கையுடன் விளையாடியவர்கள் யார்? ஒரு கல்விமுறையை கட்டவிழ்த்துவிட்டு சீரழித்துவிட்டு திடீரென ஒரு தகுதித்தேர்வைக் கொண்டுவருவது என்பது பெரிய வன்முறை. அந்தத் தகுதியை அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புள்ள கல்வி வழங்கப்பட்ட பின்னரே அந்தத் தகுதித்தேர்வு அளிக்கப்படவேண்டும். அந்த மாணவி எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சி அளித்தது. அது நாலாம்கிளாஸ் குழந்தை எழுதுவதுபோல தப்பும்தவறுமாக இருந்தது. அந்தத் தரத்தில்தான் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் தகுதித்தேர்வு வேறு தரத்தில். அந்த மாணவி தனக்கு தமிழே தெரியவில்லை என்றுகூட தெரியாத அளவுக்கு கல்விமுறை இருக்கிறது.
தேர்வில் உயர்மதிப்பெண் பெற்ற பெண்ணின் தமிழ்க்கல்வித் தரம் இப்படி இருக்க கூடவே இந்தியையும் அறிமுகம் செய்வதைப்போல கொடுமை வேறு ஒன்றுமில்லை என நினைக்கிறேன். இதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?
எஸ்.தர்மராஜன்
***
அன்புள்ள தர்மராஜன்,
நீங்கள் சொல்வதுபோல இது அரசியல்தரப்புகளின் விவாதமாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் எல்லாருமே கல்வியாளர்களாகக் கருத்து சொல்கிறார்கள். ஆகவே முடிந்தவரை சூடு அடங்கியபின் எழுத்தாளனாக என் கருத்தைச் சொல்கிறேன்.
இப்போது கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் இதை இன்றைய அரசியல் சூழலில் நின்றோ இன்றைய பண்பாட்டுவிவாதச் சூழலில் நின்றோதான் பேசுகிறார்கள். இக்கொள்கைகளை வகுப்பவர்கள்கூட ஐம்பதாண்டுகளுக்கு முன் பள்ளிக்கல்வி பெற்ற பண்பாட்டு – கல்வித்துறைச் செயல்பாட்டாளர்கள். இவர்கள் பண்பாட்டு ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம்தான் யோசிக்கிறார்கள். uண்மையில் இதை நடைமுறை சார்ந்து, நம் பள்ளிக்குழந்தைகளின் கோணத்தில் யோசிக்கவேண்டும்.
இதைப்பற்றிப் பேசும் எவருக்காவது இங்கே கல்வியின் உண்மையான நிலை என்னவாக இருக்கிறது என்று தெரியுமா? போலியான புள்ளிவிவரங்களை கொண்டு அறைகளில் அமர்ந்து முடிவுகளை எடுக்கிறார்கள் – எல்லாவற்றிலும் அப்படித்தான். தமிழ்நாட்டின் கல்விச்சூழல் உண்மையில் நாளுக்குநாள் அழிந்துகொண்டிருக்கிறது. உடனே பிகாருடன் ஒப்பிட்டு தமிழகம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என பேச ஆரம்பிக்கிறார்கள். ஓரிருமுறையேனும் பள்ளிகளுக்கோ கல்விநிலையங்களுக்கோ சென்றிருப்பவர்கள் நான் சொல்வதைப் புரிந்துகொள்வார்கள்
நம் கல்வித்துறை இரு பெரும்பிரிவுகளால் ஆனது. அரசுக்கல்வி, தனியார்க் கல்வி. அரசுக்கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்குமுன்பே பணிநியமனம் முழுக்கமுழுக்க லஞ்சம்கொடுத்தால்தான் நிகழும் என்றாகியது. இன்று அது உச்சகட்டத்தில் உள்ளது. விளைவாக ஆசிரியராகக்கூடிய தகுதியும் மெய்யான ஆர்வமும் கொண்டவர்கள் ஆசிரியர்களாக ஆவது மிகமிககுறைந்தது. அது நன்றாகப் படித்தவர்கள் விரும்பும் தொழில் அல்ல இன்று. குறைந்த கல்வித்திறனும் பணமும் கொண்டவர்கள் ‘வாங்கி’ அமரும் ஒரு பணி.
அதன் விளைவுகளை அரசுசார் கல்விநிலையங்கள், அரசு உதவிபெறும் கல்விநிலையங்கள் அனைத்திலும் இன்று காணலாம். கல்லூரி ஆசிரியர் பணிக்கு கிட்டத்தட்ட 75 லட்சம் லஞ்சம் கொடுக்கப்படவேண்டும். அதன்பின் அந்த ஆசிரியரிடம் வேலைபார்க்கும்படி எவர் சொல்லமுடியும்? பெரும்பாலான அரசுநிறுவனங்களில் கல்வி என்பதே ஒருவகை ஒப்பேற்றல் மட்டும்தான். விதிவிலக்கான ஆசிரியர்கள் சிலரே.
இன்னொருபக்கம் தனியார்க் கல்வி. அங்கே ஆசிரியர்களுக்குச் சம்பளம் மிகமிகக் குறைவு. தனியார்க் கல்விநிலையம் ஒன்றில் முதுகலைப் பட்டம்பெற்று ஆசிரியராகப் பணியாற்றுபவர் பெறும் சராசரி ஊதியம் அரசுக்கல்விநிலையத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பெறும் சம்பளத்தில் நான்கில் ஒன்று மட்டுமே. தமிழகத்தில் ஒரு கூலித்தொழிலாளி பெறும் சராசரி ஊதியத்தில் பாதி மட்டுமே. நம்பவேமுடியாத ஊதியத்தில் பணியாற்றுபவர்களைக் கண்டிருக்கிறேன் – ஒரு பொறியியல் கல்லூரி ஆசிரியர் அவர் மாதம் நாலாயிரம் ரூபாய் வாங்குவதாகச் சொன்னார். அவர்கள் வெறும் அடிமை உழைப்பாளிகள்.
இவ்விரு வகையிலும் கல்வி கைவிடப்பட்டிருக்கிறது. முதல்வகைக் கல்வியில் மாணவர்களுக்கு எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை.இரண்டாம் வகை கல்வியில் மாணவர்கள் மூர்க்கமாக தேர்வுக்குரிய பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறார்கள். இரண்டு இடங்களிலும் கல்வி என்பது இல்லை.
கல்லூரிகளுக்குச் சென்றால் நெஞ்சு பதைபதைக்கிறது. மாணவர்களுக்கு எதிலும் அடிப்படை அறிதலே கிடையாது. கவனிக்கும் பயிற்சியும் இல்லை. வெறும் முகங்களை நோக்கிப் பேசவேண்டியிருக்கிறது. உளம் கசந்து கல்விநிலையங்களுக்கு இனி செல்வதில்லை என முடிவெடுப்பேன். அப்படி முழுக்க தொடர்பு இல்லாமல் ஆகக்கூடாது என மீண்டும் செல்ல ஆரம்பிப்பேன். இந்த ஊசலாட்டத்திலேயே இருக்கிறேன்.
உங்கள் வினாவுக்கு வருகிறேன். இன்றைய கல்வித்தேவை தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. கல்வி மேலும் மேலும் விரிவானதாக, ஆழமானதாக, சவால்மிக்கதாக ஆகிறது. அது உலகநாகரீக வளர்ச்சியுடன் தொடர்புடையது. அறிவியல்கல்வி இன்னும் இன்னும் சவால்மிக்கதாகவே ஆகும். வேறுவழியே இல்லை.
நாம் இங்கே சரியான அறிவியல்கல்வியை அளிப்பதே இல்லை. நம் மாணவர்கள் அறிவியல்கருதுகோள்களை புரிந்துகொள்வதில்லை. அறிவியல்ரீதியான சிந்தனைக்குப் பழகுவதில்லை. அறிவியலை மனப்பாடம் செய்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகமிக அடிப்படையான அறிவியல் கொள்கைகள் கூட நம் மாணவர்களுக்கு, உயர்கல்வி மாணவர்களுக்குக்கூட புரிந்திருப்பதில்லை. அவற்றை அறிந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.
இதற்கான காரணம் கல்வித்திட்டச் சுமைதான்.இங்கே இப்போது இருமொழிக் கல்வி உள்ளது. இதுவே நடைமுறையில் பெருஞ்சுமையாக உள்ளது என்றே நான் பத்தாண்டுகளாக எழுதி வருகிறேன். ஆங்கிலத்தை இனி எவரும் தவிர்க்க முடியாது. அது உலகமொழி, தொழில்நுட்பத்தின் மொழி. நாம் பெறும் வேலைவாய்ப்புகளில் 99 சதவீதமும் நாம் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்பதனால் அமைவதே. நம் தொழில்கள் அனைத்திலும் ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது. ஆங்கிலம் கற்றோர் கற்காதோர் என நாடே இரண்டாகப்பிரிவுண்டிருக்கிறது. ஆங்கிலம் கற்றவர்களுக்குரியது இன்றைய அனைத்து உலகியல்வெற்றிகளும்.
இன்று தங்கள் மொழிகளிலேயே உயர்கல்வியும் தொழில்நுட்பக் கல்வியும் வழங்கிவந்த ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் ஜப்பானும் எல்லாம்கூட ஆங்கிலம் நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றன. ஆகவே தாய்மொழியில் உயர்கல்வி என்பதெல்லாம் இனி மிகமிக அபத்தமான பேச்சுக்கள். இனி அது நடக்கவே நடக்காது. ஆங்கிலமே அறிவியல்கல்வியின் மொழி.
ஆனால் தாய்மொழிக்கல்வியை நாம் தவிர்க்கமுடியாது. ஆகவே வேறுவழியின்றி இருமொழிக்கல்வி இங்கே உள்ளது. இது எந்த லட்சணத்தில் உள்ளது என அறியவேண்டும் என்றால் சில பள்ளிகளுக்குச் சென்றுபாருங்கள்: அரசுப்பள்ளி, தனியார்ப்பள்ளி இரண்டுக்கும். தமிழ்க்கல்வி மிகமிகப் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிலேயே பெரும்பிழையில்லாமல் ஒரு பத்தி எழுதுபவர்கள், சொந்தமாக ஒரு கருத்தை எழுதத் தெரிந்தவர்கள் மிகமிகக்குறைவு. ஆயிரம் பல்லாயிரத்தில் ஒருவர். பிறர் தட்டுத்தடுமாறி படிப்பார்கள். மனப்பாடம் செய்து ஓரளவு எழுதுவார்கள்.
இங்கே மிகப்பெரும்பாலான மாணவர்கள் தமிழில் எதையும் வாசிப்பதில்லை. நாளிதழ்களைக்கூட. ஒரு கல்லூரியில் என்னுடன் வந்த குமுதம் நிருபர் சிந்துகுமார் ‘இங்கே குமுதம் வாசகர் எவர்?” என்றார். எவருமே இல்லை. ’குமுதத்தை ஒருமுறையேனும் பார்த்தவர் எவர்?” என்றார் ஒரு பெண் ஒருமுறை பார்த்திருந்தாள். ”ஏதேனும் வார இதழை வாசிப்பவர் யார்?” என்றார். எவருமில்லை. ”தமிழ்நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிப்பவர் எவர்?” என்றார். எவருமில்லை. இன்று இளையதலைமுறையிடம் தமிழ்க்கல்வி பெரும்பாலும் இல்லை. இதுவே உண்மை நிலை. தமிழில் சரளமாக வாசிப்பவர்க்ள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே.
ஏன்? இதுதான் காரணம். இங்கே தனியார்ப்பள்ளிகளில் பயிற்றுமொழி ஆங்கிலம். தமிழ் இரண்டாம்பாடம். தமிழில் வெற்றிபெற்றால் மட்டும் போதும். ஒரு வாரத்தில் நான்கு அல்லது மூன்று மணிநேரம் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. அதுவும் விடைகளை மனப்பாடம் செய்து எழுதுவதற்கு மட்டும். தமிழ்ப்பயிற்சி முற்றாகவே இல்லை. மாணவர்களுக்கு தமிழ் பெரிய தொல்லை என்றே தோன்றுகிறது. அரசுப்பள்ளிகளில் முறையான பயிற்சி அளிக்கப்படுவது அரிது. ஆகவே தமிழகத்தில் தமிழ் ஓரளவுமட்டுமே தெரிந்த ஒரு தலைமுறையே உருவாகிவிட்டது. இன்னமும்கூட தமிழ் தமிழ் என கூச்சலிடுபவர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை.
நான் இதை தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நம் மாணவர்களால் தமிழில் நூல்கள் எதையும் வாசிப்பதில்லை. ஏனென்றால் தமிழை அவர்களால் முக்கிமுக்கித்தான் வாசிக்கமுடியும். அவர்களின் மொழித்தரத்துக்குரிய நூல்கள் அறிவுத்தரத்தை வைத்துப்பார்த்தால் மிகமிக கீழே இருக்கின்றன. அதாவது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஐந்தாம் வகுப்புத்தர நூலையே வாசிக்க முடியும். ’முட்டாள் மட்டி மடையன்’ கதைகள் என்பதுபோல. ஆனால் அவன் இன்ஸெப்ஷன் படம் பார்க்கக்கூடியவனாக இருப்பான். ஆகவே அவனுக்கு அது ஆர்வமூட்டுவதில்லை. ஹாரிபாட்டர் அவனுக்கு எளிதாக இருக்கிறது.
இதை எண்ணியே நான் ’பனிமனிதன்’, ’வெள்ளிநிலம்’ போன்ற நூல்களை எழுதினேன். அவை குழந்தைநாவல்களுக்குரிய எளிமையான மொழி கொண்டவை. ஆனால் பரிணாமஅறிவியல், மதங்களின் இயங்கியல் போன்ற சிக்கலான, தீவிரமான விஷயங்களைப் பேசுபவை. இங்கே குழந்ந்தை எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் சிக்கலான தமிழில் ’அம்முவும் அம்பதுபைசாவும்’ போன்ற எளிமையான நீதிக்கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அந்நூல்களை அருவருக்கின்றன. நான் எழுதியது ஒரு முன்னுதாரணமாக. இன்றுதேவை வரலாறு அறிவியல் என ஆய்வுசெய்து எழுதப்படும் நூல்கள் – ஆனால் ஐந்தாம்வகுப்புக்குரிய மொழிநடை கொண்டவை. அவற்றையே நம் பத்தாம் வகுப்பு மாணவன் வாசிப்பான். நான் ஒரு முன்னுதாரணமே எழுதிக்காட்டினேன். சரியான குழந்தை எழுத்தாளர்கள் இன்னும்கூட சிறப்பாக எழுதமுடியும்
ஆனால் பல நண்பர்களின் ஆங்கிலம் வழிக்கல்விகொண்ட குழந்தைகள் பனிமனிதனையும் வெள்ளிநிலத்தையும் வாசிக்கும்படி தந்தையிடம் சொல்லி கேட்கவே விரும்புகின்றன. ஏனென்றால் அவற்றின் அறிவுத்தரம் அந்நூல்களை எளிதில் தொடுகிறது. ஐந்தாம்வகுப்புத்தமிழே கூட முக்கிமுக்கி வாசிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் கேட்டால் நன்கு தெரியும். தமிழின் எழுத்துரு கண்ணுக்கும் உள்ளத்திற்கும் பழகாமல் அயலானதாக உள்ளது.
மொழிக்கல்வி இன்றைய நவீன உலகில் ஒரு முக்கியமான அறிவுத்தகுதி அல்ல. பலமொழிகள் அறிந்திருப்பதனால் பெரிய நன்மை ஏதும் இல்லை. ஒருவேளை இன்னும் பத்தாண்டுகளில் மொழிகளுக்கிடையேயான தானியங்கி மொழியாக்கம் முழுமையை அடைந்துவிடக்கூடும்..நான் இப்போதே சாதாரணமாக பிரெஞ்சு, ஸ்பானிஷ் இணையதளங்களை வாசிக்கிறேன். கன்னட வங்க இணையதளங்களைக்கூட வாசிக்கிறேன். இச்சூழலில் மொழிக்கல்விக்கு மூளையுழைப்பின் பெரும்பகுதியைச் செலவிடுவது மாபெரும் வீணடிப்பு
அத்துடன் இன்று அறிவியலுக்குள்ளேயே பல மொழிகளை நாம் கற்றேயாகவேண்டியிருக்கிறது. யோசித்துப்பாருங்கள், அல்ஜிப்ரா ஒரு தனிமொழி. வேதியியல்குறியீடுகள் ஒரு தனிமொழி. அப்படி மொழிக்குள் பலமொழிகளை நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே மேலதிகமாக ‘பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்காக’ மொழி கற்பது போல அபத்தம் வேறில்லை. அது ஒட்டுமொத்தமாகவே இந்தியாவை அறிவார்ந்த பின்னடைவுக்கே கொண்டுசெல்லும். உலகப்போட்டியில் நாம் தோற்போம்
இப்போதே நாம் பிள்ளைகள்மேல் மிகுசுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். இளவயதில் இரண்டு எழுத்துருக்களை [லிபிகளை] படிக்கவும் எழுதவும் கற்பது மிகப்பெரிய சுமை. இளமையில் நாம் மொழியை எளிதாகக் கற்கிறோம். ஆனால் லிபி கற்பது மிகப்பெரிய உழைப்பு. யோசித்துப்பாருங்கள். நாம் கையில் எழுதுகோலை எடுப்பது முதல்வகுப்பில் [இப்போதெல்லாம் இரண்டுவயதில்] ஓரளவு சரளமாக நாம் எழுத ஆரம்பிப்பது பத்தாம் வகுப்பில். பத்துப்பதினைந்தாண்டுக்கால கடும் உழைப்பு. ஒவ்வொரு நாளும் ஐந்தாறு மணிநேரம் பயின்றுதான் கைக்கு எழுத்துக்கள் பழகவேண்டியிருக்கிறது. மூளை எழுத்துருக்களை சரளமாக மொழியாக ஆக்கமுடிகிறது. மானுடம் அளிக்கும் மிகப்பெரிய அறிவுழைப்பு எழுதப்பழகுவதும் எழுத்துருவை மொழியாகப் பழகுவதும்தான்.
இரண்டுமொழியோ மூன்றுமொழியோ கடும் உழைப்பால் கற்கமுடியும்தான். ஆனால் இயல்பாகவே மூளை அவற்றில் ஒன்றைத்தான் தனக்குரியதாகத் தெரிவுசெய்யும். அதில்தான் திறன் வெளிப்படும். நான் கற்றகாலத்தில் எங்கள் மூளை தமிழைத் தெரிவுசெய்தது. 15 ஆண்டுக்காலம் ஆங்கிலம் கற்றபின்னரும் ஆங்கிலம் கைக்கும் மூளைக்கும் அயலானதாகவே இருந்தது. இன்றைய மாணவனுக்கு ஆங்கிலம் முதன்மையாக உள்ளது. தமிழ் அயலானதாக உள்ளது.
தமிழ் ஆங்கிலம் இரண்டுக்கும் எழுத்துவடிவங்கள் முழுக்கமுழுக்க வேறானவை. அதாவது அவற்றின் வளைவுத்தன்மைகள், கோட்டுவடிவங்கள் முற்றாக வேறுபட்டவை. அவற்றை மூளை எதிர்கொள்கையில் திகைக்கிறது. ஒருவன் இணையான கோட்டுவடிவம்கொண்ட தமிழ் எழுத்துருவையும் மலையாள எழுத்துருவையும் கற்பதுபோல அல்ல அது. முற்றிலும் வேறான கோட்டுவடிவம் ஒன்றை எதிர்கொள்வதை மூளை எத்தனை எதிர்ப்புடன் சந்திக்கிறது என்பதை பற்றி ஏராளமான ஆய்வுகள் இன்று வந்துள்ளன
எழுதுவது என்பது விரல்களை ஒரு ஆக்ரோபேட்டிக்ஸுக்குப் பழக்குவது என்று பூஃக்கோ சொல்கிறார். இரண்டு லிபிகளை எழுதுவது என்பது இரண்டுவகை ஆக்ரோபாட்டிக்ஸ்கலைகளை ஒரே சமயம் பழகுவது. அதுவே நம் மூளையைச் சோர்வடையச் செய்து இந்நூற்றாண்டுக்குரிய மெய்யான கல்வியை அடையமுடியாமல் ஆக்கிவிடுகிறது என்பதே என் தரப்பு. இதில் மூன்றாவது ஆக்ரோபாட்டிக்ஸை புகுத்த நினைக்கிறார்கள்.
இந்தியோ வேறுமொழியோ தேவை என்றால் கற்றுக்கொள்ள இன்று எளிய வழிகள் உள்ளன. தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்ளவும் வழிகள் உள்ளன. ஜப்பான் சென்று மிகச்சிக்கலான ஜப்பானியமொழியைக் கற்ற நண்பர்கள் பலரை சமீபத்தில் சந்தித்தேன். கற்காமல் மொழியாக்கம் செய்யவும் வாய்ப்புகள் மிகுதியாகி வருகின்றன. இன்று அறிவியலை, பண்பாட்டைக் கற்றுக்கொள்ளவேண்டிய அரியபருவத்தை மொழிகளையும் எழுத்துருக்களையும் கற்று பயில செலவழிப்பது ஓர் அறிவுத்தற்கொலை.
இன்னொன்று உண்டு. மொழிகற்கும் திறன் அனைவருக்கும் ஒன்று அல்ல. காட்சிநுண்ணுணர்வு, கணித நுண்ணுணர்வு போல மொழிநுண்ணுணர்வும் ஒரு மூளைத்தனித்தன்மை. சிலரால் மொழிகளை எளிதில் கற்கமுடியும். காட்சி நுண்ணுணர்வுள்ளவர்கள் மொழிகளைக் கற்பது மிக அரிது. என்னால் மொழிகளை கற்கமுடியும். மூன்றுமொழிகளில் நாளும் புழங்குகிறேன். ஆனால் என்னால் கணிதத்துக்குள் நுழையவே முடியாது. மூன்றுமொழிகளை கற்பித்து அதனடிப்படையில் மாணவர்களை தெரிவுசெய்வது என்பது மாபெரும் வன்முறை.
இந்தியை திணிக்க நினைப்பது வட இந்திய அறிஞர்களின் உளக்கோளாறு. அரசியல்வாதிகளின் ஆதிக்க எண்ணம். 1994 ல் நான் சாகித்ய அக்காதமியின் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். நான் ஒரு கட்டுரைமேல் கருத்துரை ஆற்றவேண்டும். அக்கட்டுரை இந்தியில் இருந்தது. அதன் மொழியாக்கம் அளிக்கப்படவுமில்லை. என்னை கருத்துரை ஆற்ற அழைத்தனர். நான் மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றினேன். ‘இந்தி கற்றால்தான் இந்தியன் எனில் நான் இந்தியன் அல்ல என்றே சொல்வேன்’ என்றேன்.அதைப்பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்.. நானும் மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடும் இணைந்து சாகித்ய அக்காதமிக்கு ஒரு கண்டனக் கடிதமும் அனுப்பினோம். இன்றும் என் எண்ணம் அதுவே
ஆனால் இத்தரப்பை எதிர்ப்பவர்களும் எந்த அறிவியல்நோக்கும் கொண்டவர்கள் அல்ல. வெறும் அரசியல்வாதிகள். சில மாதங்களுக்கு முன் தமிழின் ஒரு பதிப்பாளர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் நான் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமே என தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரினார். எதற்கு என்று கேட்டேன். மொரிஷியஸ்,தென்னாப்ரிக்கா முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழில் வாசிப்பதற்காக அவர் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்நூல்களை வெளியிடுகிறாராம். அதன் முன்னுரையாகப் பயன்படுத்திக்கொள்ள அக்கட்டுரையை கோரியிருந்தார். ஏனென்றால் அவர்கள் தமிழில் வாசிப்பதென்றால் அது ஒன்றே வழி. ஆனால் அதை சொல்லவும் அச்சம். ஏனென்றால் இங்குள்ள கலாச்சாரக் காவலர்கள் கிளம்பிவிடுவார்கள், தமிழை அழிக்கிறாய் என்று.
அக்கட்டுரை வெளிவந்தபோது எழுந்த எதிர்ப்புகளை நினைவுகூர்கிறேன். அந்த யோசனை ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டது என்பதுகூட அவர்களை சிந்திக்கவைக்கவில்லை. தமிழ்நாட்டு தமிழ்க்கல்வியில் இருக்கும் அச்சமூட்டும் தேக்கநிலையைக் கண்டு நான் எண்ணியது அது. இன்றும் என் எண்ணம் அது மட்டுமே ஒரே வழி என்பதே. அன்றிருந்த அச்சம் பலமடங்காகப் பெருகிக்கொண்டே இருக்கிறது. இனி தமிழ்மாணவர்கள் ஆங்கிலத்தையே கற்பார்கள். ஆங்கில எழுத்துவடிவமே எழுதும்பயிற்சிகொண்டதாக அவர்களுக்குள் இருக்கும். தமிழ் எழுத்து வடிவம் ஒர் உபரி அறிதலாக, முக்கிமுக்கி வாசிக்ககூடியதாகவே எஞ்சும். ஆகவே இங்குள்ள இலக்கியங்கள் எவையும் இனிமேல் மெல்லமெல்ல வாசிக்கப்படாமல் ஆகும். குறளும் கம்பராமாயணமும் மட்டுமல்ல சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும்கூடத்தான். நாங்கள் தொல்லடையாளங்களாக மாறி மறக்கப்படலாம்.
இரண்டு எழுத்து வடிவங்களைப் பயில்தல் என்னும் சுமையை எதிர்காலத்தின் அறிவுச்சூழல் ஏற்றுக்கொள்ளாது. ஆங்கிலம் போல உலகப்பொதுவான எழுத்துரு ஏற்கப்படலாம். அல்லது எல்லா எழுத்துருக்களிலும் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளும் வசதி வரலாம். ஆனால் இன்றிருக்கும் சூழல் இப்படியே தொடர்ந்தால் தமிழ் ஒரு வகை பேச்சுமொழியாக மட்டுமே எஞ்சும்
ஆகவே நான் மும்மொழியை ஏற்கவில்லை. ஒற்றை எழுத்துருக்களுக்குமேல் கற்கலாகாது என்று நினைக்கிறேன். அந்த உழைப்பு நவீன அறிவுத்துறைகள் அறிவியல் ஆகியவற்றை கற்கச் செலவிடப்படவேண்டும்
பிகு. இங்கே விவாதங்கள் நிகழும் அழகுக்கு சிறந்த உதாரணம். நான் அக்கட்டுரையை எழுதியபோது பலரும் கேட்ட ;அறிவார்ந்த; கேள்வி, ”அப்படியானா விஷ்ணுபுரத்தை தங்கிலீஷ்லே அச்சிடவேண்டியதுதானே, ஏன் தமிழில் அச்சடிக்கிறே?” பலருக்கும் மாய்ந்து மாய்ந்து பதில் சொன்னேன். “இன்றைக்கு தமிழை ஆங்கிலத்தில் எழுதலாம், எல்லாரும் வாசிப்பார்கள் என்று சொல்லவில்லை. ஆங்கில லிபியில் எழுதுவதை படிப்படியாக கல்விவழியாக கொண்டுவரலாம் என்றுதான் சொல்கிறேன். அப்படி ஒரு கல்வியும் வாசிப்பும் வந்தால் அதன்பின் விஷ்ணுபுரத்தை அதில் அச்சிடலாம்” ஆனால் என்னால் அவர்களிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியவில்லை.
இரண்டுநாட்களுக்கு முன் வாசிக்கும்பழக்கம் கொண்ட இளம்நண்பர் அதே கேள்வியை கேட்டார். திகைப்பாக இருந்தது. நாம் சிந்தனைப் பயிற்சியை அடையவே இன்னும் எவ்வளவு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. பண்பாட்டு விஷயங்களை மிகையுணர்ச்சியுடன் அரசியல்காழ்ப்புகளுடன் அணுகுகிறோம். பண்பாடே அழிந்தாலும் கண்டுகொள்வதுமில்லை.
இதனால் உடனே ஏதேனும் நடக்குமா, எதிர்ப்பவர்களின் மிகையுணர்ச்சிகளை நோக்கிப் பேசமுடியுமா, ஒருவரையேனும் புரியவைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டீர்கள் என்றால் வாய்ப்பில்லை என்பதே என் மறுமொழி..ஆனால் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமென்றும் படுகிறது.
ஜெ