கிரீஷ் கர்நாட், கிரேஸி மோகன் – கடிதங்கள்

அஞ்சலி: கிரீஷ் கர்நாட்

அஞ்சலி, கிரேஸி மோகன்

அன்புள்ள ஜெயமோகன்

 

கிரேஸி மோகன், கிரிஷ் கர்நாட் இருவரைப்பற்றியும் உங்கள் மதிப்பீடுகளுடன் கூடிய அஞ்சலிகல் மிகக்கறாராக இருந்தன. மிகச்சரியாக இருந்தன.

 

கர்நாட் ஓவர் ரேட்டட் என்பது இந்தியாவின் மிகச்சிறந்த நாடகங்களை வாசித்தவர்கள் அறிவார்கள். அவர் அனந்தமூர்த்தியைப்போல அதிகார அமைப்புக்களுக்கு நெருக்கமான பெரியமனிதராக வளையவந்தவர். பிற்காலப்படைப்புக்கள் எல்லாமே அரசியல் பாலிமிக்ஸ்களை எழுதியவைதான்.

 

கிரேஸி மோகன் பெரிய நகைச்சுவையாளர் அல்ல. அவருடையது நாடகமும் அல்ல. அவருடையது அவருடைய சிறுவட்டத்திற்காக செய்யப்பட்ட நகைச்சுவை அதுதான் சாத்தியம் அதை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்

 

இங்கே எல்லாவற்றையும் சாதி மத அடிப்படையில் பார்த்து, நேரடியான எந்த மதிப்பீடும் இல்லாமல் ஜல்லியடிக்கும் சூழலில் உங்கள் கட்டுரைகள் தெளிவை அளிப்பவை

 

ராம்

 

அன்புள்ள ஜெ

 

ஏற்கனவே தமிழில் நகைச்சுவையும் தமிழ்சினிமாவும் என்ற கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். அதில் தமிழில் ஏன் நகைச்சுவை குறைவாக உள்ளது என சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்ரசிகர்களின் நகைச்சுவை ரசனை குறைவானது, பயிற்சி அற்றது என்று சொல்லியிருந்தீர்கள். தமிழின் சிறந்த நகைச்சுவைப்படம் கிரேஸி மோகனின் மைக்கேல்மதனகாமராஜன்தான் ஆனால் அது தோல்விப்படம் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்கான காரணத்தையே இங்கே வேறு ஒருவகையில் சொல்கிறீர்கள். சொல்நகைச்சுவை செய்பவர்கள் பார்வையாளர்களின் மொழியை ஒட்டியே அதைச்செய்யமுடியும். கிரேஸிமோகனின் லிமிட்டேஷன் அதுதான் என நானும் நினைக்கிறேன். கூர்மையான கட்டுரை. தனிப்பட்டமுறையிலும் அவருடைய பெர்ஸனாலிட்டியை காட்டுவதாக இருந்தது

 

ஸ்ரீனிவாஸன் கண்ணன்

 

அன்புள்ள ஜெ

 

கிரீஷ் கர்நாட் பற்றிய உங்கள் கறாரான அஞ்சலி சிலரை கொந்தளிக்கச் செய்ததைக் கண்டேன். அவர்கள் இடதுசாரிகள் என்பதனால் அது இயல்பானதுதான். அவர்க்ளின் சமீபத்திய ஐக்கான் அவர். ஆனால் எனக்கு இன்னொன்றும் தோன்றியது. அந்தக் கறாரான மதிப்பீடு இவர்களை உள்ளூர அச்சுறுத்துகிறது என்று. ஏனென்றால் இவர்களுக்கு இப்படி பொதுவெளியில் சவுண்ட் விட்டு ஒரு கருத்துச்செயல்பாட்டாளனாகவும் ஒருவகை போராளியாகவும் அறியப்படலாம் என ஒரு ஆசை உள்ளூர இருக்கும். சட்டென்று இப்படி ஒரு தராசு வந்து நடுவே நின்று சரி கடைசியாக என்னதான் உன்னிடம் தேறும் என்று கணக்கெடுக்கும் என்றால் அதைப்போல எரிச்சலூட்டுவது வேறு என்னவாக இருக்கும்?

 

ஆர். செந்தில்குமார்

 

அன்புள்ள ஜெ,

 

கிரீஷ் கர்நாட் பற்றி நீங்கள் எழுதிய குறிப்புக்கு பொதுவெளியில் வந்த கருத்துக்களை கவனிக்கிறேன். பொதுவாக அவை இவ்வாறாக இருந்தன்

 

1. நீங்கள் க்ரீஷ் கர்நாடை தாக்கி கிரேஸி மோகனை புகழ்ந்து எழுதியிருக்கிறீர்கள் என ஒரு குரல். இரு கட்டுரைகளும் வாசிக்கக் கிடைக்கும்போதே இந்தத் திரிப்பு. இவர்களின் புரிதல் லட்சணம் இது. கிரேஸி மோகன் நாடக ஆசிரியர் அல்ல ஸ்டேண்டப் காமெடியின் ஒரு வகைதான் அவருடையது, அதில் உங்களுக்கு ஈடுபாடில்லை, அவர் ஆபாசமாக பேசியதில்லை என்பது அவருடைய சிறப்பு என்கிறீர்கள். கிரீஷ் முக்கியமான முன்னோடி படைப்பாளி, ஆனால் அவர் பெற்ற உச்சகட்ட அங்கீகாரத்தைவிட ஒருபடி கீழானவர் என்கிறீர்கள். இதை இவர்கள் புரிந்துகொண்ட விதம் இப்படி. தலையெழுத்து.

 

2. கிரீஷ் நல்ல நடிகர் இல்லை என்கிறீர்கள் என ஒரு குரல். அதாவது அதைமட்டும்தான் சொல்கிறீர்கள் என. ’ க்ரீஷ் ஒரு நாடக ஆசிரியர் தெரியுமா?, ஞானபீடம் வாங்கினவர் தெரியுமா?, ஜெயமோகனுக்கு இதெல்லாம் எப்படித்தெரியும் ?அற்பப்பயல்!” என்று பலர் எழுதியிருந்தனர். இதில் ஏகப்பட்ட புரட்சிப்பெண்டிரின் கொந்தளிப்புகள் வேறு.  அஞ்சலிக்கட்டுரை எழுதுவதற்குமுன் கிரீஷ் எழுத்தாளர் என அவசியம்  நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமாம்.

 

3.கிரீஷ் சினிமாவில் செயல்பட்டது தப்பு என்கிறீர்கள் என ஒரு கூச்சல். சினிமாவில் ஈடுபட்டு கலையை சிதறடித்தது தவறு என்கிறீர்கள். அவர் நெடுங்காலம் வணிகசினிமாவில் உழன்றதும் இலக்கியத்தையே விட்டுவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறீர்கள். இவர்களிடம் என்னதான் சொல்லமுடியும்?

 

4. தமிழில் நகைச்சுவை இல்லை என்று சொல்லிவிட்டு கிரேஸியை போற்றுகிறீர்கள் என்று ஒரு கூட்டம். தமிழில் உயர்தர நகைச்சுவையை கொண்டுவரவே முடியாது, ஏனென்றால் இங்குள்ள ரசனை மட்டம் மிகத்தாழ்ந்தது, அதனுடன் சமரசம் செய்தே ஆகவேண்டும் என்றுதான் அக்கட்டுரையில் சொல்கிறீர்கள். அதிலேயே மைக்கேல் மதனகாமராஜன் படத்தின் உயர்தர நகைச்சுவை எப்படி கவனிக்கப்படவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். கிரேசியின் ஸ்டேண்ட் அப் காமெடியே நேர்முன்னால் இருப்பவர்களின் மொழியை கொண்டு விளையாடவேண்டிய கட்டாயம் உள்ளது என்கிறீர்கள். இதற்குமேல் என்னதான் சொல்லமுடியும்?

 

இப்படி ஒரே கும்மி. இவர்கள் இங்கே எதையும் விவாதிக்கமுடியாமல் ஒரு பெரிய கூச்சல்வட்டத்தை உருவாக்குகிறார்கள். எவருக்கும் தங்கள் மடத்தனம் பற்றி எந்த வெட்கமும் இல்லை.

 

சதீஷ்

 

நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்

 

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் விருதுவிழா – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ – டி.ஏ.பாரி