அறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ ,

உங்கள் சோற்றுக்கணக்கு என்னை மிகவும் பாதித்தது , எனக்கு என் ஆசிரியர் ஸ்ரீனிவாசனை கேத்தல் சாஹிப் நினைவு படுத்தினார் . அவரை நாங்கள் R.S.V (R Srinivaasan) என்று அழைப்போம் . ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் ஒய்வு பெற்ற கணித ஆசிரியர் . அவருடன் இருந்த நாட்கள் ஒரு குருகுல அனுபவம் தான் . ஒரு பைசா வாங்காமல் நாற்பது ஆண்டு களம் கணிதம் சொல்லி கொடுத்தார் . 20 பேர் நெருக்கி ஒட்காரும் ஒரு அரை , அதில் அழுக்கு படிந்த ஒரு பழைய வெட்டியும் , ஒரு கை வயித்த பனியன் அணிந்து அவர் கணிதம் நடத்தும் காட்சி என் கண் முன்னால் இன்றும் இருக்கும் காட்சி . எவளோ சார் பீஸ் என்ற கேள்விக்கு அவர் என்றுமே பதில் சொன்னது இல்லை . எப்பொழுதாவது நாம் வருபூர்த்தி குடுத்தால் அந்த பணத்தை அறையில் இருக்கும் பெருமாள் படத்தில் வெயிப்பார் . அது எங்காவது தரையில் விழுந்து கிடக்கும் .

அறையின் ஓரத்தில் 4 அடி உயரத்துக்கு chalk piece தூள்களை காணலாம் . இன்றும் நான் அவரை பார்க்க சென்றால் , நீங்க எந்த பாடச் ( batch ) என்று கேப்பார் , அவருக்கு என்னை நினவு இருக்காது என்று எனக்கு தெரியும் . ஆனால் அவரை ஒரு நாளும் நான் மறவேன் .

நன்றி
அசோக்

அறம், சோற்றுக்கணக்கு வாசித்தேன். கண்கள் நிறைவதைத் தவிர்த்தல் சிரமமாய் இருந்தது என்று சொன்னால் மீள் தேய்வழக்கு என்று நீங்கள் சொல்லக்கூடுமெனில் .. அதைச் சொல்லாதிருத்தல் என் உணம்யான மன உணர்வைச் சொல்லாதிருத்தல் ஆகிவிடும்.

மனதிரையில் ஒரு ஓரமாய்ச் சுருண்டிருந்து கொண்டு, சட்டென்று தோன்றும் போதெல்லாம் படமெடுத்து நிழலாடிக்கொண்டிருக்கிறது சோற்றுக்கணக்கு இரண்டு மூன்று நாட்களாக. என் வரையில் நான் வாசித்தவற்றில் என்னை ஆழமாக பாதித்த சிறுகதைகளில் ஒன்றாக என் வாழ்வின் முழுமைக்கும் கிடக்கும் என்பதில் ஐயம் இல்லை. தெருவில் கிடந்த நாய் குறித்த கற்பனை என்னை இந்தக் கதையை மீண்டும் வாசிக்க அனுமதிக்கும் என்று தோன்றவில்லை. (தற்ச்சமயதிர்க்கேனும்)

சுந்தரவடிவேலன்

Dear ஜெயமோகன்
நல்ல கதைகளுக்கு நன்றி. ஒரு பிளாஷ் ந்யூஸ் சொல்கிற மாதிரி தொலை பேசியில் என்னுடைய எழுத்தாள நண்பர் சார் ஜெயமோகன் அறம் னு ஒண்ணு எழுதி இருக்கார்.. ஐய்ய்யோ! என்றார். அந்த வார்த்தை எனக்கு போதுமானதாக இருந்தது. படித்து விட்டு இன்னொரு நண்பரை உடனே அழைத்து நான் கேட்ட வார்த்தையையே ரிபீட் செய்தேன். அப்படித்தான் செய்ய முடிந்தது. படித்தபின் நீண்ட நேரம் ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந்திருந்தேன். இந்த நிஜத்தையே இதற்கான விமரிசனமாக ரியாக்ஷனாக கொள்ளலாம்.

அடுத்து சோற்றுக்கணக்கு. நல்ல காரசாரமான சாப்பாட்டை ருசித்து படிக்கு சாப்பிட்டால் கண்களில் நீர் வரும். படித்தாலும் வரும் என்று காட்டும் கதை இது. இந்த கதையின் சிறப்பே கதைத்தனம் இல்லாத கதை. “இது நமக்கும் நடந்திருக்கு. நானும் உணர்ந்திருக்கேன்” என்று படிப்பவனை அது தொட்டால் அது அற்புதமான கதை. அதை நிகழ்த்தி இருக்கிறது இக்கதை. இது தொட்டிருக்கக்கூடிய பல்லாயிரம் நபர்களுள் நானும் ஒருவன். அந்த கெத்தேல் சாகிப்பின் முன்கை கண்ணிலேயே இருக்கிறது. அதில் நான் எனக்கு உகந்த கையை (கைகளை) காண்கிறேன்.

சரி வருகிறேன். இப்போது எனக்கு நிறைய வேலை இருக்கிறது (எத்தனையோ பேருக்கு இதைப்பற்றி சொல்லி படிக்க சொல்ல வேண்டும். அதுதான் வேலை) :-)

அன்புடன்
ரமேஷ் கல்யாண்
ஓசூர்

நான் கும்பகோணத்தைச் சேரந்தவன்தான். பெரியவர் சொல்வது‍ போல் கும்பகோணம் தன் அடையாளங்களை இழந்த காலகட்டத்தில் வாழ்ந்து‍ கொண்டிருப்பவன். பெரியவரை சந்தித்தது‍ கிடையாது. ஆனால் அவர் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பலர் எனக்கு‍ நண்பர்கள். பதிப்புத்துறை என்றில்லை, பாடுபடும் மக்களை சுரண்ட ஒரு‍ கூட்டம் எப்பொழுதும் காத்துக் கொண்டு‍ இருப்பதை அழகு‍ தமிழில்-பெரியவர் பேசும் அதே தஞ்சை தமிழில் சொல்லியிருக்கும் விதம் என்னை ஒரே மூச்சில் படிக்க வைத்தது. அவ்வப்போது‍ கண்களில் நீர் திரையிடுவதை தடுக்க இயலவில்லை. படித்து‍ முடித்து‍ நீண்ட நேரம் கருங்கல் மௌனத்தை அனுபவித்தேன்.
நன்றி
ஜெ.பாபு
குடந்தை

அன்புள்ள ஜெயமோகன்

சோற்றுக்கணக்கு சிறுகதையை நாலைந்து முறை படிக்க வேண்டியிருந்தது. மனம் ஒரு நிலைப்பட. நிம்மதித் தேடல், மனித நேயத்தை விலைக்கு வாங்கியதோ என்று ஒரு சமயம் தோன்றியது. இன்னொரு சமயம் மனித நேய வெளிப்பாட்டில், தாயன்பானாலும், ஒரு எதிர்பார்ப்பு அடங்கியே இருக்கிறது என்ற செய்தி இருப்பதாகத் தோன்றியது. வறுமையில் செம்மைக்கு மறுபக்கமும் உண்டென்று நினைக்கிறேன். சாகேபின் அமைதியிலும் மாமியின் வெளிப்படையான எதிர்பார்ப்பிலும் புலப்படாத ஒழுக்கச்சிக்கல் இரண்டாவது பெட்டி கேட்ட தொனியிலும் ஆவணித்திருமணத்திலும் புலப்பட்டதாக நினைக்கிறேன். ரசித்துப் படித்தேன்.

அன்புடன்
-அப்பாதுரை

அன்புள்ள ஜெ.,

சோற்றுக் கடன் கெத்தெல் சாகிப்பின் அன்பை உணர்த்துவதை விட, அந்த அன்பின் முன் நமக்கு ஏற்படும் தனிமையையே சுட்டிக் காட்டுவதாக நினைக்கிறேன்.

கதை சொல்லி தேடுவது ஒரு அங்கீகாரம். அதைப் பெற்றோரின் கசப்பின் ஆழமோ, சாகிப்பின் அன்பின் உயரமோ அவனுக்குத் தருவதில்லை. ஆனால் அவன் அத்தையின் சுய நலத்தின் முன் கிடைக்கிறது.

கோடி கோடியாய் சம்பாதித்து வீடு கட்டி, அதைக் காண வராத நண்பர்களைக் காண ஏக்கத்துடன் காத்திருக்கும் பேரை எனக்குத் தெரியும். அங்கீகாரம் இல்லாத வெற்றி ஒரு செல்லாத நோட்டுதான் போலும்.

நன்றி
ரத்தன்

அறம்

சோற்றுக்கணக்கு

முந்தைய கட்டுரைதாயார்பாதம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனின் காந்தி