சென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா
அன்புள்ள ஜெ..
வழக்கம் போல ஒரு அருமையான விழா..
விருது வழங்கு விழாவுக்கு முன் சிறுகதை விவாதம் என்பது அற்புதமாக ஒரு ஏற்பாடு.. இதற்கு என ஒரு தனி ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பதை , இந்த கொளுத்தும் மதிய வேளையிலும் அரங்கில் நிரம்பியிருந்த வாசகர்கள் நிரூபித்தனர்
இளம் தலைமுறையை ஊக்கப்படுத்தும் விழா என்றுதான் பொதுவாக நினைப்பார்கள்.. இந்த விருதின் நோக்கம் ஊக்கப்படுத்துவது அல்ல… சாதனையாளர்களை அடையாளம் காட்டுவது என நீங்கள் சொன்னது நெகிழ்ச்சி..
குமரகுருபரன் விழா பிச்சைக்காரன் பதிவு
அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. மிகச்சரியாகத் திட்டமிடப்பட்ட விழா. மிகச்செறிவான பேச்சுக்கள். பேச்சாளர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து மிகவும் தயாரிப்புடன் வந்திருந்தனர். பி.ராமனின் உரையும்கூட அவ்வளவு விரிவான தயாரிப்புடன் இருந்தது. விஷால்ராஜா சுனீல்கிருஷ்ணன் இருவரும் வாசகர்களின் கேள்விகளை எதிர்கொண்ட விதமும் அற்புதமானது. மிக அடிப்படையான பல சிந்தனைகளை உருவாக்கியது இந்த நிகழ்ச்சி. இலக்கிய நிகழ்ச்சிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான உதாரணம்.
மீண்டும் வாழ்த்துக்கள்
ஆர்.எஸ்.ராம்சந்தர்
அன்புள்ள ஜெ
சென்னையில் நிகழ்ந்த அனல்விழாவுக்கு நானும் நண்பருடன் வந்திருந்தேன். மாலைநிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பி.ராமனின் பேச்சும் அருணாசலம் அவர்களின் பேச்சும் உங்கள் பேச்சும் சிறப்பாக அமைந்தன. தேவதேவனுடையது ஓர் ஆசியுரை.
ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது கருத்தரங்குதான். ஒரு கருத்தரங்கிலே கேள்விகள் அனைத்துமே மிக மிகப் பொருத்தமாக அமைவதும் அதற்குரிய பதில்கள் மேலும் புதிய அனுபவங்களை அளிப்பதும் தமிழில் மிக அபூர்வமானவை. நான் பெரும்பாலான இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்பவன் என்பதனால் இதைச் சொல்கிறேன். பெரும்பாலும் அன்றாட அரசியல் சார்ந்த எளிமையான கேள்விகளைத்தான் சுழற்றிச்சுழற்றி முன்வைப்பார்கள். யார் எதைப்பற்றிப் பேசினாலும் சரி. ஆனால் இங்கே எல்லா கேள்விகளுமே ஆழமானவையாக இருந்தன
அதற்குக்காரணம் பிற இலக்கியவிழாக்களிலே காணப்படும் வழக்கமான முகநூல் அரசியல் தலைகள் இல்லாமலிருந்ததும் இலக்கியவாசகர்கள் மட்டுமே வந்ததும்தான் என நினைக்கிறேன்
லக்ஷ்மணன்
அன்புள்ள ஜெ
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பான அனுபவமாக இருந்தது. குறிப்பாக பி.ராமன் அவர்களின் பேச்சு. வழக்கமாக ஒரு விஐபியை கூட்டிவந்து வழக்கமான வாழ்த்தை அவர் சொல்லவைப்பார்கள். ஆனால் தமிழின் நவீனக் கவிதையை சங்ககாலம் முதல் ச.துரை வரை நினைவிலிருந்தே பேசும் ஒரு கவிஞரை, தமிழின் நவீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்பவரை கூட்டிவந்து பேசவைத்தது அருமையான எண்ணம். அவருடைய வாழ்த்துக்கள்தான் பொருள் உள்ளவை என நினைக்கிறேன். அவர் அற்புதமான எனர்ஜியுடன் பேசினார்.
வெறுமே சொல்லிக்கொள்ளலாம். தமிழுக்கும் மலையாளத்திற்கும் ஒரே நிலம்தான் என்று. ஆனால் அதை இருமொழிகளையும் அறிந்த ஒரு கவிஞன் சொல்லும்போது மனம் விம்மிதம் அடைந்தது
டி.நடராஜன்
புகைப்படங்கள் அறிவழகன் சேகர்
———————————————————————————————–