அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு,
நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதம் இதுதான். நான் உங்களுடைய அறம், சோற்றுக்கணக்கு என்ற இரு கதைகளையும் விரும்பி வாசித்தேன். கதைகளை வாசித்து மிகவும் கண்கலங்கிபோனேன். நான் அவ்வளவு நல்ல கதைகளை வாசித்தது கிடையாது. அந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் என்னுடைய வாழ்க்கையை சொல்லக்கூடியவை போல இருந்தன.
ஆனால் மத்துறு தயிர் கதையை வாசிக்கும்போது எனக்கு அந்தக்கதை சரியாகப் புரியவில்லை என்ற நினைப்புதான் இருந்தது. அந்தக்கதையின் கடைசியில் நெகிழ்ச்சியாக இருந்தது. என்றாலும் கதையிலே ஓரு ஓட்டம் இல்லை என்று நினைத்தேன். கதை பல இடங்களுக்குச் செல்வது மாதிரி இருந்தது. கதையை நான் வாசித்தமுறை தப்பா என்ற நினைப்பும் இருந்தது
இதை உங்களிடம் சொல்ல நினைத்தேன்
எம்.ஆசைத்தம்பி
அன்புள்ள ஆசைத்தம்பி,
உங்கள் கடிதம் கண்டேன்.
இணையத்துக்கு சில சாதகமான அம்சங்கள் உள்ளன. முன்பெல்லாம் ஒரு கதை பிரசுரமானால் அடுத்த மாதம்தான் அதைப்பற்றி இரண்டு வாசகர் கடிதங்களை பார்க்க முடியும். அதற்குள் நம் மனமும் எங்கோ போய் விடும். கதையை வாசித்து விவாதிக்க ஆளில்லாமல் இருக்கும்போது கதையை புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
நல்ல படைப்புகளை நாம் விவாதித்தாலே அவற்றின் உள் அடுக்குகள் எளிதில் புரிந்துவிடும். இணையம் கதைகளுடன் உடனே விவாதங்களையும் அளிக்கிறது. அவை நமக்கு வாசிப்புப் பயிற்சியை அளிக்கின்றன
நான் கவனித்த முக்கியமான ஒரு விஷயமென்னவென்றால் நம்மில் பலருக்குக் கதைகளை வாசிப்பதற்கான பயிற்சியே இல்லை என்பதுதான். ஒரு கதையின் மீது நிறைய எண்ண ஓட்டங்களை செலுத்துவது அல்ல கூர்ந்த வாசிப்பு . அதுவும் தேவைதான். ஆனால் நல்ல வாசிப்புக்கு இரு அம்சங்கள் இன்றியமையாமல் தேவை.
1. கதையை உண்மையான நிகழ்ச்சி போல கண்ணெதிரே கற்பனையில் காண்பது
2. கதையில் விடப்பட்டுள்ள இடைவெளிகளை கற்பனைமூலம் நிரப்பிக்கொள்வது.
இவை இரண்டையும் செய்து அந்தக்கதையை முறையாக உள்வாங்கிக் கொண்ட பிறகுதான் கதையைப்பற்றிய அறிவார்ந்த விவாதங்களுக்குள் செல்லவேண்டும். நான் இந்தக்கதையைச் சொல்லவில்லை. எந்தக்கதையும் இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்கிறேன். இந்த விவாதங்கள் ஒரு ஒட்டுமொத்தமான பயிற்சிக்களமாக அமையட்டும்
அறம் ஒரே ஓட்டம் உள்ள கதை. கதையில் என்ன இருக்கிறதென்பதைக் கதை நேரடியாகச் சொல்லிக்கொண்டு சென்று உச்சத்தை அடைகிறது. அதில் புதுமைப்பித்தனின் கதையைப்பற்றிய குறிப்புகள் வரும் இடம், பெரியவர் அவரது இறப்பை காணும் இடம் இரண்டும் மேலதிக கவனத்துக்கு உரியவை
சோற்றுக்கணக்கு இரண்டு ஓட்டங்கள் கொண்ட கதை. ஒன்று கெத்தேல்சாகிப். இன்னொன்று கதைசொல்லி. இரு ஓட்டங்களும் சந்திக்கும் இடம்தான் மையப்புள்ளி. பார்க்க
மத்துறு தயிர் அடுத்த கட்டம். இது மூன்று ஓட்டம் உள்ள கதை.
1. கம்பன். கம்பன் பாடல்கள் வழியாக பிரிவு என்ற மாபெரும் துக்கத்தைப்பற்றிய ஒரு சித்திரம் வருகிறது. உலகில் உள்ள அத்தனை துயரத்தையும் தனக்குள் ஒருவன் ஏற்பதுதான் பிரிவு. செத்து உயிர்வாழ்தல். அவன் வாழும் உலகமே கருகிப்போவது. மத்தால் கடையப்படும் தயிர் மாதிரி மனம் ஆவது
2. குரு-சீட உறவு ஒரு ஓட்டம். குமாரப்பிள்ளை -பேராசிரியர் – குமார் மற்றும் ராஜம் – சஜின் என்று நான்கு தலைமுறையாக குருசீட உறவு ஒழுகிச்செல்வதை காட்டுகிறது. குருவுக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்வதும் திருப்பி குரு சீடனுக்கு தன்னைச் சமர்ப்பணம் செய்வதும் சொல்லப்படுகிறது.
3. ராஜத்தின் கதை. அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த பிரிவு. அந்த துயரத்தால் அவர் உள்ளூர உடைந்து போய் அழிந்துகொண்டிருக்கும் கதை
இந்த மூன்று ஓட்டங்களும் உச்சகட்டத்தில் ஒன்றாக இணைகின்றன. கம்பன் பாடல்கள் காட்டும் மாபெரும் துயரம் ராஜத்தின் துயரமே. அவர் அந்த துயருடன் பேராசிரியரின் நினைவில் கடைசியாக தங்க வேண்டாமென நினைக்கிறார். அந்த துயரை அவருக்கு காட்ட விரும்பவில்லை. ஆனால் பேராசிரியர் அவரைக் காணாமலேயே அந்த மொத்தத் துயரையும் தான் வாங்கிக்கொள்கிறார். அந்த உறவு தொடர்பு இல்லாமலேயே ஆன்மாவில் நிகழ்கிறது
இங்கே மத்துறு தயிராக ஆவது இருவரின் மனம்தான். இப்போது கம்பனின் வரிகள் இந்த துயரைச் சுட்டுவதாக ஆகின்றன
இது ஒரு வாசிப்பு வழிதான். மேலும் பல வாசிப்புகளுக்கு இடமிருக்கலாம். ஆசிரியன் கூட ஒரு கதைக்கு வெளியே உள்ள வாசகன் மட்டுமே. ஆனால் இவ்வாறு இந்த கதையை மூன்று சரடுகளையும் கணக்கில் கொண்டு வாசித்தால் மட்டுமே கதை முழுமையாக கைக்குக் கிடைக்கும்.
அடிப்படையில் இது குரு -சீட உறவு பற்றிய கதை என்பதனால் அந்த உறவின் நெகிழ்ச்சியை நாம் அறிந்துகொண்டால், உணர்ந்துகொண்டால் , நம்முடைய ஆசிரியருடன் நமக்கிருந்த உறவுடன் இக்கதையை இணைத்துக்கொண்டால் கதை நம்முடையதாகும்
ஜெ
=========================
மத்தறு தயிர் படித்ததும், மனதுக்குள் புதைந்து கிடந்த குருவுக்கான ஏக்கம் மீண்டும் எழுந்தது. நம்முடைய கலாச்சார மாற்றத்தில் நாம் இழந்துவிட்ட மிக முக்கிய உறவு இது என்று தோன்றுகிறது.
பதின் பருவம் வரை நமது தந்தை ஒரு வழிகாட்டியாகத் தோன்றினாலும், அவர் தந்தையாக இருப்பதினாலேயே அதன் பிறகு அவரை ஏற்றுக்கொள்வது சிரமமாக இருக்கிறது. தாத்தா, மாமா போன்ற உறவுகளும் அற்ற சூழ்நிலையில் வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி அவசியம் தேவைப்படுகிறார். ஆனால் குரு என்பவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணங்களால், அத்தகைய தகுதி உடையவர்களைச் சந்தித்தால்கூட அவர்களை மனம் ஏற்றுக்கொள்வதில்லை.
யதேட்சையாக எனக்கு அறிமுகமாகி, இன்று வரை எனக்கு ஆதர்சமாக இருக்கும் பெரியவர் ஒருவரை இக்கதை எனக்கு நினைவுபடுத்தியது. சமீபத்தில் அவரோடு தொலைபேசியில் பேசியபோது, அடிக்கடி பேசச் சொன்னார். ஆனால் வேலைப் பளுவின் காரணமாக அவரோடு பேசி நீண்ட நாட்களாகிவிட்டன. இக்கதையைப் படித்ததும் உடனே அவரை அழைத்துப் பேசினேன். மிக அருமையாக இந்த நாளும் இந்த வாரமும் தொடங்கி இருக்கின்றன.
அவரைப் பற்றிய என்னுடைய பதிவு http://sumohan.blogspot.com/2011/01/blog-post_04.html
என்னுடைய விருப்பம், வேண்டுகோளெல்லாம் அறம், சோற்றுக்கணக்கு, மத்தறு தயிர் போன்ற சிறுகதைகளை/கட்டுரைகளை ஜெயமோகன் அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே. மகத்தான மனிதர்கள் உங்கள் எழுத்துக்கள் மூலமாகவது எங்களுக்கு அறிமுகம் ஆகட்டும்.
சு.மோகன்
========================
அன்பின் ஜெ,
இப்போதுதான் “மத்துறு தயிர்” வாசித்தேன். உடனே எழுத வேண்டும் என்ற ஆவலை தணிக்கவே இந்த முன் மடல். மற்றபடி இன்று முழுவதும் இந்த கதை மனதில் ஓடும். நீங்கள் எழுதியுள்ள பாத்திரப் படைப்புகள் அனைவருமே யாரெனத் தெரிவதால் ஒரு பெருமிதமான உணர்வும், கூடவே ஒரு துக்கமும் மனதில் படுகிறது. நல்ல குருவிடம் சென்று சேர்ந்தவர்களெல்லாம் நல்ல குருவாய் மலர்வதும், மொட்டாகவே நின்று விட்டவர்களின் உள்ளேயே தங்கிவிட்ட நறுமணத்தை எண்ணி குரு நெட்டுயிர்ப்பதுவும், …இப்படி ஒரு பண்பாடும், இதை உணர முடிந்த மனநிலை வாய்த்ததும், எடுத்து சொல்லி உள்ளிறக்க உங்களைப் போன்ற ஒருவர் இருப்பதும் இந்த மண்ணில் இருப்பதான பெருமையை விம்மச் செய்கிறது.
“குரவே சர்வ லோகானாம்; பிஷஜே பவ ரோகினாம்; நிதயே சர்வ வித்யானாம் …” என்று ஸ்தோத்ரம் சொல்வதன் பொருளுணர இந்த சம்பவத்தை (கதையல்ல என்பதால்) வாசிக்க வேண்டும். இந்த மண்ணில் அனைத்து துறைகளிலுமாக குருவின் மீதான பக்தி எப்படி உருவாகி வருகிறது என்பதை உணரச் செய்த இதை எழுதிய உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் .
ராஜகோபாலன்.ஜா, சென்னை