Alpha (film)
சிலநாட்களுக்கு முன்னர் ஆல்ஃபா என்னும் சினிமா பார்த்தேன். மனிதன் முதல்நாயைக் கண்டடைந்து அதைப் பழக்குவதைப் பற்றியபடம். இங்கே திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆனால் அதை எவரும் பார்த்து, குறிப்பிட்டு எழுதியதாகத் தெரியவில்லை. என்னைப்போன்ற நாய்ப்பிரியர்களுக்கு ஒரு மறக்கமுடியாத படம். அமெரிக்காவில் வெற்றிப்படம். இங்கே பெரிதாகஓடவில்லை எனத் தோன்றுகிறது.
வேட்டையின்போது பள்ளத்தில் விழுந்து இறந்துவிட்டான் என குடியினரால் கைவிடப்பட்ட கதைநாயகனாகிய சிறுவன் தன்னைத் தாக்கவந்த ஓநாய்க்கூட்டத்தில் ஒன்றை காயப்படுத்துகிறான். பின்னர் அதற்கு அவனே உணவளித்துக் காப்பாற்றுகிறான். அது அவனை தன் துணைவனாகவும் பின்னர் தலைவனாகவும் ஏற்றுக்கொள்கிறது. அவன் திரும்பி வரும்போது அதுவும் உடன் வருகிறது. பழகிய ஓநாய்கள் மானுடனுடன் சேர்ந்து வாழத்தொடங்கும்போது, நாய் உருவாவதற்கான முதல் பரிணாமப்புள்ளி தொடங்கும்போது படம் நிறைவடைகிறது.
நாயின் பல சிறு இயல்புகளை கூர்மையாக காட்டிய படம் அது. நாய் எப்போதும் மனிதனையே பார்த்துக்கொண்டிருக்கும். அவன் உடலசைவுகள் மற்றும் முகபாவனைகள் வழியாக அவனைப் புரிந்துகொள்ள முயலும். பிறநாய்களுடன் பேசுவதற்குப் பயன்படுத்தாத இன்னொரு மொழியை மானுடரிடம் பேச பயன்படுத்தும். மனிதனை தன் குழுவின் தலைவனாக ஏற்றுக்கொள்ளும். மனிதனின் அங்கீகாரத்தால் மகிழ்ச்சி அடையும். மனிதனுடன் இருப்பதனால் பிற நாய்களைவிட தான் மேலானவன் என்றும் எண்ணும். படத்தில் ஓநாய் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் போலவே தோன்றுகிறது. அதன் விழிகளின் அசைவும் செவியசைவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் மானுடன் நாயைப் பழக்கியது கிட்டத்தட்ட தீயைக் கண்டுகொண்டதற்கு நிகரானது. நாய் வந்ததுமே வேட்டை எளிதாகியது. வழிகண்டடைவது எளிதாகியது. விலங்குலகுக்குள் நுழைவதற்கான முதல் திறப்பு நாயின் உலகுக்குள் நுழைந்தது. நமது இந்த நாகரீகத்தை உருவாக்கியவை விலங்குகளே.
இந்தப்படம் ஒருவகைக் குழந்தைக் கற்பனைதான். மனிதன் நாயை கண்டடைந்ததை ஆய்வாளர்கள் ஒருவகையில் விளக்கியிருக்கிறார்கள். வேட்டைக்காரர்களை தொடர்ந்து செல்லும் நாய்கள் அவர்கள் எஞ்சவிட்டுச்செல்வதை உண்பது எளிமையான உணவுதேடும் வழி என கண்டுகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து மனிதன் நாய்க்குட்டிகளை எடுத்து வளர்த்திருக்கிறான். வழிகண்டுபிடிப்பவன், வேட்டைத்துணைவன், காவலன் என்னும் மூன்றுவேலைகளையும் நாய்கள் ஆற்றியிருக்கின்றன
வரண்ட ஆசியநிலங்களைவிட ஐரோப்பாவுக்கே நாய் தேவையாக இருந்திருக்கிறது. பனியால் வழிமறைய எங்காவது சிக்கிக்கொள்வது அன்று மிகப்பெரிய இடராக இருந்தது. குளிர்காலம் முழுக்க சிறிய இடங்களில் அடைந்துகிடக்கவேண்டும். பனிமூடிய நிலங்களில் வேட்டைவிலங்குகளைக் கண்டடைவதும் கடினம். நாயின் மூக்கு மிகப்பெரிய கருவியாக அவர்களுக்கு உதவியிருக்கிறது.
கற்கால மானுடர் வேட்டையாடிய தொன்மையான தடங்களில் நாயின் எலும்புகள் கிடைத்துள்ளன. அவற்றைக்கொண்டு இந்த ஊகங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் இந்த ஊகம் பயன்பாடு சார்ந்தது. இதைவிடச் சிறந்த ஊகம் என எனக்குப் படுவது, மானுடன் நாய்மேல் கொண்ட அன்பு, உணர்வுரீதியான ஈடுபாடுதான் நாயை பழக்கியது என்பது. அன்பே மாபெரும் கருவி என்பது. அந்த கோணத்தில் எழுதப்பட்டது ஆல்ஃபா.
படம் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தப்படத்தின் பேச்சுமொழியை சற்று கழித்தே கவனித்தேன். இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஐரோப்பிய நிலப்பகுதியில் நிகழ்கிறது கதை. பின்கற்காலச் சூழல். கல்லை செதுக்கி படைக்கலங்களாக்கி பயன்படுத்தியபின் அப்படியே விட்டுவிட்டுச் செல்லும் காலம் முன்கற்காலம். அக்கற்களை தொடர்ச்சியாக படைக்கலங்களாக்குவது, பிறபொருட்களுடன் இணைத்து மேம்படுத்துவது ஆகியவை நிகழ்வது பின் கற்காலம் என சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம்.
ஆல்ஃபா கனடாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. அன்று மக்கள்பேசிய மொழியை கற்பனையாக உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் பேசிய மொழியின் சில சொற்கள்தான் ஏதேனும் தொல்மொழியை உருவாக்கியிருக்கிறார்களோ என்னும் ஐயத்தை எனக்கு எழுப்பின. தந்தையை அய்யா என்று அவன் அழைக்கிறான் என தோன்றியது [அயா, ஆயா] அது முதலிலேயே கவனத்திற்கு வந்தது. அடுத்து வீட்டை மனை – மன என்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். அதுவும் மருவித்தான் ஒலித்தது. ஆனால் மூளையைச் சொடுக்கியது. படம் முடிந்ததும் இணையத்திற்குச் சென்று அந்த மொழி என்ன என்பதை பார்த்தேன்.
தொல்மொழியியலில் ஆய்வுசெய்பவரும் தொல்மொழிகளை உருவாக்குவதில் நிபுணருமான கிறிஸ்டைன் ஸ்ரெயர் [Christine Schreyer] அவரகளால் உருவாக்கப்பட்ட மொழி அது. உலகின் பல அடிப்படைத் தொல்மொழிகளில் இருந்து சொற்களையும் சொல்லிணைப்பு முறைகளையும் எடுத்துக்கொண்டு அந்த மொழியை உருவாக்கியிருக்கிறார். அதை உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ’அந்த மொழி சரியாகவும் இருக்கவேண்டும், ஆனால் வெறும் விலங்கோசையாகத் தெரியவும்கூடாது’ என தயாரிப்பாளர்கள் கோரியிருக்கிறார்கள்.
கிறிஸ்டைன் ஸ்ரெயர் பிரிட்டிஷ்க் கொலம்பியா பல்கலையில் மானுடவியலாளராக ஆய்வுப்பணி செய்பவர். குறிப்பாக அவருடைய துறை மானுடவியல்மொழியியல். முன்-நாஸ்டரிக் [Proto-Nostratic] முன் -யூராசியாட்டிக் [Proto-Eurasiatic] முன் – டேன்- காகசிய [Proto-Dené-Caucasian] மொழிகளிலிருந்து இந்த மொழியை உருவாக்கியதாக அவர் சொல்கிறார். இந்த மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமையை உருவாக்கும் சொற்களைக்கொண்டு அவற்றுக்கும் முந்தைய முன்மொழியை சற்று கற்பனை கலந்து உருவாக்கியிருக்கிறார் கிறிஸ்டைன் ஸ்ரெயர் .ஏற்கனவே சில படங்களுக்காக எதிர்காலமொழிகளை உருவாக்கியவர். ஆல்பாவின் மொழி ஏறத்தாழ ஆயிரம் சொற்கள் கொண்ட முழுமையான மொழியாகவே கிறிஸ்டைன் ஸ்ரெயரால் உருவாக்கப்பட்டது.
மொழிக்குடும்பங்கள், தொல்மொழிகள், முன்மொழிவடிவுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள தமிழ்நாட்டில் மொழியரசியல் உருவாக்கும் மிகையுணர்ச்சிகள் மற்றும் எகிறிக்குதிக்கும் ஆய்வுகளின் சூழலில் இருந்து கொஞ்சம் வெளியே செல்லவேண்டும். எந்த மொழியிலாவது ஒரு தமிழ்ச்சொல் அல்லது தமிழ்போன்ற சொல் செவியில் விழுந்தால் உடனே அந்த மொழி தமிழிலிருந்து சென்றது என்றும் தமிழே உலகின் முதல்மொழி என்றும் கூச்சலிடத் தொடங்கும் அறிவியல்மறுப்பு நோக்கும் அதை உருவாக்கும் தாழ்வுணர்ச்சியும் நம்மிடம் இருந்தால் நம்மால் எதையும் அறிய இயலாது.
தொல்மொழி [ancient language] என்பது நெடுங்காலமாக ஒரே இலக்கணக் கட்டமைப்புடனும் ஒரே சொற்களஞ்சியத்துடனும் திகழும் மொழி. தமிழ் ஒரு தொல்மொழி. அவ்வாறு பல தொல்மொழிகள் உள்ளன. இந்தியமொழிகளில் சம்ஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகியவை தொல்மொழிகள். கிரேக்கமொழி, லத்தீன்மொழி, ஹீப்ரு மொழி என நாம் அறிந்த பல தொல்மொழிகள் உலகில் உண்டு. தொல்மொழி ஒன்று பேச்சுமொழியாக, வாழ்மொழியாக இருப்பது அரிது. அவ்வகையில் தமிழைப்பற்றி நாம் பெருமிதம்கொள்வது மிக இயல்பானதே. அந்தப்பெருமிதத்தை அசட்டுத்தனமாக மாற்றிக்கொள்ளாதவரை.
தொல்மொழிகள் தொல்லியல்சான்றுகள், இலக்கியச்சான்றுகள் வழியாக தொன்மை நிறுவப்பட்டவை. ஆனால் அவ்வாறு தொன்மைநிறுவப்பட்டிருப்பதனால் அவை மட்டுமே தொன்மையானவை என பொருள் இல்லை.பெரும்பாலும் எல்லா மொழிகளுமே வெவ்வேறு வளர்ச்சிப் படிநிலைகளில் வரலாற்றின் தொடக்கம் முதலே இருந்துகொண்டிருப்பவைதான். அதாவது அவற்றின் அடிப்படைச் சொற்கள் என்றுமுள்ளவை. அவை சிறுகுழுவால் பேசப்பட்டிருக்கும். மிக எளிய பழங்குடி மொழிகூட பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைகொண்டதே. ஆகவே எது முதல்மொழி என்ற கேள்வி போல பொருளில்லாத பிறிதில்லை.
தொல்பழங்காலத்திலேயே இலக்கணம், இலக்கியங்கள் உருவான மொழியை தொல்மொழி என்கிறோம். மற்றமொழிகள் முந்தைய காலகட்டத்தில் உரைவடிவு [dialect] என்னும் வளராவடிவில் இருந்துகொண்டிருக்கும். சில மொழிகள் தொல்மொழிகளுடன் இணைந்து வளர்ச்சி அடைகின்றன. சில மொழிகள் சில குறிப்பிட்ட சூழலில் அப்படியே நின்றுவிடுகின்றன.
எல்லா மொழிகளுமே அவற்றுக்கு முன்னாலிருந்த முன்-மொழிகளில் [proto- language] இருந்து உருவானவைதான். தமிழும் சரி, தோடர்களின் தொதுவமொழியும் சரி. தொதுவமொழி வளர்ச்சி அடையவில்லை. தமிழ் பேருருக்கொண்டு எழுந்தது. இதுவே வேறுபாடு.
முன்-மொழிகள் எளிமையான அடிப்படைச் சொற்களால் ஆனவை. இலக்கண அமைப்பு அற்றவை. இன்றைய நோக்கில் அவை மொழிகளே அல்ல. சொற்களின் தொகை, அவ்வளவுதான். முன்மொழிகள் இன்று உள்ளவை அல்ல. அவை இன்றுள்ள மொழிகளில் இருந்து ஊகித்துக்கொள்ளப்படுபவை. அவ்வாறு ஊகிப்பதற்கு மொழியியலில் நிறுவப்பட்ட முறைமைகளும் நிரூபணமுறைகளும் உண்டு.
எல்லா முன்-மொழிகளும் மேலும் தொன்மையான முன்-மொழிகளில் இருந்து உருவானவை. ஆகவே ஒற்றைநிலப்பரப்பாக இருக்கும் ஆசிய –ஐரோப்பிய கண்டத்தில் மிகமிகப் பழங்காலத்தில் ஓரிரு முன்-மொழிகளே இருந்திருக்கக்கூடும். ஆகவே இங்குள்ள மொழிகளுக்கிடையே பொதுவான சொற்கள் பல உள்ளன. பழங்குடிமொழிகளாக எஞ்சும் மொழிகளில் அந்தப்பொதுச்சொற்கள் மேலும் தெளிவாக உள்ளன.
பொதுச் சொற்களைக் கொண்டு மொழிக்குடும்பம் என்னும் கருதுகோள் உருவாக்கப்படுகிறது. இத்தகைய தொகுப்புகள் எப்போதுமே ஆய்வாளர்நடுவே விவாதநிலையில்தான் உள்ளன. உதாரணமாக நாஸ்ட்ரடிக மொழிக்குடும்பம் [Nostratic languages ]. இந்தப் பகுப்பு மிகத்தோராயமானதும் பழைமையானதுமாகும். மொழிகளின் பொதுத்தன்மைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டு இந்த தொகுப்பு செய்யப்படுகிறது. காகஸஸ் மலைப்பகுதிப் பழங்குடிகளின் கார்ட்வேலி மொழிக்குடும்பம் பல்வேறு இந்திய-ஐரோப்பிய மொழிகள், யூரலிக் மொழிக்குடும்பம் ஆகியவற்றை உள்ளடக்கி இது உருவகிக்கப்படுகிறது. இவ்வாறுதான் கிறிஸ்டைன் ஸ்ரெயர் குறிப்பிடும் பிற மொழிக்குடும்பங்களும்.
ஆசியாவிலும் ஐரோப்பாவிலுமாக பிரிந்துகிடக்கும் பலநூறு மொழிகள் இப்படி பொதுத்தன்மையின் அடிப்படையில் தொகுக்கப்படுகின்றன. அவை மேலும் பெரிய தொகுப்புக்குள் அமைக்கப்படுகிறன. இன்றைய ஐரோப்பிய மொழிகள் முன்-நாஸ்டரிகம் , முன் –யூராசியம், முன் – டேன்- காகசியம் என்னும் மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து உருவானவை.
இம்மொழிகளில் பெரும்பாலானவற்றில் அடிப்படைச் சொற்களுக்கு பொதுவான ஒலியமைப்பு உள்ளது. அந்த ஒலியமைப்பு இடத்திற்கு இடம் சிறிய மாற்றங்களை அடைகிறது. மொழிகள் ஒன்றுடன் ஒன்று உரையாடுவதனூடாக உருவாகும் பொதுத்தன்மை பிற்காலத்தையது. இம்மொழிகளின் அடிப்படையிலேயே இருக்கும் பொதுத்தன்மை அவற்றுக்கும் முந்தைய மிகத்தொல்மொழியில் இருந்து வந்தது. இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மானுட இனம் அந்தப் பொதுச்சொற்களால் ஆன ஒரு மொழியில் பேசியிருக்கலாம் என ஊகித்து, அச்சொற்களை மேலும் வளர்த்தும் மருவச்செய்தும் ஆல்ஃபாவின் மொழி உருவாக்கப்பட்டுள்ளது.
கற்பனைதான் என்றாலும் அந்த முன்-மொழி ஒரு பெரும் கிளர்ச்சியை உருவாக்குகிறது. ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் மெய்நிகர் என வடித்துவைக்கப்பட்டிருக்கும் குரங்குமூதாதையரின் சிலைகளைப் பார்க்கையில் எழும் உளஎழுச்சி அது. அவர்கள்தான் நாம். நாம் பேசும் சொல்லை அவர்களும் சொல்லியிருக்கக் கூடும். அவர்களில் ஒருவர் தந்தையை அய்யா என அழைத்திருக்கவும்கூடும்.