’சேவா’, ( Self Employed Women’s Association) என்னும் நிறுவனம், உலகின் முறை சாராப் பெண் பணியாளர்களுக்கான (employees of informal sector) மிகப் பெரும் தொழிற்சங்கம். இந்தியாவின் தொழிலாளர்களில் 92% பேர், முறை சாராத்தொழில்களில் பணிபுரிபவர்கள். இவர்கள் உரிமைகளுக்கான குரல், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் போலப் பெரிதாக எழுவதில்லை. 15 லட்சத்துக்கும் அதிகமான பெண் உறுப்பினர்களைக் கொண்டு, பெண்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். இதன் தலைமையகம் அகமதாபாத்தில் உள்ளது.
சங்கத்தின் பெண் உறுப்பினர்களுக்கு நிலையான வருமானம், அவர்கள் அடிப்படைத் தேவைகளான இருப்பிடம், மருத்துவ வசதி, குழந்தைகள் நலம் போன்றவற்றுக்காக உழைக்கிறது. தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக இருந்தால், அந்த நிறுவனத்துடன் போராடி, பேரம் பேசி, தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரலாம். ஆனால், நிறுவனம் என ஒன்று இல்லாமல், முறைசாராப் பணிகளில், சீரான வருமானம் இல்லாத பெண்களுக்கான உரிமைகளை யாரிடம் இருந்து பெற்றுத் தருவது? அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது?
இலா பட், 1933 ஆம் ஆண்டு அகமதாபத்தில் பிறந்தார். தந்தை சுமந்த்ராய் பட் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர். தாயார் வானலீலா வ்யாஸ் புகழ்பெற்ற பெண்ணியவாதி. கமலாதேவி சட்டோபாத்யாயா துவங்கிய, அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் செயலர் (All India Women’s Conference). சூரத் நகரில் பள்ளிக் கல்வி பயின்ற அவர், தனது சட்டப்படிப்பை அகமதாபாத்தில் முடித்தார். சிலகாலம், மும்பையின் எஸ்.என்.டி.டி என்னும் புகழ்பெற்ற கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அகமபாத்தில் உள்ள ஜவுளித் தொழிலாளர் கூட்டமைப்பின் (Textile Labour Association – TLA) சட்டப்பிரிவில் பணிக்குச் சேர்ந்தார்.
மோட்டா பென் (பெரிய அக்கா) என்றழைக்கப்பட்ட அனுசூயா சாராபாய், புகழ்பெற்ற குஜராத்தித் தொழிலதிபர் அம்பாலால் சாராபாயின் சகோதரி. குழந்தைத் திருமணம் செய்யப்பட்டு விதவையான அவர், பின் தன் சகோதரர் அம்பாலால் சாராபாயின் உதவியோடு, லண்டனில் மருத்துவம் பயிலச் சென்றார். படிப்புக்காக விலங்குகளை அறுப்பது, அவரது சமண மத வழிகளுக்கு முரணாக இருந்ததால், அதை விடுத்து, லண்டன் பொருளாதாரப்பள்ளியில் (London School of Economics) பொருளாதாரம் பயின்றார். ஜனநாயக சோஷலிஸத்தை முன்னெடுத்த ஃபேபியன் குழுவின் அனுதாபி. பெண் வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்த சஃப்ரகெட் இயக்கத்தில் (Suffragette Movement) பங்கெடுத்தவர். 1913 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் உழைக்கத் துவங்கினார். 36 மணி நேர ஷிஃப்டுகளில் பெண்கள் உழைக்க நேர்ந்த அவலத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். ஜவுளித் தொழிலாளர்களின் நலன்களுக்காக உழைத்தார்.
1918 ஆம் ஆண்டு, தொழிலாளர் ஊதிய உயர்வுக்காக, ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கினார் மோட்டா பென். தொழிலாளர்கள் 50% ஊதிய உயர்வு கேட்டுப் போராடினார்கள். ஆலை முதலாளிகள் (அம்பாலால் சாராபாய் உள்பட) 20% சதம் வரை கொடுக்க முன்வந்தார்கள். காந்தி தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்து, உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளில், இரு தரப்பாருக்கும் இடையில் நடுவராக இருந்து, 35% ஊதிய உயர்வு என்னும் முடிவை எட்ட உதவினார். காந்தி அம்பாலால் சாராபாயின் குடும்ப நண்பரும் வழிகாட்டியுமாவார். இந்தப் போராட்ட்த்தின் விளைவாக அகமதாபாத் ஜவுளித் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (Ahmedabad Textile Labour Association – ATLA) என்னும் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது.
மோட்டா பென்னின் வழிகாட்டுதலில், ஜவுளித் தொழிலாளர் கூட்டமைப்பில், 1955 ஆம் ஆண்டு முதல் TLA வின் சட்டப்பிரிவில், பணியாற்றத்துவங்கினார் இலா பட். 1968 ஆம் ஆண்டு, இந்தக் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவுக்கு தலைமை தாங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில், ஆஃப்ரிக்க – ஆசிய தொழிலாளர், கூட்டுறவு நிலையத்தில் மூன்று மாத காலப்பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். இந்தியா திரும்பிய பின், பெண் ஊழியர்களின் நலன்களை முன்னெடுத்து உழைக்கத் துவங்கினார். நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை விட, வெளியுலகில், வருமானத்துக்காக சிறு தொழில் புரியும் பெண்களின் நிலை மிக மோசமாக இருந்ததை அவர் கவனித்தார். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதுவுமே நிச்சயமில்லாத அவல நிலை அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.
ஜவுளித் தொழிலாளர் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் கீழ், முறைசாராத் துறையில் இருக்கும் பெண் பணியாளர்களுக்கான ஒரு பிரிவை முதலில் துவக்கினார். பின்னர், இது, 1972 ஆம் ஆண்டு, ‘சேவா” (Self Employed Women’s Association – SEWA) என்னும் தனி நிறுவனமாக மலர்ந்தது.
குறுந்தொழில், அல்லது முறைசாராத் துறைகளில் பணிபுரிபவர்கள், இந்தியாவின் மொத்தத் தொழிலாளர்களில் 92% ஆகும். இவர்கள் ஊரக சமுகத்தின் விளிம்புகளிலும், நகர்ப்புரங்களின் சேரிகளிலும் பெரும்பாலும் வசிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் என அனைத்து சாதி வேற்றுமைகளையும் கடந்து, இவர்களுக்கிருக்கும் ஒரே ஒற்றுமை ஏழ்மை. ‘சேவா’, ஒரு சராசரி தொழிற்சங்கம் என்பதைத் தாண்டி, இவர்களை ஒரே சமூகமாக ஒருங்கிணைக்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.
’சேவா’ வின் முக்கியக் குறிக்கோள், மகளிருக்கு, வேலை, வருமானம், உணவு, சமூகம் என நான்கு தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். சமூக நலத்தில், வீடு, உடல் நலம், குழந்தைகள் நலம் ஆகியவையும் அடங்கும். இந்தத் தளங்களில், மகளிர் தனியாகவோ, குழுவாகவோ, தற்சார்பை எய்தி, தங்கள் வருங்காலத்தைத் தாங்களே முடிவுசெய்யும் சுதந்திரத்தையே ‘சேவா’, பாதுகாப்பு என வரையறுக்கிறது. காந்திய வழிகளான, வாய்மை, அகிம்சை, சர்வதர்ம சமத்துவம் மற்றும் சிறு தொழில்கள் மூலம் சமூக மாற்றத்தை அடைவதே, ‘சேவா’வின் வழி.
தொழிலாளர் இயக்கம், கூட்டுறவு இயக்கம், பெண்ணிய இயக்கம் ஆகிய மூன்றின் கலவையான ‘சேவா’, ஒரே சமயத்தில், ஒரு நிறுவனமாகவும், இயக்கமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒரு தனி முனைப்பாகும். குறும் தொழில் செய்யும் மகளிரையும், முறைசாரா மகளிர் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து, அவர்களுக்கு, சமூக இருப்பையும் வலிமையையும் அளிக்க ‘சேவா’ முயல்கிறது. உலகமயமாதலால், மரபான கைத்தொழில்கள் நசித்துப் போகையில், புது வழிகளை உருவாக்கி, பாதிக்கப்படும் மகளிருக்கு மறுவாழ்வு அளிப்பதையும் முக்கிய நோக்கமாக்கிச் செயல்படுகிறது.
1971 ஆம் ஆண்டு, ஜவுளிச் சந்தையில் வண்டியிழுக்கும் பெண் தொழிலாளர்கள் தங்கள் ஒப்பந்தக்காரர்கள் மூலம் இலாவை அணுகினார்கள். அவர்கள் வெளியூரில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். ஆதலால், அவர்களுக்கு தங்க இடமின்றி சிரமத்துக்குள்ளானார்கள். அது இலாவை பாதிக்க, ஜவுளிச் சந்தையில் உழைக்கும் பெண்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள, களத்தில் இறங்கினார். அங்கே கூடுதலாக இன்னொரு குழுவின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள நேரிட்டது. அவர்கள் ஜவுளிப் பொருட்களை தலைச்சுமையாய்ச் சுமக்கும் பெண் தொழிலாளர்கள். அவர்கள் வணிகர்களிடம் சந்திக்கும் பிரச்சினைகளை முற்றிலுமாக அறிந்து, உள்ளூர்ச் செய்தித்தாளில் ஒரு கட்டுரையாக எழுதினார். அது பெரும் சலசலப்பை உருவாக்கியது. உள்ளூர் வணிகர்கள், தலைச்சுமைப் பணியாளர்கள் பற்றி இலா எழுதிய கட்டுரையை மறுத்து செய்தித்தாள்களில் கட்டுரை எழுதினார்கள். பிரச்சினை பெரிதாக, வணிகர்களும், தொழிலாளர்களும் பங்கு கொள்ளும் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் ஒரு பெண் எழுந்து, தங்கள் பிரச்சினைகளை முறையீடு செய்ய, தீர்க்க, ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என ஒரு ஆலோசனை சொன்னார். அந்த ஆலோசனையின் விளைவாக, ‘சேவா’ உருவானது.
பெண் தொழிலாளர்கள், இதை ஒரு தொழிற்சங்கமாக பதிவுசெய்யப்பட வேண்டும் என விரும்பினார்கள். அதைக் கேட்ட அரசின் தொழிலாளர் துறை திகைத்தது. சேவாவின் உறுப்பினர்கள் பெரும்பாலும் முறைசாராத் தொழிலாளர்கள். பலர் சொந்தமாகச் சிறுதொழில் செய்பவர்கள். அவர்களுக்கு வேலை தரும் நிறுவனம் என ஒன்றும் கிடையாது. அவர்கள் உரிமைகளை யாரிடம் பெறுவார்கள் என்னும் தெளிவு இல்லாத நிலையில், சேவா வை ஒரு தொழிற்சங்கமாக அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இது தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நிறுவனம் எனவே இது ஒரு தொழிற்சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டும் சேவா விடாமல் வாதிட்டு, பதிவு செய்தது.
சேவாவில், தற்சார்புப் பெண் தொழிலாளர்கள், குறுந்தொழில் செய்பவர்கள் என எவரும் உறுப்பினராகலாம். வருடச் சந்தா, ஐந்து ரூபாய். இப்படிச் சேரும் உறுப்பினர்கள் தொழில்வாரியாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும், நூற்றுக்கு ஒருவர் என்னும் வீதத்தில் தேர்ந்துடுக்கப்பட்டு ஒரு மேல்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஒவ்வொரு தொழிலுக்கும், அந்தத் தொழிலின் தினசரிப் பிரச்சினைகளைத் தீர்க்க 15-20 பேருக்கு ஒருவர் என்னும் வீதத்தில், ஒரு தொழிற் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த உறுப்பினர்களை, பொதுவாக நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள்:
- தெருமுனை / குறு வணிகர்கள்: காய்கறி, முட்டை, மீன், இறைச்சி, வீட்டுப் பொருட்கள், துணிகள் போன்ற பொருட்களை விற்பவர்கள்
- வீட்டில் இருந்து உழைப்பவர்கள்: நெசவாளிகள், குயவர்கள், பீடி / அகர்பத்தி சுற்றுபவர்கள், அப்பளம் செய்பவர்கள், ஆயத்த ஆடை தைப்பவர்கள், கைவினைப் பொருட்கள் செய்பவர்கள் போன்றவர்கள்
- உடல் உழைப்பாளிகள்: வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஒப்பந்த்த் தொழிலாளர்கள், கைவண்டி இழுப்பவர்கள், தலைச்சுமை சுமப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்றவர்கள்
- சேவை மற்றும் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள்: உழவர்கள், மாடு மேய்ப்பவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், சிறு அளவில் உணவு தயாரித்து விற்பவர்கள் போன்றவர்கள்.
சேவா வங்கி:
தனது குறிக்கோள்களை நிறைவேற்ற உதவும் ஒரு முக்கிய நிறுவனமாக, ஒரு குறு வங்கியை உருவாக்கியது சேவா. 1974 ஆம் ஆண்டு, 15 உறுப்பினர்கள் இணைந்து, ‘சேவா வங்கி;, என்னும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியைத் துவங்கினார்கள். 4000 பெண் உறுப்பினர்கள், ஆளுக்கு 10 ரூபாய் என்னும் பங்க்கீட்டுத் தொகையை அளித்தார்கள். நடைபாதைக் கடை, தள்ளு வண்டி வணிகம் செய்யும் பெண்கள், போன்ற குறும் தொழில் செய்பவர்கள், தங்களுக்கான நிதியைப் பெரும்பாலும் உள்ளூர் கந்து வட்டிக் கார்ர்களிடம் இருந்து வாங்கி வந்தார்கள். கடனைத் திரும்பச் செலுத்தவே முடியாத அளவு அதீத வட்டி விகிதம், அவர்களைக் கந்து வட்டிக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீளவே முடியாத சூழலை உருவாக்கியிருந்தது. பெரிய வங்கிகளோ, இது போன்ற குறுந்தொழில் கடன்களை வழங்க முன்வரவில்லை. இவையெல்லாம் போக, மிக ஏழை மக்கள் கூட, தங்கள் சொற்ப வருமானத்தில் இரு சிறு பகுதியைச் சேமிக்க விரும்பினால், அதற்கான பாதுகாப்பான ஒரு இடமோ நிறுவனமோ இல்லை.
சேவா வங்கி, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்னெடுக்கத் துவங்கியது. வழக்கமான வங்கிச் செயல்பாடுகள் போலில்லாமல், வேறு வழிகளைக் கையாண்டது. தனது நுகர்வோருக்குக் கடன் அளிப்பதற்காக, வங்கித் தோழி (Banksaathi) என்னும் முதல் நிலைப் பெண் பணியாளர்களை நியமித்தது. இவர்கள் பெரும்பாலும், எந்தப் பகுதியில் கடன் கொடுக்க வேண்டுமோ, அந்தப் பகுதியைச் சார்ந்த மக்களில் ஒருவராக இருப்பார்கள். மற்ற பெண் உறுப்பினர்களிடையே செல்வாக்குப் பெற்றவராகவும், தலைமைப் பண்புகள் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பது கூடுதல் தகுதிகள். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் வங்கித் தோழி, கொஞ்சம் பண வசதி உள்ளவராகவும் இருத்தல் அவசியம். ஒரு வங்கி ஊழியர், இது போன்ற பல வங்கித் தோழிகளை நிர்வகிப்பார்கள். இவர்கள், வங்கியில், 15000 காப்புத் தொகையாகக் கட்ட வேண்டும். வங்கித் தோழி, கிட்டத்தட்ட 300-400 பெண் உறுப்பினர்களுக்குச் சேவை செய்வார். கடன் தேவைப்படும் பெண்களை இவர் அணுகி, அவர்களது பிண்ணணியை முழுமையாக ஆய்வு செய்வார். அவர் குடும்பம், குழந்தைகள், வருமானத்தின் நிலையின்மை, கணவரின் குண நலன்கள் (குடிப்பழக்கம் உள்ளவரா என்பது போன்ற) முதலியவற்றை ஆய்வு செய்து, அவருக்கு அளிக்க வேண்டிய கடன் அளவைப் பரிந்துரை செய்வார்.
அந்தப் பரிந்துரை, வங்கித் தோழியின் உயர் அதிகாரியாகிய அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும். அவர், பரிந்துரைகளை மேலும் ஆராய்ந்து, கடனை வழங்கும் முடிவை எடுப்பார். முடிவை எடுத்த பின்பு, கடன் பயனாளியை நேரில் சந்தித்து, கடன் வாங்கும் முறை, கட்ட வேண்டிய தவணைகள், குறித்த கெடுவுக்குள் கட்டாவிட்டால் செலுத்த வேண்டிய அபராத்த் தொகை போன்றவற்றை மிகத் தெளிவாக, எளிமையாக விளக்கிவிடுவார்கள். அது தெளிவாகப் புரிந்த்து என்பதை உறுதி செய்த பின்பே, கடன் வழங்கப்படும். வழங்கப்படும் கடன் தொகையில் 3% வங்கித் தோழியின் சேவைக்கான ஊதியமாக வழங்கப்படுகிறது. அதே போல், உறுப்பினர்களின் சேமிப்புத் தொகையில் 1% வங்கித் தோழிக்கான ஊதியம். இது தவிர, வீடு கட்டுதல், திருமணம் போன்றவற்றிற்கும் கடனளிக்கும் திட்டங்களை சேவா அளிக்கிறது.
2016-17 ஆம் ஆண்டு இறுதியில், 4.71 லட்சம் பங்குதாரர்களைக் கொண்ட இந்த வங்கியில், 243 கோடிப் பணம் சேமிப்பாக உள்ளது. 143 கோடி கடன் வழங்கப்பட்டு, வங்கி, 3.6 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. இந்தச் சாதனைக்காக, இலா பென் பட், எக்கானாமிக் டைம்ஸ் வழங்கிய, ‘சிறந்த தொழிலதிபர்’, விருதைப் பெற்றிருக்கிறார்.
சேவா வங்கி, ஏழைகளுக்கான தேசிய ஓய்வுத் திட்டத்தையும் நடத்தி வருகிறது. இதில் 40000 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதன் மூலம், மிக எளிதாக சேமிக்கவும், அரசு மானியத்தைப் பெறவும் முடிகிறது. இது ஏழைகளின் முதிய வயதில், ஒரு குறைந்த பட்ச பொருளாதாரப் பாதுகாப்புக்கு உதவுகிறது.
’சேவா வங்கி’, மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆராய்ந்த கென்னடி நிர்வாகப்பள்ளி, சேவா வங்கியின் பயனாளிகளின் நேர்மறைப் பொருளாதார மேம்பாடுகளைப் பதிவு செய்திருக்கிறது. சேவா தொழிற்சங்கத்தின் முயற்சியால், உறுப்பினர்கள், அரசு திட்டங்களை மிக எளிதில் அணுகிப் பெறவும் முடிந்திருக்கிறது. பிள்ளைகள் படிப்புக்கான நிதி உதவி, குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டம் போன்ற அரசு திட்டங்கள், மற்ற மக்களை விட, சேவா உறுப்பினர்களுக்கு மிக அதிக அளவில், எளிதாகக் கிடைத்திருக்கிறது. அதே போல, சேவா, பல தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதில், பீடித் தொழிலாளர்களுக்கான ஒப்பந்த விலை, தலைச் சுமைத் தொழிலாளர்களுக்கான கூலி போன்றவை உயர்ந்திருக்கின்றன என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு, உலகத் தொழிலாளர் நிறுவனம் (International Labour Organisation), முறைசாரா நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களை முன்னெடுக்க முடிவெடுத்தது. அந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான உரிமைகள், விதிகள் போன்றவற்றை வரையறுக்கும் பணிகளில், ‘சேவா’, ஒரு முக்கியப் பங்களிப்பைச் செய்திருக்கிறது.
இது தவிர, அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கையில், தொழிலாளர்கள் நலன்கள் பாதிப்பதை எதிர்த்தும் குரல் கொடுக்கிறது. சாலை வரியாக மத்திய அரசு வாங்கும் நிதியில், கட்டிடத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் கொடுக்கவும், பேப்பர் மற்றும் பளாஸ்டிக் கழிவுகளைப் பொறுக்கும் தொழிலாளர்களை, நகரங்களின் திடக்கழிவு நிலையங்களில் பணிக்கு உபயோகிக்கவும் குரல் கொடுத்து வருகிறது.
அகமதாபாத்தில் துவங்கிய சேவா, இன்று உத்திரப்பிரதேசம், பிஹார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, கேரளம், ஜம்மு கஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரவியிருக்கிறது. சேவாவின் 45% உறுப்பினர்கள் இன்று இந்த மாநிலங்களில் வசிக்கிறார்கள். இந்த மாநிலங்களில், சேவா, உள்ளூர் நிலையை உணர்ந்து அதற்கேற்ப, தன் திட்டங்களை வகுக்கிறது. எடுத்துக்காட்டாக, பீஹாரில், உணவு பதப்படுத்துதலில் மகளிருக்கான பயிற்சியை மேற்கொள்ளும் சேவா, ராஜஸ்தானில், மகளிருக்கான கணிணிப் பயிற்சியை அளிக்கிறது.
மொத்தத்தில், முறைசாராத் தொழில்களில் பணிபுரியும் மகளிரை ஒன்றிணைத்து, உள்ளூரில் அவர்கள் செய்யும் தொழிலுக்கு உதவி செய்து, குறைந்த பட்ச விலைகளை / கூலியை அந்த ஒன்றிணைப்பின் மூலம் கிடைக்கும் வலிமையினால் பெற்றுத் தருகிறது. முறைசாராத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகள் / குறுந்தொழில் செய்பவர்கள் போன்றவர்களின், குறிப்பாகப் பெண்களின் சமூகப் பொருளாதார நிலை, மிகக் கீழான நிலையில் உள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் ஏற்றத் தாழ்வுகள் இவர்களைத்தான் முதலில் பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, குஜராத்தின் ஆலங் என்னும் ஊரில், பழைய கப்பல்களை உடைக்கும் தொழில் பெருமளவில் நடந்து வருகிறது. அங்கே ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அதில் 40% பெண்கள். 2015 ஆம் ஆண்டு, அந்தத் தொழில் சரிய, தொழிலாளர்கள் தெருவில் நிற்க வேண்டிய அவலம் நிகழ்ந்தது. சேவா உடனே விரைந்து, அங்கே வேலையின்றி நின்ற பெண்களுக்கு, சுயதொழில் பயிற்சி கொடுத்து, மாற்று வழிகளை முன்னெடுத்தது.
85 வயதாகும் இலா பட், தற்போது அகமதாபாத்தில் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பத்மவிபூஷன், ரமான் மகசேசே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம், இந்திரா காந்தி விருது போன்ற பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு, நெல்சன் மண்டேலா, ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு இணைந்து, “பெரியவர்கள் (The elders) என்னும் அமைப்பைத் துவங்கினார்கள். இந்தக் குழு, உலகில் நிகழும் எந்தப் பிரச்சினைக்கும் அச்சமின்றிக் குரல் கொடுக்கும் மனசாட்சியாக விளங்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு துவங்கப்பட்டது. உலகின் பெருந்தலைவர்கள் பலரும் (ஜிம்மி கார்ட்டர், கோஃபி அன்னான் போன்றவர்கள்) இருக்கும் இந்தக் குழுவில் இலா பட்டும் ஒருவர். உலகின் துயரம் நிகழும் இடங்களுக்கு இந்தக் குழு சென்று, அதைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது
பொருளாதார நிலையின்மைதான் முறைசாராத் தொழிலாளர் வாழ்வின் மாறாத ஒரே அம்சம். இவர்களுக்காக குரல் கொடுக்க ஊடகங்கள், பத்திரிகைகள், அரசு நிர்வாகம் என எவரும் முன் வருவதில்லை. கிட்டத் தட்ட 25-30 கோடிப் பெண்கள் இப்படி வாழ்கிறார்கள். இவர்களில் 16 லட்சம் பேரைத்தான் சேவா இதுவரை தொட்டிருக்கிறது. அவர்கள் வாழ்க்கை நிலை சரிந்து விடாமல் நிற்க உதவியிருக்கிறது. எனில், இத்திசையில் சமுகமும், சேவாவும் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
. http://www.sewa.org/