சுப்ரதர் மீண்டும் சாலைக்கு வந்தபோது கொம்பொலியை கேட்டார். முதற்கணம் அது ஏதோ காட்டுப்பறவையின் குரலெனத் தோன்றியது. பின்னர் அது கொம்பொலி எனத் தெளிந்ததும் அவர் உள்ளம் துடிப்புகொண்டது. சம்பாபுரியின் கொம்பொலி. அதை ஊதுபவனையே அவர் அருகிலென உள்ளத்தால் கண்டார். மூச்சிரைக்க ஓடி பாதைமுகப்புக்குச் சென்று நின்றார். மிக அப்பால் அசைவுகள் தெரிந்தன. இருண்ட நீருக்குள் மீன்கள் என. கொம்போசை மீண்டும் எழுந்தது. “சம்பாபுரியின் அரசியும் இளவரசரும் வருகை!” என அறிவித்தது.
சம்பாபுரியின் கொம்பூதி முதலில் வந்தான். அவனைத் தொடர்ந்து மூன்று புரவிகள் அம்பு வடிவில் வந்தன. ஒருவன் சம்பாபுரியின் கொடியை ஏந்தியிருந்தான். கொம்பூதி கொம்பை முழக்கி அரசியின் வருகையை அறிவித்தான். சுப்ரதர் சாலைவிளிம்பில் நின்ற பலாமரத்தின் அடியில் கைகளைக் கட்டியபடி நின்றார். காற்றில் அவருடைய ஆடை படபடத்துக்கொண்டிருந்தது. புரவிக்காவலர்கள் பன்னிருவர் இரண்டு வரிசைகளாக வந்தனர். முகப்பில் வந்தவர்கள் வில்லேந்தியிருந்தனர். பின்னர் வந்தவர்கள் வேல் வைத்திருந்தனர். அவர்கள் அணுகி வந்து விரைவழிய அவர்கள் செல்லவேண்டிய வழியை சுப்ரதர் சுட்டிக்காட்டினார். அவர்கள் சென்று காட்டுக்குள் வளைந்து நின்றனர். நெடுந்தொலைவு ஓடிய புரவிகள் நுரை உமிழ்ந்து நீள்மூச்செறிந்தன. கால்களை தூக்கி வைத்து முன்னும் பின்னுமாக உடலை ஊசலாட்டின.
தேர் தெரியத்தொடங்கியது. காட்டின் சிறிய மேட்டில் ஏற புரவிகள் சற்று மூச்சிளைத்தன. தலைதாழ்த்தி உடலை உந்தி இழுத்தன. அவை நெடுந்தொலைவு நில்லாமல் வந்திருக்கவேண்டும். சுப்ரதர் “ஏன் இத்தனை பிந்தினீர்கள்?” என்றார். காவலர்தலைவன் “வரும் வழியிலேயே புரவிகளுக்கும் படைகளுக்கும் நீரும் உணவும் பெற்றுக்கொள்ளலாம் என எண்ணினோம். ஆனால் ஊர்களில் எங்குமே எவரும் இல்லை. கங்கையை கடந்த பின்னர் ஒரு ஊரில்கூட குடிகளை நாங்கள் பார்க்கவில்லை” என்றான். சுப்ரதர் திகைப்புடன் “ஏன்?” என்றார். “அத்தனைபேரும் ஊர்களை விட்டுச் சென்றுவிட்டிருக்கிறார்கள். நாங்கள் பார்த்தவை எல்லாம் ஒழிந்த இல்லங்களை மட்டுமே.”
“எங்கு சென்றார்கள்?” என்று திகைப்புடன் சுப்ரதர் கேட்டார். “வழியில் ஒரு மலைவணிகனை பார்த்தோம். நிஷாத குலத்தவன். அவன் குடிகள் காடுகளில் வாழ்பவர்கள். அவர்களும் கிளம்பிச் சென்றுவிட்டிருக்கிறார்கள்” என்று காவலர்தலைவன் சொன்னான். “போர் தொடங்கிய பின்னர் இரு தரப்புப் படைவீரர்களும் ஊர்களுக்குள் சென்று உணவுப்பொருட்களையும் பிற பொருட்களையும் வாங்கியிருக்கிறார்கள். முதலில் பணம் கொடுத்தார்கள். பின்னர் அவர்களே எடுத்துக்கொண்டார்கள். விலங்குகளை பிடித்துக்கொண்டு சென்றனர். இளைஞர்களையும் பிடித்துக்கொண்டு செல்லத் தொடங்கியதும் மக்கள் இரவோடு இரவாக கிளம்பி கங்கையைக் கடந்து வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களை கங்கை எல்லைவரைக்கும் துரத்திச்சென்றிருக்கிறார்கள் படையினர். அவர்கள் வழியுணவுக்கெனக் கொண்டுபோன பொருட்களும், கூட்டிச்சென்ற கால்நடைகளும்கூட பறிக்கப்பட்டன.”
தேர் அணுகி நின்றது. படைத்தலைவன் புரவியில் அணுகி வந்து சுப்ரதரிடம் “உத்தமரே, அரசியும் இளவரசரும் சிற்றமைச்சரும் வந்துள்ளார்கள்…” என்றான். “இங்கே வாழ்த்துரைக்கு நெறி இல்லை” என்றார் சுப்ரதர். “தெரியும்” என அவன் சிறுசினத்துடன் சொன்னான். “நான் சொல்லவந்தது வேறு. எவரும் நெடும்பொழுதாக எதுவும் உண்ணவில்லை. வழியில் கனிகளும் கிழங்குகளும்கூட கிடைக்கவில்லை. காடு குரங்குகளாலும் கரடிகளாலும் சூறையாடப்பட்டதுபோல் முற்றாக ஒழிந்துகிடக்கிறது. காட்டுச்சுனைகளில் முழுக்க அம்புபட்ட பறவைகள் விழுந்து உடலழுகி நீரை நாற்றமடிக்கச் செய்துள்ளன. இளவரசருக்கு மட்டுமாவது சற்று உணவு அளிக்கப்பட்டால் நன்று.” சுப்ரதர் தானும் எரிச்சல்கொண்டு “அதற்கு நீங்கள் நேரடியாக இங்கே வந்திருக்கக் கூடாது… இங்கே உணவு ஏதும் இல்லை” என்றார். பின்னர் கசப்புடன் “உண்மையை சொல்வதென்றால் இப்போது அங்கு களத்திலும் உணவு என ஏதுமில்லை” என்றார். அவன் “நேராக இங்கே வரும்படி அரசியின் ஆணை” என்றான்.
தேரிலிருந்து அணுக்கப்பெண்டு கையில் ஒரு ஆமாடப் பேழையுடன் இறங்கி நின்றாள். தொடர்ந்து வெண்ணிற நீளாடையை மட்டும் அணிந்திருந்த விருஷாலி இறங்கி தன் சரிந்த மேலாடையை எடுத்து தலைவழியாக சுற்றிமுகத்தை முற்றாக மறைத்துக்கொண்டாள். தலைகுனிந்து அவள் நிற்க அணுக்கப்பெண்டு ஏதோ சொன்னாள். இருவரும் சுப்ரதரை நோக்கி வந்தனர். அதற்குப் பின்னால் வந்து நின்ற தேரிலிருந்து சிவதர் இறங்கி சூழ நோக்கியபின் மேலாடையை வீசிச் சுழற்றி தோளில் அணிந்துகொண்டு தேரிலிருந்து பிரசேனன் இறங்குவதற்காக காத்து நின்றார். பிரசேனன் இறங்கி நின்று சுற்றும் நோக்கினான். அவன் துயருற்றிருந்ததாகத் தெரியவில்லை. துயரை ஓர் இரவு முழுக்க நீட்டிப்பது கடினம். அவன் துயில்கொண்டிருக்கக்கூடும். எண்ணங்கள் மழுங்கிவிட்டிருக்கும். புதிய காலையை எதிர்கொள்பவனைப்போல் தோன்றினான்.
சிவதர் சுப்ரதரை பார்த்துவிட்டிருந்தார். அவர்கள் அவரை நோக்கி வந்தனர். அவர்களுக்கு முன்னால் வந்த விருஷாலியும் அணுக்கப்பெண்டும் அவர் அருகே வந்து நின்றார்கள். சுப்ரதர் சொல்லின்றி தலைவணங்கினார். அணுக்கப்பெண்டு விழிகளால் சுட்டி “அங்கேதானா?” என்றாள். சுப்ரதர் “ஆம்” என்றார். சிவதரும் பிரசேனனும் அருகே வந்தனர். சுப்ரதர் அவர்களுக்கு தலைவணங்கி விருஷாலியிடம் “வருக, அரசி!” என்றபின் நடக்க அவர்கள் தொடர்ந்து சென்றார்கள். விருஷாலி ஒரு வெண்நிழல் என வந்தாள். அவள் காலடியின் ஓசைகூட எழவில்லை. காடு முன்காலைக் குளிரில் விறைப்படைந்து நின்றிருந்தது. குருக்ஷேத்ரத்தில் எரிந்த பெருஞ்சிதை அணைந்து சூழ்ந்த புகையை புலரிக்காற்று அள்ளி காட்டுமரங்கள்மேல் பரப்பியது. காலையில் காட்டின் அத்தனை இலைகள்மீதும் கரிப்படலம் இருக்கும். மலர்கள்கூட கரியணிந்திருக்கும். பனித்துளிகள் கருங்குருதி என சொட்டும். அன்னங்களும் நாரைகளும்கூட கருமைகொண்டிருக்கும்.
அரசகுடியினருக்கான இடுகாட்டில் சுபாகுவும் பிற அரசகுருதியினரும் விண்ணடைய சிதையெரிகள் அணைந்து கனல்கொண்டுவிட்டிருந்தன. அங்கிருந்து சிதைக்காவலர்கள் கிளம்பிச்சென்று சாலைகளில் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். சுப்ரதர் ஓர் ஏவலனை அழைத்து “முதற்காவல்மாடத்தில் இருப்பவர்களிடம் சென்று சொல்க! இங்கே எரியம்பு எழுந்ததும் புகழ்முரசுகள் முழக்கப்படவேண்டும்” என்றார். அவன் தலைவணங்கினான். காவல்கோபுரங்கள் எரிந்து அணைய ஒன்றிரண்டே எஞ்சியிருந்தன. அவற்றிலிருந்து முரசுகள் ஒலித்தன. அவர் ஒரு காவல்மாடத்தில் அமர்ந்திருக்கும் பேருடலனான அரக்கர்மைந்தனை நினைவுகூர்ந்தார். அவன் அந்தப் போரை ஆயிரம்கோடி மயிர்க்கால்களால் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.
கர்ணனின் சிதை ஒருக்கப்பட்டிருந்த இடத்தில் வைதிகர் சடங்குகளை தொடங்கிவிட்டிருந்தார்கள். தொலைவிலேயே அதைக் கண்ட சுப்ரதர் சுட்டிக்காட்டி “அங்கே” என்றார். “இன்னும் பொழுதில்லை. முதல் கதிர் எழுகையில் என நற்பொழுது குறித்திருக்கிறார்கள்.” சிவதர் “ஆனால் இன்னும் கருக்கிருளே இருக்கிறது” என்றார். “ஆம், ஆனால் கணியர் இன்னும் அரைநாழிகையே உள்ளது என்கிறார்” என்றார் சுப்ரதர். “நாம் கதிரொளிக்காக காத்திருப்பதா அன்றி நூல்கணிப்பையே காலை என ஏற்பதா எனத் தெரியவில்லை. வைதிகர்கள் சில மாற்றுச்சடங்குகளையும் சொன்னார்கள்” என்றார். சிவதர் அதை போதிய அளவில் உளம்கொள்ளாமல் “தெய்வங்கள் முடிவெடுக்கட்டும்” என்றார். சிதையை நிமிர்ந்து நோக்கிக்கொண்டு நின்றார். அவர் முகம் கனிவான ஏதோ நினைவில் இருப்பதுபோல் இருந்தது. பின்னர் “இத்தனை உயரமாக இருக்குமா?” என்றார். சுப்ரதர் “இவற்றுக்கு ஓர் அமைப்பு உள்ளது. இது முடிசூடிய அரசரின் சிதை” என்றார்.
வைதிகர்தலைவர் வந்தார். சிவதர் தலைவணங்க விருஷாலி அப்பால் நின்றாள். வைதிகர் “அரசி இங்கு வருவதைப்பற்றி சொன்னார்கள்” என்றார். அரசியை நோக்கிவிட்டு “பெண்டிர் சுடலைக்காட்டுக்கு வரும் வழக்கம் இல்லை” என மேலும் தயங்கினார். சுப்ரதர் “தாங்கள் பணிகளை நோக்குக, வைதிகரே! நான் வந்து விளக்குகிறேன்” என்றபின் அணுக்கப்பெண்டிடம் “அரசியும் இளவரசரும் அங்கே மரநிழலில் காத்திருக்கட்டும்…” என்றார். அவள் தலையசைத்தாள். சுப்ரதர் சிவதரிடம் “தங்களிடம் பேசவேண்டும், சிவதரே” என்றார். சிவதர் “ஆம்” என்றபின் பிரசேனனிடம் “அன்னையுடன் சென்று அமர்ந்துகொள்க, இளவரசே!” என்றார். பிரசேனன் தலையசைத்தான். அவன் அங்கு உயர்ந்து நின்ற சிதை என்னவென்று புரிந்துகொள்ளவில்லை எனத் தெரிந்தது. அப்பால் சூதர்களின் பாடல் கேட்டுக்கொண்டிருப்பதும் அவனுக்கு பொருளாகவில்லை. அணுக்கப்பெண்டு அவனை அழைத்துக்கொண்டாள். விருஷாலியும் பிரசேனனும் அவளுடன் செல்ல அவர்கள் ஓர் அத்திமரத்தடியில் சென்று அமர்ந்தனர்.
சுப்ரதர் சிவதரை அழைத்துக்கொண்டு அப்பால் சென்றார். சிவதர் அவர் பேசப்போவதைப்பற்றி ஆர்வம்கொண்டதாகத் தெரியவில்லை. அவர் திரும்பி சிதையை நோக்கியபடி வந்தார். இருமுறை வேரில் கால் தடுக்கினார். சுப்ரதர் நின்றபோது தானும் நின்றார். சுப்ரதர் “சிவதரே, சற்றுமுன் காந்தாரரிடம் பேசினேன். உடன்கட்டை ஏறவேண்டும் என அரசி முடிவெடுத்திருப்பதைப்பற்றி அவர் சொன்னார்” என்றார். சிவதர் “ஆம், அதுவே அவருடைய அறுதியான எண்ணம்” என்றார். “நீங்கள் மெய்யான சூழ்நிலையை அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள், சிவதரே. ஷத்ரியகுலத்தில் பிறந்த அரசியருக்கு மட்டுமே உடன்கட்டை ஏறும் உரிமை உண்டு. அந்தணரும் வைசியரும்கூட உடன்கட்டை ஏறலாகாது. சூதர்களுக்கோ அது பெரும்பழி சேர்ப்பது.”
சிவதர் முகம்சிவந்து மூச்சிரைக்கத் தொடங்கினார். சுப்ரதர் அதை உணராமல் “ஷத்ரியர்களிலும்கூட முடியேந்தும் குடிக்கு மட்டும் உரியது உடன்கட்டை ஏறும் உரிமை” என்றார். சிவதர் அப்பேச்சை தவிர்க்க விழைபவர்போல வேறு பக்கம் திரும்பிக்கொள்வதுபோன்ற உடலசைவை வெளிப்படுத்தினார். சுப்ரதர் “சூதஅரசி அரசருடன் அரியணை அமர்ந்தவரும் அல்ல” என்றார். சீற்றத்துடன் திரும்பிய சிவதர் “வாழ்ந்தநாள் வரை அரசரை சூதர் என்றீர்கள். இப்போது அரசியை சூதப்பெண் என்று சிறுமை செய்கிறீர்களா?” என்றார். சுப்ரதர் திகைத்து “நான் அவ்வாறு சொல்லவில்லை… நான் சொன்னவற்றுக்கு அவ்வாறு பொருளில்லை” என்றார்.
சிவதர் உரத்த குரலில் “நீர் சொன்னது காந்தாரரின் கருத்து. அது இங்குள்ள ஷத்ரியர்களின் கருத்து. அவரிடம் சென்று சொல்லும், அரசி உடன்கட்டை ஏறுவார். அது அவர் உரிமை. அவர் எப்போது இவர்கள் நோக்கில் ஷத்ரியர் ஆனார்? இவர்களுக்காக களம்நின்று வீழ்ந்தபோது இல்லையா? அவர் அடைந்த மீட்பை இன்னமும் அரசிக்கு நீங்கள் அளிக்கவில்லை அல்லவா?” என்றார். சுப்ரதர் பேச்செடுக்க முயல கையசைத்து அவரைத் தடுத்து சிவதர் சொன்னார் “அவர்களிடம் சொல்லும். உடன்கட்டை ஏறுவதே இன்று அரசிக்கு வெற்றி எனக் கருதப்படும் என்று…”
சுப்ரதர் சீற்றத்துடன் “அதைத் தடுக்க ஆணையிடும் உரிமை அரசருக்கு உண்டு” என்றார். “அவர் ஆணையிடட்டும். அரசி அதனை ஏற்கவில்லை என்றால் என்ன செய்வார்? சிறைபிடிப்பாரா? சிறையில் அவர் எரிபுகுந்தால் என்ன செய்வார்? உயிரைப் போக்கிக்கொள்ளும் உரிமையை எவரும் எவரிடமிருந்தும் பறிக்க இயலாது” என்றார் சிவதர். சுப்ரதர் கசப்புடன் “விந்தைதான்… அவரை எரியூட்டுவதற்காக நீர் சொல்லாடுகிறீர்” என்றார். “அவர் அரசியா சூதப்பெண்ணா என்பது எரியினூடாகத்தான் முடிவாகிறது எனில் அதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது” என்றார் சிவதர். பின்னர் “இனி இதைப்பற்றி நாம் பேசவேண்டியதில்லை. சென்று சொல்க உமது அரசரிடம்!” என்றபடி நடந்தார். சுப்ரதர் குழப்பத்துடன் தொடர்ந்து சென்றார்.
அவர்கள் மீண்டும் சிதையருகே வந்தபோது அணுக்கப்பெண்டு எழுந்து அவர் அருகே வந்து தணிந்த குரலில் “மைந்தரின் சிதைகள் எங்கே என அரசி கேட்கிறார்” என்றாள். சுப்ரதர் ஒருகணம் தத்தளித்தபின் “அவர்கள் வீரர்களுக்குரிய முறையில் எரியூட்டப்பட்டுவிட்டார்கள்” என்றார். “அந்தியிலேயே அரசகுடியினரை எரியூட்டுவது வழக்கம். அரசரே முதல் எரி அளிப்பதும் தொன்மையான போர்க்கள நடைமுறை.” அவள் தயங்கி நிற்க “சென்று சொல்க, அவர்கள் விண்ணேகிவிட்டனர் என!” என்றார். அவள் திரும்பிச்சென்றாள். சுப்ரதர் பெருமூச்சுடன் “தெய்வங்களே” என முனகிக்கொண்டார்.
சிவதர் “அவர்களுக்கு தனிச்சிதைகள் இல்லையா?” என்றார். “இல்லை, கௌரவ மைந்தரைக்கூட தனிச்சிதையில் ஏற்றவில்லை. முடிசூடிய அரசர்களுக்கு மட்டுமே தனிச்சிதை” என்றார் சுப்ரதர். சிவதர் ஐயத்துடன் கூர்ந்துநோக்கி “அரசரை விடியும்வரை வைத்திருந்தீர்கள். மைந்தரையும் வைத்திருக்கலாமே” என்றார். “அவ்வண்ணம் வழக்கமில்லை” என்றார் சுப்ரதர். சிவதர் சினத்துடன் “எல்லா வழக்கங்களையும் மீறமுடியும். அரசர் எண்ணினால் இயற்றலாம். நீர் அரசரிடம் கோரினீரா?” என்றார். சுப்ரதர் தன்னை இயல்புநிலைக்கு கொண்டுசென்று நிறுத்தி தணிந்த குரலில் “நீர் வரும் வழியில் கௌரவப் படையை பார்த்தீரா?” என்றார். “இல்லை, இருளுக்குள் ஒன்றும் தெரியவில்லை” என்று சிவதர் சொன்னார்.
“ஒளி வந்தாலும் பார்த்திருக்க இயலாது. ஏனென்றால் அங்கே படைகள் இல்லை” என்றார் சுப்ரதர். “சிவதரே, நேற்றைய போரில் படைகளின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. எரியுண்ட உடல்கள் கூடிக்குழைந்து நிணச்சேறாக கிடந்தன. அவற்றை சேர்த்து ஒட்டுமொத்தமாக குருக்ஷேத்ரத்திலேயே எரியூட்டிவிட்டனர்.” சிவதர் “ஏன்?” என்றார். அவருடைய தலை நடுக்கு கொண்டது. “களத்தையே எரியூட்டுவதா? என்ன அது?” சுப்ரதர் “நான் எத்தனை சொன்னாலும் போரை நேரில் காணாத உமக்கு அது புரியாது. அதை பெருங்காவிய ஆசிரியர் ஒருவர் எழுதிக் காட்டலாகும்” என்றார். “வேறுவழியே இல்லை. தனித்தனி உடல்களென எவரையும் பிரித்து எடுக்கவே முடியாத நிலை.” சிவதர் அதை கற்பனைசெய்ய முயன்றார், உள்ளம் சென்று சுவரில் முட்டிக்கொள்வதை அவர் உடலசைவு காட்டியது. தலையை அசைத்து திரும்பிக்கொண்டார்.
ஆனால் அவரால் ஏதேனும் கேட்காமல் இருக்க இயலவில்லை. “போரில் எரி பயன்படுத்தலாகாதென்று நெறியுள்ளதே” என்றார். “அந்நெறி நம் அரசராலும் மீறப்பட்டது” என்றார் சுப்ரதர். “எனில் அதுவும் நன்றே. அவர் முன்னரே தன் எல்லைகளை மீறியிருக்கவேண்டும்” என்றார் சிவதர். மீண்டும் முகம் சிவந்து மூச்சிரைத்தார். சுப்ரதர் “நான் சென்று அரசரிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றார். சிவதர் ஒன்றும் சொல்லவில்லை. கைகளைக் கட்டியபடி சிதையை நோக்கியபடி நின்றார். சுப்ரதர் “அங்கே அரசர் கிடக்கிறார். அதோ, பந்த வளையம் தெரியும் இடத்தில்” என்றார். “நான் அவ்வாறு அவரை பார்க்க விழையவில்லை” என்றார் சிவதர். கடும் சினத்துடன் அதை சொல்வதுபோல் தோன்றியது. சுப்ரதர் அவர் முகத்தை ஒருமுறை நோக்கிவிட்டு விலகி நடந்தார். சிவதர் வேள்வி நிகழும் இடம் நோக்கி சென்றார்.
சுப்ரதர் துரியோதனன் நின்றிருந்த இடத்தை அடைந்தார். கர்ணனின் உடல்கிடந்த களத்தைவிட்டு விலகி முள்மரத்தின் அடியில் துரியோதனன் நின்றிருந்தான். அருகே ஒரு சிறிய பாறைமேல் சகுனி அமர்ந்திருந்தார். அந்தப் பாறைக்காகவே அந்த மரத்தடி தெரிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். அவர் அணுகியதை சகுனிதான் பார்த்தார். துரியோதனன் தொலைவில் பந்தங்களின் ஒளியில் கிடந்த கர்ணனை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். அவன் முகம் மலர்ந்திருப்பது போலிருந்தது. இனிய நினைவு ஒன்றில் இருப்பவனைப் போல. இசை கேட்டுக்கொண்டிருப்பவனைப் போல.
சுப்ரதர் சகுனியை அணுகி “அரசி வந்துவிட்டார்” என்றார். சகுனி “ஆம், பார்த்தேன்” என்றார். சுப்ரதர் “சிவதரிடம் பேசினேன்” என்றார். சகுனி காத்திருந்தார். சுப்ரதர் “அது அரசியின் உரிமை என அவர் சொல்கிறார். சூதர் என அரசர் இழிவுசெய்யப்பட்டார். இன்று அரசியும் அவ்வாறு இழிவுசெய்யப்படுவதை ஏற்க முடியாது என்கிறார்” என்றார். மேலும் அழுத்தமான குரலில் “அரசி சூதப்பெண் என தடுக்கப்பட்டால் எரிபுகுவதே அவருடைய உரிமை என்று சொன்னார்” என்றார். சகுனி சினம்கொண்டு உரத்த குரலில் “அது இங்கே வழக்கமில்லை” என்றார். அவர் ஏற்கெனவே சினத்துடன் இருக்கிறார் என்று தோன்றியது. அதை அத்தருணத்தைக்கொண்டு வெளிப்படுத்துகிறார்.
“வழக்கங்கள் அனைவரையும் கட்டுப்படுத்தாது. அரியவர்கள் வழக்கங்களை மீறிச்செல்கிறார்கள்” என்று சுப்ரதர் சொன்னார். “அதற்கு நெறி இல்லை. அதை அரசு ஒப்பாது” என்றார் சகுனி. அவர் குரல் உடைந்து விந்தையாக ஒலித்தது. முகம் இழுபட்டிருக்க உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அந்த மிகையுணர்ச்சியை சுப்ரதரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் சீரான குரலில் “எந்நெறியையும் எந்த வழக்கத்தையும் மீறலாம், அதற்குரிய விளைவுகளைப் பற்றி எண்ணாமலிருந்தால்” என்றார். “அவ்விளைவுகளை பொருட்டென எண்ணாதவர்கள் நெறிகளையும் பொருட்டென எண்ண மாட்டார்கள். சிதையேற அரசி முடிவெடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?” சகுனி “இங்கே பொறுப்பிலிருக்கும் சிற்றமைச்சர் நீர். நீர் ஆற்றவேண்டிய கடமை இது. அவரை நீர் தடுக்கவேண்டும்” என்றார்.
“நெறியை சொல்லவேண்டியது என் பொறுப்பு. அதை நான் சொன்னேன். அதை அவர் பொருட்டெனக் கொள்ளமாட்டார் எனத் தெளிந்தேன். இனி அவர் விழைவதை நிகழ்த்துவது என் கடமை.” சகுனி ஒரே உந்தலில் எழுந்து தள்ளாடி நின்று “நீர் அதன் விளைவை சந்திப்பீர். இது அரசாணை!” என்றார். புன்னகைத்து “என் குலஅறம் இது, காந்தாரரே. நெறிகளைப் பேணுவது. மானுடநெறிகளை கூறுவது. அவற்றைக் கடந்தமையும் தெய்வநெறிகளை கண்டுகொள்வது. என் குலப்பணியை நிறைவேற்றுகையில் உங்களை அல்ல எந்த அரசரையேனும் ஒரு பொருட்டென நான் எண்ணுவேன் என நினைக்கிறீர்களா? நீங்கள் என்னை கழுவேற்றினாலும் அதன் மேல் தர்ப்பையில் என என்னால் அமர்ந்திருக்க இயலும்” என்றார்.
சகுனி தளர்ந்து “நீங்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்திருக்கிறீர்கள்… நான் இதை முடித்துவைக்கிறேன்” என்றார். “நான் இளவரசரிடம் பேசுகிறேன்… அவரே முடிவெடுக்கட்டும், அன்னையிடம் அவர் ஆணையிடட்டும். இன்று சம்பாபுரியின் முடியிலா அரசர் அவரே.” சகுனி கைதட்டி ஏவலனை அழைத்து “அங்கநாட்டு இளவரசரை அழைத்து வா” என்றார். சுப்ரதர் துரியோதனனை பார்த்தார். அவன் அச்சொற்கள் எதையுமே அறிந்ததுபோல் தெரியவில்லை. அவன் அங்கே இல்லாததுபோலவே சகுனி நடந்துகொண்டார். அவருடைய அந்த பாவனை அப்படியே தன்னிலும் அமைய அவர் அங்கிருப்பதை தானும் மறந்துவிட்டிருந்தார்.
அவர் ஏவலனுடன் பிரசேனன் வருவதை கண்டார். அவன் அருகே வர ஏவலன் பின்னால் தங்கிவிட்டான். பிரசேனன் வெறுமனே தலைவணங்கினான். சகுனி “உங்கள் தந்தையை பார்த்தீர்கள் அல்லவா?” என்றார். அதை ஏன் கேட்கிறார் என ஒருகணம் வியந்ததுமே சுப்ரதர் அந்த நுட்பத்தை உணர்ந்தார். அவ்வினா பிரசேனனை நெகிழச்செய்வதை உணரமுடிந்தது. அவன் உள்ளம் நிலையழிகிறது. அகச்சொற்கள் சிதறுகின்றன. அவன் தொண்டை அசைந்தது. “ஆம்” என்று அவன் சொன்னான். “பேரழகர். மும்முடி சூடிய பேரரசரின் பொலிவுகொண்டவர். இங்கிருந்து அவரையே நோக்கிக்கொண்டிருக்கிறோம். அரசர் விழியகற்றாமல் நின்றிருக்கிறார்.” பிரசேனனின் விழிகளிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. “வென்று சக்ரவர்த்தியானவர்கள் உண்டு. அங்கர் அள்ளி வழங்கி சக்ரவர்த்தி ஆனவர்” என்றார் சகுனி.
பிரசேனன் விசும்பியபடி முகம் குனித்தான். உதடுகளை அழுத்தி இறுக்கிக் கொண்டான். “அவர் இங்கே களத்தில் பெருவீரத்தை வெளிப்படுத்தினார். சூதர்கள் அவர் புகழை சொல்லிச்சொல்லி நிறையாமல் தவிக்கிறார்கள். இதோ அவர் பேரரசர்களைப்போல் சிதையேறுகிறார். இந்த எரி அவரை விண்ணுலகு கொண்டுசெல்லும் செவ்வண்ணக் குதிரை. மாவீரர்களின் உடலை தூய அவியென தேவர்கள் விண்ணிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் சிதையில் எழுபவன் சாவின் எரியான கிரவ்யாதன் அல்ல, வேள்விநெருப்பான ஜாதவேதன் என்பார்கள். இங்கே நான்கு எரிகளும் மூட்டப்படுகின்றன. ஐந்தாம் எரியான திரிகாலன் தோன்றி அவரை விண்ணுக்குக் கொண்டுசெல்கிறான்.”
கண்ணீர் உதிர பிரசேனன் குனிந்து நின்றான். சகுனி “எண்ணி நோக்குக! இந்தச் சிதை வெறும் எரி அல்ல. இது ஓர் அரியணை. தேவர்களுக்குரிய பொன்னால் உருவாக்கப்படுவது” என்றார். பின்னர் அவனை சிலகணங்கள் கூர்ந்துநோக்கிவிட்டு “இதை அரசியிடம் சொல்க! அவர் அங்கநாட்டு அரியணையிலேயே அமரத் துணியாதவர். தேவர்கள் வாழ்த்தும் இந்த விண்ணக அரியணையில் அவர் அமர விரும்பமாட்டார்” என்றார் சகுனி. பிரசேனன் “நான் வரும் வழியில் ஒருமுறை கேட்டேன், அவருடைய முடிவு அறுதியானதா என்று. ஆம் என ஒற்றைச் சொல்லில் உரைத்தார். ஒற்றைச் சொல் மறுமொழி என்பது எப்போதும் உறுதியானது. சற்றேனும் அசைவிருந்தால்தான் மேலும் சொற்கள் எழும்” என்று பிரசேனன் சொன்னான்.
“அது அவர் அடையும் உணர்வெழுச்சி. அவர் அங்கர்மேல் கொண்டிருந்த அன்பை உலகறியும்” என்று சகுனி சொன்னார். “இளவரசே, நீங்கள் சென்று அவரிடம் இதை சொல்க! இதற்கு அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டுவருக… இந்த அரியணையில் அரசருக்கு நிகராக அமர அவர் விழைகிறாரா, அவருடைய இடம் அது என கருதுகிறாரா? அதை மட்டும் உசாவுக!” பிரசேனன் சிலகணங்கள் அவரை நோக்கியபின் “ஆம், அதை கேட்கலாம். அதை கேட்க விட்டுவிட்டோம் என பின்னர் நமக்குத் தோன்றலாகாது” என்றான். அவன் திரும்பிச்செல்வதை சுப்ரதர் நோக்கி நின்றார். சகுனி “அவர் ஏற்கமாட்டார். ஒருகணத்தில் உணர்வெழுச்சிகொண்டு உடன்கட்டை ஏற முடிவெடுத்திருப்பார். ஷத்ரியநிலையையும் சதியன்னை என்னும் புகழையும் விரும்புபவர் அல்ல அவர்” என்றார். சுப்ரதர் ஒன்றும் சொல்லவில்லை. தொலைவில் வேதமும் அருகே சூதர்களின் புகழ்மொழிகளும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன.
பிரசேனன் திரும்பி வந்து “அன்னையிடம் கேட்டேன். அன்னை நீங்கள் சொன்னதுபோல் எண்ணியிருக்கவில்லை. அரசருக்கு நிகராக அமைய விழையவில்லை, அது பிழை என்று சொன்னார்” என்றான். சகுனி முகம் மலர்ந்து “ஆகவே அவர்கள் உடன்கட்டை ஏறப்போவதில்லை. அவரை திரும்ப அழைத்துச்செல்ல நான் ஆணையிடுகிறேன்” என்றார். “ஆனால் அவர் உயிர்வாழ விழையவில்லை. வெளியே சென்று தனியாக எரிபுக எண்ணுகிறார். அதில் அவருக்கு எண்ண மாற்றமில்லை. அரசர் இல்லாத ஒரு விடியலை விழிகளால் பார்க்கமாட்டேன் என்று சொன்னார்.” சகுனி “அவ்வண்ணமென்றால்…” என்று சொல்லத் தொடங்க அவரை கையமைத்து நிறுத்தி பிரசேனன் “அவ்வண்ணமென்றால் அன்னை சிதையேறுவதே உகந்தது என நான் நினைக்கிறேன். அன்னை சிதையேறட்டும்” என்றான்.
“அந்த முடிவை அவரோ நீங்களோ எடுக்க இயலாது. ஏனென்றால் இங்கே உள்ள நெறிகளின்படி ஷத்ரியப் பெண்கள் மட்டுமே உடன்கட்டை ஏறமுடியும்…” பிரசேனன் கூர்ந்த விழிகளுடன் “எந்தை ஷத்ரியர் என்றால் அன்னையும் ஷத்ரியரே. அவருடைய உள்ளத்தமர்ந்த அரசி அவரே. உடன் சிதையிலும் அமரட்டும்” என்றான். “இங்கே அதற்கு ஒப்புதல் இல்லை…” என்றார் சகுனி. “ஏன்?” என்று பிரசேனன் கேட்டான். “ஏனென்றால் அங்கரும் ஷத்ரியர் அல்ல, அவர் துணைவியும் ஷத்ரியர் அல்ல” என்று சகுனி சொன்னார். “அவர் ஷத்ரியர் என நான் உரைக்கிறேன். அதை மறுக்கும் எவரும் அங்கநாட்டுடன் போரிடலாம். அன்றி தனிப்போரில் என்னை எதிர்க்கலாம். எதிர்ப்பவரை வென்று நிறுவுகிறோம், எந்தையும் எங்கள் குடியும் ஷத்ரியர்கள் என்று. நூல்கள் கூறும் நெறி அதுவே.”
சிறுவன் எனத் தெரிந்தவனில் வந்த மாற்றம் சகுனியை பதறச்செய்தது. அவன் ஒருகணத்தில் கர்ணன் என ஆகிவிட்டதுபோல் தோன்றியது. சுப்ரதர் “போதும்” என்றார். “இதில் முடிவெடுக்கவேண்டியவர் அரசர். இதோ சொல்கேட்கும் அருகில்தான் அவர் இருக்கிறார். அவர் கூறட்டும்.” சகுனி துரியோதனனை.நோக்கி திரும்ப சுப்ரதர் உரத்த குரலில் “அரசே, அரசே” என்றார். துரியோதனன் திடுக்கிட்டு திரும்பி நோக்கி “என்ன?” என்றான். அவன் புன்னகைகொண்டிருப்பதைக் கண்டு சுப்ரதர் திகைத்து சொல்லடங்கினார். “ஒன்றுமில்லை” என்றார் சகுனி. சுப்ரதர் “இல்லை அரசே, ஒரு முடிவு எடுக்கப்படவேண்டும்… தாங்கள்…” என தொடங்க “அந்தணராக நின்று நீங்கள் முடிவெடுங்கள், அமைச்சரே. அம்முடிவே என் முடிவு” என்றபின் அவன் திரும்பி கர்ணனின் உடலை நோக்கினான்.
சுப்ரதர் “அந்தணன் நீர்தொட்டு முடிவெடுக்கவேண்டும். நீருக்குமேல் எனில் குருதிதொட்டு முடிவெடுக்கவேண்டும். அதற்கும் அப்பால் விழிநீர் தொட்டு முடிவெடுக்கவேண்டும். என் முடிவு இது” என்றார். “அரசி சிதையேறட்டும். பேரரசியருக்குரிய முறையில். இங்குள்ளோர் அனைவரும் பாதம்தொட்டுப் பணிய, மலர்மாலைசூடி அனல்புகட்டும்.” சகுனியின் உடலில் மெல்லிய தவிப்பு அசைந்தது. “அங்கநாட்டு அரசரை உள்ளாழத்தில் விரும்பாத எவரும் இங்கிருக்கலாகாது. இதுவும் என் ஆணை” என்றார் சுப்ரதர். அவர் பிரசேனனிடம் “வருக, இளவரசே!” என்று சொல்லிவிட்டு திரும்பிச்செல்ல சகுனி பெருமூச்சுவிட்டு தன் தேர்ப்பாகனை நோக்கி அருகில் வந்து தன்னை அழைத்துச்செல்லும்படி ஆணையிட்டார்.