.
இடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா?
வங்கத்தில் என்ன நடக்கிறது?
ஜெமோ,
இடதுசாரி கட்சிகள் பற்றிய உங்களுடைய சமீபத்திய பதிவுகள் என்னை “பின்தொடரும் நிழலின் குரல்’ தினங்களுக்கு அழைத்துச் செல்கிறது. என்னுடைய நண்பனின் அண்ணன் மிகவும் பிரசித்தி பெற்ற கிரிமினல் வக்கீல். சில சமயங்களில் உச்சி வெயிலில் பேருந்து நிலைய நுழைவாயிலில் ஒரு கையில் ஏந்தி தோளில் சாய்ந்திருக்கும் சிவப்புநிற கொடியுடனும், இன்னொரு கையில் ஏந்திய உண்டியலுடனும் அவர் நிற்பதை பார்த்திருக்கிறேன். கேட்டால் கட்சிக்கான நிதி சேகரிப்பு என்பார். அவரிடம் இல்லாத காசா என்று வியந்த என்னிடம், இதுதான் கட்சியின் அடிப்படை என்பார். களத்தில் பணியாற்றுவதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை முதல் வால் வரை பாரபட்சமில்லை. இப்படி சிறுவயது முதல் நான் கண்டு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களை புரோலட்டேரியன்களாக அறிய வைத்தது பின்தொடரும் நிழலின் குரல்தான். அருணாசலத்தின் பொன்னுலக கனவு மார்க்சியத்தின் இலட்சியவாதமான வர்க்க பேதமற்ற சமூகத்தை உணர்த்தியது என்றால், கதிர் அதன் அரசியலையும், உட்கட்சி ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் உணர்த்தினார். (https://m.jeyamohan.in/98710#.XPa6oB5N0lT)
மார்க்ஸிய தத்துவங்களின் அடிப்படையான இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், மார்க்ஸிய அரசியலின் வடிவமான லெனினியத்தின் குறைபாடுகள் என உங்கள் தளத்தில் கொட்டிக் கிடந்த கட்டுரைகள் வழியாகவும், குறிப்பாக ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்’ வழியாகவும் நான் வந்து சேர்ந்தது தேவிபிரசாத் சட்டோபாத்யாவிடம். இவருடைய புத்தகங்களைத்தேடி சென்னையிலுள்ள பாரதி புத்தகாலயத்தை அலசிய போது, “இவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவிய மார்க்ஸ் தாடி வைத்திருந்த அக்கடைக்காரரிடம் உங்கள் பெயரைச் சொன்னவுடன் ஆச்சரியப்படுவதுபோல் முகம் மாறி சற்று உரக்கப் புன்னகைத்தார். அவர் கண்களில் இன்னமும் பொன்னுலக் கனவு மின்னுவதுபோல் ஒரு பிரமை தோன்ற, மார்க்ஸ் தான் இவரை காக்கவேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.
“எனக்கு மகன் பிறந்துருந்தா அவர் பேரத்தான் வச்சிருப்பேன் …” என்று ராஜ்கௌதமன் சமீபத்திய விஷ்ணுபுர விருது விழாவில் தேவிபிரசாத் சட்டோபாத்யாவை உச்சி முகர்ந்தது அவருடைய ‘இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும் ‘ மற்றும் ‘லோகாயுதவாதம்’ என்ற இரு ஆக்கங்களையும் எனக்கு மிக நெருக்கமாக்கியது. ராஜ் கௌதமனை மட்டுமல்ல, இன்னொரு தமிழ் மார்க்ஸியரான ந.முத்துமோகனையும் அறிந்து கொண்டது உங்கள் தளக் கட்டுரைகள் வழியாகத்தான். உங்களைப் போலவே இவர்களிருவரும் எளிதாக என்னை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். தங்களிடமிருந்து கிடைத்த இந்த மார்க்ஸிய ஈர்ப்பு என்னை எங்கு இட்டுச் செல்லும் என்று தெரியவில்லை. ஆனால் பயணம் படு சுவாரஸ்யமானதாக உள்ளது. இது வரை கிட்டியவற்றின் சிதறல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம்
அன்புடன்
முத்து