அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் விக்னேஷ். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். பெற்றோர்கள் விசைத்தறி தொழிலாளர்களாக இருந்த போதிலும், வீட்டின் வறுமையையும் தாண்டி சுயமாக சம்பாதித்து, இஷ்ட்டப்பட்டு படித்து, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, தற்பொழுது கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே மேற்படிப்பை தொடர்கிறேன். என்னைப் பற்றி கூறிக்கொள்ள இதைத் தவிர வேறெந்த விஷயமும் இல்லை.
பட்டம் பெற்றது ஆங்கில இலக்கியம் என்றாலும், தமிழ் இலக்கியத்தில் அதீத ஆர்வம் எனக்கு. அந்த வகையில் உங்களது படைப்புகளின் மீது எனக்கு ஒரு போதை உண்டு. வகுப்புகளில், வால்ட் விட்மன் பற்றி நடத்தினாலும், வில்லியம் ஷேக்ஸ்பியர் நடத்தினாலும் என்னையும் அறியாமல் ஜெயமோகன் பற்றி பேசாமல் இருந்த நாளே இல்லை எனலாம். இவை வெறும் புகழ்ச்சி என்று நினைத்துவிடாதீர்கள். அத்தனையும் உண்மை, என் ஆழ்மனதிலிருந்து வந்தவை.
கன்னியாகுமரி, காடு, இரவு, விஷ்ணுபுரம் ( சமீபத்திய வாசிப்பு) வெள்ளை யானை, பின் தொடரும் நிழல்களின் குரல்கள், பார்த்தீனியம் ஆகிய எதாவது ஒரு படைப்பிலிருந்து ஏதாவது ஒன்றைச் சொல்லி, அதை நான் யோசித்தது போல (இதற்கு நீங்கள் என்னை மன்னித்தே ஆக வேண்டும்) மாணவர்களின் கைத்தட்டல் பெற்ற நாட்கள் எத்தனையோ.
என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கண்ணன் அவர்கள் எப்படி எனக்கு உங்களை அறிமுகப் படுத்தினாரோ, அதே போல தான் நான் உங்களை எம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன். அந்த விதத்தில் நான் மிகவும் பாக்கியசாலி.
சிக்மண்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வியலின் அடிப்படையை உங்களது படைப்புகளின் வாயிலாகவே நான் புரிந்து கொண்டேன்.
எனக்குள்ளும் எதையாவது எழுத வேண்டும் என்ற ஆசை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. அந்த அக்னிக் குஞ்சை இங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தது உங்களது படைப்புகளே. என் ஆசை நிறைவேறுமா என்று தெரியாது, ஆனால் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்த மின்னஞ்சல் வாயிலாக என்னை சீர்மிகு சிந்தனையானாக, எழுதும் ஆசையை தூண்டியதற்கு எல்லையற்ற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதைப் படிக்க தங்களுக்கு நேரம் இல்லாமலும் போகலாம். ஆனாலும் கூட உங்களை நேரில் சந்தித்து, நன்றி கூறிய தெம்பு எனக்குக் கிடைக்கும். நன்றிகள் பல.
இப்படிக்கு
தங்களது தீவிர வாசகன்
இர. விக்னேஷ்
ஈரோடு
அன்புள்ள விக்னேஷ்,
நீங்கள் தொடர்ந்து வாசிப்பதில் மகிழ்ச்சி. எழுத்தாளன் ஆவதற்கான முதல் அடிப்படையே வாசிப்புதான். தமிழிலக்கியத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம், அதன் சாதனைகள் புரிபடும் அளவுக்கான வாசிப்பு இன்றியமையாதது. அதன்பின் இலக்கியத்தின் அடிப்படையாகக் கருதப்படும் பேரிலக்கியங்களின் மீதான வாசிப்பு. வாசிப்பினூடாக உங்கள் மொழி கூர் அடையும். எது எழுதப்படவேண்டும், எதை எழுதலாகாது என்பது தெளிவடையும். நீங்கள் எழுத முடியும்.
இன்னொன்று, இலக்கியத்திற்குள் தீவிரமாக இருந்துகொண்டிருத்தல். நம் சூழலில் அதற்கான வாய்ப்புக்கள் மிக அரிது. பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் கலை என்றால் என்னவென்று தெரியாது. ஓரளவு பேசுபவர்களும் அரசியலைப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதற்குத்தேவை சமான உள்ளம் கொண்ட நண்பர்கள். நல்லூழாக ஈரோட்டில் அத்தகைய நண்பர்களின் ஒரு சுற்றம் உள்ளது. அவர்கள் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள்
அவர்கள் தங்கள் வாசிப்பினூடாக உங்களுக்குக் கற்பிப்பார்கள். நீங்கள் அவர்களுடன் விவாதித்து வளரவும் முடியும். இலக்கியம்சார்ந்த உளவிசை அப்படியே நீடிக்கவும் அத்தகைய சந்திப்புகள் உதவும். நாம் எழுதுவனவற்றை நாமே பார்க்க, மதிப்பிட அவ்வுரையாடல்கள் பெரிய வழிகாட்டிகளாக அமையும். மற்றபடி சுந்தர ராமசாமி சொன்னதுபோல “எழுது, அதுவே அதன் ரகசியம்!”
ஜெ