சமீபத்தில் வாசித்தவற்றில் ரொம்பவுமே டிஸ்டர்ப் செய்த கதை சோற்றுக்கணக்கு . ‘Fact is stranger than fiction’ வகையில் ஒரு கெத்தேல் சாகிப். நானும் அப்படி சிலரைப் பார்த்திருக்கலாம், ஆனால் எனக்கென்னவோ சுப்பம்மாக்கள்தான் நினைவில் இருக்கிறார்கள். நன்றல்லதை அன்றே மறக்க இன்னும் நான் பழகவில்லை. வேலை தேடி சென்னையில் அலைந்த வறுமை நாட்களில் இரண்டு நாட்கள்தான் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினேன். சாப்பாடு எடுத்து வைத்ததும், ஒரு முழு டம்ளர் தண்ணீரைக் குடிக்கச் சொல்வார். பிறகு ஒவ்வொரு முறை சோறு வைக்கும்போதும், “மெட்ராஸ்ல அரிசியே கெடைக்க மாட்டேங்குது, கெடச்சாலும் யான வெல விக்குது…. நெறைய தண்ணி குடிப்பா… இல்லாட்டி அடைச்சிக்கும்” என்று சொல்லுவார். இது நடந்து இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தக் கதை அந்த நினைவைக் கிளறி விட்டது.
கதை முடிவில் எதற்காக ராமலட்சுமியை மணக்க வேண்டும்? கருணையா அல்லது குற்ற உணர்வா? அது மட்டும் சீரணிக்க முடியவில்லை. பாத்திரமறிந்துதானே இட வேண்டும். தானே ஒரு கெத்தேல் சாகிப் ஆக மாறிவிட்டானா? இரவின் மடியில் வாசிக்க அற்புதமான கதை. இந்தக் கோடை விடுமுறையில் இந்தியா வரும்போது உங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்.
நன்றி – பாஸ்கி
http://baski-reviews.blogspot.com
அன்புள்ள பாஸ்கி,
சுப்பம்மாக்கள் தான் நாம் வாழ்க்கையில் அதிகம் சந்திப்பவர்கள். ஆகவேதான் கெத்தேல்சாகிப் போன்றவர்கள் புனிதர்கள். கதையும் அதையே சொல்கிறது.
பொதுவாக நாம் வணிக கதைகளையும், வணிக சினிமாவையும் ரசித்து ஒரு வகை ரசிக மனநிலையை பயின்றுகொண்டிருக்கிறோம். ஒரு கலைப்படைப்பு நம் ரசனைக்காக பரிமாறப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் நமக்குள் உள்ளது. ஆகவே நாம் நமக்கு இன்னது பிடிக்கவில்லை என்று உடனே சொல்லிவிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம்.
ஆகவெ ஒரு சினிமாவைப் பார்த்ததும் ‘முடிவு பிடிக்கலை’ என்கிறோம். ‘கதாநாயகியை கொன்னிருக்கக் கூடாது’ என்கிறோம். கதை என்பது ஒரு புனைவுவிளையாட்டு என்று எண்ணிக்கொள்ளும் மனநிலை இது. அந்த முடிவை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பு இதன் பின்னால் உள்ளது.
இந்த மனநிலை இலக்கியவாசிப்புக்கு மிகமிக எதிரான ஒன்று. இந்த வகையான கூற்றுக்களை தவிர்க்க வேண்டும் என்பதைத்தான் கல்லூரி இலக்கிய வகுப்பில் முதல் வருடம் முழுக்க கற்பிப்பேன் என்று வேதசகாய குமார் சொல்வதுண்டு.
ஒரு கதையை வாழ்க்கையின் ஒரு துண்டு என்று நினைத்து வாசிப்பதே அதன் ஆசிரியன் போடும் முதல் நிபந்தனையாகும். அந்த முடிவு வேறு வகையில் இருந்திருக்க முடியாது, ஏனென்றால் அது வாழ்க்கை. அது அப்படித்தான்.
அது ஏன் நிகழ்ந்தது என்று யோசிக்க மட்டுமே வாசகன் உரிமை பெற்றிருக்கிறான். அதன் வழியாக மட்டுமே அவன் வாசிப்பின் பல தளங்களுக்கு செல்ல முடியும். கதையின் ஆழங்களை தொடமுடியும்
அப்படி இல்லாமல் முடிவு இப்படி இருந்திருக்கலாமோ என யோசிப்பதெல்லாம் கதையை முன்கூட்டியே நிராகரிப்பதிலேயே சென்று சேரும்
உங்கள் வாசிப்பின் மிகமுக்கியமான சிக்கலை சுட்டிக்காட்ட காரணம் நான் மதிக்கும் புத்தக மதிப்புரையாளராக நீங்கள் இருப்பதே.
கதை காட்டும் வாழ்க்கையில் புரியாமல் உள்ள உள் மடிப்புகள் என்ன என்று பார்த்திருந்தீர்கள் என்றால் அந்த கருத்தைச் சொல்வதற்கு முன்னால் அந்த வினாக்களுடன் கதையை மீண்டும் படித்து சிந்திப்பீர்கள். நல்ல கதை என்றால் அதற்கான விடைகளுடன், விடைகளை நோக்கிச் செல்ல வாசகனை தூண்டும் இடைவெளிகளுடன் இருக்கும். வாழ்க்கை அப்படித்தான்.
கதையின் ஆரம்பம் முதலே மென்மையாக அவனுக்கு ராமலட்சுமி மீதிருக்கும் பிரியமும் அவளுக்கிருக்கும் பிரியமும் சொல்லப்படுகிறது. அத்தனை பேரும் சோற்றுக்கணக்கு பார்க்கிறார்கள். அதுதான் லௌகீக வாழ்க்கை. அதை அவன் அறிவான்
அதற்கு அப்பால் கணக்கே இல்லாத உலகில் வாழும் கெத்தேல் சாகிபிடம் இருந்து அவன் எதை கற்றுக்கொள்வான்? அந்த கடைசிக் கணத்தில் தானும் கூட சோற்றுக்கணக்குடன் இருப்பதை அவனே கண்டுகொள்கிறான்
அவன் அத்தை போடாத சோற்றுக்கு கணக்கு வைத்திருக்கிறான். அந்தக் கசப்பை அத்தனைகாலம் சுமந்தமையால்தான் அவன் அந்தப்பெண்ணை மறுதலிக்கிறான்.
அந்தக்கணத்தில் கெத்தேல் சாகிபிடமிருந்து அவன் எதைப் பெற முடியும்? தன் சோற்றுக் கணக்குகளை தானே தாண்டும் விவேகத்தைத் தவிர? அதுதான் கதையே. அந்த மன எழுச்சி நிகழ்வதே இக்கதையின் உச்சம்.
’முடிவை சீரணிக்க முடியவில்லை’ என்ற வழக்கமான வரி வழியாக நீங்கள் இழந்தது மொத்தக் கதையையும்தான். மிச்சமாக உங்களுக்கு கிடைத்தது ஒரு குணச்சித்திர சித்தரிப்பு மட்டுமே. ‘ஒரு சாயபு சும்மா சோறு போடுறார்’ என்ற ஒற்றை வரி. அதில் என்ன இருக்கிறது?
வாசிக்கையில் இது தெளிவாகவே இருக்கிறது. சாகிப்பின் ஆளுமையை கண்டு ஒரு மன உச்சத்தில் அமர்ந்திருக்கிறான். ராமலட்சுமியை மணக்க முடிவெடுக்கிறான் – இரு வெவ்வேறு விஷயங்கள். இரண்டுக்குமான தொடர்பு என்ன என்று சாதாரணமாக யோசித்தாலே போதும். கதை எதிர்பார்க்கும் வாசகப் பங்கேற்பு அதுதான்.
உங்களை குறை சொல்வதற்காக இதைச் சொல்லவில்லை. வாசிப்பு என்பது ஒரு பயிற்சி. இந்த விவாதம் மூலம் பிறருக்கும் அந்தப் பயிற்சி கிடைக்கக்கூடும் என்பதனால்தான்
அன்புடன்
ஜெ