கிருதவர்மன் படைவீரனின் புரவியைப் பற்றியபடி மெல்ல நடந்து படைமுகப்பை அடைந்தான். முதலில் நின்று நின்று மூச்சிளைப்பு ஆற்றி மீண்டும் நடந்தான். நடக்க நடக்க அந்த நடைக்கு உடல் பழகி அவ்வண்ணமே விரைவுகொள்ள முடிந்தது. ஓருடலிலிருந்து பிறிதொரு உடலுக்கு குடிபெயர்ந்துவிட்டதுபோல. அப்புதிய உடலின் எல்லைகளையும் வாய்ப்புகளையும் அகத்திலிருந்து அவன் ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டு அறிந்துகொண்டிருந்தான். எந்நிலையிலும் அறிதல் அளிக்கும் உவகையை கிருதவர்மன் வியப்புடன் எண்ணிக்கொண்டான்.
படைமுகப்பில் கௌரவப் படைகளும் பாண்டவப் படைகளும் பத்து பத்து பேர் கொண்ட குழுக்களாக வந்து இரு எல்லைகளிலும் நீண்டு அணிவகுத்தன. இரு சாராருக்கும் நடுவே நீர் வற்றிய ஏரியின் சேற்றுப்படுகைபோல் கிடந்தது குருக்ஷேத்ரம். குருதிநிலம். இருமருங்கும் கூடியிருந்த வீரர்கள் ஒருவகையில் கிளர்ச்சி அடைந்திருந்தனர். அந்தக் காட்சியை அவர்கள் அப்போதுதான் முழுமையாக பார்த்தார்கள். அதற்கு முன் அதற்குள் இருந்தார்கள். விலகிய பின் நோக்கியபோது அந்தக் காட்சியின் அரிய இயல்பே அவர்களை உளமெழச் செய்தது. “உடல்கள் உருகிவிட்டன” என்று ஒருவன் சொன்னான். “யானையின் விலா எலும்புக்கூடு. தோணியின் சட்டக்கூடுபோல் தெரிகிறது அது” என்றது ஒரு குரல்.
“பாதி சிதையேற்றம் இங்கேயே நிகழ்ந்துவிட்டிருக்கிறது” என்றது இன்னொரு குரல். நாய்க்கூட்டங்கள்போல ஊளையிட்டு முட்டிமோதினர். முன்னால் சென்றவர்கள் அஞ்சியவர்களாக பின்னடைய பின்னிருந்தவர்கள் முண்டியடித்து முன்னால் சென்றனர். கூச்சல்களுக்கு நடுவே சிரிப்பொலிகளும் கேட்டன. “என்ன இது? அய்யோ!” ஒரு குரல் “மகாருத்ரனுக்கு ஊன் சமைத்து வைக்கப்பட்டுள்ளது… படையல் முடிந்தபின் உனக்கும் இறையன்னம் கிடைக்கும்” என்றது. ஊளையிட்ட சிரிப்பொலிகள். “நான் ருத்ரனை இக்களத்தில் கண்டேன். மெய்யாகவே கண்டேன்.” இன்னொருவன் “ஆம். நானும் கண்டேன். எரிவடிவில் ஒரு முகம் எழுந்தது” என்றான்.
“உலோகங்கள் அனைத்தும் வண்ணம் மாறிவிட்டிருக்கின்றன. பித்தளை பொன்னென மின்னுகிறது.” ஒருவன் “பொன்னாகிவிட்டதோ என்னவோ?” என்றான். “உண்மையாகவா?” என்றான் இன்னொருவன். “வேறென்ன? இது ஒரு வேதிபுடம். இங்கே மானுடர் தேவர்களாக மாற்றப்படுகிறார்கள். எனில் உலோகம் பொன்னாகாதா?” அவன் மீண்டும் “மெய்யா?” என்றான். “மெய், சென்று எடுத்துக்கொள்.” அவன் ஐயத்துடன் “இல்லை” என்றான். “இளிவரல் செய்கிறீர்கள்.” ஒருவன் “அவன் யாரடா? அடேய், இங்கே நிகழ்வதனைத்தும் இளிவரல் மட்டுமே” என்றான். எதிர்பாராதபடி சிரிப்புகள் நின்று அனைவரும் அமைதியடைந்தனர்.
கிருதவர்மன் கௌரவப் படைமுகப்பில் வந்து நின்றதும் அவனுடன் வந்த படைத்தலைவன் கைதூக்கி உரத்த குரலில் “ஆணை! யாதவர் கிருதவர்மன் இங்கு செயல் பகுக்க வந்துளார்! ஆணை! அவர் ஆணைகளை தலைக்கொள்க!” என்றான். பலநூறு கண்கள் திரும்பி தன்னைப் பார்ப்பதை கிருதவர்மன் உணர்ந்தான். அவர்கள் அனைவருமே ஒருகணத்தில் திகைப்பதனால் ஏற்படும் மூச்சொலி எழுந்தது. ஒரு படையே பெருமூச்சுவிட முடியும் என்பதை அவன் உணர்ந்தான். இந்த உடலுக்குள் இருந்து அறிபவை அனைத்தும் விந்தையாக உள்ளன. இங்கிருந்து எழுந்து முற்றிலும் புதிய ஒரு உலகத்திற்கு செல்லவிருக்கிறேன் போலும். இதுவரை அறிந்த அனைத்தையும் மீண்டும் அறிய வேண்டும். புதிய உறவுகளும் உணர்வுகளும் உருவாகி வரவேண்டும். நெருப்பு ஒரு பெரும் கருப்பை. அதிலிருந்து பிறந்து எழுந்திருக்கிறேன். இங்கு சிதை புகுந்து அப்பால் பிறிதொரு உலகுக்கு எழுபவரும் இவ்வண்ணமே உணர்வார்கள் போலும். ஓருடலில் இன்னொரு முறை பிறந்தெழுவதைப்போல் விந்தையான அறிதல் பிறிதில்லை.
படைத்தலைவன் ஒருவன் அவனை நோக்கி வந்து புரவியிலிருந்து இறங்கி தலைவணங்கி அவன் முகத்தை ஒருகணம் பார்த்தபின் விழிதாழ்த்தி “வணங்குகிறேன், யாதவரே. என் பெயர் மிருண்மயன். நான் உத்தரபாஞ்சாலத்தின் படைப்பிரிவுகளை நடத்துகிறேன். இங்கு எங்களிடம் இந்த உடல்களை பிரித்து கொண்டு சென்று சிதையேற்றும்படி எங்கள் அரசர் ஆணையிட்டார். இவ்வண்ணம் இருக்கும் என்று நாங்கள் சற்றும் எண்ணவில்லை” என்றான். “இந்த மையப் படைக்களத்திலிருந்து எவருமே உயிருடன் மீளவில்லை. ஒவ்வொரு போருக்குப் பின்னும் மீள இயலாத உடற்குறை அடைந்தவர்களை கொல்லும் பொறுப்பு சுடலைக்காவலருக்கு உண்டு. இப்போது அதுவும் தேவைப்படவில்லை. இருப்பவர்கள் எவருமில்லை. நோக்கிவிட்டேன், உயிருடன் எஞ்சுபவர்கள் அல்லது சற்றேனும் அசைவோ குரலோ உள்ள ஒருவரும் இல்லை.”
கிருதவர்மன் “ஒருவரேனும் எஞ்சக்கூடும்…” என்றான். “ஆனால் இங்கிருந்து நோக்கும்போது அப்படி தெரியவில்லை” என்றான் மிருண்மயன். “இங்கிருப்போர் அனைவரும் இக்களத்தின் தெற்கோ வடக்கோ எல்லைகளில் நின்று போரிட்டவர்கள். இவர்களிலும் பெரும்பாலானவர்கள் எரியால் புண்பட்டிருக்கிறார்கள். இன்றிரவு எவருக்குமே உணவில்லை, தங்க இடமும் இல்லை. மழை விழுமெனில் அனைவருமே வெற்றுவானுக்குக் கீழ் நின்று அதை ஏற்கவேண்டியிருக்கும்” என்றான். “ஆம், ஆனால் நாம் இக்களத்தை எவ்வண்ணமும் தூய்மை செய்தே ஆகவேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னான். “நாளை போர் நிகழுமா?” என்று மிருண்மயன் கேட்டான். “நிகழக்கூடும்” என்றான் கிருதவர்மன். “இன்னொரு இடத்தில் நடத்திக்கொள்ளலாமே. இங்கே இருபுறமும் சேர்த்து ஆயிரம்பேர்தான் தேறுவார்கள்.” கிருதவர்மன் புன்னகையுடன் “அதெப்படி? குருக்ஷேத்ரம் அறநிலம். இங்குதான் பேரழிவு நடந்தாகவேண்டும்” என்றான்.
மிருண்மயன் அதை உள்வாங்காமல் “எப்படி தூய்மை செய்வது? வெந்த உடல்கள் மிதிபட்டும் தேர்களால் நசுக்கப்பட்டும் ஒன்று கலந்து ஊன்கூழாக மாறியிருக்கின்றன. மானுடரைப் பிரித்தறிவதே இயலாதபடி யானைகளும் புரவிகளும் கூட கலந்து கிடக்கின்றன. எவரை எரியூட்டுவது, எவரை நிலத்தில் அமிழ்த்துவது என்று எவ்வாறு முடிவு செய்ய இயலும்?” என்றான். கிருதவர்மன் “மறுபுறம் இருப்பவர்களை நடத்துபவர் எவர்?” என்றான். “அங்கு யாதவராகிய சாத்யகி முன்நின்றிருக்கிறார்” என்றான் மிருண்மயன். “அவரை இங்கு அழைத்து வருக!” என்று கிருதவர்மன் ஆணையிட்டான். மிருண்மயன் முகப்புக்குச் சென்று கொம்பொலி எழுப்பி மறுபுறம் தலைமைதாங்கிய சாத்யகியை முகப்புக்கு அழைத்தான்.
அங்கிருந்த பாண்டவப் படைத்திரளும் தயங்கி குழம்பிக்கொண்டுதான் இருந்தது. சற்று நேரத்தில் மறுபக்கம் முகப்பில் சாத்யகி வந்து நின்றான். கிருதவர்மன் உரத்த குரலில் “யுயுதானரே, தாங்களா?” என்றான். அவன் குரலை அறிவிப்புப் பயிற்சி பெற்ற எழுவர் சேர்ந்து ஒற்றைக்குரலில் மீண்டும் ஒருமுறை உரக்க கூவினர். களத்திற்கு அப்பால் நின்ற சாத்யகியின் மறுமொழி அவ்வண்ணம் எழுவரின் தொகைக்குரலாக “ஆம், நானேதான்” என ஒலித்தது. “என்ன செய்வது இந்த ஊன்பரப்பை? இதை நாம் பிரித்து எடுத்து சிதையேற்றுவது இயலாது. சிதை எரிக்கும் விறகும் அங்கில்லை. இவற்றை கொண்டு செல்ல வண்டிகளும் இல்லை. ஒவ்வொருவராக தொட்டு எடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆட்களுமில்லை” என்றான்.
“ஆம், அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம்” என்று சாத்யகி சொன்னான் . கிருதவர்மன் உரக்க நகைத்து “இக்களத்தை ஒரு பெரும்பாயென அப்படியே இவர்களுடன் சுருட்டி எடுத்துவிட்டால் நன்று” என்றான். சாத்யகி அந்த எண்ணியிராப் பொழுதில் எழுந்த இளிவரலை எதிர்கொள்ள முடியாமல் நின்றான். கிருதவர்மன் மேலும் உரக்க நகைத்து “சென்று சொல்லுங்கள் உங்கள் இளைய யாதவரிடம். அவர் விண்ணிலிருந்து மண்ணிறங்கி வந்த ஆழியேந்திய இறைவன் அல்லவா? அவர் ஆடலில் இறுதியாக இதுவும் அமையட்டும்” என்றான். “இளிவரல் வேண்டாம். என்ன செய்வது என்று எண்ணுவோம்” என்று சாத்யகி சொன்னான். “இது இளிவரலல்ல, யுயுதானரே. விண்ணமைந்த பெருமாளின் துணைவியரில் ஒருத்தியல்லவா புவிமகள்? அவர் ஆணையிட்டால் அவள் பணியமாட்டாளா என்ன?” என்றான்.
சாத்யகி எரிச்சலுடன் தன் புரவியைத் திருப்ப “நில்லுங்கள். நன்று, இனி இளிவரல் இல்லை. நிகழ்வதை எண்ணுவோம்” என்று கிருதவர்மன் சொன்னான். “சொல்லுங்கள்” என்றான் சாத்யகி. அதற்குள் அந்த எழுவர்குரலே தன் தொண்டையிலிருந்து எழுவதைப்போல ஆகிவிட்டிருந்த விந்தையை கிருதவர்மன் உணர்ந்தான். “இந்தக் களத்தை பார்க்கையில் என் உடல் போலிருக்கிறது. வெந்து வழிந்திருக்கிறது. இதைப் பார்த்து நிற்பது எனக்கு நிறைவளிக்கிறது” என்றான் கிருதவர்மன். “என்ன செய்யவேண்டும்? அதை சொல்க!” என்றான் சாத்யகி. “எரியூட்டல் சிகண்டியின் பணி அல்லவா? அவர் என்ன செய்கிறார்?” என்று கிருதவர்மன் கேட்டான். “அவர் சலிப்புற்று அகன்றுவிட்டார்” என்று சாத்யகி சொன்னான். “என்ன செய்வது என்று கேட்டீர்களா?” என்றான் கிருதவர்மன். “ஆம், கேட்டேன். செய்வதற்கொன்றே உள்ளது, இந்த மொத்த உடல்களையும் இவ்வண்ணமே எரியூட்டிவிடுக என்றார்.”
“ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “என்ன சொல்கிறீர்கள்?” என்றான் சாத்யகி. “அது இயல்வதா என்ன?” கிருதவர்மன் “குருக்ஷேத்ரமே மாபெரும் சிதையென்று ஆகட்டும். இந்த அறநிலத்திற்கு பற்பல பெயர்கள் உள்ளன. இனி பெருஞ்சிதையெனும் நற்பெயரும் இணைந்துகொள்ளட்டும்” என்றான். சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. “என்ன சொல்கிறீர்கள்?” என்றான் கிருதவர்மன். “நீங்கள் சொன்னதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் அது ஒன்றே இயற்றுவதற்குரியது என்று தோன்றுகிறது” என்றபின் “ஆனால் இவ்வளவு பெரிய பரப்பை எரிப்பதற்கான விறகு எங்குள்ளது?” என்றான்.
“இந்த உடல்கள் அனைத்திலும் எரி உறைகிறது. குருதி வடிவில், கொழுப்பு வடிவில். நீர்க்கனல், அன்னக்கனல். அதை தழலெரியாக மாற்றுவதற்கு மட்டும் சற்றே விறகு தேவை. அங்குள்ள பலகைகளையும் விறகுகளையும் கொண்டு வாருங்கள். விட்டுவிட்டு அனலூட்டினால் குருக்ஷேத்ரமே பற்றிக்கொள்ளும். சிற்றெரிக்குதான் சில அன்னங்கள் இரையாவதில்லை. பேரெரிக்கு பாறைகளே பற்றிக்கொள்ளும் என்பார்கள்.” சாத்யகி “ஆம், காட்டெரியில் அதை கண்டிருக்கிறேன். வேறு வழியில்லை” என்றான். “நான் சென்று ஆணைகளை பிறப்பிக்கிறேன். என் செயல்களை நோக்கி அதே ஆணைகளை நீங்களும் எழுப்புக!” என்று கிருதவர்மன் சொன்னான். “அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி சாத்யகி விலகிச்சென்றான்.
மிருண்மயன் “அங்கரின் மைந்தர்கள் களம்பட்டபோது அவர்களின் உடல்களை பின்னுக்கு இழுத்து எடுத்தனர். ஆனால் அந்த ஏவலர்களும் அனலில் வெந்தமைந்தனர். அவ்வுடல்கள் அங்கேயே உள்ளன” என்றான். “அவற்றை தனியாக நோக்கி எடுக்க இயலுமா?” என்றான் கிருதவர்மன். “கடினம்… அங்கரின் உடலை கொண்டுசென்றதே அரிதாக நிகழ்ந்த ஒன்று” என்றான் மிருண்மயன். “அவர்களும் பெருஞ்சிதையேறட்டும்” என்றான் கிருதவர்மன். “அங்கரின் தேர் அங்கே களத்தில் நின்றிருக்கிறது” என்று மிருண்மயன் சுட்டிக்காட்டினான். புகைக்கு அப்பால் ஒளியில் மின்னி மின்னி அணைந்துகொண்டிருந்தது கர்ணனின் பொற்தேர் என கிருதர்வர்மன் அப்போதுதான் உணர்ந்தான்.
“அதன் சகடம் பிலத்தில் ஆழ இறங்கியிருக்கிறது. ஏழு புரவிகள் முன்னிழுக்க ஏழு பின்னிருந்து உந்தினாலொழிய அதை எழுப்ப இயலாது. அங்கர் களம்பட்டதுமே அனைவரும் களத்தை உதறிவிட்டு பின்னடைந்தனர்.” கிருதவர்மன் அந்தத் தேரை நோக்கினான். பின்னர் “அதையும் சேர்த்தே எரிப்போம்… அதில் பொன் என இருப்பது அங்கேயே உருகி எஞ்சியிருக்கும்” என்றான். ஏதோ சொல்லவந்த பின் மிருண்மயன் “ஆம்” என்றான்.
கிருதவர்மன் திரும்பி படைவீரர்களிடம் “செல்க! இங்கு எங்கும் எஞ்சியிருக்கும் அனைத்து எரியும்பொருட்களையும் கொண்டுவருக!” என்றான். அவர்கள் நாற்புறமும் விலகினர். களத்திற்குள் இறங்கவேண்டியதில்லை என்பதே அவர்களை ஊக்கம் கொள்ளச் செய்தது. “எங்கிருந்து காற்று எழுகிறது?” என்றான் கிருதவர்மன். மிருண்மயன் “தென்கிழக்கிலிருந்து. ஆனால் ஈரத்துளிக்காற்று” என்றான். கிருதவர்மன் “எதுவானாலும் காற்று நன்று” என்றபின் “தென்கிழக்கு மூலையில் நான்கு இடங்களிலாக விறகுகளை குவித்து வையுங்கள். இடங்களை நான் சுட்டிக்காட்டுகிறேன். எரியெழுந்து ஒன்றுடன் ஒன்று கைகோத்துக்கொள்ளும்படி விறகுக்குவை அமையவேண்டும்” என்றான்.
“அங்கு கூலக்களஞ்சியங்கள் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. அங்கிருந்து கனலும் கூலங்களை அடுமனைக்கலங்களால் அள்ளி வருக. இந்த விறகுகளை நின்றெரிக்க கூலங்களால் மட்டுமே இயலும். அவை அணைவதில்லை. எரிக்காமல் அமைவதில்லை.” அவன் ஆணைகள் கொம்பொலிகளாக எழத்தொடங்க சாத்யகி மறுபுறம் அதே ஆணைகளை பிறப்பித்தான். “என்னை சற்று பின்னணிக்கு கொண்டு செல்க! எழுவது பேரெரி என்பதை படைவீரர்களுக்கு கூறுங்கள். எரி எழத்தொடங்குகையில் முடிந்தவரை அகன்று நின்றிருக்க வேண்டும். எரிக்கு பசி மிகுதி. பசித்த பாம்புக்கு நிகரான ஈர்ப்பு வல்லமையும் உண்டு” என்று கிருதவர்மன் சொன்னான்.
அவன் புரவியைப் பற்றியபடி நடந்து பின்னடைந்து காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில் நின்றான். கௌரவப் படையினர் குருக்ஷேத்ரத்தின் பின்புறத்தில் கிடந்த தேர்களையும் பாதி எரிந்த பாதைப்பலகைகளையும் சுமந்து கொண்டு வந்து குருக்ஷேத்ரக் களத்தில் இட்டு எரிகளத்தில் குவித்தனர். “விரைவு! விரைவு!” என்று ஆணைகள் எழுந்துகொண்டிருந்தன. “நான்கு குவியல்கள் போதும். நான்கு அனல்கள்… ஐந்தாம் அனல் அந்நான்கின்மேல் எழவேண்டும்” என்றான் கிருதவர்மன். “ஐந்தெரி எழுந்தால் அதன் பின்னர் மழையோ காற்றோ அவற்றை அணைக்க இயலாதென்பார்கள்.” மிருண்மயன் “அங்கர் ஐந்தெரி நடுவே தவம்செய்தவர் என்றார்கள்” என்றான். கிருதவர்மன் “ஆம், நான்கு எரிகளும் இக்களத்தில் எழுந்துவிட்டன. ஐந்தாம் எரியை நாம் வரவழைக்க இயலாது. நான்கு எரிகளும் வேண்டிக்கொண்டால் மட்டுமே அது விண்ணிலிருந்து இறங்கும்” என்றான்.
பாண்டவர் தரப்பிலிருந்தும் விறகுகள் வந்துகொண்டிருந்தன. இரு படையினரும் ஒருவரோடொருவர் கூவி அழைத்து ஆணைகளை இட்டனர். அச்செயலிலிருந்த புதுமை அவர்களை உவகை கொள்ள செய்தது. நகையாடியபடியும் வெறுமனே கூச்சலிட்டபடியும் அவர்கள் விறகுகளை சுமந்து வந்து குவித்தனர். அவை ஊன்களத்தின் நடுவே அமைந்தன. அங்கே விறகுகளை கொண்டுசெல்வதற்காக உடல்களை விலக்கி பாதை அமைத்தனர். விறகுகளை எறிந்து எறிந்து மேலே ஏற்றி குவைகளாக்கினர். இரண்டு ஆள் உயரமுள்ள நான்கு விறகுக்கோபுரங்கள் எழுந்ததை கிருதவர்மன் பார்த்துக்கொண்டிருந்தான். “எரியெழுக!” என அவன் ஆணையிட்டான். அடுமனைக்கலங்களில் அள்ளப்பட்ட கனலும் கூலம் கொண்டு வரப்பட்டது.
கிருதவர்மன் “இங்கே அந்தணர் எவரேனும் உள்ளனரா?” என்றான். “ஏன்?” என்றான் மிருண்மயன். “அவி குவிந்திருக்கிறது. வேதம் ஓதி அனலை எழுப்புதலே முறை” என்றான் கிருதவர்மன். மிருண்மயன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “நான் சொல்வதை அவருக்கு கூறு” என்றான் கிருதவர்மன். அது உரக்க ஒலிக்க சாத்யகி “ஆம், நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்றான். “இங்கே அந்தணர் உள்ளனரா?” என்று அவன் கேட்க அந்த ஆணை கொம்பொலியாகப் பரவியது. “அந்தணர் இங்கே எப்படி இருக்கமுடியும்?” என்றான் மிருண்மயன். “அந்தணர் உளரா? வேதமறிந்த எவரேனும் உளரா?” என்று குரல்கள் எழுந்தன. “சுடலைப்பார்ப்பனர் இருக்கிறார்கள்” என்றான் ஒருவன். “அவர்கள் வேண்டியதில்லை. இது சிதையேற்றம் அல்ல, வேள்வி. வேள்வியறிந்த மங்கலப்பார்ப்பனரே வேண்டும்” என்று சாத்யகி சொன்னான். மிருண்மயன் “களத்திற்கு வருவது மங்கலவேதியர்க்கு விலக்கப்பட்டுள்ளது” என்றான்.
ஆனால் பாண்டவர் தரப்பிலிருந்து ஒருவன் “நான் வேளாப்பார்ப்பான். வேதம் அறிந்தவன்” என்றான். அவனை நோக்கி அத்தனை விழிகளும் சென்றன. அவன் பதினெட்டு அகவை கொண்ட இளைஞன். வெண்ணிற உடலில் முப்புரிநூல் இல்லாமல் வேலேந்தியிருந்தான். உடலின் வலப்பக்கம் அனல்பட்டு வெந்திருந்தது. ஒருவிழி பெரிய கொப்புளமாக மாறிவிட்டிருந்தது. அவனை கூர்ந்து நோக்கி “தாங்கள் என்ன வேதம், உத்தமரே?” என்றான் சாத்யகி. “அதர்வம்” என்று அவன் சொன்னான். “ஆனால் நால்வேதங்களும் எங்களுக்குரியவையே.” கிருதவர்மன் “உத்தமரே, தங்கள் பெயர் என்ன?” என்றான். “நான் கோசலன். என் பெயர் அமிர்தன்” என்று அவன் சொன்னான். “வேளாப்பார்ப்பனருக்கு வேதநெறிகள் இல்லை என அறிவேன். அவர்கள் போர்புரியலாமா?” என்றான் சாத்யகி. “மெய்யறிதலின் பொருட்டு எதையும் செய்யலாம் என்பதே வேளாப்பார்ப்பன நெறி” என்று அமிர்தன் சொன்னான்.
“என் ஆசிரியர் கௌதமகுடியைச் சேர்ந்தவரான சுமித்ரர். நான் என் குடியை உதறி அவருடன் சேர்ந்தேன். வேளாப்பார்ப்பன நெறியை ஏற்று மெய்மை நாடி ஒழுகினேன். கோசலன் எங்களுக்கு அமைத்த புறச்சேரியில் குடியிருந்தேன். போர் தொடங்கியபோது நான் ஆசிரியரிடம் ஒப்புகை பெற்று இங்கு வந்துசேர்ந்தேன்.” “ஏன்?” என்று சாத்யகி கேட்டான். “இதுவே இப்புவியில் நிகழும் மாபெரும் வேள்வி என என் ஆசிரியர் சொன்னார். நான் அதில் தேவர்கள் எழுவதை காணவிழைந்தேன்.” கிருதவர்மன் சிறிய ஏளனத்துடன் “கண்டீர்களா?” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். கிருதவர்மன் திகைத்து பின் அமைதியானான். அங்கிருந்த அனைவரும் அமைதியடைந்தார்கள்.
அமிர்தன் நான்கு விறகுக்குவைகளின் முன் அமர்ந்தான். “வேள்விக்குரிய நன்மங்கலங்கள் ஏதும் இங்கில்லை” என்றான் சாத்யகி. “தேவையில்லை” என்றபின் அவன் விறகுத்துண்டுகளை மட்டும் தன்முன் குவித்து வைத்தான். விழிமூடி ஒருகணம் அமர்ந்தபின் வேதம் ஓதத் தொடங்கினான்.
அனலோன் ஒளியின்மேல் முதல் கதிரென எழுந்தவன்.
ஜாதவேதனாக நம் நடுவே மீண்டும் பிறந்தான்.
மானுடர்களின் தோழன் பின்னர் நீரில் எழுந்தான்.
அழிவிலா அறிவில் பின்னர் எழுந்தான்.
ஒளிகொண்டிருக்கிறான், நம்மால் வாழ்த்தப்படுகிறான்.
அனலோனே நாங்கள் உன்னுடைய
மூன்று இடங்களையும் அறிகிறோம்.
மூன்று வடிவங்களையும் அறிகிறோம்.
நீ பரவியிருக்கும் பல இடங்களை அறிகிறோம்.
அறியவொண்ணாத உன் பெயரையும் அறிகிறோம்.
நீ பிறந்த முதலிடத்தையும் அறிகிறோம்
தென்கிழக்கிலிருந்து காற்று வீசும் திசைநோக்கி கூலக்கனல் விறகுக்குவைகளுக்கு அடியில் போடப்பட்டது. காற்றில் கனன்று அது விறகுகள் மேல் பாய்ந்தேறியது. சடசடத்து தழல் கொழுந்துகளாகி, செஞ்சிறகுகளாகி, வெங்குவைகளாகி, பொன்முகடு கொண்ட கோபுரங்களாக மாறி நின்றது.
மானுடர்களின் தோழன் சோமத்தை ஆள்பவன்
அனலோனே, வைஸ்வாநரனே
இதோ நீ முனிவர்களால் போற்றப்பட்டிருக்கிறாய்
நாங்கள் மாசற்ற விண்ணையும் மண்ணையும் அழைக்கிறோம்
தேவர்களே எங்களுக்கு செல்வங்களை அளியுங்கள்
எங்களுக்கு மைந்தர்களை அளியுங்கள்
முதல் அனற்குவையிலிருந்து ஒரு முகம் தெளிந்தெழுவதை கிருதவர்மன் கண்டான். “முகம்! முகம் தெளிந்தெழுகிறது!” என்று அவன் கூவினான். “முதலனல் அதோ எழுகிறது! முதலனல்!” அவன் அருகில் நின்றிருந்த மிருண்மயன் “யாதவரே!” என்றான். “கொன்றை மலர்வண்னன்! ஜாதவேதன்!” பொன்னெரியும் ஒளியுடல்கொண்டிருந்தான். வலக்கையில் அமுதகலமும் இடக்கையில் வேள்விக்குரிய நெய்க்கரண்டியும் ஏந்தியிருந்தான். “ஒவ்வொரு அனலாக எழுகிறது! இதோ இரண்டாம் அனல்! செண்பக மலர்ச்செம்மையுடன் வஹ்னி! தர்ப்பையும் மின்படையும் கொண்ட தேவன்.”
அவனைச் சூழ்ந்திருந்தவர்கள் திகைப்புடன் நோக்க அவன் உவகையுடன் கொந்தளித்தான். “காந்தள் வண்ணனாகிய கிரவ்யாதன்! சிதையிலெழும் நெருப்பு. மாளாப் பசிகொண்டவன். தூய்மை செய்பவன். விண்ணுக்கு ஊர்தியென்றாகும் செந்நிற பரி வடிவம் கொண்டவன்!” அவன் கைகூப்பி விழிநீர் வழிய நின்று நடுங்கினான். “வேங்கை மலர்வண்ணம் கொண்ட ருத்ரன். மான் மழுவேந்தியவன். புலித்தோலுடுத்து நடமாடுகிறான்.” அவன் கைகளை விரித்து வெறியுடன் கூச்சலிட்டான் “எழுக ருத்ரன்! எழுக வடவை! எழுக ஊழிக்கனல்!” துள்ளித் தாவி ஆடத் தொடங்கினான்.
நான்கு அனல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. எரி நீர்மை கொண்டதுபோல் நெளிந்தது. ஓடைகளென வழிந்தது. ஒவ்வொரு உடலாக தொட்டுத் தொட்டு பரவி சற்று நேரத்தில் குருக்ஷேத்ரம் முழுக்க விரிந்தது. எரியாலான ஏரி ஒன்றை அவர்கள் கண்டனர். அதன் மாபெரும் ஈர்ப்பில் விழி நட்டவர்களாக நோக்கி நின்றனர். “அகன்று செல்க! அதன் வெம்மையும் ஒளியும் ஈடற்றவை!” என்று மிருண்மயன் ஆணையிட்டான். குருக்ஷேத்ரத்தில் அந்தி எழுந்ததுபோல் தோன்றியது. சூழ்ந்திருந்த அனைத்திலும் செவ்வொளி அலையடித்தது. வெம்மை அலையலையென்று வந்து தாக்க படைவீரர்கள் கூச்சலிட்டபடி அகன்று அகன்று சென்றனர்.
எரி எழுந்து வீச்சு கொள்ளும் தோறும் சடலங்கள் சருகுகளென பற்றிக்கொண்டன. எரி செந்நிறக் குஞ்சிமயிர் பறக்கும் புரவிகூட்டமென தாவிச்சென்றது. பின்னர் சிறகு கொண்டு செம்பருந்துத் திரள் என மாறி விண்வழியாகவே சென்றது. ஊழிப்பேரலையொன்று நுரை சிதற வளைந்தெழுந்து சென்று அறைவதுபோல் குருக்ஷேத்ரத்தின் வடமேற்கு எல்லை வரை சென்று அதற்கு அப்பால் விரிந்திருந்த பசுங்காட்டை நோக்கி நா நீட்டி உறுமியது. அதன் வெம்மையில் சூழ்ந்திருந்த காடுகளின் இலைகள் அனைத்தும் சடசடவென சுருங்கின. மரங்களிலிருந்து சிற்றுயிர்கள் வெந்து உதிர்ந்தன. இலைத்தழைப்புக்குள் தீயொளி பரவ விழிமின்ன நோக்கி நின்ற விலங்குகள் அலறித் திரும்பி ஓடின. பிலங்களுக்குள் நாகங்கள் வெம்மை கொண்டு நெளிந்து வெந்து சுருண்டு உடற்கொழுப்பு உருகி பற்றிக்கொண்டன.
பிலங்களினூடாகவே சென்ற தீ எதிர்பாராத இடங்களில் நிலம் வெடித்து ஊற்றென பீறிட்டு வெளிக்கிளம்பியது. கிருதவர்மன் வெறிகொண்டு நடனமிட அவனை அவனறியாமல் உந்தி மேலும் மேலும் அகற்றி அழைத்துச் சென்றுகொண்டிருந்தான் மிருண்மயன். அனைத்து முகங்களும் சொற்கள் அடங்கி, விழிகள் வெறித்து, வாய்திறந்து அனலை நோக்கிக்கொண்டிருந்தன. கொப்பளித்து நீலக் குமிழிகளென வெடித்து மேலே சென்றது எரி. உறுமி, பிளிறி, வெடித்து, கனைத்து கொந்தளித்தது. சுழிகளாகி, ஆழிச்சுழிப்பாகி சுழன்றுவந்தது. காற்று வந்தறைந்தபோது துண்டுகளாகி பறந்து வானில் மறைந்தது. இருண்ட பசுவின் அகிடை நக்க பாய்ந்தெழும் கன்றின் செந்நிற நாக்குகள் என கொழுந்துகள் ஆடின. ஒற்றைப்பேரலையாக சுருண்டெழுந்து மறுஎல்லை வரை சென்று சுழித்து மீண்டு வந்தது. விசைகொண்ட காற்றில் நீருக்கடியில் பாசிப்பரப்பு என பதிந்து நிலத்தோடமைந்து அலைகொண்டது. காற்று நின்றதும் பல்லாயிரம் படங்களால் மண்ணை அறைந்து சீறிஎழும் செந்நிற நாகக்கூட்டம்போல எழுந்தது.
கர்ணனின் பொற்தேர் உருகி உருமாறிக்கொண்டிருந்தது. அதற்குள் இருந்த மரம் எரியத்தொடங்கியதும் அனல் வண்ணம் மாறி வெடித்தது. எரியமைந்ததும் அங்கே தேர் தெரியவில்லை. மிருண்மயன் கூர்ந்து நோக்கி “தேர் முற்றாக உருகி வழிந்துவிட்டிருக்கிறது” என்றான். பின்னர் “அங்கே தேரின் பொன் எஞ்ச வாய்ப்பில்லை. அது அந்தப் பிலத்தினுள் வழிந்து ஓடி மறைந்திருக்கும். இனி அதை மீட்க இயலாது” என்றான். கிருதவர்மன் அதை கேட்கவில்லை. அவன் வெறிகொண்டு ஆடிக்கொண்டிருந்தான். “அது மறைந்துவிட்டது” என்றான் மிருண்மயன். அருகே நின்ற முதிய வீரன் “அது மண்ணுகே மீள்க!” என்றான்.
கிருதவர்மன் மூச்சுவாங்க ஓய்ந்து கைகளை விரித்து நின்று அனலை நோக்கிக்கொண்டிருந்தான். அதில் ஒரு முகம் எழுந்தது. சொல்லின்றி அவன் சுட்டிக்காட்டினான். “யாதவரே!” என்று மிருண்மயன் அழைத்தான். “திரிகாலன்! ஐந்தாம் அனலாகிய திரிகாலன்!” என்று கிருதவர்மன் சொன்னான். ஆனால் அச்சொற்கள் அவன் நாவிலிருந்து எழவில்லை. குனிந்து அவன் முகத்தை பார்த்தபின் திரும்பி கொப்பளித்து குமுறிக்கொண்டிருந்த பெருந்தழலையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“நாவால் அவியை கவ்விக்கொள்பவன்
புவியை ஆளும்பொருட்டு அளிகொண்டவனாக
வாழ்த்துக்களை பெற்றுக்கொள்பவன்
மானுடரை ஒளிகொள்ளச் செய்பவன்
தூய்மையாக்குபவன்
முதன்மை அந்தணன்
அளிப்பவர்களில் முதலோன்
அனலனை இங்கு நிறுவினர் முன்னோர்!”
அமிர்தனின் முகம் உலைப்பொன் என சுடர்கொண்டிருந்தது. அவன் உதடுகளில் இருந்து வேதம் எழுவதாக தோன்றவில்லை. அனலில் இருந்து அது ஒலி திரட்டிக்கொண்டது. அவன்மேல் மழையெனப் பெய்துகொண்டிருந்தது.
மிருண்மயன் தொலைவில் ஒரு வீரன் இரு கைகளையும் பிரித்து அலறியபடி அனலை நோக்கி ஓடுவதை பார்த்தான். “யாரது? அவனை நிறுத்துக!” என்று கூவுவதற்குள் அவன் பாய்ந்து எழுந்து கைவிரித்துத் தாவி அனலுக்குள் விழுந்தான். அவன் உடலை அனல் குழிந்து பெற்றுக்கொண்டது. நீர் என வந்து செந்தழல் மூடியது. வாய்மூடி மெல்வதுபோல அங்கே ஓர் அசைவு. நீலக் கொப்புளம் ஒன்று எழுந்தமைந்தது. கூடிநின்ற வீரர்கள் கூச்சலிட்டனர். அது ஒரு தொடக்கமாக அமைய அங்குமிங்குமாக பலர் எரி நோக்கி பாய்ந்து எரியில் விழுந்து சுடர்ந்து குமிழ்த்து மறைந்தார்கள். செய்வதறியாமல் மிருண்மயன் நோக்கி நின்றான்.
மறுபுறம் பாண்டவப் படைகளிலிருந்தும் அவ்வண்ணம் எரியிலெழுந்து விழுந்துகொண்டிருந்தனர். இருதரப்பிலும் களைத்து நின்றிருந்த படைவீரர்கள் கைகளை விரித்து வெறிக்குரல் எழுப்பி உடல் அசைய நடனமிட்டனர். சொல்லில்லாத குரல். வாழ்த்தா வெறுப்பா அச்சமா உவகையா என்றறியாத வெற்றுக்குரல். அமிர்தன் “ஓம்! ஓம்! ஓம்!” என வேதம் ஓதி நிறைய அந்த முழக்கம் அதன் பெருவிரிவாக மேலெழுந்து ஒலித்தது. குருக்ஷேத்ரம் ஒரு பெரும் எரிகுளமென்றாகி அவியை ஏற்றுக்கொண்டது. கிருதவர்மன் விண்ணில் முப்பத்து மூன்றுகோடி தேவர்களும் வந்து செறிந்திருப்பதாக எண்ணிக்கொண்டான். இனி இப்படி ஒரு வேள்வியை அவர்கள் பார்க்கப்போவதில்லை. இதற்கிணையான ஓர் அவியை ஏற்கப்போவதில்லை. தொல்வேதம் சொல்கரைந்து முழக்கமென்றாகி எழ நிகழ்ந்து கொண்டிருந்தது அவ்வேள்வி. எழும் வேதம் என எங்கோ ஒரு சொல் கனன்றுகொண்டிருந்தது.